Saturday, July 5, 2014

நீ இந்தியன்தானே?!

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)


தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய நான் இன்று ஒரு தொழிற்கல்வி ஆசிரியராக உருவானதற்குப் பின்னால் நிறைய சோகக் கதைகள் உண்டு. அந்த அனுபவங்களில் ஒன்று கூட மகிழ்ச்சி தரக்கூடியனவாக இல்லை என்பதுதான் அந்த சோகத்திலும் சோகம். என்னதான் நேர்மையான உழைப்பு, புத்திசாலித்தனம் இருந்தாலும் வாழ்க்கையில் அதிர்ஷடமும் வேண்டும் இல்லையா? இது என் வாழ்க்கையில் இன்றுவரை ஏற்படவே இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை

எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். இதைச் சாதிக்க வேண்டும், அதைச் சாதிக்க வேண்டும் என்று. எனக்கு அப்படிப்பட்ட கனவுகள் கூட கிடையாது. ஏனென்றால் அப்படி கனவு கண்டு அது நிறைவேறாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. என் உழைப்பின் மீது எனக்கு அபார நம்பிக்கை இருந்தது. அதனால் நல்லதே நடக்கும் என்றுதான் முயன்றவரை என்னை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன்.

வேலை செய்து கொண்டிருந்த தொழிற்சாலை சில பிரச்னைகளாலும், தொழிற்சங்கத்தின் சில விரும்பத்தகாத நடவடிக்கைகளாலும் மூடப்பட்டு வேலையிழந்த ஒரு காலகட்டத்தில்தான் தெரிந்த நபர் மூலம் முதன் முதலாக வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்தது. வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் நான் தன்னந்தனியே போய் இறங்கியவுடன் நான் சந்தித்த முதல் பிரச்னை மொழிப் பிரச்னைதான்.

 பஹ்ரைன் நாட்டில் எனது அறையில்... 2002-ல்
முதலிலேயே சொன்னபடி ஆங்கிலத்தில் அத்தனை புலமை இல்லை. இந்திஅரிச்சுவடி கூட தெரியாது. அரபு நாடுகளில் இந்தி மொழி தெரிந்திருந்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று அறிந்திருந்தேன். ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. விமான நிலையத்தில் இறங்கியவுடன் எனது கடவுச்சீட்டைப் பார்த்து விட்டு ஓரிடத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருத்தலுக்குப்பின், நான் வேலைக்குச் சேரவிருந்த நிறுவனத்திலுருந்து ஒரு அரபிஎன்னை அழைத்துப்போக வந்திருந்தான். எனது உடைமைகளை எடுத்துக்கொண்டு காரில் அமர்ந்தேன். ஒரு புதிய பாலைவன தேசத்தின் விசாலமான சாலையில் உற்சாகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது, என்னை அழைத்துப்போக வந்த அரபி என்னோடு இந்தியில் உரையாடத் தொடங்கினான்.

ஒரு அரபிக்காரன் மிக சரளமாக இந்தியில் உரையாடியதைக்கண்டு முதலில் வியப்புதான் ஏற்பட்டது. அப்புறம்தான் அவனோடு உரையாடவே ஆரம்பித்தேன். எனக்குஇந்திதெரியாது, ஆங்கிலத்தில் பேசுமாறு அவனை கேட்டுக்கொண்டேன். அவனோ சந்தேகத்தோடு என்னைப் பார்த்துநீ இந்தியன்தானே! என்று கேட்டான். ஆமாம், இந்தியன்தான் அதிலென்ன சந்தேகம் என்றேன். இல்லைஒரு இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியவில்லை என்கிறாயே என்றான்.

பிறகு நமது நாட்டைப் பற்றியும், மொழிவழி மாநிலங்கள் பற்றியும், எனது மொழிதமிழ்எனபதனையும் விரிவாக எடுத்துக் கூறினேன். தலையாட்டிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு இது புரியவில்லை என்பதை அவன் முக பாவனைகளிலிருந்து புரிந்து கொண்டேன். அதற்குக் காரணமும் இருந்தது. (என்னைப்போல தமிழகத்திலிருந்து போய் வேலை செய்பவர்களோடு அவனுக்கு பரிச்சயம் இருக்கிறது. அவர்கள் இந்தி பேசுகிறார்கள். நான் போய் எங்கள் மாநிலத்தில் இந்தி கிடையாது, அதனால் யாருக்கும் இந்தி தெரியாது என்று கூறினால் அவனுக்கு குழப்பமாகத்தானே இருக்கும்).

மறு நாளிலிருந்து நான் தங்கயிருந்த அறைக்குப் பக்கத்திலிருந்த பாகிஸ்தானியர்கள், பஞ்சாபியர்கள், வங்காள தேசத்தவர்கள் என எல்லோருமே இந்தியில் உரையாடத் தொடங்கினார்கள். பதிலுக்கு என்ன சொல்வது? எப்படி இவர்களை எதிர்கொள்வது? பணியிடத்தில் எப்படி வேலை செய்வது என்கிற சங்கடம் மனதைப் பிடித்தாட்டியது.

முதலில் சைகை மொழி, பின்னர் ஆங்கிலம் கலந்து, அப்புறம் சின்னச்சின்ன வார்த்தைகள் என்று இந்தியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதில் பாகிஸ்தானியர்கள் பங்குதான் அதிகம். ஒவ்வொரு வார்த்தையையும் அதன் பொருளையும் அழகாக புரியும்படி சொல்லிக் கொடுத்தார்கள். அங்கு பணியாற்றிய இரண்டாண்டுகளில் ஓரளவிற்குப் பேசக் கற்றுக்கொண்டேன். என்னைப் போன்ற ஏராளமான தமிழர்கள் இங்கே வந்துதான் இந்தியை பேசக் கற்றுக்கொள்கின்றனர். இதுதான் நான் இந்தி கற்றுக்கொண்ட வரலாறு!

