ஒடிஸா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒடிஸா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 செப்டம்பர், 2015

ஒடிஸா வாழ்க்கை 'கதம் ஹோகையா!'

மிக நீண்ட நாட்களாகி விட்டது பதிவெழுதி. ஒருவித விரக்தி மனப்பான்மையே காரணம். வேலை அலைச்சல், இட மாறுதல் போன்ற காரணங்கள் ஒருபுறமிருக்க, எழுதி என்னத்த கிழிக்கப் போகிறோம் என்ற சலிப்புதான் முக்கிய காரணம். நிறைய வலைப்பதிவர்களும் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நான்காண்டுளாக வலைப்பதிவு எழுதினாலும் சாதித்தது ஒன்றுமில்லை. ஆரம்பித்த வலைப்பதிவை மூடாமலிருப்பதே பெரிய சாதனைதான்.

எல்லோரும் முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். இளைஞர்கள் கைப்பேசியின் 'வாட்சப்' செயலியில் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் 'தேவைப்படும் போது பயன்படுத்த' என்ற நிலையிலிருந்து 'அதை பயன்படுத்தாத நேரம் இல்லை' என்ற நிலைமைக்கு மாறியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வேறு ஏதாவது வரக்கூடும்.

ஆனாலும் வலைப்பதிவு என்பது நமது மன எண்ணங்களை எழுத்தாக வெளிப்படுத்தவும், அதை நிரந்தரமான ஒரு ஆவணக்காப்பகமாக சேமிக்கவும்  உள்ள ஒரு அருமையான தொழில்நுட்ப வாய்ப்பாகும். வலைப்பதிவின் வளர்ச்சியே தற்போது இணையத் தமிழை முன்னெடுத்துச் செல்கிறது என்றால் அது மிகையில்லை.

புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடக்கவிருப்பதை பல நண்பர்களின் வலைப்பதிவுகளிலிருந்தும், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவுகளிலிருந்தும் அறிய முடிகிறது. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால் இதுபோன்ற பணிகளை சிரமம் பார்க்காமல் எடுத்து சிறப்பாக நடத்த முடிகிறது என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் திருவிழா, புத்தகத் திருவிழா இவற்றிற்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருப்பேன். ஆனால் முடியாமற் போகும். இந்த மாதிரி தருணங்களில்தான் வேறு ஏதாவது ஊருக்கு இடம் பெயர்ந்திருப்பேன். கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆனால் ஆறுதலான விஷயம் என்னவெனில் புது இடங்களுக்குப் போகும்போது அங்கிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதுதான்.

ஒரு வழியாக ஒரி(டி)ஸா வாழ்க்கை முடிந்து விட்டது. இப்போது மத்தியப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறேன். ஒடிஸா வாழ்க்கையைப் பற்றி எழுத முனைந்த தொடர் பாதியிலேயே நிற்கிறது. எழுத நிறைய விஷயம் இருந்தும் ஏனோ ஒரு ஆறுமாதகாலமாக எதையுமே எழுதத் தோணவில்லை. மீண்டும் எனது அனுபவங்களை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். 

மத்தியப் பிரதேசம் வந்து இரண்டு மாதமாகிறது. இதற்குள் 'சாஞ்சி மற்றும் கஜூரஹோ' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்த்தாகிவிட்டது. இதைப் பற்றிய பதிவை எழுதவும் ஆவலாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. பார்ப்போம்.

அன்புடன்,
கவிப்ரியன்.

சனி, 5 ஜூலை, 2014

நீ இந்தியன்தானே?!

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)


தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய நான் இன்று ஒரு தொழிற்கல்வி ஆசிரியராக உருவானதற்குப் பின்னால் நிறைய சோகக் கதைகள் உண்டு. அந்த அனுபவங்களில் ஒன்று கூட மகிழ்ச்சி தரக்கூடியனவாக இல்லை என்பதுதான் அந்த சோகத்திலும் சோகம். என்னதான் நேர்மையான உழைப்பு, புத்திசாலித்தனம் இருந்தாலும் வாழ்க்கையில் அதிர்ஷடமும் வேண்டும் இல்லையா? இது என் வாழ்க்கையில் இன்றுவரை ஏற்படவே இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. 

எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். இதைச் சாதிக்க வேண்டும், அதைச் சாதிக்க வேண்டும் என்று. எனக்கு அப்படிப்பட்ட கனவுகள் கூட கிடையாது. ஏனென்றால் அப்படி கனவு கண்டு அது நிறைவேறாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. என் உழைப்பின் மீது எனக்கு அபார நம்பிக்கை இருந்தது. அதனால் நல்லதே நடக்கும் என்றுதான் முயன்றவரை என்னை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன்.

வேலை செய்து கொண்டிருந்த தொழிற்சாலை சில பிரச்னைகளாலும், தொழிற்சங்கத்தின் சில விரும்பத்தகாத நடவடிக்கைகளாலும் மூடப்பட்டு வேலையிழந்த ஒரு காலகட்டத்தில்தான் தெரிந்த நபர் மூலம் முதன் முதலாக வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்தது. வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் நான் தன்னந்தனியே போய் இறங்கியவுடன் நான் சந்தித்த முதல் பிரச்னை மொழிப் பிரச்னைதான்.

