Saturday, June 21, 2014

ஹிந்தி தெரியுமா?

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)
நான் இந்த ஒடிஸா மாநிலத்துக்கு வேலைக்கு வந்தபோது (2006) எனக்கு ஹிந்தி அரை குறையாகத்தான் தெரியும். இருந்தும் வேலையை ஒப்புக் கொண்டேன். அரை குறை இந்தியையும் கற்றுக்கொண்டது இந்தியாவில் இல்லை என்பது இன்னொரு சுவாரஸ்யம். அதை இன்னொரு சமயம் எழுதுகிறேன். 

ஆங்கிலத்தை வைத்து சமாளித்து விடலாம்தான். ஆனால் எனக்கு அதுவும் சவாலாகத்தான் இருந்தது. ஏனென்றால் நமது கல்வி முறை அப்படி! ஆங்கிலம் ஒரு பாடமாக பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் தமிழ் வழியில் அதுவும் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அந்த ஆங்கிலத்தின் தரம் எப்படி என்பது புரியும்தானே?!

அதற்கு மேல் கல்லூரிப் படிப்புக்காக போயிருந்தால் ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை சிரமமாக இருந்திருக்காது. தொழிற்கல்வி பயின்று உடனே வேலையிலும் சேர்ந்து விட்டதனால் ஆங்கிலத்தில் என்னுடைய புலமையை வளர்த்துக் கொள்ள (அதாவது சரளமாகப் பேச) எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆக ஆங்கிலமும் அரை குறை, இந்தியும் அரை குறை. இந்த லட்சணத்தில்தான் நான் இந்த மாநிலத்துக்கு தொழிற்கல்வி ஆசிரியனாக பணிக்கு வந்து சேர்ந்தேன்.

எனக்கு எப்போதுமே ஊர் சுற்றப் பிடிக்கும். புதிய ஊர், புதிய மக்கள் புதிய இடம் என்றால் எனக்கு அலாதி ஆனந்தம். மொழி பற்றிய சிந்தனையோ பயமோ எனக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. போய்த்தான் பார்ப்போமே என்கிற அசட்டுத் துணிச்சல் அதிகம். அப்படித்தான் ஒரு சமயம் 1992-ல் இராணுவத்தில் பணிபுரியும் எனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக நண்பர் ஒருவருன் அஸாம் மாநிலம் வரை சென்று வந்த அனுபவம் இன்றுவரை மறக்க முடியாத நிகழ்வாக மனதில் உறைந்து கிடக்கிறது. மொழி தெரியாது, இடம் தெரியாது. எப்படி யாரைக் கேட்பது என்று என்று எதுவுமே தெரியாமல் முதல் தொலைதூரப் பயணமாக அது இருந்தது.

இந்த வேலைக்கு வந்து சேர்ந்ததும் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ஹிந்தி தெரியுமா? என்பதுதான். ஓரளவிற்குத்தான் தெரியும் என்றாலோ அல்லது தெரியவே தெரியாது என்றாலோ என்மீது ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை வந்துவிடும் என்பதால் நான் ‘ஹிந்தி பேச மட்டும்தான் தெரியும், எழுதவோ படிக்கவோ தெரியாது என்றேன். ஏன் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்காரன் என்பதால் நான் ஹிந்தி பேசுவதே அவர்கள் பெரிய விஷயமாக நினைத்திருக்கலாம்.

ஏனென்றால் இங்கு நான் வகுப்பெடுக்க வேண்டியது ஆங்கிலத்தில் அல்ல. ஹிந்தி மொழியில்தான். தொழிற்கல்வி பயில வந்திருப்பவர்கள் எல்லோரும் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களே! அவர்களுக்கு ஆங்கிலத்தில் வகுப்பெடுத்தால் புரியாது, என விளக்கப்பட்டது. ஆனாலும் நான் உள்ளூர பயந்து கொண்டுதானிருந்தேன். முதன் முறையாக ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருந்ததற்காக வருத்தம் ஏற்பட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்மேல் கோபம் உண்டானது.

எல்லாம் கொஞ்ச காலம்தான். அவர்களோடு பேசப்பேச, சக பணியாளர்கள், கடைத்தெரு, உணவு விடுதி என எங்கும் ஹிந்தியில் மட்டுமே பேசியாக வேண்டிய நிலை. ஒரிய மொழி அவர்களுக்குள் பேசிக்கொண்டாலும் என்னிடம் ஹிந்தியில்தான் பேசியாக வேண்டிய கட்டாயம். இதனாலெல்லாம் விரைவிலேயே நான் சரளமாக பேசக்கூடிய நிலையை அடைந்தேன்.

இப்போது தமிழ்நாட்டு நிலைக்கு வருவோம். ஹிந்தியை நாம் ஏன் கற்கக் கூடாது?! தாராளமாக கற்கலாம். யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள். திணிக்காதே என்பதுதான் பலரது வாதம். நானும் இதற்கு உடன்படுகிறேன். என்னைப்போல இப்படி வெளிமாநிலங்களில் வந்து வேலை செய்யும்போது ஹிந்தி பேச அது உறுதுணையாக இருக்கும்தானே என்ற வாதம் முன் வைக்கப்படலாம். ஆனால் உண்மை நிலை என்ன?

