Monday, February 10, 2014

தமிழ்ப்புத்தகம் இல்லாத புத்தகக் கண்காட்சி!

கடந்த மூன்று வருடங்களாக சென்னைப் புத்தக கண்காட்சிக்குப் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு நிறைவேறவே இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி. நான் வேலை செய்வது வெளி மாநிலத்தில் என்பதும் ஒரு காரணம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் எனது பயணத்திட்டமிடல் என்பது எனது தனிப்பட்ட சொந்த வேலைகளின் பொருட்டே இருக்கும்.

கிடைக்கிற வாரம் பத்து நாளில் என்னுடைய வேலைகளையே முடிக்க முடியாது. என்னென்னமோ திட்டமிட்டுக்கொண்டு போவேன். ஆனால் பாதி வேலை கூட முடிந்திருக்காது. கடந்த இரண்டு வருடங்களாகவே எனது பயணம் டிசம்பர் மாதத்திலேயே முடிந்து விடுவதால் ஜனவரியில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு வரமுடியாத சூழல்.

வெறும் புத்தகங்கள் வாங்க மட்டுமன்றி எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், எழுத்தாளர்களாக மாறிக்கொண்டிருக்கும் அல்லது எழுதிக்கொண்டிருக்கும் பதிவுல நண்பர்களையும் பார்த்த மாதிரி இருக்கும் அல்லவா. பதிவர் சந்திப்பின் போதுதான் வரமுடியவில்லை. இப்படி புத்தகத் திருவிழாவிலாவது பார்க்கலாம் என்றால் அதுவும் முடியாது போயிற்று.


அலுவலக விஷயமாக ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் செல்லவேண்டி இருந்தது. இடையில் கிடைத்த இரண்டு மணி நேரத்தை எங்கே செலவழிக்கலாம் என்று யோசித்தபோது 'ராம் மந்திர்' பக்கத்தில் 'எக்ஸிபிஷன் கிரவுண்டில்' புத்தகக் ககண்காட்சி நடைபெறுவதாக அறிந்தேன். சரி ஒரு எட்டு போய் வரலாம் என்று கிளம்பினேன்.

மாலை ஐந்து மணிதான். இருட்டத் தொடங்கியிருந்தது. உள்ளே 200 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள். பாவம் மக்கள்தான் யாருமில்லை. இதே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் கூட்டம் அலைமோதும். மைதானமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.

ஒடிஸா மக்கள் எல்லோருமே தீனிப்பண்டாரங்கள். எங்கு பார்த்தாலும் பானி பூரி கடையிலும், ஃபாஸ்ட் புட் கடையிலும் கூட்டம் நிறையவே இருக்கும். பல நேரங்களில் இவர்கள் வீட்டில் சமைக்கவே மாட்டார்களோ என்னவோ என்றும் நான் நினைப்பதுண்டு. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை முக்கியமாய் குடும்பத்தலைவிகள் கூட இந்த சாலையோரக் கடைகளில் ருசித்து சாப்பிடுவது இங்கே சர்வ சாதாரணம். இந்த புத்தகச் சந்தையிலும் சில ஃபாஸ்ட் புட் கடைகள் இடம்பெற்றிருந்தது. ஆனாலும் அங்கேயும் கூட்டமில்லை என்பதுதான் அதிசயம்.

ஆங்கிலப் புத்தகங்கள், ஒரிய புத்தகங்கள் நிறைய இருந்தது. பிரபல பதிப்பகங்களும் இடம் பெற்றிருந்தன. பிரபலமான எழுத்தாளர்கள் பற்றிய விபரம் தெரியவில்லை. இனிமேல்தான் அதுபற்றி விசாரிக்கவேண்டும். அப்துல் கலாமின் ஆங்கிலப் புத்தகங்கள் தவறாமல் எல்லா புத்தகக்கடைகளிலும் இருந்தன. புத்தக விற்பனை மிகவும் மந்தமாகத்தான் இருந்தது. இளைஞர்களும் யுவதிகளும் தத்தமது இணைகளுடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கொரு நப்பாசை எங்காவது ஏதாவது தமிழ்ப்புத்தகம் தென்படாதா என்று. இது நியாயமான ஆசை இல்லைதான். நம் தமிழ்நாட்டில் ஏதாவது புத்தகச்சந்தையில் ஒரிய புத்தகத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன? இரயில் நிலையங்களில் விற்கப்படுவதைப்போல இங்கு வசிக்கும் மற்ற மொழிக்காரர்களுக்காகவும் புத்தகங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். அதற்காக விற்பனைக்கெல்லாம் உத்தரவாதம் கொடுக்க முடியுமா நம்மால்?

