வியாழன், 4 ஜூலை, 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது....

இயக்குநர் பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசம் 

மறக்க முடியாதவை....
தாய்க்கு முதல் பிரசவம்;காதலிக்கு முதல் முத்தம்;
மனைவிக்கு முதல் இரவு;
கணவனுக்கு முதல் சம்பளம்;

ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு மறக்க முடியாதது அவன் எழுதி, திரைக்கு வந்த முதல் திரைப்படம். 

திரைக்கதை எழுதச் சந்தர்ப்பம் தேடி அலைந்த என் கடும் தவம் கலையும் கடைசி மூச்சில், நான் கண்டுகொண்ட மக்கள் திலகத்தின் முதல் தரிசனத்தில், கிடைத்த வரமே என் முதல் திரைப்படம்!

அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில், எம்.ஏ. இறுதியாண்டு மாணவர்க்கு நான் பயிற்ற வேண்டிய பாடம் - 'தமிழ் நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்'. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி பற்றிப் பேசுகிறேன்.

அந்த நாடகக் குழுவிலே ஓர் இளைஞன். அவன் மேடையிலே வேடமிட்டு வந்தால் அவனை மொய்க்கும் கண்கள் மதுவுண்ட வண்டுகளாகும் - அவனது அழகும் குரலும் அப்படி.

கண்பட்டதோ என்னவோ அன்று மேடையில் அவன் பாடும்போது தொண்டை கரகரக்கிறது. திடுக்கிடுகிறான். காளைப் பருவத்தின் தலைவாசலில் நாடகக் கலைஞர்களுக்கு ஒரு கண்டம். 'மகரக் கட்டு' - தொண்டை உடைந்து குரல் கெட்டுப் போகும். குரல் கெட்டுப் போனால் தலைமை வேடம் கிடைக்காது; துணை வேடம்தான்.

எந்த மேடையில் கொலு வீற்றிருந்தோமோ அங்கே கோலேந்தி நிற்பதா? கூடாது' என்று அழுகிறது அந்த இளைஞனின் 'ஆத்மா'. அந்த நடிகன் மறுநாள் கம்பெனியை விட்டுக் காணாமல் போகிறான்!
குரல் உடைந்த்ததால் அந்தக் கலைஞன் உடனே மனம் உடைந்து போகவில்லை. குத்துச்சண்டை, குஸ்தி, கத்திச்சண்டை, கம்புச் சண்டை என்று தன் கட்டுடலை வளர்த்து திரும்பவும் கொலுவேறுகிறான் - நாடக மேடையில் அல்ல, அதன் விசுவரூபமான திரைப்படங்களில், திரைப்படங்களில் மட்டுமா? தமிழகத்து மக்களின் இதயகப் கொலுவிலெல்லாம் ஏறி அமர்கிறான்!

இப்பொழுது நான் குறிப்பிடுவது யாரை என்று மாணவர்களே உங்களுக்குத் தெரியும்; எம்.ஜி.ஆர்.தான்.

பிறருக்கு உதவுவது அவரது பிறவிக் குணம்; துணிச்சல் அவரது தொட்டில் பழக்கம்; தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போழுது ஒரு மாணவர் எழுந்து, 'நீங்கள் மிகையாகப் புகழ்கிறீர்கள். இதெற்கெல்லாம் என்ன ஆதாரம்?' என்று என்னை வழிமறிக்கிறார்!

ஆதாரத்திற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய ஒரு அவசியம் ஏற்படுகிறது; சொல்கிறேன்.

சென்னை அருணாசலம் ஸடுடியோ. படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க கொடுத்து வைத்த பலபேர் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நடித்து அப்போது வெளியாகி உள்ள ஒரு படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எம்.ஜி.ஆர். ஆர்வம் காட்டுகிறார்.

'அற்புதமான கதை' ஒருவர் ஐஸ் வைக்கிறார்.  'ஒவ்வொரு காட்சியும் ஜோர்' - ஒருவர் சோப்பு போடுகிறார்! 'சண்டைக்காட்சிகள் தூள்' என்று ஒருவர், 'பாடல்கள் எல்லாம் பிரமாதம்' என்று ஒருவர் - இப்படி அவரைச் சுற்றி பல காக்காய்கள் பறக்கின்றன!

