கலிங்கநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலிங்கநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 அக்டோபர், 2014

தமிழனுக்கு எதிரி யார்?

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)

எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த ஒற்றுமையின்மையும் இருக்கும்போல! தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்பது எனது இந்த பன்னிரெண்டு ஆண்டு கால வெளிநாடு, வெளி மாநில வாழ்க்கையின் போது அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.  

எங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே என்னுடைய இடத்தில் இருந்தவர் ஒரு தமிழர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? முதன்முறையாக வடநாட்டில் வேலை செய்யப் போகிறோம், தமிழர்கள் யாராவது உடனிருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


உடன் பணிபுரிபவர்களிடம் விசாரித்தேன். அப்போதுதான் கலிங்கநகரில் சென்னையைச் சேர்ந்த ஒருவர்தான் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதாக அறிந்தேன். அங்கு போகத்தானே போகிறோம், பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டேன். அதே நேரத்தில் ஒரு ஐந்து மாதம் சில பணிகளுக்காக நான் கோபால்பூரிலேயே தங்க வேண்டியதாகி விட்டது.

இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் விடுதியல் அவர்கள் இரவில் உறங்குவதற்காக கட்டில் ஒன்றை (இரண்டு பேர் தூங்கும் வசதி கொண்டது) வடிவமைத்து, அதை நானே மாணவர்களுக்காக செய்முறைப் பயிற்சியாக மாற்றி மிகக் குறிகிய காலத்தில் பெரிய எண்ணிக்கையில் கட்டில்களை உருவாக்கி எங்கள் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கினேன்.

கலிங்கநகரில் அப்போது பயிற்சிக்காக வந்த மாணவர்கள் விடுதியில் தரையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடனடியாக என்னை கலிங்கநகருக்கு அனுப்பி அங்கும் இதே போல் கட்டில்களை மாணவர்களை வைத்தே உருவாக்குவது முடிவு செய்தார் முதல்வர். எனவே நான் கலிங்கநகர் இருக்கும் ஜாஜ்பூர் மாவட்டத்திற்குப் பயணமானேன். இது கிட்டத்தட்ட கோபால்பூரிலிருந்து கிட்டத்தட்ட 250கி.மீ.தூரமுள்ளது.


தலைநகர் புவனேஷ்வர், கட்டக் ஆகிய நகரங்களைத் தாண்டி ‘ஜாஜ்பூர் ரோடு’ என்கிற இரயில் நிலையம்தான் நான் இறங்க வேண்டிய இடம். முதல் முறையாக அந்தப் பகுதிகளுக்குப் பயணம் செய்கிறேன். நான் வருவது பற்றி ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அதற்கான ஏற்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையினால் நான் அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லை. இரவு 11 மணி வாக்கில் அங்கு இறங்கி எங்கள் அலுவலக நண்பருக்கு கைப்பேசியிலிருந்து தகவல் சொன்னேன்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வரச்சொன்னார். காரின் எண்ணைக் கொடுத்து வெளியே காத்திருப்பதாகச் சொன்னார். வெளியே வந்த போது அந்தக் குறிப்பிட்ட காரின் அருகே ‘பியர்’ (Beer) பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு ஒரு நபர் குடித்துக் கொண்டிருந்தார்.

அருகே சென்று விசாரிக்க எத்தணிக்கையில், ‘நீங்கதான் கவிப்ரியனா’ என்று கேட்டார் அந்த குடித்துக்கொண்டிருந்த நபர். ஆமாம், நீங்கள்தான் ‘சாமுவேல் ராஜ்’ தானே என்று கேட்டேன். ம்… என்று அதிகாரத் தோரணையோடு தலையாட்டிவிட்டு, இந்த வண்டில நீங்க போங்க, நான் நாளைக்கு காலைல புவனேஷ்வர்ல நடக்க இருக்கும் ‘மீட்டிங்குக்கு’ போறேன். ஒண்ணு ஞாபகம் வச்சுக்கங்க நான் மீட்டிங் போறதுனாலதான் இந்த கார் உங்களுக்கு இப்போ கிடைச்சது. இல்லன்னா இன்னைக்கு இரவு முழுவதும் இந்த இரயில்வே நிலையத்துல தூங்கிட்டு பொழுது விடிஞ்சு பேருந்துலதான் போக வேண்டியிருந்திருக்கும் என்று மிரட்டல் பாணியில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

புதிய இடத்தில் நமக்கு உதவ, தோள் கொடுக்க ஒரு தமிழர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வந்த எனக்கு முதல் சந்திப்பிலேயே அந்த நபர் எப்படிப் பட்டவர் என்பது புரிந்து போயிற்று. இவனோடு (இதற்க்கபுறம் அவனுக்கென்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது) எப்படி வேலை செய்வது என்று போகும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே போனேன்.

