திங்கள், 28 செப்டம்பர், 2015

விதியை மீறினாலும் விதி மீதுதான் பழியா?

விதி மீறலில் நம் நாட்டை வெல்ல எந்த நாடும் கிடையாது. எல்லாவற்றிலும் அலட்சியம். மாமூல் லஞ்சம், செல்வாக்கு, அதிகாரம் இவை எல்லாவற்றையும் பிரயோகித்து எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிற சாமர்த்தியம் நம்மவர்களுக்கு அதிகம். மரபு, வழிமுறை, சட்டம் இதையெல்லாம்விட தன்னுடைய சுயநலம் ஒன்றே முக்கியம் என்ற நிலைதான் இன்று எங்கும்.

இந்த விதி மீறல் தலைப்புக்குக் காரணம் இன்று நான் பார்த்த ஒரு நிகழ்வும், அதனால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட இன்னலும்தான். சாலைப் போக்குவரத்து விதிகளை நாம் எல்லோரும் முறையாக கடைபிடிக்கிறோமா என்ன? இரு சக்கர வாகனத்தில் போகும்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் அணியாமல், அளவுக்கு மீறி ஆட்களை, சுமைகளை ஏற்றிச்செல்வது, ஒரு வழிப்பாதையில் குறுக்கே செல்வது, அதிவேகமாக செல்வது என்று ஏகத்துக்கும் அடுக்கலாம்.

 அடைபட்ட இரயில்வே கேட்டுக்குள் வாகனம்
 அடுத்தது இரயில் பாதைகளைக் கடக்கும் பகுதிகள். எண்ணற்ற விபத்துக்கள் நடக்கின்ற போதும் இரயில் பாதைகளை பாதுகாப்பாக கடந்து செல்லப் பயன்படும் யலெவல் கிராசிங்'குகளை நம்மவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.  பொதுவாக ஆளில்லாத லெவல் கிராசிங்கில்தான் விபத்துக்கள் அதிகம் நடப்பது வழக்கம். தொலைவில் இரயில் வண்டி வரும்போது அதற்குள்ளாக கடந்து விடலாம் என்றெண்ணியே பலரும் தவறு செய்கின்றனர்.

தண்டவாளத்தை மனிதர்கள் கடக்க 5 வினாடிக்கு மேல் ஆகும். 110 கி.மீ. வேகத்தில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தூரத்தை ஐந்தே வினாடியில் கடந்து பலி வாங்கிவிடும். ஆளில்லா லெவல் கிராசிங்கில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ரயில் வந்தால், பொறுமையாக இருந்து, ரயில் போன பிறகு கடந்து செல்வதே சரியான செயலாகும். பேருந்து, மகிழுந்து போல ரயிலை நினைத்த மாத்திரத்தில் திடீரென்று நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால் தடம் புரளும் அபாயம் உண்டு. அப்படியே பிரேக் பிடித்தாலும் 300 அல்லது 400 மீட்டர் தொலைவு போய்த்தான் நிற்கும். பலர் இப்படிப்பட்ட அலட்சிய மனப்பான்மையுடன் விபத்தைச் சந்திக்கின்றனர். 

ஆனால் லெவல் கிராசிங் உள்ள இடங்களில் கேட் மூடப்படுகின்ற நேரத்திலும், மூடப்பட்டபின்பும் சிலர் காட்டும் அவசரம், அவசர அவசரமாய் எமலோகத்துக்குப் போகக் கூடியதாகத்தான் இருக்கிறது. குறிப்பாய் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்போர் காத்திருக்கப் பொறுமையில்லாமல் அந்தச் சிறிய இடைவெளியில் வாகனத்தை சாய்த்து நுழைத்து சர்க்கஸ் வேலைகளையெல்லாம் காண்பித்து கடந்து செல்வர்.

இப்படி கேட் மூடப்படுகின்ற நேரத்தில் அவசரமாக நுழைந்த ஒரு வாகனத்தின் மேல் 'கேட்' விழுந்து மொத்தமாக வளைந்து போனது. அடுத்த பக்கத்தை வாகனம் கடந்து போவதற்குள் அந்தப் பக்கமும் அடைப்பட்டு விட்டது. இரயில் கடந்து போனபின்பும் வாகனம் நுழைந்த பகுதியில் 'கேட்' சேதமானதால் அதை விலக்க முடியவில்லை. ஒரு ஓரத்தில் உள்ளிருந்த வாகனமும் வெளியே வரமுடியவில்லை. இரண்டு பக்கமும் காத்திருந்த வாகனங்களும் இரயில் பாதையைக் கடக்க முடியவில்லை.

