திங்கள், 8 ஜூலை, 2013

வேலூர் மாவட்டம்....


மண்ணின் மைந்தர்களுக்கேயான ஒரு பெருமை, தாய் நாடு என்கிற கர்வம், மண் வாசனை போன்றவை எல்லா மொழி, இன, தேசத்துக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் சுற்றினாலும் நம்மூரில் வந்திறங்கி அந்த மண்ணில் கால் வைத்ததுமே ஏற்படுகின்ற அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. இது நான் பணி நிமித்தமாய் பல ஊர்களில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பும் போதெல்லாம் அனுபவிக்கிற உணர்வு. 

இது என்னுடைய மாவட்டம். ஆனாலும் இந்த மாவட்டத்தைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியுமா? என்று கேட்டால்... தெரியாது என்பதுதான் எனது பதில். இம் மாவட்டத்தைப் பற்றிய தகவல்களை தொகுத்தால் என்ன என்கிற யோசனை தேவியர் இல்லம் திருப்பூர் திரு. ஜோதிஜியின் தூண்டுதலாலே தான் ஏற்பட்டது. சரி முயற்சித்துப் பார்க்கலாம் என்றுதான் இந்த தொடர் பதிவைத் துவக்கியிருக்கிறேன்.

இதில் எனது சிறு பிராயத்து அனுபவங்களையும் கலந்து கட்டி அடிக்கலாம் என்பதும் எண்ணம். தகவல்களைத் திரட்டத் துவங்கியிருக்கிறேன். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. முன்பு மாதிரி புத்தகங்களைப் படிக்க முடிவதில்லை. நூலகங்களுக்குப் போக முடிவதில்லை. ஒரே வாய்ப்பு இணையம் மட்டும் தான்.

இந்த இணையத்தை நான் பயன்படுத்தத் தொடங்கியதே 2009-ல் தான். அதற்கு முன்னர் 2006-ல் மின்னஞ்சல் ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தாலும் அதனை பயன்படுத்தத் தெரியாத காரணத்தால் அது பயன்பாட்டிலேயே இல்லாமற் போய்விட்டது. அதுவும் தவிர நான் யாருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, எனக்கு யார் அனுப்புவார்கள்? அப்படியே பயன்படுத்த வேண்டுமென்றாலும்  சைபர் கேஃப் மையங்களுத்தான் போகவேண்டும். இன்னோரு வேதனை கணிணியை பயன்படுத்துவது என்பதே தெரியாது! ஆனால் இன்று?.........

தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் பணியிடத்தில் 2006-ல் சேர்ந்த போதுதான் கணிணிக்கும் எனக்குமான தொடர்பு மெதுவாக ஆரம்பமாயிற்று. பணி நிமித்தமாக எங்கள் நிறுவனத்தின் வேறு கிளைக்குச் சென்ற போது, கணிணியைப் பயன்படுத்தி ஒரு அட்டவனையை தயார் செய்து கொடுக்கச் சொன்னபோது... கணிணி அறிவு இல்லாதது குறித்து முதன் முதலில் ஒரு அவமான உணர்வு ஏற்பட்டது.

எனது கிளைக்குத் திரும்பியவுடன் முதல் வேலையாக எனது மேலதிகாரியைத் தொடர்பு கொண்டு கணிணி வேண்டும் என்று கேட்டேன். முதல் கேள்வியே கணிணி பற்றி உனக்குத் தெரியுமா? என்பதுதான். தயங்கித் தயங்கி தெரியாது சார்... ஆனா கத்துக்க ஆர்வமாயிருக்குன்னு சொல்ல... அதற்க்கடுத்த வாரமே கணிணி வந்துவிட்டது. அலுவலகமும் தங்குமிடமும் அருகருகே இருந்தது எனக்கு மிகவும் சௌகர்யமாய்ப் போய்விட்டது. அப்புறம் என்ன?... 

பணி நேரத்தில் அதிகம் பயன்படுத்த முடியாது. ஐந்து மணிக்கு பணி முடிந்ததும் கணிணியில் உட்கார்ந்தால் இரவு பத்து மணி வரை அதிலேயேதான். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

கணிணி அறிவை கொஞ்சம் வளர்த்துக் கொண்டதும் அடுத்தது இணையத்தில் நுழைவதுதான். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. இன்டர்நெட் மையங்கள்தான் அப்போதைய ஒரே தீர்வு. 

2009-ல் கர்நாடக மாநிலம் பெல்காம் என்ற நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஊரில் பணியாற்றும் சூழ்நிலை வந்தபோது இணையம் குறித்த அறிவைப் பெறுவதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 40 கி.மீ. பயணித்து அன்று முழுவதும் பெல்காம் நகரிலேயே (முக்கியமாய் மூன்று மணி நேரம் இன்டர்நெட் மையத்திலேயே பொழுதைக் கழித்த சம்பவங்களும் உண்டு.