ஆரம்பமே இப்படி என்றால், இங்கே வேலை செய்வது மிகக் கடினம் என்பது தெரிந்து போயிற்று. ஆனாலும் அவசரப்படக் கூடாது. பார்ப்போம் சமாளிக்க முடியவில்லை எனில் வேலையை உதறிவிட்டுப் போக வேண்டியதுதான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆக இங்கே எனக்கான எதிரி ஒரு தமிழன்தான் என்பது மட்டும் தெளிவாகி விட்டது.

ஆனால் இப்போது நினைத்தால் அவன் என்னை எதிரியாக நினைத்தோ அல்லது தனக்கு போட்டியாக வந்துவிட்டானே என்று நினைத்துதான் அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் நான் அங்கு போய்ச் சேர்ந்த சில மாதங்களில் அவனை வேலையிலிருந்தே தூக்கியடிக்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியது.


ஞாயிறு, 27 ஜூலை, 2014

வயிறும் வாழ்வும்!

 
(ஒடிஸா வாழ் அனுபவங்கள் - 6)
கலிங்கநகர் பகுதிக்கு வந்தவுடன் நான் சந்தித்த முதல் பிரச்னை சாப்பாட்டுப் பிரச்னைதான். ஒரு ஜான் வயிற்றுக்காகத்தானே மனித வாழ்வில் இத்தனை போராட்டமும்! சாப்பாடு மட்டும் திருப்தியாகவும், ருசியாகவும் கிடைத்து விட்டால் அந்த மகிழ்ச்சியிலேயே மற்ற கஷ்டங்களை மறந்து வேலை செய்து விடலாம். குடும்பத்தோடு இருப்பவர்களைப் பற்றி இங்கே நான் எதுவும் சொல்ல வரவில்லை. குடும்பத்தை விட்டு இப்படி வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் பணிபுரிபவர்களின் நிலைமை சொல்லி மாளாது.

ஒன்று கிடைத்ததை தின்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தனியாக சமைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதுவும் நிரந்தரமாக ஒரே இடத்தில் வேலை என்றால்கூட ஓரளவு சமாளித்து விடலாம். அதாவது அந்த உணவுப் பழக்கம் பழகிப்போய்விடும். அல்லது சமைப்பதற்கான தட்டுமுட்டுச் சாமான்களை வாங்கிக் குவித்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நமக்கு வேண்டியவற்றையெல்லாம் சமைத்து சாப்பிடலாம். ஆனால் எனக்கோ இது இரண்டுமே வாய்க்கவில்லை. குறைந்த பட்சம் ஒராண்டுகூட ஓரிடத்தில் வேலை பார்க்க விடமாட்டார்கள்.

ஒடிஸாவுக்கு வந்த முதல் ஆறுமாதம் கோபால்பூரில் (பிரம்மபூர்) பணி. அதற்கப்புறம்தான் இந்த கலிங்கநகருக்கருகில் உள்ள சுகிந்தா குரோமைட் சுரங்கப்பகுதியான காலரங்கியட்டா! பிரம்மபூர் ஒடிஸாவின் நுழைவு வாயில் மாதிரி. சென்னையிலிருந்து இரயில் மார்க்கமாக சென்றால் ஆந்திர மாநிலத்தின் கடைசி இரயில் நிலையம் இச்சாபூர். அதற்கடுத்து ஒடிஸாவில் இரயில் நுழைந்தவுடன் முதல் இரயில் நிலையம் பிரம்மபூர்தான். ஆந்திராவின் எல்லையில் உள்ளதால் இங்கு (பிரம்மபூரில்) கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் தெலுங்கர்கள்.

ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் சென்னை மாகானத்தின் பகுதிகளாகவே இருந்துள்ளன. அதன் காரணமாகவும் இங்கு தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். ஒடிஸாவின் இந்த கன்ஜாம் மாவட்டத்தின் ஆந்திர எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெலுங்கர்கள்தான் பெரும்பான்மை. இருப்பது ஒடிஸாவில் வரி செலுத்துவதோ ஆந்திராவுக்கு என்றும் சொல்வதுண்டு. இங்கு தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்களும், மிகவும் செல்வாக்கு பெற்றவர்களும் தெலுங்கர்கள்தான். 