சரி செய்ய எடுத்துக்கொண்ட இரண்டு மணி நேரம் வரை வாகனங்கள் இருபக்கமும் காத்துக்கிடந்தன. ஓரிருவர் செய்கின்ற தவறினால் எத்தனை பேருக்கு இதனால் இன்னல்கள். ஒருவேளை இந்த விபத்தினால் உயிர்ப்பலி ஏற்பட்டிருந்தால் விதியின் பேரைச்சொல்லி சமாதானம் செய்துகொள்வார்களோ? விதி மீறலுக்கும் விதியின் மீதுதான் பழியா?

புதன், 23 செப்டம்பர், 2015

கோவிலுள்ள இடத்தில் குடியிருக்க வேண்டாம்!

"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" - இந்தப் பொன் மொழியைத்தான் இதுவரை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதென்னடா 'கோவில் உள்ள இடத்தில் குடியிருக்க வேண்டாம்' என்று சொல்கிறேனே என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம் அனுபவம்தான். என்னைப்போல பிரச்னையை எதிர்கொண்டவர்களுக்குத்தான் தெரியும் இதன் உண்மை நிலவரம்! கடவுள் பக்தி மிகுந்தவர்கள் உடனே சண்டைக்கு வந்துவிடாதீர்கள்.

ஒடிஸாவை விட்டு சென்ற மாதம்தான் மத்தியப்பிரதேசம் வர நேர்ந்தது. இப்போதைய நிலவரப்படி ஆறு மாதங்கள் இங்கிருக்க வேண்டும். அப்புறம் எந்த ஊரோ தெரியாது. வந்த புதிதில் நிறுவனம் அளித்த விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோம். மாதக்கணக்கில் தங்கியிருக்க அங்கே அனுமதி இல்லை என்பதால், நிறுவனமே எங்களுக்காக தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து, அங்கே தங்கிக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். பக்கத்திலேயே ஒரு கோவில்!

கோவில் என்றாலே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும்தானே. வருகிறவர் போகிறவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நேரம் போவது கூட தெரியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கோ 'இவனுங்களுக்கு வேற இடத்துல வீடே கிடைக்கலையான்னு' என்று கோபம். 

 எங்கள் கிராமத்து பிள்ளையார் கோவில்

சுமார் 30 வருஷத்துக்கு முன்னால எங்க கிராமத்துல கோவில் திருவிழான்னா ஊரே கோலாகலமா இருக்கும். ஊர்ல திருவிழாங்கறதுக்கு அறிகுறி ஒண்ணு எல்லோர் வீட்டு முன்னாடியும் சாணத்தால் மெழுகி கோலம் போட்டு, வாசற்படிகளில் மாவிலைத்தோரணம் கட்டி ஊரே மங்கலகரமாக இருக்கும். இரண்டாவது, விடியற்காலை 4 மணியிலிருந்து ஒலி பெருக்கியில் சினிமாப் பாடல்கள், பக்திப்பாடல்கள் என்று கலந்து கட்டி இரவு 10 மணி வரைக்கும் இடைவிடாது அலறிக்கொண்டே இருக்கும். இதில் எனது பங்களிப்பும் கனிசமாக இருக்கும். காரணம், அப்போதைய இளவட்டங்களில் நான் இளைஞர் நற்பணி மன்ற தலைவர், செயலாளர் போன்ற பொறுப்புக்களில் இருந்ததே.

அப்படி ஒலிபெருக்கி அலறிக்கொண்டிருந்தாலும் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல்தான் ஊர் மக்கள் இருப்பார்கள். அதாவது அது ஒரு தொல்லையாகத் தெரியாது. காரணம் எப்போதோ ஒரு முறை கொண்டாடப்படும் ஊர்த்திருவிழா என்பதால் அதை மகிழ்ச்சியுடனே அனுபவித்தார்கள்.

