Sunday, July 27, 2014

வயிறும் வாழ்வும்!

 
(ஒடிஸா வாழ் அனுபவங்கள் - 6)
கலிங்கநகர் பகுதிக்கு வந்தவுடன் நான் சந்தித்த முதல் பிரச்னை சாப்பாட்டுப் பிரச்னைதான். ஒரு ஜான் வயிற்றுக்காகத்தானே மனித வாழ்வில் இத்தனை போராட்டமும்! சாப்பாடு மட்டும் திருப்தியாகவும், ருசியாகவும் கிடைத்து விட்டால் அந்த மகிழ்ச்சியிலேயே மற்ற கஷ்டங்களை மறந்து வேலை செய்து விடலாம். குடும்பத்தோடு இருப்பவர்களைப் பற்றி இங்கே நான் எதுவும் சொல்ல வரவில்லை. குடும்பத்தை விட்டு இப்படி வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் பணிபுரிபவர்களின் நிலைமை சொல்லி மாளாது.

ஒன்று கிடைத்ததை தின்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தனியாக சமைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதுவும் நிரந்தரமாக ஒரே இடத்தில் வேலை என்றால்கூட ஓரளவு சமாளித்து விடலாம். அதாவது அந்த உணவுப் பழக்கம் பழகிப்போய்விடும். அல்லது சமைப்பதற்கான தட்டுமுட்டுச் சாமான்களை வாங்கிக் குவித்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நமக்கு வேண்டியவற்றையெல்லாம் சமைத்து சாப்பிடலாம். ஆனால் எனக்கோ இது இரண்டுமே வாய்க்கவில்லை. குறைந்த பட்சம் ஒராண்டுகூட ஓரிடத்தில் வேலை பார்க்க விடமாட்டார்கள்.

ஒடிஸாவுக்கு வந்த முதல் ஆறுமாதம் கோபால்பூரில் (பிரம்மபூர்) பணி. அதற்கப்புறம்தான் இந்த கலிங்கநகருக்கருகில் உள்ள சுகிந்தா குரோமைட் சுரங்கப்பகுதியான காலரங்கியட்டா! பிரம்மபூர் ஒடிஸாவின் நுழைவு வாயில் மாதிரி. சென்னையிலிருந்து இரயில் மார்க்கமாக சென்றால் ஆந்திர மாநிலத்தின் கடைசி இரயில் நிலையம் இச்சாபூர். அதற்கடுத்து ஒடிஸாவில் இரயில் நுழைந்தவுடன் முதல் இரயில் நிலையம் பிரம்மபூர்தான். ஆந்திராவின் எல்லையில் உள்ளதால் இங்கு (பிரம்மபூரில்) கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் தெலுங்கர்கள்.

ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் சென்னை மாகானத்தின் பகுதிகளாகவே இருந்துள்ளன. அதன் காரணமாகவும் இங்கு தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். ஒடிஸாவின் இந்த கன்ஜாம் மாவட்டத்தின் ஆந்திர எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெலுங்கர்கள்தான் பெரும்பான்மை. இருப்பது ஒடிஸாவில் வரி செலுத்துவதோ ஆந்திராவுக்கு என்றும் சொல்வதுண்டு. இங்கு தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்களும், மிகவும் செல்வாக்கு பெற்றவர்களும் தெலுங்கர்கள்தான்

அதனாலேயே இங்கு வேலையில் சேர்ந்த போது தென்னிந்திய உணவு வகைகள் தாராளமாக கிடைத்தன. கொஞ்ச நாளில் எங்கள் அலுவலகம் கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பிலேயே சமைத்து சாப்பிடவும் தொடங்கியிருந்தேன்.

பொதுவாக எனக்கு அசைவ உணவு வகைகளை வெளியில் சாப்பிடப் பிடிக்காது. விலை அதிகமாக இருப்பது ஒரு காரணம், மேலும் அதிகமான மசாலாக்களை உபயோகிப்பதால் வரும் வயிற்றுக் கோளாறு என படுத்தி விடுவதால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிடித்த வகைகளை தேவையான அளவுக்கு வாங்கி வந்து குடியிருப்பிலிருந்த மற்றோரு கேரள நண்பருடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதுதான் பிடித்தமான வழக்கம்.

