வெள்ளி, 11 நவம்பர், 2011

இதுவரை யாருக்குமே கடிதம் எழுதியதில்லை...

எனக்கு இந்தியாவில் இருக்கிற நண்பர்கள் வேண்டாம்!என்ற பதிவில் குறிப்பிட்ட என் அண்ணன் மகள்களுக்கு பயிற்சி கொடுத்தும் தமிழில் எழுத வைக்க முடியவில்லை. ஒரு வழியாக எனது எனது வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றியடைந்து நான் வெளிநாடு போனதும் எனக்கு கடிதம் எழுதினர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் விசாரித்து நான் கடிதம் எழுதுவதால், எனக்கு பதில் எழுதும்போது எல்லோருமே தங்களுடைய கையெழுத்தில் பதில் எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.


அதன்படி ஒரே கடிதத்தில் என் அண்ணன் மகள்கள் இருவரும் கூடவே எனது அண்ணியும் எனக்கு பதில் எழுதியிருந்தார்கள். இதில் என் அண்ணி இதுவரை யாருக்குமே கடிதம் எழுதியதில்லை. எனக்கு எழுதிய இந்தக் கடிதத்திற்குப் பிறகு வேறு கடிதமும் எழுதவில்லை. மறக்கமுடியாத இந்தக் கடிதங்களை வெகு ஆவலோடு உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


Hai Chitapa,
How are you? How is your life? It’s me Saranya writing. I am fine Chitapa. You know Chitappa I felt very happy to receive your phone call, its nice talking to you. So, thanks for calling. Then how did you celebrate Diwali there and I think Ramzon season is coming. I think you will have nice Biriyani, so, have a nice time and nice Biriyani.

Then what about your work load Chitappa. Don’t have more strain and there is a doubt for me Chitappa, how did you learn to create a e-mail ID? Ok, any way I will create my ID soon. Ok Chitappa has nice time. Take care and keep remembering you.

Ok, bye Chitappa, I will see you in the next letter, since Mum and Shali are waiting to write. Ok, bye! Bye!

Yours,
Saranya.


அன்புள்ள கவிப்ரியனுக்கு, 

அண்ணி எழுதிக் கொள்வது. நலம்தானே. இத்தனை நாள் கடிதம் எழுதவில்லை என்று வருத்தம் வேண்டாம். உன் கடிதம் படிக்கும்போது நேரில் உன்னுடன் பேசுவதுபோல் உள்ளது. அதுபோல் எனக்கு விரிவாக எழுதத் தெரியவில்லை எனக்கு.

விமலாவிற்கு திருமணம் நடந்ததை அறிந்தாய், ஆனால் விபரம் தெரியவில்லை என்று கூறியிருந்தாய். என்ன செய்வது அவரவர் தலைவிதியை யாரால் மாற்ற முடியும்? அவள் பிடிவாதம்தான் கடைசியில் வென்றது. உறவினர் யாரையும் அழைக்கவில்லை. மிக மிக எளிமையான முறையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்த்து. இப்போது தொரப்பாடியில் குடியிருக்கிறாள். 

சரி அதைவிடு, மனைவி குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? சிரிக்காதே உள்ளூரில் இருப்பவர்களை விசாரிக்க, வெளிநாட்டில் உள்ள உன்னிடத்தில் விசாரிக்க வேண்டியுள்ளது. உடம்பை நன்றாக கவனித்துக்கொள். முன் கோபத்தைக் குறைத்துக்கொள். மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இரு. 

மற்றவை அடுத்த கடிதத்தில்.அடுத்து சசிகலா எழுதுகிறாள்.

இப்படிக்கு, 
அர்ச்சனா குமார்.


Hai Chitapa,

How are you? How is your business life? How did you celebrate Diwali? Here we all are fine. Chitapa I have joined in VIT (Vellore Institute of Technology). It is far away, so, I go by collage bus. 

I am preparing for I semester Examinations. I have joined in B.com with computer application course. New course introduced in VIT this year. 

 First I very much scared about college, but now I am enjoying it.
Take care Chitapa,

Bye!

Yours,
Sasikala K.

புதன், 9 நவம்பர், 2011

‘மாயைகள்’ எனக்குப் பிடிப்பதில்லை - மறக்கமுடியாத கடிதங்கள்

அன்புடையீர்,

வணக்கம். நான் புவனா. எப்படி இருக்கிறீர்கள்? நலமா? தங்கள் மனைவி, குழந்தைகள் இருவரும் நல்லா இருக்காங்களா? குழந்தைகள் எப்படி, குண்டா, கொழுகொழுன்னு இருப்பாங்களா? இல்லை நோஞ்சான்காளா? எனக்கு கண்டு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்.
என்னோட அதிர்ஷடமா என்னான்னு தெரியலை. என்னைச்சுற்றியுள்ளவர்கள், நான் சந்திப்பவர்கள் இப்படி எல்லாருமே எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய் என்மேல் அக்கறை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இப்போது புதிதாய் ஒருவர் (அது நீங்கள்தான்).