இப்படிக் கற்றுக்கொண்டஇந்திதான் ஒரிசாவில் வேலைக்குச் சேர்ந்த போது எனக்கு மிகவும் உதவியது. ஆனாலும் அரபு நாட்டில் நான் கற்றுக்கொண்ட இந்தி வேறு, இங்கு இவர்கள் பேசும் இந்தி வேறு என்பது விரைவில் புரியத் தொடங்கியது. ஒரிசாவின் மிகவும் ஒதுக்குப் புறமான பழங்குடியினர் வாழும் பகுதி (கலிங்கநகர்) என்பதால் இங்கே இந்திஅத்தனை புழக்கத்தில் இல்லை. இம் மக்களில் சிலருக்கு ஒரிய மொழி கூட தெரிந்திருக்கவில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம். வெளி உலகத்தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே ஒரிய, இந்தி மொழி பேசினார்கள். ஏனென்றால் இங்கே அவர்களுக்கென பாரம்பரிய மொழியும், கலாச்சாரமும்  தனியாக இருந்ததுதான் காரணம்.

தொடர்புடைய இடுகைகள்; 
ஒடிஸா வாழ் அனுபவங்கள் - ஒன்று (கலிங்க நாடும் கலிங்க நகரும்)
ஒடிஸா வாழ் அனுபவங்கள் - இரண்டு (ஹிந்தி தெரியுமா?)
 

10 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

வடகிழக்கு மாநிலங்களில் உள்ளடங்கிய பகுதிகளுக்குள் சென்றால் இது உண்மையிலேயே இந்தியா தானா என்ற குழப்பம் வரும் என்றார் என் நண்பர். காரணம் அவர்கள் மொழி பழக்கவழக்கங்கள் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே 50 வருடங்களுக்கு பிந்தையது. ஆனாலும் மகிழ்ச்சியாகத்தானே வாழ்கின்றார்கள். சுத்தமான காடு. சுகந்தமான காற்று. நீங்களும் நம்மளப்போல படிப்படியாகத்தான் மேலே வந்து இருப்பீங்க போல.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

ஆம் ஜோதிஜி! இவர்களின் பழக்க வழக்கங்கள் எனக்கு உண்மையிலேயே வியப்பைத்தான் கொடுத்தது. அதை பின்னர் விரிவாக எழுதுகிறேன். நானும் உங்களைப் போல படிப்படியாகத்தான் மேலே வந்துகொண்டிருக்கிறேன் ஜோதிஜி!

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை...

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருக தனபாலன் அவர்களே! என்ன புரிந்து கொள்ளவில்லை? விளக்கமாக எழுதியிருக்கலாமே!

தி.தமிழ் இளங்கோ said... [Reply]

இந்தியாவில் இந்தி கற்றுக் கொள்ள வாய்ப்பில்லாமல்., அரபு நாட்டில் போய் இந்தி கற்றுக் கொண்டது நல்ல அனுபவம்தான்.

குலவுசனப்பிரியன் said... [Reply]

//ஒரு இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியவில்லை என்கிறாயே என்றான்.// இப்படித்தான் வாடிக்கையாளருக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று நினைத்து ஏடி&டி தொலைபேசி நிறுவன உதவியாளர் அசாமியரான நண்பரை அழைத்து இந்தியில் பேசியதால், நண்பர் அவரை மிகக்கடுமையாகத் திட்டிவிட்டார். அவர்களுக்கு மொழி உணர்வு நம்மைவிடவும் அதிகம்போல.
//இம் மக்களில் சிலருக்கு ஒரிய மொழி கூட தெரிந்திருக்கவில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம்.//
உங்களைப்போல நாலு இடங்களுக்குப் போய் பழகியவர்கள் தங்கள் பட்டறிவை இதுபோல் பகிர்ந்துகொண்டால்தான் உண்மை நிலவரம் தெரிகிறது.

மேலும் வாசிக்கத்தூண்டும் சுவையான எழுத்து. நன்றி.

ரூபன் said... [Reply]

வணக்கம்
உண்மைதான் மொழி என்பது தெரிந்திருக்க வேண்டி விடயம் மொழி தெரியாமல் தாங்கள் திக்கு முக்காடிய அனுபவம் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

தமிழ் இளங்கோ ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

குலவுசனப்பிரியன்! நண்பர் ஜோதிஜி அவர்களின் தூண்டுதலினால்தான் எனது ஒரிஸா வாழ் அனுபவங்களை எழுதத்தொடங்கினேன். இதே நேரத்தில் இந்தித்திணிப்பு விஷயமும் சேர்ந்து கொண்டதால் இரண்டு பதிவுக்கான கருப்பொருள் கிடைத்துவிட்டது. மகாராட்டிராவில் கூட மொழிப்பற்று அதிகம். அங்கும் நாம் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ ஏதாவது கேட்டால் மராட்டியில்தான் பதில் சொல்வார்கள். எனது இரண்டு மூன்று 'புனே' பயணங்களில் இதைக் கண்கூடாக பார்த்திருக்கிறேன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருக ரூபன் அவர்களே! முதலில் மொழி தெரியாமல் விழிப்பது கடினமாக இருந்தாலும், அந்த மொழிக்காரர்களோடு தப்பும் தவறுமாக பேசும்போது அது நகைச்சுவையாக மாறி தன்னாலேயே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஈர்ப்பு வந்துவிடுகிறது.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!