Saturday, February 8, 2014

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது…ஆர்.என். நாகராஜராவ்நியூட்டோன் படப்பிடிப்பு தளத்தில் ‘ரத்னகுமார்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் - பஞ்சு இயக்குகிறார்கள். பி.யூ. சின்னப்பா, பானுமதி சம்பந்தப்பட்ட ஒரு தர்பார் சீன். நாற்பது ஐம்பதுக்கும் மேற்பட்ட போர்வீரர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவராக கையில் ஈட்டி பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆர். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தார். ஆனாலும் அந்த பர்சனாலிட்டி, பொன்னிறம் இவர் சேவகரல்ல, ஒரு ராஜாவின் தகுதிக்குரியவர் என்று வெளிப்படுத்தியது.

அதனால்தான் என்னவோ பி.யூ.சின்னப்பாவுடன் நடித்துக்கொண்டிருந்த பானுமதி, நான் ஸ்டில் ஃபோட்டோகிராபர் ஆனதால் இவரை எனக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்ற நினைப்பில் ‘யார் இவர்?’ என்று என்னிடம் தெலுங்கில் கேட்டார். நானும் தொயிலுக்குப் புதியவன், முன்னே எனக்கு அவரோடு பழக்கம் இல்லை. ஒரு வார்த்தையேனும் அவரோடு பேசிக்கொண்டதில்லை. அதனால் எனக்குத் தெரியாதம்மா என்று சொன்னேன். பானுமதி அவரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே போனார்கள். நானும் கவனித்தேன்.

அப்போது அவருக்கு முப்பதுக்குள்ளாக வயதிருக்க வேண்டும். கட்டுமஸ்தான உடம்போடு பார்ப்பவரை கவர்பவராக இருந்தார். இன்னும் எனக்கு அந்தக் கண்களை நினைவிருக்கிறது. அவருக்கு என்ன பணித்தார்களோ அதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். யாருடனும் போய் அரட்டை அடித்துக் கொண்டிருக்க மாட்டார். அமைதியாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார். நானும் பொதுவாக யாருடனும் பேசுவதில்லை. அதனால் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்னை ஒரு படம் எடுங்கள் என்றுகூட அவர் கேட்டுக் கொண்டதில்லை.
அப்போது அவர் யானைக்கவுனியில் இருந்து வருவார். எப்படி? நடையாய் நடந்து வருவார். எப்படியும் முன்னேறிவிட வேண்டும் என்று துடிப்போடு இருந்தார். இதுதான் நான் அவரை முதன்முதலில் சந்தித்தது. அடுத்தும் ‘மீரா’ படத்தில் அவரைப் பார்த்தேன். அதிலும் வந்து போகக்கூடிய சிறிய வேடம்தான் அவருக்கு. அதன்பிறகு ‘நாம்’ படத்தில் அவரோடு வேலை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு.

 
அப்போதெல்லாம் கழுத்தில் சின்னதாக ருத்ராட்சத மாலை போட்டிருப்பார். ஒரு குழந்தையைப் போல நடந்துகொள்ளுவார். எந்தக் குழந்தையைக் கண்டாலும் தூக்கி எடுத்துக் கொஞ்சுவார். எப்போதும் கதர் ஆடைகளையே அணிவார். சாப்பாட்டு நேரத்தில் தன்னோடு நிறையபேர் அமர்ந்து சாப்பிடுவதை விரும்புவார். இருப்பதை பகிர்ந்தளித்து திருப்தியாகச் சாப்பிடச் சொல்லுவார். தானும் திருப்தியாகச் சாப்பிடுவார். அவரோடு உட்கார்ந்து சாப்பிட்டாலே அது ஒரு நினைவுகைறும் அனுபவமாகும்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதற்கு கட்டுப்படக்கூடியவராக இருந்தார். மாறுபட்ட கருத்துகள் தோன்றுமானால் அதைச் சொல்வதிலும் தயக்கம் காட்டாதவர். முதலில் பார்த்தபோது நான் அவரைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. பழகப் பழக இவர் பெரிய மனிதராக வருவார் என்று நினைத்தேன். தன்னை முன்னேற்றிக் கொள்ள கடுமையாக உழைத்தார். படப்படிப்பு தளத்தில் ஒரு ராணுவக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் வேண்டும் அவருக்கு. ஒரு பள்ளிக்கூட வாத்தியார் போலத்தான் நடந்து கொள்ளுவார். பிரம்பு ஒன்றுதான் கையில் இருக்காது!

எத்தனைக்கெத்தனை கண்டிப்பானவரோ அத்தனைக்கத்தனை பரிவுள்ளவர். அரவணைத்துக் கொள்ளும் தன்மையாளர். அதனால்தான் அவர் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறார். தர்ம சிந்தனை உள்ளவர். யாருக்கவது துக்கமோ துயரமோ உதவி என்று வந்துவிட்டால் பையில் இருப்பதை அப்படியே அள்ளிக் கொடுத்துவிடுவார். அது ஆயிரமோ இரண்டாயிரமோ எவ்வளவு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்… அப்படியே கொடுத்து விடுவார். எனக்குத் தெரிந்து தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அவரிடம் பண உதவி பெற்றிருக்கிறார்கள்.

சொல்லப்போனால் அவரை வைத்துத்தான் அவர்கள் பிரபலம் அடைந்தார்கள்!

புகைப்பட நிபுனர் ஆர்.என். நாகராஜராவ்2 comments:

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

உண்மை... உண்மை... அவர் சொன்னதெல்லாம் சரி...

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

தவறாமல் வருகை தரும் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!