Saturday, September 19, 2015

ஒடிஸா வாழ்க்கை 'கதம் ஹோகையா!'

மிக நீண்ட நாட்களாகி விட்டது பதிவெழுதி. ஒருவித விரக்தி மனப்பான்மையே காரணம். வேலை அலைச்சல், இட மாறுதல் போன்ற காரணங்கள் ஒருபுறமிருக்க, எழுதி என்னத்த கிழிக்கப் போகிறோம் என்ற சலிப்புதான் முக்கிய காரணம். நிறைய வலைப்பதிவர்களும் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நான்காண்டுளாக வலைப்பதிவு எழுதினாலும் சாதித்தது ஒன்றுமில்லை. ஆரம்பித்த வலைப்பதிவை மூடாமலிருப்பதே பெரிய சாதனைதான்.

எல்லோரும் முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். இளைஞர்கள் கைப்பேசியின் 'வாட்சப்' செயலியில் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் 'தேவைப்படும் போது பயன்படுத்த' என்ற நிலையிலிருந்து 'அதை பயன்படுத்தாத நேரம் இல்லை' என்ற நிலைமைக்கு மாறியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வேறு ஏதாவது வரக்கூடும்.

ஆனாலும் வலைப்பதிவு என்பது நமது மன எண்ணங்களை எழுத்தாக வெளிப்படுத்தவும், அதை நிரந்தரமான ஒரு ஆவணக்காப்பகமாக சேமிக்கவும்  உள்ள ஒரு அருமையான தொழில்நுட்ப வாய்ப்பாகும். வலைப்பதிவின் வளர்ச்சியே தற்போது இணையத் தமிழை முன்னெடுத்துச் செல்கிறது என்றால் அது மிகையில்லை.

புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடக்கவிருப்பதை பல நண்பர்களின் வலைப்பதிவுகளிலிருந்தும், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவுகளிலிருந்தும் அறிய முடிகிறது. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால் இதுபோன்ற பணிகளை சிரமம் பார்க்காமல் எடுத்து சிறப்பாக நடத்த முடிகிறது என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் திருவிழா, புத்தகத் திருவிழா இவற்றிற்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருப்பேன். ஆனால் முடியாமற் போகும். இந்த மாதிரி தருணங்களில்தான் வேறு ஏதாவது ஊருக்கு இடம் பெயர்ந்திருப்பேன். கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆனால் ஆறுதலான விஷயம் என்னவெனில் புது இடங்களுக்குப் போகும்போது அங்கிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதுதான்.

ஒரு வழியாக ஒரி(டி)ஸா வாழ்க்கை முடிந்து விட்டது. இப்போது மத்தியப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறேன். ஒடிஸா வாழ்க்கையைப் பற்றி எழுத முனைந்த தொடர் பாதியிலேயே நிற்கிறது. எழுத நிறைய விஷயம் இருந்தும் ஏனோ ஒரு ஆறுமாதகாலமாக எதையுமே எழுதத் தோணவில்லை. மீண்டும் எனது அனுபவங்களை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். 

மத்தியப் பிரதேசம் வந்து இரண்டு மாதமாகிறது. இதற்குள் 'சாஞ்சி மற்றும் கஜூரஹோ' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்த்தாகிவிட்டது. இதைப் பற்றிய பதிவை எழுதவும் ஆவலாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. பார்ப்போம்.

அன்புடன்,
கவிப்ரியன்.

12 comments:

பழனி. கந்தசாமி said... [Reply]

சோம்பலை விரட்டுங்கள். சிறுகச் சிறுக எழுதுங்கள். பெரிய பதிவுகள்தான் எழுதவேண்டும் என்ற கட்டாயமில்லை.

மணிமேகலா said... [Reply]

சரியாச் சொன்னீங்க கவிப்பிரியன்.ஒரு காரனமுமே இல்லாமல் ஒன்றும் செய்யத் தோன்றாமல் இருப்பது நானும் அண்மைக்காலமாக உணரும் ஒரு விடயம் தான். என்னத்த எழுதி என்னத்தக் கண்டோம் என்றொரு மனநிலை. பழன் ஐயா சொன்னது போல சோம்பல் ஒரு காரணமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு உளவியல் காரணம் இருக்கிறது. ‘உள்ளே’ போய் ஒருக்கா பார்க்க வேண்டும்.

என்றாலும் நீங்கள் திரும்ப வந்தது சந்தோஷம். பார்த்தது பற்றி ஏதேனும் எழுதுங்கோ. அறிய ஆவல்.

’கருவேலநிழல்’ என்றொரு வலைப்பூ. அந்த மனிதரின் நல்ல சில கவிதைகளை ஆனந்த விகடனிலும் வாசித்திருக்கிறேன்.அவர் ஒரு தடவை ( என் நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில்) ஏன் வலைப்பூ வைத்திருக்கிறீர்கள் என்றொரு கேள்விக்கு ‘என் வயதான காலத்தில் என் இள வயதில் நான் எப்படி எல்லாம் இருந்திருக்கிறேன் என்று பார்க்க’ என்று எழுதி இருந்தார். நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு எனக்கு இன்னும் பதில் தெரியவில்லை. ஆனால் இவரின் கருத்தைப் பார்த்த பின் அது உபயோகமான பயனுள்ள கருத்தாக இருக்கும் போல தோன்றியது.

அகநேர்மையோடு தன் உணர்வுகளை எழுதும் ஒருவருக்கு அது நல்லதொரு சுயவரலாறாக இருக்கும் போல தோன்றுகிறது. எழுதுங்கோ கவிப்பிரியன்.