 பினா - கட்ரா மந்திர்
இப்போது அந்த மாதிரி கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. அதைப் பயன்படுத்தவும் தடை வந்து பல வருடங்களாகிறது என நினைக்கிறேன். நகரமல்லாத குக்கிராமங்களில் இருக்கலாமோ என்னவோ?  நாகரிகம் கருதி, அரசியல் மேடை, திருமண மண்டபங்கள், கோவில் திருவிழாக்கள் என எல்லா இடங்களிலும் பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டிகளை (SOUND BOX) வைப்பதுதான் இப்போது வழக்கம்.

 

ஆனால் இப்போது நாங்கள் குடிவந்திருக்கிற வீட்டுக்கு அருகே உள்ள கோவிலில் அந்த மாதிரி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை திசைக்கு ஒன்றாக வைத்து அலற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவில் என்றால் அமைதி, பக்தி என்றால் இறைவனை நினைத்து மனமுருக பிரார்த்திப்பது என்பதுதான் இத்தனை வயதில் எனக்கேற்ப்பட்ட புரிதல். இத்தனைக்கும் எனக்கும் கடவுளுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் பெரியார் புத்தகங்களின் சகவாசம்.

கோவிலுக்கு வந்து அமைதியாய் பிரார்தனை செய்பவர்களே இங்கு (BINA - MADHYA PRADESH) இல்லை போலிருக்கிறது. அலுவலகத்திலிருந்து வந்து சற்று ஓய்வெடுக்க வாய்யபே இல்லை. ஒலிபெருக்கியின் துணையோடு பூஜை, பஜனை என்று ஆரம்பித்து விடுகிறார்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளே பேசிக்கொள்ளவே முடியாது. உடல் நிலை சரியில்லாதவர்கள், படிக்கின்ற மாணவர்கள் என எல்லோருக்கும் சிரமம்தான். ஆனால் இவர்களோ சகஜமாக சகித்துக்கொள்கிறார்கள்.


விஷேஷ நாட்களில் ஒரு குறிப்பிட்ட நேரம் என்றால் பரவாயில்லை. தினமும் இரவு பனிரெண்டு மணி வரை இந்த பஜனை சத்தமும், அலறல் சத்தமும் ஓயவே ஓயாது. என்னதான் செய்வது என்று புரியவில்லை. காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டாலும் சத்தம் மண்டைக்குள் இறங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. இரவு நிம்மதியாய் தூங்கினால்தானே மறுநாள் வேலைக்குப் போக முடியும்! சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? இப்படிப்பட்ட காட்டுக்கத்தலில்தான் கடவுள் மனமிறங்குவாரா என்ன? இதைப்பற்றி எல்லாம் இங்கு வாய் திறக்கவே முடியாது. எல்லாரும் பக்தியில் ஊறிய பழங்கள்.


இப்படி பக்தி முத்திப் போவதால்தான் பிரேமானந்தாக்களும் நித்தியானந்தாக்களும் உருவாகி, சுகபோக கார்ப்பரேட் கோவில் முதலாளிகளாக வலம் வருகிறார்கள். சமீபத்தில் மகாராட்டிராவில் 'ராதேமா' என்ற போலி பெண் சாமியாரின் லீலைகளும் இப்போது வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியிருக்கின்றன. (பொது நிகழ்ச்சிகளில் 'ரெக்கார்டு டேன்ஸ்' ஆடிக்கொண்டிருந்தவரை முன்னேற்பாட்டுடன் ஒரு கும்பல் மைடையிலேயே சாமியாடவைத்து, பாதபூஜை செய்யத்தொடங்கி, மக்களும் மதி மயங்கி ஒவ்வொருத்தராக காலில் விழ, பத்தே ஆண்டுகளில் 'ஸ்டைலிஷ் ராதேமா'வாக மாறிவிட்டார்).  


ஒடிஸாவில் கூட ஒரு பாபாவும் இப்படி மாட்டியிருக்கிறார். (பெயர் சாரதி பாபா). இந்த ஒடிஸா பாபா கிருஷ்ண ஜெயந்தியன்று பால கிருஷ்ணனாக மாறி குழந்தை போல தரையில் தவழ்ந்து சென்று கோவிலுக்கு வந்திருக்கிற ஒவ்வொரு தாய்மார்களின் (தாய்ப்)பாலை குடிக்கும் நிகழ்ச்சி பற்றிக்கூட இப்போது செய்தி கசியத் தொடங்கியிருக்கிறது. நமது தாய்மார்களோ கிருஷ்ண பகவானே குழந்தையாய் பாபா வடிவில் வந்து பால் குடிப்பதாய் நினைக்கும் மடத்தனத்தை என்னவென்று சொல்வது?!

