புதன், 13 மே, 2020

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை X



விடுதிக்கு திரும்பிய பின், மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருந்தது. அது ஆர்.எம்.வீரப்பன் வந்துவிட்டார் என்பதுதான். இரவு மீண்டும் படப்பிடிப்பு நடந்தது. நானும் மஞ்சுளாவும் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்வது போன்ற காட்சி, படமாக்கப்பட்டது. மிட்சுபிஷி அரங்கில், அந்தக் காட்சியை படமாக்கினோம். மின் ஒளியினால் மின்னல் பூகம்பம் போன்றவைகளை அமைத்திருந்தனர். ஒரு இடத்தில் நின்று கொண்டால் போதும். அந்தப் பாலத்தில் நடந்து போகும் பாதை, தானே நகர்ந்து செல்லும். . அந்தக் காட்சி முடியும் வரை, அது நகர்ந்து கொண்டே இருக்கும் 
.
அந்த இருளில் மின்னல் ஒளியில், திசை தெரியாது ஓடுவது போன்ற காட்சியை படமாக்கினோம். நாங்கள்தான் நடித்தோம் என்பதை தெளிவுபடுத்த, எங்கள் முகத்தில் ஒளி பாய்ச்சினால், காட்சியின் அமைப்பு கெட்டு விடும்; காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கினால், நாங்கள் யார் யார் நடிக்கிறோம் என்பது தெரியாமல் போய் விடும். அப்படிப்பட்ட நிலையில் தான், படமெடுத்தோம் 
.
அந்த அரங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த பணிப்பெண் ஒருவர், எங்கள் குழுவினர் அணிந்திருந்த எம்.ஜி.ஆர்., பிக்சர்சின் சின்னம் பதித்த அடையாள இலச்சினையை, ஆவலோடு கேட்டார். .கொடுத்ததும், ஏதோ கிடைத்தற்கரிய பொருளை, எளிதாக அடைந்தவர் போன்று, ஆனந்தக் கூத்தாடினார் .
என்னோடு வந்த அனைவரும், அந்த சின்னத்தை பெரிதும் மதிப்பவர்களே! இருந்தாலும், அந்தப் புதியவர் எங்கள் சின்னத்தை கண்டு, மகிழ்ந்ததைப் பார்த்த போது, என் உள்ளத்தில், மகிழ்ச்சி ஏற்பட்டது. மறுநாள் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னதோடு, என்னென்ன, எங்கெங்கே எடுக்க வேண்டும் என்பதையும், சொல்லி விட்டு, படுக்கச் சென்றேன்.

மறுநாள் காலையில், 'உலகம்' என்ற பாடலை படமாக்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயரமான இடத்திலிருந்து, கதாநாயகன் பாடுவதாக, அந்தக் காட்சி அமைக்கப்பட்டது. முதலில், அந்த அரங்கத்தின் மத்தியிலிருந்த உருவத்தின் முன், நின்று பாடுவது போன்று எடுக்கப்பட்டது. . முதலில் அந்த உருவத்தின் முகம் மட்டும் தெரிவதும், கேமரா பின்னால் சென்றால், நான் அந்த முகத்தை பார்த்துக் கொண்டிருப்பதும், அதன்பின் நான் திரும்பி, 'உலகம்' என்று பாடுவதும், பாடியதோடு சுற்றி வருவதும், நான் பாடிய பாட்டு, 'உலகம்... உலகம்... உலகம்...' என்று எதிரொலிப்பதுமாகவும், அதே நேரத்தில் எதிர்புறத்திலிருந்த ரயில் ஒன்று வருவதும், அதை பார்த்து ரசித்து, மறுபக்கமும், கோவிலை வலம் வருவது போல், ஒரு முழு சுற்று சுற்றி, மீண்டும், அந்த முகத்திற்கு நேரே வந்து நின்று, இன்னொரு பக்கம் செல்வது போன்றும் படமாக்கப்பட்டது.

நான் பாடியபடி வரும் போது, ரயில் வர வேண்டும். அந்த நேரத்தை  கணக்குப் போட்டு, படப்பிடிப்பு சரி வர நடைபெற வேண்டும். நாங்கள் தாமதித்து விட்டால், ரயில் போய் விடும். அவசரப்பட்டு விட்டாலோ தூரத்தில், ரயிலின் முன் பக்கம் மட்டுமே தெரியும். நேரில்  பார்க்காதவர்களுக்கு, அது என்னவென்றே தெரியப்போவதில்லை. இதை  மிக மிக எச்சரிக்கையோடு, படமாக்கினோம்.

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதைச் சித்தரிக்கும் இடத்தில், படப்பிடிப்பு நடத்தலாம் என, எண்ணிச் சென்றோம். அங்கு வெளிச்சம் போட்டுப் படம் எடுக்க அனுமதி இல்லை. ஏனெனில் வெளிச்சம் போட்டால், அங்கு ஏற்கனவே அமைத்திருக்கும் ஒளி அமைப்பின் நோக்கமே கெட்டு விடும்.

