விதி மீறலில் நம் நாட்டை வெல்ல எந்த நாடும் கிடையாது. எல்லாவற்றிலும் அலட்சியம். மாமூல் லஞ்சம், செல்வாக்கு, அதிகாரம் இவை எல்லாவற்றையும் பிரயோகித்து எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிற சாமர்த்தியம் நம்மவர்களுக்கு அதிகம். மரபு, வழிமுறை, சட்டம் இதையெல்லாம்விட தன்னுடைய சுயநலம் ஒன்றே முக்கியம் என்ற நிலைதான் இன்று எங்கும்.
இந்த விதி மீறல் தலைப்புக்குக் காரணம் இன்று நான் பார்த்த ஒரு நிகழ்வும், அதனால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட இன்னலும்தான். சாலைப் போக்குவரத்து விதிகளை நாம் எல்லோரும் முறையாக கடைபிடிக்கிறோமா என்ன? இரு சக்கர வாகனத்தில் போகும்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் அணியாமல், அளவுக்கு மீறி ஆட்களை, சுமைகளை ஏற்றிச்செல்வது, ஒரு வழிப்பாதையில் குறுக்கே செல்வது, அதிவேகமாக செல்வது என்று ஏகத்துக்கும் அடுக்கலாம்.
அடைபட்ட இரயில்வே கேட்டுக்குள் வாகனம்
அடுத்தது இரயில் பாதைகளைக் கடக்கும் பகுதிகள். எண்ணற்ற விபத்துக்கள் நடக்கின்ற போதும் இரயில் பாதைகளை பாதுகாப்பாக கடந்து செல்லப் பயன்படும் யலெவல் கிராசிங்'குகளை நம்மவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பொதுவாக ஆளில்லாத லெவல் கிராசிங்கில்தான் விபத்துக்கள் அதிகம் நடப்பது வழக்கம். தொலைவில் இரயில் வண்டி வரும்போது அதற்குள்ளாக கடந்து விடலாம் என்றெண்ணியே பலரும் தவறு செய்கின்றனர்.
தண்டவாளத்தை மனிதர்கள் கடக்க 5
வினாடிக்கு மேல் ஆகும். 110 கி.மீ. வேகத்தில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த
தூரத்தை ஐந்தே வினாடியில் கடந்து பலி வாங்கிவிடும். ஆளில்லா லெவல்
கிராசிங்கில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ரயில் வந்தால், பொறுமையாக
இருந்து, ரயில் போன பிறகு கடந்து செல்வதே சரியான செயலாகும். பேருந்து, மகிழுந்து போல ரயிலை நினைத்த மாத்திரத்தில் திடீரென்று நிறுத்த முடியாது.
அப்படிச் செய்தால் தடம் புரளும் அபாயம் உண்டு. அப்படியே பிரேக்
பிடித்தாலும் 300 அல்லது 400 மீட்டர் தொலைவு போய்த்தான் நிற்கும். பலர் இப்படிப்பட்ட அலட்சிய மனப்பான்மையுடன் விபத்தைச் சந்திக்கின்றனர்.
ஆனால் லெவல் கிராசிங் உள்ள இடங்களில் கேட் மூடப்படுகின்ற நேரத்திலும், மூடப்பட்டபின்பும் சிலர் காட்டும் அவசரம், அவசர அவசரமாய் எமலோகத்துக்குப் போகக் கூடியதாகத்தான் இருக்கிறது. குறிப்பாய் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்போர் காத்திருக்கப் பொறுமையில்லாமல் அந்தச் சிறிய இடைவெளியில் வாகனத்தை சாய்த்து நுழைத்து சர்க்கஸ் வேலைகளையெல்லாம் காண்பித்து கடந்து செல்வர்.
இப்படி கேட் மூடப்படுகின்ற நேரத்தில் அவசரமாக நுழைந்த ஒரு வாகனத்தின் மேல் 'கேட்' விழுந்து மொத்தமாக வளைந்து போனது. அடுத்த பக்கத்தை வாகனம் கடந்து போவதற்குள் அந்தப் பக்கமும் அடைப்பட்டு விட்டது. இரயில் கடந்து போனபின்பும் வாகனம் நுழைந்த பகுதியில் 'கேட்' சேதமானதால் அதை விலக்க முடியவில்லை. ஒரு ஓரத்தில் உள்ளிருந்த வாகனமும் வெளியே வரமுடியவில்லை. இரண்டு பக்கமும் காத்திருந்த வாகனங்களும் இரயில் பாதையைக் கடக்க முடியவில்லை.
சரி செய்ய எடுத்துக்கொண்ட இரண்டு மணி நேரம் வரை வாகனங்கள் இருபக்கமும் காத்துக்கிடந்தன. ஓரிருவர் செய்கின்ற தவறினால் எத்தனை பேருக்கு இதனால் இன்னல்கள். ஒருவேளை இந்த விபத்தினால் உயிர்ப்பலி ஏற்பட்டிருந்தால் விதியின் பேரைச்சொல்லி சமாதானம் செய்துகொள்வார்களோ? விதி மீறலுக்கும் விதியின் மீதுதான் பழியா?
2 கருத்துகள்:
எங்கும் இந்த விதி மீறல்கள் உள்ளது தான் கவி.
நாடுகளுக்கேற்ப அந்த விதி மீறல்கள் வேறுபடும் அவ்வளவு தான். வெளி நாடுகளில் உள்ள அதி வேக பெரு நெடுஞ்சாலைகளில் ’இறந்து போவதற்காக அதிவேகமாக ஓடாதீர்கள்’ எனப் பொருள் படும் படியான ஆங்கில வாசகங்களை ("don't rush to die" ) உயரமாய் உள்ள வீதியின் மேலே அவசர அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த என அமைக்கப் பட்டிருக்கும் electronic திரைகளில் காட்சிப்படுத்துவார்கள். குறிப்பாக நீண்ட வார இறுதி விடுமுறைக் காலங்களில் இப்படியான வசனங்களைக் காணலாம். விபத்துக்கள் அக்காலங்களில் தான் அதிகம் நிகழ்கின்றமை காரணமாய் இருக்கலாம்.
@மணிமேகலா
நம் போன்ற படிப்பறிவு அதிகம் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளில்தான் இத்தகைய விதிமீறல்கள் என்று நினைத்தேன். வெளிநாடுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது போலும். ஹூம் எல்லோரும் மனிதர்கள்தானே!? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!