திங்கள், 21 செப்டம்பர், 2015

மாற்று அரசியலின் அவலம்!

மாற்று அரசியல் - நேர்மையான அரசியலுக்கும், ஆட்சிக்கும் நடுநிலை வாதிகளும், அறிவு ஜீவிகளும்  வைத்த பெயர்தான் இது. பணம் மற்றும் ஜாதி அரசியலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், மிகக்குறுகிய காலத்தில் சாதித்துக் காட்டியவர் தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்தான். இப்போது ஆட்சி எப்படி நடக்கிறது என்ற விவாதத்தை அப்புறம் பார்த்துக் கொள்வோம். அங்கு காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. ஆட்சிக்கு மாற்று உருவாகி விட்டது. மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவாக உணர்த்திய தேர்தல் அது. அப்போது அது குறித்து 'ஒரு நாயகன் உதயமாகிறான்'  என்ற பதிவையும் போட்டிருந்தேன்.


இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு மாற்று அரசியலுக்கான சூழலே இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி. மாற்று அரசியலை முன்வைத்துத்தான் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இப்போது அவர் மகனை வைத்துதான் அரசியல் நடத்துகிறார். 'அடுத்த வாரிசு' பிரச்னையில் எங்கே தலை தூக்கிவிடுவாரோ என்று கட்சியை விட்டு ஓரங்கட்டப்பட்ட 'வைகோ' தூய்மையான அரசியலை முன்வைத்து கட்சி துவக்கி, பின் மிக கேவலமாக தன் தாய்க்கட்சியோடு கூட்டணி, சொற்ப இடங்கள் அதிகமாக கொடுத்ததால் அ.தி.மு.க.வோடு கூட்டணி என்று தன்  பிம்பத்தை தானே கெடுத்துக்கொண்டார். இதே மாதிரி மாற்று அரசியல் முழக்கத்தை வைத்து முதலமைச்சர் கனவில் கட்சி தொடங்கியவர் விஜயகாந்த். இப்போது மனைவி, மைத்துனர் இவர்களை வைத்துக்கொண்டுதான் கட்சியை நடத்தி வருகிறார்.

இவர்களின் நோக்கம் தூய்மையான அரசியலோ அல்லது நேர்மையான ஆட்சியோ அல்ல. முதலமைச்சர் கனவு மட்டுமே. ஆனால் மாற்று அரசியலுக்கான எந்த முயற்சியும் இவர்களிடத்தில் இல்லை. தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் விட்டால் வேறு கதியே தமிழகத்துக்கு இல்லை என்கிற நிலை வந்தாகி விட்டது. நிரந்தர முதல்வர் போதையில் இருக்கும் 'ஜெ' கடைசி நேரத்தில் எப்படியும் பணத்தை வீசி மற்ற கட்சிகளை வளைத்து விடலாம் என்ற திட்டத்தில் இருப்பார். இந்த உதிரிக் கட்சிகளும் இருக்கின்ற எல்லா ஓட்டைகளையும் பொத்திக்கொண்டு கிடைத்ததை வாங்கிக்கொண்டு அடங்கிப் போவர்.

ஆனால் இதே கட்சிகள் தி.மு.க.விடம் அதிக இடங்கள் முதல் ஆட்சியில் பங்குவரை பேரம் பேசுவதுதான் வேடிக்கை. காரணமும் இல்லாமலில்லை, தி.மு.க.வின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் அவ்வளவுதான். மக்களிடமும் இன்னும் கருணாநிதி எதிர்ப்பு என்பது குறைந்தபாடில்லை. கணக்கற்ற ஊழல்கள், சிறைவாசம் எல்லாம் இருந்தும் ஜெயலலிதாவின் ஓட்டு வங்கியும் குறைந்தபாடில்லை.

ஆனாலும் மிகத்தெளிவாக தமிழக மக்கள் இரண்டு பேருக்குமே தலா ஐந்து ஆண்டுகளை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே கட்சிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும்போது தமிழ்நாடே சுடுகாடாகும் என்பது தெரிந்துதான் இருக்கிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் 'ஜெ' வின் ஆட்சி இந்த அவலத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் இந்த முறை தி.மு.க.விற்குத்தான் வாய்ப்பு போக வேண்டும்.

