Thursday, July 10, 2014

மண்ணும் மண்ணின் மைந்தர்களின் கதியும்...


 (ஒடிஸா வாழ் அனுபவங்கள் - 4)
மண்ணின் மைந்தர்கள் எல்லா இடங்களிலும் ஒரு காலகட்டத்தில் வந்தேறிகளால் அடக்கியாளப்ப்பட்டு இவர்கள் அவர்களுக்கு கைக்கூலிகளாக சேவகம் செய்வதுதான் நடந்து வந்திருக்கிறது. இந்திய வரலாற்றுச் சரித்திரம் மட்டுமல்ல உலகச் சரித்திரத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. காலம் காலமாக இப்படித்தான் நம்மீது படையெடுத்து வந்தவர்கள் எல்லாம் நம்மை அடிமையாக்கி நம்மை சேவகம் புரிய வைத்தனர். மொகலாயர்களின் ஆட்சியும், அதைத் தொடர்ந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியும் கடந்த சில நூற்றாண்டுச் சாட்சிகள்.

குறு நில மன்னர்களும், ஜமீன்தாரர்களும் முறையே இவர்களுக்கு கப்பம் கட்டவும், தங்களுடைய சொகுசு வாழ்க்கையை தற்காத்துக் கொள்ளவும் அவர்களுக்கு கீழே இருக்கக்கூடிய இந்த மண்ணின் மைந்தர்களை கூலிகளாக வைத்து அவர்களின் உழைப்பை கசக்கிப் பிழிந்தனர். சொந்த மண்ணிலே உழைப்பது இவர்கள், உல்லாசம் அனுபவிப்பதோ இந்த ஆண்டைகள். அரை நிர்வாணமும், கால் வயிற்றுக் கஞ்சியுமான இவர்களின் வாழ்க்கை நம்முடைய நாடு சுதந்திரம் அடையும் வரை நீடித்தது. இப்போதும் கூட உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் ஜமீன்தார்களின் ஆதிக்கம் இன்னமும் முடிந்தபாடில்லை.

மாற்றம் வேறு ரூபத்திலும் தொடர்ந்து வருவதை நம்மில் அறிந்தவர் மிகவும் குறைவு. கனிம வளங்கள் உள்ள பகுதிகள் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தனியார் முதலாளிகளுக்கு தாராளமயமாக்கல் என்ற தங்கத்தாம்பாளத்தில் வைத்து ஏக போக குத்தகைக்கு கொடுக்கப்பட்டன. அங்கிருந்த மக்கள்கேள்வி கேட்க ஆளில்லாமல் சொற்ப இழபீடுகளைக் கொடுத்து அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர். வேலைவாய்ப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில் சிலருக்கு அங்கே கூலி வேலைகள்?


இந்த தாதுப் பூமியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் பழங்குடியினர்தான். நாட்டிலேயே மிக அதிகமாக பழங்குடியினர் வாழும் மாநிலமாக ஒடிஸா இருப்பதும் இங்கே குறிப்பிடத்த்தக்கது. ஒடிஸாவின் மக்கள் தொகையில் சுமார் 24% பழங்குடியினர்தான். கிட்டத்தட்ட 62 உட்பிரிவுகள் கொண்டதாகவும் ஒவ்வொரு பகுதியிலும் அவரவர்களுக்கென தனியான மொழியும் பேச்சு வழக்கில் உள்ளன. ஆயினும் இந்த மொழிகளுக்கு வரி வடிவம் கிடையாது. இங்கே அதிகம் பேசப்படும் மொழிஹோ’ (Ho) மொழி மற்றும்குய்’ (Kui). இவர்களின் மொழிகள் கூட இரண்டு வகையாக அதாவது திராவிடமொழிக் குடும்பம், ஆரியமொழிக் குடும்பம் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.


பூரி மாவட்டத்தின் சில பகுதிகள், ராயகடா,கொராபுட், பாலாங்கிர், மையூரிபன்ஜ், ஜாஜ்பூர் என இவர்கள் விரவிக் கிடக்கிறார்கள். பூரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினரில் இன்றும்கூட பெண்கள் மேலாடை அணிவதில்லை.
  