நீலம், சிவப்பு, மஞ்சள் என, பல வண்ணங்களை ஆங்காங்கே சிலைகளின் மேல் விழச் செய்து, அந்த விலங்கினங்களுக்கு ஏற்ப, ஒலியை ஒலிக்கச் செய்திருந்தனர். நாங்கள் படம் எடுக்க வெளிச்சம் போட்டோம் என்றால், அந்த வண்ணங்கள் மங்கிவிடும். வண்ணங்களின் அழகை வெளிப்படுத்த முடியாமல் போகுமாயின், அதைப் படம் எடுத்துப் பயனில்லை. எங்களுக்குத் தேவையான அளவுக்கு, வண்ண விளக்குகளைப் போட அங்கு வசதியுமில்லை. எனவே, நினைவுக்கு என்று சிலவற்றை எடுத்தோம்.

அன்று பிற்பகலில், படப்பிடிப்பை முடித்து, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போன போது, விளம்பரத்தட்டி ஒன்று எங்கள் கவனத்தை ஈர்த்தது. தட்டியில் அன்றிரவு, ஒரு முக்கியமான கூடத்தில், நூற்றுக்கணக்கான நடிகையர்களின் நடனமும், ரஷ்யக் கலைஞர்களின், கிராமிய நடனமும், பல்வேறு நடனக் காட்சிகளும் நடக்கும் என்று, குறிப்பிடப்பட்டிருந்தது. நான் உடனே, மணியனிடம், 'இதை படமாக்க இயலுமா...' என்று கேட்டேன். 'முயன்று பார்ப்போம்...' என்று சொல்லி, அவருக்கே உரித்தான பாணியில், வேகமாக நடந்து சென்றார்.
 

இன்னொரு இடத்தில் படம் எடுத்து முடிக்கும்முன், ஓடோடி வந்தார் மணியன். 'ஏழு மணிக்கெல்லாம் நாம் அங்கு சென்று, படப்பிடிப்புக்கு தயாராக இருக்க வேண்டும்...' என்றார். விடுவோமா இந்த அரிய வாய்ப்பை! உடனே படப்பிடிப்பை அத்துடன் நிறுத்தி, குறிப்பிட்ட இடத்திற்குப் புறப்பட்டோம். கட்டுங்கடங்காதவாறு மக்கள் அந்த இடத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். ஒலி-ஒளிப்பதிவு கருவிகளோடு, எப்படியோ உள்ளே நுழைந்து விட்டோம்.

நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆடுவதும், பெண்கள் ஆங்கிலப் பாணி உடை அணிந்து சேர்ந்து ஆடுவதும், வாண வேடிக்கைகள், தாண்டிக் குதித்து, பாய்ந்து, விழுந்து, ஆடும் ரஷ்ய நடனமும், இப்படியும் ஒரு அமைப்பு. இந்த ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஒருங்கே சேர்த்து, நடத்திக் காட்டும் ஒழுங்கு இருக்கே அப்பப்பா...

ஒரு பெண், ஒலிப்பெருக்கிக் கருவியை, கையில் பிடித்தவாறு பாடினார். அவருடைய குரலின் வலிமைதான் என்னே... அவர் உச்சஸ்தாயில் பாடும் போதும், அவருடைய குரல், நம்மை வீறு கொண்டு எழச் செய்தது. அவர்  நின்றிருக்கும் கூண்டுக்குள் இருந்து, படம் பிடித்தால் தான், நாங்களும், எங்களுக்குப் பின்னால் உள்ள இடங்களும், சரியாக ஒளிப்பதிவாகும். அதனால், பலமுறைப் படமாக்க வேண்டி வந்தது. அன்று, இவ்வாறு பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

மாலையில் நானும், சந்திரகலாவும் விடுதிக்குச் சென்று, வேறு உடைகளை மாற்றிக் கொண்டு, 'எக்ஸ்போ'வுக்கு வந்தோம். கார் டிரைவர் எங்களை இறக்கிவிட்டுச் சென்றார். நாங்கள் படியேறிச் சென்றபோது தான், நாங்கள் வேறு வாசற்படியின் வழியில் செல்கிறோம் என்பதை உணர்ந்தோம். திரும்பவும் இயலாது; அன்றிரவே அந்தக் காட்சியைப் படமாக்கவும் வேண்டும்.

முப்பதாயிரம் பல்புகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த, 'ஸ்விஸ்பெவிலிய'னில், படம் எடுக்க ஏற்பாடாகி இருந்தது. மறு நாளிலிருந்து, மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறினர். எனவே, அன்றே       அதைப் படமாக்கிவிட, எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தோம். எங்கள் இருவரிடமும் பத்திரிகைகாரர்களுக்குரிய, 'பாஸ்' இருந்ததால், அதைக் காண்பித்து, உள்ளே போய் விட்டோம். ஆனால்...
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
-
எம்.ஜிஆர்.,

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது… [Reply]

சுவாரஸ்யமான தகவல்கள் நண்பரே

தங்களது தளத்தை தொடர்கிறேன்.
- கில்லர்ஜி

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@KILLERGEE Devakottai நன்றி கில்லர்ஜி அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!