சில பள்ளிக்கூடங்களும், கல்வி நிறுவனங்களும் கூட இங்கே ஸ்டால் அமைத்திருந்தார்கள். 'ஸ்பாட் அட்மிஷன்' என்ற அறிவிப்பு வேறு! நல்ல அழகான ஆசிரியைகளை அமர்த்தி தங்கள் பள்ளிக்கூடப் பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்களை சீண்டத்தான் யாருமில்லை.

பக்கத்திலேயே இந்திய அளவிலான எல்லா மாநிலங்களின் கைத்தறித்துணி கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. கைத்தறியிலான எல்லாவகை ரகங்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தன. ஆனால் விலைதான் பயங்கரமாக இருந்தது. தமிழ்நாட்டு கைத்தறித்துணிகளை விற்பனை செய்ய ஒரே ஒரு சின்ன ஸ்டால் மட்டும் இருந்தது. விற்காத வேதனையில் இருக்கும் அவரிடம் ஏன் வயிற்றெரிச்சலைக் கிளப்ப வேண்டும் என்று கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

அங்கும் கூட்டம் அதிகமில்லை. ஒருவேளை இன்னும் இருட்டிய பிறகு வருவரார்களோ என்னவோ. நான் கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது இரவு எட்டு மணி. அப்போது ம் கூட்டம் வந்தபாடில்லை.ஒடிஸா புத்தகக் கண்காட்சியில தமிழ்ப்புத்தகம் இருக்காதுதான்! பின்ன பதிவின் தலைப்பு எதுக்கு இப்படி? ...ச்சும்மா கலாய்க்கத்தான்.

10 comments:

Bagawanjee KA said... [Reply]

கண்காட்சிக்கு போய் பார்த்துட்டுதானே வரமுடியும் ?
கடை அமைப்பு ,தரை விரிப்பு எல்லாம் பார்க்கும் போது அழகாய்தான் இருக்கிறது . நம்ம ஊரில்கூட இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்வதாய் தெரியவில்லை.ஒரு வேளை இதுக்காகவாவது ஓடிஸா மக்கள் வருவார்களா என்று எதிர்ப்பார்ப்பாய் இருக்கும் !
த ம 1

ராஜி said... [Reply]

நீங்களே டைம் பாஸ் பண்ணப் போயிருக்கீங்க. இதுல மத்தவங்களைக் குறைச் சொல்லிக்கிட்டு...,

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

பகவான்ஜி! ஏற்பாடுகள் சிறப்பாகத்தான் இருக்கு. மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் அமைத்திருந்தார்கள். வருகைக்கு நன்றி நண்பரே!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

அதுவும் சரிதான் ராஜி அவர்களே! என்னை மாதிரிதானே மத்தவங்களும் 'டைம்பாஸ்' பண்ணப்போயிருப்பாங்க!?

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

தீனிப்பண்டாரங்கள். என் கடுமையான கண்டனம். இது எப்பேற்பட்ட சேவை தெரியுமா?

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

நல்லா தின்றவங்களப் பார்த்து தின்ன முடியாதவங்க படற வயித்தெறிச்சல் இது. கண்டுக்காதீங்க ஜோதிஜி!

Anonymous said... [Reply]

அப்போ புத்தகம் வாங்க போகவில்லை. ஒரியா பெண்களை டாவடிக்கவும், ஒரியா பண்டங்களை சுவைக்கவும் தான் போயுள்ளீர்கள். இதில் தமிழ் புத்தகம் இல்லை என்ற குற்றச்சாட்டு வேறு, இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ.. :))

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

ஏங்க விவரணன் இந்த ஊரு ப்புத்தகத்திருவிழா எப்படி இருக்குன்னு பார்க்கப்போனா பெண்களை டாவடிக்கன்னு சொல்றீங்களே இது நியாயமா?

துளசி கோபால் said... [Reply]

அருமையான தெளிவான படங்கள்! இனிய பாராட்டுகள்.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி துளசி கோபால் அவர்களே!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!