இந்த மாதிரி பிரச்னைகளை நான் வெளிநாடுகளில் சந்தித்திருந்தாலும் ஏதோ ஒரு சகிப்புத்தன்மையால் காலத்தை ஓட்டியிருக்கிறேன். இன்னொரு விஷயமும் இங்கு சொல்லியாக வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இங்கே (ஒடிஸா) தமிழ்நாட்டு உணவு வகைகளை என்னால் சாப்பிட முடியவில்லை. ஆனால் பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நம் தமிழக உணவு வகைகளை வகைவகையாக சாப்பிட்டது இன்றும் நினைவில் நிழலாடுகிறது. அதை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

இனி வெளிநாடே வேண்டாம் என்று முடிவெடுத்த பின்னால் வெளி மாநிலத்தில் வந்து மீண்டும் சிக்கிக்கொண்டேன். சிறிதும் தமிழ்நாட்டு உணவோடு சம்மந்தமில்லாத வகைகள். எங்கும் எதிலும் உருளைக் கிழங்கு. நம் மாநிலத்தில் கிடைக்கும் எந்த வகை அரிசியும் இங்கே கிடைக்காது. பச்சரிசி வேண்டுமாணாலும் கிடைக்குமே தவிர புழுங்கலரிசி சன்ன ரகம் கிடைக்கவே கிடைக்காது. உணவு விடுதிகளிலோ சுத்தம் என்பது கிஞ்சித்தும் கிடையாது.

எங்காவது சில இடங்களில் கிடைக்கும் இட்டிலியோ தோசையோ நம்மூர் பக்குவத்துக்கு வரவே வராது. நேரத்துக்கு ஏதாவது கொட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு நான் அனுபவிக்கும் வேதனை. பிரம்மபூரிலாவது பரவாயில்லை. கலிங்கநகர் பகுதியில் அதுவும் சுரங்கம் அமைந்த சுகிந்தா பகுதியில்வாழ்க்கையே வெறுத்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடப் பழகினாலும் நம்மூர் சாம்பாரும், ரசமும் கலந்து கட்டி அடிக்க மனம் ஏங்கும். எப்போது ஊருக்குப் போவோம் என்றுதான் ஒவ்வொரு நாளும் மனசு துடிக்கும்.

அந்த அடர்ந்த காட்டில் ஒரிய, வங்காளிகள் தவிர்த்து வேறு மாநிலத்தவரைப் பார்ப்பது அபூர்வம். டாடா ஸ்டீல் அலுவலகத்தில் மற்ற மாநிலத்துக்காரர்கள் இருந்திருக்கலாம். ஆனால் வெளியில் ஒரிய மக்களையும் பழங்குடியின மக்களையும் மட்டுமே பார்த்துப் பழகிய எனக்கு, ஒரு நாள் அங்கு வாரம் ஒரு முறை நடைபெறும் சந்தைக்குப் போனபோது அதிசயமாக தமிழ்க்குரல்கள் கேட்ட திசையைத் திரும்பிப் பார்த்தேன்….
இன்னும் இருக்கு...
 
(புகைப்படங்கள் 2007-ல் ஒடிஸா - சுகிந்தாவில் பணியாற்றிய போது எடுத்தவை)

2 comments:

Bagawanjee KA said... [Reply]

சாப்பிடுவதற்கு சரியாக கிடைக்கவில்லை என்றால் வேலைப் பார்ப்பது கூட கஷ்டமாகப் படுமே ?வயிறும் வாழ்வும் மங்காத சங்கடமாகி போய்விடுமே !
த ம +1

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வvருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பகவான்ஜி. இப்போதும் கூட இந்த உணவுப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. அதுவும் நீரிழிவு பிரச்னைக்குப் பின் இங்கே எதையுமே தொடமுடியவில்லை.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!