கள்ளம் கபடமில்லாத பழங்குடியின மக்கள், தாங்கள் காலம்காலமாக வாழ்ந்து வந்த இந்தப் பூமியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு தங்கள் கலாச்சார அடையாளங்களை இழந்து இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக, அடிமைகளாக வாழ்ந்து வருவதும், தனியார் முதலாளிகள் இங்கே உள்ள கனிம வளங்களையெல்லாம் அரசின் அனுமதியோடு கொள்ளையடித்து கோடிகளை அள்ளுவதுமாகத்தான் தற்காலச்சூழல் இருக்கிறது.           
கலிங்கநகருக்கருகில் உள்ள சுகிந்தா குரோமைட் சுரங்கப்பகுதியும் இப்படி இலக்காகிப்போன தாது வளம் நிரம்பிய பூமிதான். இந்தியாவின் மொத்த குரோமைட் உற்பத்தியில் 97 சதவிகிதத்தை இந்த சுகிந்தா குரோமைட் பகுதி கொண்டிருக்கிறது. மேலும் சுமார் 406 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த உலகின் மிகப்பெரிய OPEN CAST குரோமைட் தாதுச் சுரங்கப்பகுதியும் இதுதான். ஆனால் பூமியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முதல் பத்து இடங்களில் நான்காவது இடத்தில் இந்த சுகிந்தா பகுதியும் வருவது மிக அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் என்றால் நம்ப முடிகிறதாசுமார் 12 நிறுவனங்களின் சுரங்கங்கள் தினமும் குரோமைட் தாதுவை வெட்டி எடுக்க முதல் கட்டமாக காடுகளை அழித்து ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்துகிறார்கள். அதன்பின் மேலே பரவிக்கிடக்கிற மண் மற்றும் பாறைகளை அகற்றுகிறார்கள். இப்படி அகற்றப்பட்ட மண்ணும் பாறைகளும் அருகே ஓடுகின்ற இந்தப் பகுதியின் ஒரே நீராதாரமான பிராமணி நதிக்கரையோரங்களிலும், இதர பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்து, மனிதன் வசிக்கவே லாயக்கற்ற பூமியாக மாறியிருக்கிறது. தண்ணீர் காரியமும், குரோமைட்டும் கலந்த குடிக்கவே பயனற்ற நச்சு நீராக மாறியிருக்கிறது. 


கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எலும்புருக்கி நோய், ஆஸ்த்மா, பற்களில் கறை படிதல், பிறவிக் குறைபாடு, பிறப்பு விகிதம் குறைதல் என இதன் பாதிப்புகள் ஏராளம். முக்கியமாய் சுரங்கத்தை ஒட்டிய காலரங்கியட்டா, காலியாபாணி, சுகிந்தா பகுதிவாழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒற்றையடிப் பாதை போல ஒரு சாலை. அதில் எதிரும் புதிருமாக எந்நேரமும் போக்குவரத்து நெரிசல், வாகனங்களின் புகை, இரைச்சல், குரோமைட் தாதுவைக் கொண்டு போகும்போது காற்றில் பறக்கும் தூசு என அந்தப்பகுதியைப் பார்த்தாலே யாருக்குமே கண்ணீர் வந்துவிடும். மரங்கள், தாவரங்களின் இலைகளெல்லாம் பச்சை நிறத்திற்குப் பதில் செம்மண் நிறமாக மாறியிருக்கும். மழை வந்தால்தான் இதற்கு விடிவு காலம் பிறக்கும். அதே நேரத்தில் மழையினால் அந்தப்பகுதி முழுவதுமே சேறும் சகதியுமாக மாறிவிடும்.
 

கடந்த நூறாண்டுகளாக இப்படி இந்தப்பூமியைச் சிதைத்து இரவு-பகல் பாராமல் குரோமைட் தாதுவை அள்ளிக்கொண்டு போய் அந்நிய நாட்டில் இறக்குவதையே நோக்கமாகக் கொண்டு பரபரப்பாய் இயங்கி வருகிறது. இந்த குரோமைட் தாதுதான் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது.

வெட்டி எடுக்கப்படும் குரோமைட் தாதுவை தங்களது தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்து லாபத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றன இந்த தனியார் நிறுவனங்கள். இதில் முதன்மையானது டாடா ஸ்டீல் நிறுவனம். நான் இங்கே சேர்ந்த புதிதில் இந்த நிறுவனம் டாடா அயர்ன்&ஸ்டீல் கம்பனி (TISCO) என்றே அழைக்கப்பட்டது. கொல்கத்தாசென்னை இரயில் மார்கத்தில் உள்ள ஜாஜ்பூர் கியோன்ஜர் ரோடு என்ற சிறிய இரயில் நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் இந்த சுகிந்தா குரோமைட் சுரங்கப்பகுதி இருக்கிறது.

இன்னும் இருக்கு...

4 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

உங்கள் எழுத்து அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்கின்றது. வாழ்த்துகள்.

இது குறித்து நான் ஏற்கனவே எழுதியது.

http://deviyar-illam.blogspot.com/2011/12/blog-post_17.html

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் இணைப்பு தந்தமைக்கும் மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே! இந்த இணைப்பில் உள்ள பதிவை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். அது எங்கே இருக்கிறது என்று தேட சிரமமாக இருந்ததை நீங்கள் எளிமையாக்கி விட்டீர்கள். அந்த பதிவின் தாக்கம்தான் நான் இப்போது எழுதிவரும் தொடர். மீண்டும் ஒரு முறை வாசிக்க கொடுத்தமைக்கு நன்றி.

Anonymous said... [Reply]

Good one. Keep going..

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருகைக்கு நன்றி அனானி.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!