அதனாலேயே இங்கு வேலையில் சேர்ந்த போது தென்னிந்திய உணவு வகைகள் தாராளமாக கிடைத்தன. கொஞ்ச நாளில் எங்கள் அலுவலகம் கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பிலேயே சமைத்து சாப்பிடவும் தொடங்கியிருந்தேன்.

பொதுவாக எனக்கு அசைவ உணவு வகைகளை வெளியில் சாப்பிடப் பிடிக்காது. விலை அதிகமாக இருப்பது ஒரு காரணம், மேலும் அதிகமான மசாலாக்களை உபயோகிப்பதால் வரும் வயிற்றுக் கோளாறு என படுத்தி விடுவதால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிடித்த வகைகளை தேவையான அளவுக்கு வாங்கி வந்து குடியிருப்பிலிருந்த மற்றோரு கேரள நண்பருடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதுதான் பிடித்தமான வழக்கம்.

இந்த மாதிரி பிரச்னைகளை நான் வெளிநாடுகளில் சந்தித்திருந்தாலும் ஏதோ ஒரு சகிப்புத்தன்மையால் காலத்தை ஓட்டியிருக்கிறேன். இன்னொரு விஷயமும் இங்கு சொல்லியாக வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இங்கே (ஒடிஸா) தமிழ்நாட்டு உணவு வகைகளை என்னால் சாப்பிட முடியவில்லை. ஆனால் பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நம் தமிழக உணவு வகைகளை வகைவகையாக சாப்பிட்டது இன்றும் நினைவில் நிழலாடுகிறது. அதை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

இனி வெளிநாடே வேண்டாம் என்று முடிவெடுத்த பின்னால் வெளி மாநிலத்தில் வந்து மீண்டும் சிக்கிக்கொண்டேன். சிறிதும் தமிழ்நாட்டு உணவோடு சம்மந்தமில்லாத வகைகள். எங்கும் எதிலும் உருளைக் கிழங்கு. நம் மாநிலத்தில் கிடைக்கும் எந்த வகை அரிசியும் இங்கே கிடைக்காது. பச்சரிசி வேண்டுமாணாலும் கிடைக்குமே தவிர புழுங்கலரிசி சன்ன ரகம் கிடைக்கவே கிடைக்காது. உணவு விடுதிகளிலோ சுத்தம் என்பது கிஞ்சித்தும் கிடையாது.

எங்காவது சில இடங்களில் கிடைக்கும் இட்டிலியோ தோசையோ நம்மூர் பக்குவத்துக்கு வரவே வராது. நேரத்துக்கு ஏதாவது கொட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு நான் அனுபவிக்கும் வேதனை. பிரம்மபூரிலாவது பரவாயில்லை. கலிங்கநகர் பகுதியில் அதுவும் சுரங்கம் அமைந்த சுகிந்தா பகுதியில்… வாழ்க்கையே வெறுத்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடப் பழகினாலும் நம்மூர் சாம்பாரும், ரசமும் கலந்து கட்டி அடிக்க மனம் ஏங்கும். எப்போது ஊருக்குப் போவோம் என்றுதான் ஒவ்வொரு நாளும் மனசு துடிக்கும்.

அந்த அடர்ந்த காட்டில் ஒரிய, வங்காளிகள் தவிர்த்து வேறு மாநிலத்தவரைப் பார்ப்பது அபூர்வம். டாடா ஸ்டீல் அலுவலகத்தில் மற்ற மாநிலத்துக்காரர்கள் இருந்திருக்கலாம். ஆனால் வெளியில் ஒரிய மக்களையும் பழங்குடியின மக்களையும் மட்டுமே பார்த்துப் பழகிய எனக்கு, ஒரு நாள் அங்கு வாரம் ஒரு முறை நடைபெறும் சந்தைக்குப் போனபோது அதிசயமாக தமிழ்க்குரல்கள் கேட்ட திசையைத் திரும்பிப் பார்த்தேன்….
இன்னும் இருக்கு...
 
(புகைப்படங்கள் 2007-ல் ஒடிஸா - சுகிந்தாவில் பணியாற்றிய போது எடுத்தவை)