 பஹ்ரைன் நாட்டில் எனது அறையில்... 2002-ல்
முதலிலேயே சொன்னபடி ஆங்கிலத்தில் அத்தனை புலமை இல்லை. இந்தி… அரிச்சுவடி கூட தெரியாது. அரபு நாடுகளில் இந்தி மொழி தெரிந்திருந்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று அறிந்திருந்தேன். ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. விமான நிலையத்தில் இறங்கியவுடன் எனது கடவுச்சீட்டைப் பார்த்து விட்டு ஓரிடத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருத்தலுக்குப்பின், நான் வேலைக்குச் சேரவிருந்த நிறுவனத்திலுருந்து ஒரு ‘அரபி’ என்னை அழைத்துப்போக வந்திருந்தான். எனது உடைமைகளை எடுத்துக்கொண்டு காரில் அமர்ந்தேன். ஒரு புதிய பாலைவன தேசத்தின் விசாலமான சாலையில் உற்சாகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது, என்னை அழைத்துப்போக வந்த அரபி என்னோடு இந்தியில் உரையாடத் தொடங்கினான்.

ஒரு அரபிக்காரன் மிக சரளமாக இந்தியில் உரையாடியதைக்கண்டு முதலில் வியப்புதான் ஏற்பட்டது. அப்புறம்தான் அவனோடு உரையாடவே ஆரம்பித்தேன். எனக்கு ‘இந்தி’ தெரியாது, ஆங்கிலத்தில் பேசுமாறு அவனை கேட்டுக்கொண்டேன். அவனோ சந்தேகத்தோடு என்னைப் பார்த்து… ‘நீ இந்தியன்தானே!’ என்று கேட்டான். ஆமாம், இந்தியன்தான் அதிலென்ன சந்தேகம் என்றேன். இல்லை… ஒரு இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியவில்லை என்கிறாயே என்றான்.

பிறகு நமது நாட்டைப் பற்றியும், மொழிவழி மாநிலங்கள் பற்றியும், எனது மொழி ‘தமிழ்’ எனபதனையும் விரிவாக எடுத்துக் கூறினேன். தலையாட்டிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு இது புரியவில்லை என்பதை அவன் முக பாவனைகளிலிருந்து புரிந்து கொண்டேன். அதற்குக் காரணமும் இருந்தது. (என்னைப்போல தமிழகத்திலிருந்து போய் வேலை செய்பவர்களோடு அவனுக்கு பரிச்சயம் இருக்கிறது. அவர்கள் இந்தி பேசுகிறார்கள். நான் போய் எங்கள் மாநிலத்தில் இந்தி கிடையாது, அதனால் யாருக்கும் இந்தி தெரியாது என்று கூறினால் அவனுக்கு குழப்பமாகத்தானே இருக்கும்).

மறு நாளிலிருந்து நான் தங்கயிருந்த அறைக்குப் பக்கத்திலிருந்த பாகிஸ்தானியர்கள், பஞ்சாபியர்கள், வங்காள தேசத்தவர்கள் என எல்லோருமே இந்தியில் உரையாடத் தொடங்கினார்கள். பதிலுக்கு என்ன சொல்வது? எப்படி இவர்களை எதிர்கொள்வது? பணியிடத்தில் எப்படி வேலை செய்வது என்கிற சங்கடம் மனதைப் பிடித்தாட்டியது.

முதலில் சைகை மொழி, பின்னர் ஆங்கிலம் கலந்து, அப்புறம் சின்னச்சின்ன வார்த்தைகள் என்று இந்தியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதில் பாகிஸ்தானியர்கள் பங்குதான் அதிகம். ஒவ்வொரு வார்த்தையையும் அதன் பொருளையும் அழகாக புரியும்படி சொல்லிக் கொடுத்தார்கள். அங்கு பணியாற்றிய இரண்டாண்டுகளில் ஓரளவிற்குப் பேசக் கற்றுக்கொண்டேன். என்னைப் போன்ற ஏராளமான தமிழர்கள் இங்கே வந்துதான் இந்தியை பேசக் கற்றுக்கொள்கின்றனர். இதுதான் நான் இந்தி கற்றுக்கொண்ட வரலாறு!

இப்படிக் கற்றுக்கொண்ட ‘இந்தி’தான் ஒரிசாவில் வேலைக்குச் சேர்ந்த போது எனக்கு மிகவும் உதவியது. ஆனாலும் அரபு நாட்டில் நான் கற்றுக்கொண்ட இந்தி வேறு, இங்கு இவர்கள் பேசும் இந்தி வேறு என்பது விரைவில் புரியத் தொடங்கியது. ஒரிசாவின் மிகவும் ஒதுக்குப் புறமான பழங்குடியினர் வாழும் பகுதி (கலிங்கநகர்) என்பதால் இங்கே ‘இந்தி’ அத்தனை புழக்கத்தில் இல்லை. இம் மக்களில் சிலருக்கு ஒரிய மொழி கூட தெரிந்திருக்கவில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம். வெளி உலகத்தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே ஒரிய, இந்தி மொழி பேசினார்கள். ஏனென்றால் இங்கே அவர்களுக்கென பாரம்பரிய மொழியும், கலாச்சாரமும்  தனியாக இருந்ததுதான் காரணம்.

தொடர்புடைய இடுகைகள்; 
ஒடிஸா வாழ் அனுபவங்கள் - ஒன்று (கலிங்க நாடும் கலிங்க நகரும்)
ஒடிஸா வாழ் அனுபவங்கள் - இரண்டு (ஹிந்தி தெரியுமா?)