எதார்த்தவாதியாக மட்டுமே உலகை, மனிதர்களைப் பார்க்க விரும்புகிறேன். ‘மாயைகள் எனக்கு பிடிப்பதில்லை. அதனாலதான் மனசுல பட்டதை (அது நல்லதோ கெட்டதோ) அப்படியே சொல்லிடுவேன். நான் என் குடும்பத்தினர் அனைவரையும் அறிமுகப்படுத்தியதற்கும் அதுவே காரணம்.

ஒரு அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. இப்போ நடக்கப்போற கல்யாணம் என்னோட நாலாவது அக்காவுக்கு (10வது முடித்தவர்). கண்டிப்பா பத்திரிகை அனுப்புவேன்.


எனக்கு மேற்கொண்டு படிக்க ஆசையில்லையா? யார் சொன்னது? படிக்க வசதியில்லை. அதான் காரணம். எனது பி.ஈ. ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது AMIE  படிக்க அப்ளிகேஷன் அனுப்பியுள்ளேன். 

நான் +2 வுமில்லை, டிகிரியுமில்லை. வெறும் 10  வது. பத்தாவதில் 500 க்கு 399 மதிப்பெண்கள் எடுத்தேன். மெரிட்டில் பாலிடெக்னிக் சேர்ந்து DCT முடித்தேன்.

பிரச்சாரம் பண்ற மட்டமானவேலையெல்லாம் எனக்குப் பிடிக்காதுங்க. இப்போ நடக்கிறதெல்லாம் ஒரு அரசியலா என்ன? ஏதோ நம்ம தலைவிதி, அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கிட்டு விழிக்கிறோம்.

என்னைப் பொருத்தவரை, மனிதனை நல்வழிப்படுத்தவே மதம் என்பது. ஆனா அதை வெச்சுகிட்டு சண்டை போடறது, கோஷ்டி பிரியறது என்பதெல்லாம் முட்டாள்களின் செயல். முருகன், ஏசு, அல்லா எல்லாருமே கடவுகள்தான். நமக்கு பிடிச்சவங்களை வழிபடறோம் அவ்வளவுதான். இந்த எண்ணம் எனக்குள் தோன்றியதிலிருந்து எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான். நான் சண்டை போடுவேன். இல்லைன்னு சொல்லலை. ஆனா சண்டைக்கான காரணம் சரியானதா இருக்கும்.

எங்க வீட்ல இப்போதான் டி.வி. வாங்கினோம். நான் டி.வி. பார்க்கிறதில்லை. தினமும் 7.30 அல்லது 8 மணிக்குதான் வீட்டுக்கு வருவேன். பி.வி. ஓடினாலும் நான் பாட்டுக்கு ‘புக்படிச்சிகிட்டிருப்பேன். சரித்திரத்தொடர்களை மட்டும் (ஓம் நமச்சிவாய, ஜெய் ஹனுமான்,ஸ்ரீகிருஷ்ணா) தான் பார்ப்பேன். ஸ்ரீகிருஷ்ணாவுல வர்ற பலராம் கேரக்டரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் வெள்ளையாய் சிரிக்கிற மாதிரி எனக்குத் தோணும்.

இஷ்டத்துக்கு எழுதி அறுத்துக்கிட்டிருக்கேனா?

பெண்ணியம் பற்றி நீங்க எழுதறீங்க, சரி. என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்? நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் அறிவாளி இல்லீங்க. இருந்தாலும் இதுல வேறென்ன எழுதுவீங்க? எதைப்பத்தி நான் சொல்லணும்னு நினைக்கறீங்க? கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்க. என்னால முடிஞ்சா ட்ரை பண்றேன்.


ஆண்-பெண் நட்பு பத்தி கேட்டீங்க? உங்க அளவுக்கெல்லாம் நான் சிந்திச்சது கிடையாது. ஆனா ‘நட்புங்கிறது ஒரு உன்னதமான விஷயம்னு மட்டும் புரியுது. ஆண்-பெண் தடைக்கல்லாய் இருப்பது எது என்று கேட்டால், அவர்களின் தெளிவற்ற நிலையாய் இருக்கலாம். 