ஆனால் இந்த இடதுசாரிகளும், வேகோவும் சேர்ந்து மறைமுகமாக அ.தி.மு.க.வுக்கு உதவுவதைப் பொறுக்க மாட்டாதவர்கள் அங்கிருந்து விலகி வருகிறார்கள். மலையையே முழுங்கும் அளவுக்கு ஊழல்கள் வியாபித்திருக்கும் தமிழகத்தின் அவல ஆட்சியைப் பற்றி 'வைகோ' வாய் தவறிக்கூட எங்கும் பேசுவதில்லை. ஒரு சுயநலவாதியை நானும்கூட சில நாட்கள் நேர்மையானவர் என்று நம்பியிருந்ததற்காக வெட்கப்படுகிறேன்.

மாற்று அரசியல் குறித்த விழிப்புணர்வை, அவசியத்தை தமிழகத்தில் யார்தான் ஏற்படுத்தப் போகிறார்கள்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையுமே தேர்ந்தெடுப்பது? என்னதான் வழி? கொஞ்சம் சிந்திக்கலாமே!

சில நாட்களுக்கு முன்பு தேவியர் இல்லம் திருப்பூர் வலைப்பதிவின் ஜோதிஜி அவர்களின் மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் - பதிவுக்கு பதில் (அ) பின்னூட்டம்) எழுதியதை இங்கே நினைவு கூர்கிறேன்.

ஜோதிஜி! இத்தனை நாள் காத்திருந்து கலந்து கட்டி அடித்திருக்கிறீர்கள். வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத அரசியல்வாதிகள் குறித்த வரிகள் அற்புதம். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியிலே வருவதற்கு அவர்களுக்கு யார் தைரியம் கொடுப்பது? மக்களேதானே! மக்கள் என்ன தெளிவாக இருக்கிறார்கள்? இவர்கள் ஐந்தாண்டு காலம் சுருட்டியாயிற்று, அடுத்தது அவர்களுக்கும் ஒரு ஐந்தாண்டு கொடுத்துப் பார்ப்போம் என்கிற தாராள மனப்பான்மையை எங்கு போய் சொல்லி முட்டிக் கொள்வது?

மாற்று அரசியல் என்பதே இந்திய அரசியலில் கேலிக்கூத்தாகத்தான் முடியும் போலிருக்கிறது. ஆசை பேராசையாகி பேரம் படியும்வரை மதில்மேல் பூனையாக இருந்து கடைசியில் கிளம்பிப்போய் ஓட்டு கேட்டால் மதிகெட்ட மானிடர்கள் எப்படியும் நமக்கு ஓட்டை போட்டுத்தானே ஆகவேண்டும் என்கிற தடித்தனம் எப்படி வருகிறது இந்த அரசியல்வாதிகளுக்கு? தமிழ் நாட்டில் தி.மு.க.வையும் மத்தியில் காங்கிரஸையும் மட்டுமே குடும்ப அரசியல் செய்கிறவர்களாக மக்கள் மத்தியிலே வாதத்தை வைத்த எல்லா அரசியல் அயோக்கியர்களுமே தத்தமது வாரிசுகளை சத்தமேயில்லாமல் நுழைத்துவிடுகிற அதிசயம் இங்கு மட்டுமே நடக்கும்.

ஏனென்றால் நம் மக்களின் மறதி அப்படி. நேர்மை என்பது கிலோ என்ன விலை என்கிற காலமிது? எந்தக்கட்சியில் சேர்ந்தால் எவ்வளவு சீக்கிரம் கோடீஸ்வரனாகலாம் என்கிற கனவு கட்சிக்காரனுக்கு மட்டுமல்ல கடைக்கோடி மக்களுக்கும் வந்திருக்கிறது. காசு கொடுப்பவனிடம் அண்டிப்பிழைக்க, எச்சில் சோற்றுக்கு அலையும் நாயாய் நாணயம் இல்லாத நாலாந்தர அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஓட்டைப் போட்டு அவனை சிம்மாசனத்தில் ஏற்றி அவனின் ராஜ வாழ்க்கையை பார்த்து பரவசமடையும் நம் பரதேசி மக்களை நினைத்தால் அழுகைக்கு பதில் எரிச்சல்தான் வருகிறது.
ஆதாயம் எங்கோ அங்கே நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு போய்ச்சேரும் மனோநிலை இரண்டாம் மட்ட அரசியல்வாதிகளிடம் வந்து வெகு நாட்களாகிறது. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டபின் தனிகட்சி ஆரம்பித்ததும் தொடங்கியது இந்த கலாச்சாரம்.

