மிக நீண்ட நாட்களாகி விட்டது பதிவெழுதி. ஒருவித விரக்தி மனப்பான்மையே காரணம். வேலை அலைச்சல், இட மாறுதல் போன்ற காரணங்கள் ஒருபுறமிருக்க, எழுதி என்னத்த கிழிக்கப் போகிறோம் என்ற சலிப்புதான் முக்கிய காரணம். நிறைய வலைப்பதிவர்களும் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நான்காண்டுளாக வலைப்பதிவு எழுதினாலும் சாதித்தது ஒன்றுமில்லை. ஆரம்பித்த வலைப்பதிவை மூடாமலிருப்பதே பெரிய சாதனைதான்.
எல்லோரும் முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். இளைஞர்கள் கைப்பேசியின் 'வாட்சப்' செயலியில் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் 'தேவைப்படும் போது பயன்படுத்த' என்ற நிலையிலிருந்து 'அதை பயன்படுத்தாத நேரம் இல்லை' என்ற நிலைமைக்கு மாறியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வேறு ஏதாவது வரக்கூடும்.
ஆனாலும் வலைப்பதிவு என்பது நமது மன எண்ணங்களை எழுத்தாக வெளிப்படுத்தவும், அதை நிரந்தரமான ஒரு ஆவணக்காப்பகமாக சேமிக்கவும் உள்ள ஒரு அருமையான தொழில்நுட்ப வாய்ப்பாகும். வலைப்பதிவின் வளர்ச்சியே தற்போது இணையத் தமிழை முன்னெடுத்துச் செல்கிறது என்றால் அது மிகையில்லை.
புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடக்கவிருப்பதை பல நண்பர்களின் வலைப்பதிவுகளிலிருந்தும், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவுகளிலிருந்தும் அறிய முடிகிறது. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால் இதுபோன்ற பணிகளை சிரமம் பார்க்காமல் எடுத்து சிறப்பாக நடத்த முடிகிறது என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் திருவிழா, புத்தகத் திருவிழா இவற்றிற்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருப்பேன். ஆனால் முடியாமற் போகும். இந்த மாதிரி தருணங்களில்தான் வேறு ஏதாவது ஊருக்கு இடம் பெயர்ந்திருப்பேன். கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆனால் ஆறுதலான விஷயம் என்னவெனில் புது இடங்களுக்குப் போகும்போது அங்கிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதுதான்.
ஒரு வழியாக ஒரி(டி)ஸா வாழ்க்கை முடிந்து விட்டது. இப்போது மத்தியப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறேன். ஒடிஸா வாழ்க்கையைப் பற்றி எழுத முனைந்த தொடர் பாதியிலேயே நிற்கிறது. எழுத நிறைய விஷயம் இருந்தும் ஏனோ ஒரு ஆறுமாதகாலமாக எதையுமே எழுதத் தோணவில்லை. மீண்டும் எனது அனுபவங்களை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
மத்தியப் பிரதேசம் வந்து இரண்டு மாதமாகிறது. இதற்குள் 'சாஞ்சி மற்றும் கஜூரஹோ' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்த்தாகிவிட்டது. இதைப் பற்றிய பதிவை எழுதவும் ஆவலாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. பார்ப்போம்.
அன்புடன்,
கவிப்ரியன்.