தற்போதைய இளைய சமுதாயம் தாய் மொழியான தமிழையே சரிவர பிழையில்லாமல் எழுதவோ, படிக்கவோ இயலாத சூழ்நிலையில்தான் வளர்கிறார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

இதுவரை ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வந்தாலும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவோ, பேசவோ படிக்கவோ நம் பிள்ளைகளால் முடிகிறாதா?

ஆம் என்பது உங்கள் பதிலாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். அப்படியே சிலர் ஆமென்றாலும் அது சென்னையைப் போன்ற மாநகரங்களில் வேண்டுமானால் சாத்தியமாகி இருக்கலாம். சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளின் ஆங்கில அறிவைப் பற்றி அறிய புதிய ஆராய்ச்சியெல்லாம் தேவைப்படாது! அரசுப்பள்ளிகளை மட்டுமே நான் இங்கு குறிப்பிடவில்லை. சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கூட இதில் சேர்த்திதான்.

காரணம் எல்லாரும் அறிந்ததுதான். ஆசிரியர்களின் தரம்! அரசு ஆசிரியர்களோ எந்தவித அக்கறையுமின்றி வந்து போகிறவர்கள். தனியார் பள்ளிகளிலோ தகுதியே இல்லாத ஆசிரியர்கள் என ஏகத்துக்கும் இதைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஏனென்றால் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே ஆங்கிலம் சரளமாக பேசத்தெரியாது என்பதுதான் நிலை. அதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். ஆக இத்தனை ஆண்டு காலம் தமிழையும், ஆங்கிலத்தையும் படித்தாலும்  அதிலே திறமையான மாணவர்கள் உருவாவது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

இதில் ஹிந்தியையும் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் இதனால் ஏதாவது பலன் கிடைக்குமா? விருப்பப்படுபவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லேயே! ஹிந்தி ஆசிரியர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? ஏதோ சில சான்றிதழ் படிப்பு படித்துவிட்டு ஓரளவிற்கு எழுதப் படிக்க கற்றுக் கொண்டவர்கள்தான் இங்கே ஆசிரியர்கள்! அவர்களுக்கு ஹிந்தி பேசவே தெரியாது! அவர்களிடம் கற்றுக்கொண்டு ஹிந்தியில் புலமை பெற்று வடநாட்டில் போய் வேலை செய்யலாம் என்பது எத்தனை முட்டாள் தனமான வாதம்?!

‘’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’’ என்பது மாதிரி, ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அந்த இடத்திலும் சூழ்நிலையிலும் நாம் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அது தன்னாலேயே கைவரப்பெற்று விடும் என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டிலிருந்து அலையலையாய் எல்லோரும் வட நாட்டிற்கு வேலை தேடிப்போய்க் கொண்டிருக்கவில்லை. மாறாக இன்றைய சூழ்நிலையில் அவர்கள்தான் படிப்புக்காகவும், வேலைக்காகவும் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

இன்று எனக்கு தமிழ், ஆங்கிலம் தவிர்த்து கன்னடமும் ஹிந்தியும் சரளமாக பேசத்தெரியும், மலையாளமும் பேச முடியும். தெலுங்கு பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரிய மொழி முழுவதுமாக புரிந்து கொள்ளவும், ஓரளவிற்கு பேசவும் முடியும். இதெல்லாம் எந்தப் பள்ளியில் கற்றுக் கொண்டேன்? ஆர்வமும் சூழலுக்குத் தகுந்த மாதிரி நம்மை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருந்தால் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அத்தனை கடினமான விஷயமில்லை.

இந்த ஹிந்தித் திணிப்பின் முழுமையான அரசியலை படிக்க வேண்டுமானால் தமிழ் ஃப்யூசர் என்ற வலைத்தளத்தில் சதுக்க பூதம் என்ற பெயரில் எழுதும் இவரின் இந்த பழைய இடுகைகளைப் படித்துப் பாருங்கள். சுட்டி; இந்தித் திணிப்பு, மெக்காலே கல்வித்திட்டம், தேவை இந்தி - பள்ளியில் ஒரு உடனடி மாற்றம்). எந்த மொழியையும் கற்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் யாரும் விரோதி இல்லை. அதை வலிந்து திணிப்பதன் நோக்கமும் அதன் உள் அரசியலையும் புரிந்து கொள்ளாமல் இதற்கு வக்காலத்து வாங்கினால் அதன் எதிர்மறைப் பலன்களை அனுபவிக்கப் போவது நாம் அல்ல. நம் சந்ததியினர்.!
இன்னும் இருக்கு…
 

2 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

வர வர உங்க எழுத்து நடையில் ஒரு மெருகூட்டல் இருக்கிறது. ரொம்பத் தெளிவா அழகாக எழுதியிருக்கீங்க. மொழி கற்க வாழும் சூழ்நிலையும், நமக்கான நிர்ப்பந்தமும் தான் முக்கியம். நானும் தான் ஹிந்தி இரண்டு பரிட்சை எழுதியிருந்தேன். ஆங்கிலமும் ஹிந்தியும் தேவையில்லாமல் தொழிலாளர்களின் மொழி என்ற மொழியை பேசவேண்டிய சூழ்நிலையின் காரணம் தினந்தோறும் என்ன மொழி பேசுவது? இனி என்ன கற்பது? என்ற குழப்பத்தில் தினந்தோறும் ஓடிக்கொண்டேயிருக்கின்றது.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

தங்களின் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி ஜோதிஜி.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!