அப்போதுதான் ஆனந்த விகடனில் வலைத்தள அறிமுகப் பகுதியில் இருந்த சில வலைத்தளங்களின் முகவரியைத் தேடி உலவ ஆரம்பித்தேன். புதிய புதிய வார்த்தைகள்... இணையத் தமிழ் என்ற ஒன்று மெல்ல புரியத் தொடங்கியது. ஆர்வம் காரணமாக அப்போதே தமிழை தட்டச்சு செய்ய ஆரம்பித்து ஒரே மாதத்தில் எந்த அடிப்படை விஷயங்களும் தெரியாமல் ‘பிளாகரில் வலைப் பதிவை ஆரம்பித்தேன். 

அதற்கு முன்னரே கூட வேர்ட் பிரஸ்ஸில் ஒரு தளத்தை ஆரம்பித்து எப்படி தொடங்குவது என்றே தெரியாமல் அறிமுகப் பதிவாக அக்டோபர் மாதம் 2008-ல் ஒரு பதிவைப் போட்டு இன்றுவரை அது அப்படியேதான் கிடக்கிறது.

பிளாகரின் தளத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ந்திருப்பேன். ஆனால் யாரும் வருவது இல்லை என்ற காரணத்தால் கொஞ்சம் இடைவெளி கோடுத்தேன். அவ்வளவுதான் சுத்தமாய் காற்றாடத் தொடங்கிவிட்டது. மீண்டும் வாசகர்களை இழுக்க புதுப்புது பதிவுகளைப் போட்டும் பிரயோஜனமில்லை. எனவேதான் இந்த 'மறக்க முடியாத நினைவுகளை' ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

இந்த வலைத்தளத்தை ஆரம்பித்தது ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் 2011-ல். ஆனால் இன்று வரை எனது ஊரைப் பற்றியோ, எனது நகரைப் பற்றியோ, எனது மாவட்டத்தைப் பற்றியோ பெரிதாக எதுவும் எழுதவில்லை. அதனால்தான் இந்த 'வேலூர் மாவட்டம்' குறித்த தொடர் பதிவு. இந்த தொடருக்காக நான் திரட்டும் எல்லாச் செய்திகளும் மற்ற வலைப் பதிவுகளிலிருந்தோ அல்லது இணைய தளங்களிலிருந்தோ தான் எடுக்கப்படுகின்றன. அதனால் இதற்கு நான் சொந்தம் கொண்டாட முடியாது. இது ஒரு தொகுப்பாக மாறும் பட்சத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமல்லவா?

இனி அடுத்த பதிவிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலூர் பற்றிய பதிவும் தொடர்ந்து இடம்பெறும். உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் இங்கு பரிமாறலாம். தகவல்களில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும் செய்யலாம்.



10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

வேலூர் பற்றி நாங்களும் அறிந்து கொள்கிறோம்... கலந்து கட்டி அடியுங்கள்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

ராஜி சொன்னது… [Reply]

வேலூர் மாவட்டம்தான் தமிழகத்துலயே அதிகமான ஆட்களை ராணுவத்துக்கு அனுப்பி இருக்கு. குறிப்பா, கனியம்பாடி பக்கத்துல ஒரு கிராமம் இருக்கு பெயர் நினைவில் இல்ல. என் கணவர் வரட்டும் கேட்டு சொல்கிறேன். வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்துல இருக்காங்க.
புகழ்பெற்ற சி.எம்.சி, ஆம்பூர் பிரியாணி, பாலாறு, ராணிப்பேட்டை பெல் நிறுவனம், வானியம்பாடி தோல் தொழிற்சாலை, பொற்கோவில், வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோவில், முதல் சிப்பாய் கலகம்ன்னு நிறைய விசயங்கள் இருக்கு சகோ. பகிருங்கள்

sathishsangkavi.blogspot.com சொன்னது… [Reply]

நாங்களும் அறிந்து கொள்கிறோம்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

தமிழ் மணத்தில் இணைத்தமைக்கும் நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ராஜி!

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த ஊரைப் பற்றி! எங்கள் ஊரும் கிட்டத்தட்ட 98 சதவிகிம் இராணுவ வீரர்கள் உள்ள ஊர்தான்.
நீங்கள் குறிப்பிட்ட அத்துணை விஷயங்களும் என் பட்டியலில் இருக்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவேன். உங்கள் ஆதரவிற்கும், வருகைக்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி சங்கவி அவர்களே!

இன்னும் தொடங்கல... சொன்னது… [Reply]

உங்கள் வேலூர் மாவட்டத்தைப் பற்றி நானும் தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன். தொடருங்கள்.

Swami சொன்னது… [Reply]

Fort without King , Police without power ( police training school is there ) , Temple without Idol ( The current shivlingam in Jalagandeshwar temple was brought few years ago ) , river without water ( though its common sight everywhere now - there was never water flow in Palar river ) ,etc.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

Swami!
நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மை. ஒவ்வொன்றாக விரிவாக காண்போம். தொடர்ந்து வாருங்கள். ஆலோசனை தாருங்கள்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!