(ஆண்களைப்பற்றி குறை சொல்றேன்னு சொல்ல மாட்டீங்கதானே?)
பாதிக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களை வல்கராத்தான் பார்க்கிறாங்களே ஒழிய ப்ரண்ட்லியா பார்க்கிறதேயில்லை. அதுக்கு காரணம் நிறைய இருக்கு. முக்கியமா இப்போ வர்ற திரைப்படங்கள். சினிமா ஒரு ‘மாய உலகம்னு புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. சினிமா ஹீரோ மாதிரியே தன்னையும் நினைசிகிட்டு திரியறது... இப்படி பல. So,அங்க நிஜம் அடிவாங்கிடுது. இதனாலேயே  நட்புக்கரம் நீட்ட பெண்கள் தயங்கலாம்.
அதோடு மட்டுமில்லாம, இந்த சமூகம் வேறு. ஒரு பொண்ணு சாதாரணமா ஒரு பையன்கூட பேசிட்டுப் போனாலே தப்பா பார்க்கிற உலகம் இது. அதனாலதான் ‘நமக்கெதுக்கு வம்புன்னு பெண்களும் ஒதுங்கிடறாங்க.

அமெரிக்கா போவதற்கு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணீங்களே ஏதாவது ரிஸல்ட் வந்ததா? எனக்கொரு சந்தேகம், ‘பணவீக்க விகிதம்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னங்க? நான் என்னதான் அதைப்பத்தி படிச்சாலும் குழப்புதேயொழிய புரியமாட்டேங்குது. கொஞ்சம் தெளிவா எனக்கு விளக்குங்களேன்.

அப்புறம் என்னவாயிருந்தாலும் மனசுக்கு தோணினதை எழுதிடுவேன். அதனால நான் எ.உதற விஷயங்கள்ல ஏதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்கறேன். தூக்கம் வர்ற நேரத்துல எழுதினேன். எழுத்து அஷ்டகோணலா இருந்திருக்கும். எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி படிச்சி வையுங்க.

அறுக்க வேறேதுவும் விஷயம் இல்லை. நீங்க 4 பக்கம் எழுதுவதால் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை. அதனால உங்க இஷ்டம் போலவே எழுதுங்க.

மற்றவை தங்கள் மடல் கண்டு.

என்றும் நட்புடன்,
மாலா.
மயிலாடுதுறை/ 29.04.1998

திங்கள், 7 நவம்பர், 2011

கள்ளக்காதல் எனும் கருமாந்திரம்

சென்ற மாததில்தான் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவைப் போட்டிருந்தேன். ஆனாலும் தொடர்ந்து வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குபவையாகவே இருக்கின்றன. கள்ளக்காதல்கள் தொடர்பான குற்றங்கள் பெருகிவருவது அதிர்ச்சி அளிப்பவையாகவே உள்ளது. 

இதில் மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம் துரோகம் எனபதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இந்த மனிதர்களை எந்த வகையில் சேர்ப்பது? கணவன் எங்கோபோய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு எப்படி உறுத்தலே இல்லாமல் சல்லாபிக்க முடிகிறது.

பத்திரிகைகளில் வெளியான இந்த இரண்டு செய்திகளையும் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் ரத்தம் கொதிக்கும்! கணவன் மீது வெடிகுண்டு பதுக்கிவைத்திருக்கும் தீவிரவாதி போன்ற குற்றப்பழியை சுமத்திவிட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு அப்புறம் கள்ளக்காதலனோடு.... ச்சே... என்ன வாழ்க்கை இது? என்ன பொம்பளை இவள்?

இன்னொரு செய்தியில் 4 குழந்தைகளுக்குத்தாய், ஊனமுற்ற கணவன் உழைப்பது போதாமல் தன் ஒரு சிறுநீரகத்தை விற்று வாங்கி வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனோடு ஒட்டமாம். எப்படிதான் மனது வருகிறது இவர்களுக்கெல்லாம். நமது சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

நாகர்கோவில் : கொல்லங்கோடு வெடிகுண்டு வழக்கில், மற்றொரு திருப்பமாக கள்ளக் காதலனுடன் பள்ளி ஆசிரியையும் கைது செய்யப்பட்டார்.

  கொல்லங்கோடு அருகே, பாலவிளையில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதுரையில் அத்வானி வருகையின் போது கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது எனவும், கொல்லங்கோடு போலீசுக்கு மர்மநபர் போனில் தகவல் தெரிவித்தார்.

போலீசார் நடத்திய சோதனையில், அந்த வீட்டிலிருந்து டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அருள்கீதன் என்பவரது வீட்டில் குலசேகரம் திருநந்திக்கரையை சேர்ந்த ஜெயகென்னடி என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவரது மனைவி விஜி, பாலவிளையில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

ஜெயகென்னடியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் அப்பாவி என்பதை உணர்ந்தனர். அவரது மனைவியை சுற்றி விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அவரது போனை பரிசோதனை செய்த போது, சாமியார்மடத்தை சேர்ந்த ஆஸ்டின் ஜெயராஜ் என்பவரது எண்ணிற்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது.