சென்ற மே மாதத்தில் வைகோ குறித்த எனது பின்னூட்டத்தை இங்கே தாங்கள் நினைவு கூர்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜோதிஜி!

//வைகோவை எப்படி நேர்மையாளர்கள் வரிசையில் சேர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. எந்த இயக்கத்திலிருந்து வெளியேறினாரோ அதே இயக்கத்தோடு கூட்டணியும், விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசியதால் இரண்டாண்டு காலம் ஜெயாவினால் சிறையில் அடைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்ட பின்னரும், கேவலம் சில தொகுதிகளுக்காக அதே ஜெயா கூட்டணியில் சேர்ந்த வைகோவும்கூட ஒரு தேர்ந்த சந்தர்ப்பவாதிதான். அதனால்தான் மரியாதை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறார்.//

சனி, 19 செப்டம்பர், 2015

ஒடிஸா வாழ்க்கை 'கதம் ஹோகையா!'

மிக நீண்ட நாட்களாகி விட்டது பதிவெழுதி. ஒருவித விரக்தி மனப்பான்மையே காரணம். வேலை அலைச்சல், இட மாறுதல் போன்ற காரணங்கள் ஒருபுறமிருக்க, எழுதி என்னத்த கிழிக்கப் போகிறோம் என்ற சலிப்புதான் முக்கிய காரணம். நிறைய வலைப்பதிவர்களும் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நான்காண்டுளாக வலைப்பதிவு எழுதினாலும் சாதித்தது ஒன்றுமில்லை. ஆரம்பித்த வலைப்பதிவை மூடாமலிருப்பதே பெரிய சாதனைதான்.

எல்லோரும் முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். இளைஞர்கள் கைப்பேசியின் 'வாட்சப்' செயலியில் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் 'தேவைப்படும் போது பயன்படுத்த' என்ற நிலையிலிருந்து 'அதை பயன்படுத்தாத நேரம் இல்லை' என்ற நிலைமைக்கு மாறியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வேறு ஏதாவது வரக்கூடும்.

ஆனாலும் வலைப்பதிவு என்பது நமது மன எண்ணங்களை எழுத்தாக வெளிப்படுத்தவும், அதை நிரந்தரமான ஒரு ஆவணக்காப்பகமாக சேமிக்கவும்  உள்ள ஒரு அருமையான தொழில்நுட்ப வாய்ப்பாகும். வலைப்பதிவின் வளர்ச்சியே தற்போது இணையத் தமிழை முன்னெடுத்துச் செல்கிறது என்றால் அது மிகையில்லை.

புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடக்கவிருப்பதை பல நண்பர்களின் வலைப்பதிவுகளிலிருந்தும், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவுகளிலிருந்தும் அறிய முடிகிறது. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால் இதுபோன்ற பணிகளை சிரமம் பார்க்காமல் எடுத்து சிறப்பாக நடத்த முடிகிறது என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் திருவிழா, புத்தகத் திருவிழா இவற்றிற்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருப்பேன். ஆனால் முடியாமற் போகும். இந்த மாதிரி தருணங்களில்தான் வேறு ஏதாவது ஊருக்கு இடம் பெயர்ந்திருப்பேன். கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆனால் ஆறுதலான விஷயம் என்னவெனில் புது இடங்களுக்குப் போகும்போது அங்கிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதுதான்.

ஒரு வழியாக ஒரி(டி)ஸா வாழ்க்கை முடிந்து விட்டது. இப்போது மத்தியப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறேன். ஒடிஸா வாழ்க்கையைப் பற்றி எழுத முனைந்த தொடர் பாதியிலேயே நிற்கிறது. எழுத நிறைய விஷயம் இருந்தும் ஏனோ ஒரு ஆறுமாதகாலமாக எதையுமே எழுதத் தோணவில்லை. மீண்டும் எனது அனுபவங்களை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். 

மத்தியப் பிரதேசம் வந்து இரண்டு மாதமாகிறது. இதற்குள் 'சாஞ்சி மற்றும் கஜூரஹோ' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்த்தாகிவிட்டது. இதைப் பற்றிய பதிவை எழுதவும் ஆவலாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. பார்ப்போம்.

அன்புடன்,
கவிப்ரியன்.