இந்த முகஸ்துதியில் மரத்துப்போனவர் எம்ஜி.ஆர். தன் அருகில் நின்ற ஒருவரின் மௌனத்தைக் கலைத்து எம்.ஜி.ஆர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு வைக்கிறார்.
கேட்டதும தான் தாமதம்! அந்த நபர் அந்தப் படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரேதப் பரிசோதனை பண்ணத் தொடங்குகிறார். குறைகளை எல்லாம் கூசாமல் குத்திக் காட்டுகிறார். 'அந்த அதிகப் பிரசங்கி'யின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது சகோதரர் மா. ராஜாங்கம் (அப்பொழுது உத்தம பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் திண்டுக்கல் எம்.பி.யாகி அஸ்தமித்த இந்தி எதிர்ப்பு போராட்ட வீ ரர்) பேசாதே என்று ஜாடையாக அந்த முந்திரிக் கொட்டையின் பின் சட்டையைப் பிடித்து இரகசியமாகச் சுண்டுகிறார்.

எம்.ஜி.ஆரோ அந்த இங்கிதம் தெரியாதவர் பேச்சை வெகு ஈடுபாட்டோடு கேட்கிறார். எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதையைக் கண்டதும் ராஜாங்கத்துக்கு சற்று நம்பிக்கை வருகிறது. அண்ணே 'இவர் என் சட்டகர்' பேரு ஏ.எஸ்.பிரகாசம். பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருக்கிறார்.

கதையெல்லாம் எழுதுவார். 'சுண்டிப் பாருங்க, செல்லுற காசா இருந்தா வாங்கிக்கங்க' என்று எனக்கு சிபாரிசு செய்யத் தொடங்குகிறார்.

'சுண்டவே வேணாம். இவர் செல்லுற காசுதான். நான் அனுப்பினேன்னு நீங்க வீரப்பாவை (ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆர். அப்படித்தான் சொன்னார்) போய்ப் பாருங்க' என்று எளிதில் திறவாத திரையுலக இரும்புக் கோட்டையை எனக்குத் திறந்து விடுகிறார்.

மண்ணுக்கேற்ற மதியூக மந்திரி - என் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய ஆர்.எம்.வி.யின் சத்யா மூவிஸ் கதவு, தட்டுவதற்குள் திறக்கிறது. திரையுலகில் என் கன்னி முயற்சி 'கண்ணன் என் காதலன்' என்ற படம் பிறக்கிறது.

திரைக்கு கதை எழுதச் சந்தர்ப்பம் கேட்டு நான் இதற்கு முன் எத்தனையோ கதவுகளைத் தட்டி இருக்கிறேன், திறந்ததில்லை. பிறருக்கு உதவுவது அவரின் பிறவிக் குணம்; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்பதற்கு கோடியில் நான் ஒரு சாட்சி.

இந்த மறக்க முடியாத முதல் சந்திப்போடு படப் பிடப்பின் வேளையில் நான் நிழலாடி நின்றபோது - துணிச்சல் அவர் தொட்டில் பழக்கம், தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை - என்பதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ நிகழ்ச்சிகள்!

வகுப்பு முடியும் மணி அடிக்கிறது. விளக்கத்தை முடித்து நான் வெளியேறுகிறேன்.

2 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

எம்ஜிஆர் போட்டிருக்கும் இது போன்ற கோடு போட்ட சட்டைகளைத்தான் பள்ளிக்கூட சமயங்களில் ரொம்பவே விரும்பி போட்டதுண்டு.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஜோதிஜி! எம்.ஜி.ஆர். 'கோட்' போட்டிருக்கும் அபூர்வ புகைப்படங்களில் இதுவும் ஒன்று.

ஒவ்வொரு கால கட்டத்திலும் உடுத்தும் உடையில், வண்ணத்தில், டிசைனில் மாற்றங்களை நாம் விரும்பி ஏற்றுக்கொள்வதுதானே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!