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

ஆரோக்கியமற்று செயல்பட முடியாத தருணங்களில் நாம் நம்மை வாசித்துப் பார்க்க இந்த வலைபதிவுகள் உதவக்கூடும். அலுப்பு வரும் போது ஆழமாக உள்வாங்க அமைதியை எடுத்துக் கொள்வது நல்லது. மீண்டும் எழுதுங்க.

கரந்தை ஜெயக்குமார் said... [Reply]

எழுதுங்கள் நண்பரே
புத்துணர்ர்ச்சி பெருகும்
புதுப் புது உறவுகள் உண்டாகும்
தொடர்ந்து எழுதுங்கள்

தமிழானவன் said... [Reply]

தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்குததோன்றியதெல்லாம் எனக்கும்தான் தோன்றின. நாம் உலகையெல்லாம் மாற்றுமளவுக்கு எழுத முடியாது. ஆனால் நம் அகவுலகை மாற்றும் என்பதற்காகவாவது ஏதாவது எழுதிக் கொண்டிருப்போம். காலம் கனியும் போது நமது எழுத்து மேம்பட்டிருக்கும் நாமும் மேம்பட்டிருப்போம். எழுத வேண்டியவற்றை சிறு குறிப்பாக எடுத்து வைத்துக் கொண்டால் கிடைக்கும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதி வெளியிட்டு விடலாம்.

எனக்கும் வலைப்பதிவுதான் பிடிக்கிறது. ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ், ட்விட்டர், வாட்ஸப் போன்ற துரித உணர்ச்சிக் குவியல்கள் நமக்கு ஒத்து வராது.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]


வருகைக்கு மிக்க நன்றி ஐயா. தங்களின் ஆலோசனைப்படி சோம்பலை விடுத்து. எழுதமுயறச்சிக்கிறேன்.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி மணிமேகலா அவர்களே. சோம்பல் நிச்சயமாக இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி ஏதோ ஒரு உளவியல் காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எல்லாவற்றையும் வெளியே கொட்ட முடிவதில்லையே!

இத்தனை நாள் கழித்து வந்தாலும் என் வலைப்பக்கத்தையும் எட்டிப்பார்க்க சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பே உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது. 'கருவேல நிழல்' வலைப்பதிவைப் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது. வயதான காலத்தில் நாம் இப்போது எழுதுவதை எல்லாம் ஆற அமர்ந்து படித்து கடந்த கால நிகழ்வுகளை அசைபோட இந்த பதிவுகள் நிச்சயம் உதவும். அந்த காரணத்துக்காகவே இந்த வலைத்தளத்துக்கு மறக்க முடியாத நினைவுகள் என்று பெயர் வைத்தேன். தங்களின் ஆதரவிற்கு மீண்டுமொருமுறை நன்றி.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே. ஆரம்ப காலம் தொட்டு என்னை ஊக்குவிப்பவர்களில் நீங்கள் முதன்மையானவர். உண்மைதான் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுக்கின்ற காலத்தில் இந்த மலரும் நினைவுகள் நமக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

வருகைக்கும் உற்காகமூட்டுதலுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே. இத்தனை மாதம் வலைப்பதிவின் பக்கம் எட்டிபார்க்கலாமலிருந்தும் நண்பர்களை இழக்கவில்லை என்பது இந்த பின்னூட்டங்களிலிருந்து தெளிவாகிறது. இனி தொடர்ந்து செயல்படுவேன்.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தமிழானவன் அவர்களே. வலைப்பதிவில் உள்ள வசதி மற்ற எதிலும் இல்லை எனபது உண்மையே. எழுதி வைத்த குறிப்புகள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றை எடுத்து எழுதத்தான் முடியவில்லை நண்பரே. இது நமக்கான ஆத்ம திருப்திதானே தவிர ஊரை உலகை மாற்றுவதெல்லாம் நகைச்சுவையாத்தான் போய்விடும்!?

Thulasidharan V Thillaiakathu said... [Reply]

நீங்கள் எழுத வேண்டும். இது போன்ற ஒரு அலுப்பு வரத்தான் செய்கின்றது இடையிடையே. என்றாலும் நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பதிய வேண்டும். எங்களுக்கும் பல தகவல்கள் கிடைக்கும் அல்லவா?
வலை என்பது மிக மிக நம்மை எல்லோரையும் நட்புடன் அந்நியோன்யப் படுத்தும் ஒன்று. எண்ண்கள் மூலமாகவும், உணர்வுகளின் மூலமாகவும். ஒரு நெருங்கிய பந்தம் ஏற்படுத்தத்தான் செய்கின்றது.

அதுவும் நீங்கள் மிக அருமையாக எழுதுகின்றீர்கள். சொல்லாட்சி, கருத்தாட்சி என்று. தயவு செய்து எழுதுங்கள். நாங்கள் உண்மையாகவே தாங்கள் ஏன் எழுதவில்லை என்று எதிர்பார்த்திருந்தோம். நீங்கள் மீண்டும் வலைப்பக்கம் வந்தமை மிக்க மகிழ்வு அளிக்கின்றது. வாருங்கள் தோழரே! எழுதுங்கள்...

வாழ்த்துகள்!

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Thulasidharan V Thillaiakathu தங்களின் வருகைக்கும் என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி துளசிதரன் அவர்களே. வலையுலகத்தில் கிடைத்திருக்கும் நட்பிற்காகவே வலைப்பதிவை தொடரும் எண்ணம் வந்திருக்கிறது. நிச்சயம் தங்களது எண்ணத்தைப் பூர்த்தி செய்வேன். ஆனால் என்னையும் என் எழுத்தையும் அதிகமாகவே புகழ்ந்திருக்கிறீர்கள்.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!