அவரை கைது செய்தபோது ஆசிரியை விஜியுடன் அவருக்கு இருந்த கள்ளத்தொடர்பு தெரிய வந்தது. ஜெயகென்னடி வெளிநாட்டில் இருந்து, வந்துவிட்டதால் விஜியுடன் கள்ளத்தொடர்பை நீடிக்க முடியாமல் தவித்த ஆஸ்டின் ஜெயராஜ், ஜெயகென்னடியை ஜெயிலில் அடைக்க வெடிபொருட்களை வாங்கி, அவரது வீட்டில் மதில் ஏறி குதித்து மறைத்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் விஜியின் கள்ளத்தொடர்பை உறுதி செய்த போலீசார், வெடிபொருளுக்கு சம்பந்தம் இல்லை என தெரிவித்தனர்.

ஆனால், விசாரணையின் இறுதியில், விஜிக்கு தெரிந்தே வெடிபொருட்கள் வைக்கப்பட்டது உறுதியானதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்காதலன் ஆஸ்டின் ஜெயராஜ், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்த ஜெயச்சந்திர பூபதி, ஆசிரியை விஜி, அவரது தாயார் ரோஸ்லின் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
.
விஜி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
ஆஸ்டின் ஜெயராஜ் என் குடும்பத்துக்கு பல வகைகளில் உதவியுள்ளார். ஆனால், அவருடன் பழகுவது என் கணவருக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த பின், என்னை கண்காணித்ததோடு, சித்திரவதையும் செய்தார். ஆஸ்டினை சந்திக்க விடாமல் செய்தார்.

மீண்டும் வெளிநாடு செல்லும் முடிவை என் கணவர் தள்ளி வைத்ததால், அவரை விட்டு பிரிய முடிவு செய்து, யோசனை செய்து கொண்டிருந்த போது, மதுரையில் அத்வானி வருகையின் போது வெடிகுண்டு வைக்கப்பட்ட செய்தி வெளியானது. எனவே, இதில் என் கணவரை சிக்க வைக்க முடிவு செய்தோம். எனது போனை போலீசார் வாங்கிய போதே, நாம் மாட்டிக் கொள்வோம் என தெரிந்து விட்டது. நான் பெரிய துரோகம் (யாருக்கு?)  செய்து விட்டேன். இவ்வாறு விஜி கூறினார்

கணவன் கிட்னியை விற்று வாங்கி வந்த பணத்தை எடுத்துக்கொண்டு
கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்
சேலம் மாவட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள மனியாரக்குன்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் கிருஷ்ணன். வயது-35, இவரது மனைவி, பூங்கொடி வயது-32.

இந்த கிருஷ்ணனுக்கு காலில்தான் ஊனம், ஆனால் மனதில் ஊனம் இல்லை போல... அதனால் மனம் போன போக்கில்... கணவன் மனைவி இருவரும் .
செல்வராணி வயது-15, அழகுராஜ் வயது-13, பாலமுருகன்-10, முடியரசன், வயது-5 என இந்த தம்பதிகளுக்கு வரிசையாக நான்கு குழந்தைகள் பெற்று தள்ளிவிட்டனர்.
கிருஷ்ணன் கருமந்துரையில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில வேலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று சேலம் மாவட்ட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நான் கருமந்துரையில் வசித்து வருகிரேன், என்னால் கடுமையாக உழைத்து வேலை செய்ய முடியாது, அதனால் ஓட்டல கடையில் வேலை செய்து வருகிறேன்.
 

என்னுடைய சம்பாத்தியம் குடும்ப செலவுக்கு பத்தாத போதும்,.  என்னுடைய மனைவியை நான் எங்கும் வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்திருந்தேன், இரண்டு வருடம் முன்னர் எனக்கு தெரிந்த ஜான் என்பவரிடம் எனது கிட்னியை ஐம்பது ஆயிரத்துக்கு விற்று, அந்த  பணத்தையும் எனது மனைவியிடம் கொடுத்திருந்தேன்.
என்னுடன் ஓட்டல் கடையில்சரக்கு மாஸ்டராகஇருந்த ராயப்பன் என்கிற ரவியை வீட்டுக்கு அடிக்கடி கூட்டிப்போனேன், அவனுக்கும் எனது மனைவி பூங்கொடிக்கும் கள்ள தொடர்புஏற்பட்டு விட்டது. இதை நான் பலதடவை கண்டித்தேன்.

கடந்த நான்கு மாதம் முன்னர், எனது மனைவி பூங்கொடி, ராயப்பன் இருவரும் நான் வைத்திருந்த பணம், எனது ரேஷன் கார்டு, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், எனது அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து நான், கருமந்துறை மற்றும் ஏத்தாப்பூர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துல்ளேன், ஆனால் காவல்துறையினர் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய ரேஷன் கார்டு  கூட என்னிடம் இல்லாமல் இருப்பதால் நான் சாப்பாட்டுக்கு கூட அரிசி  வாங்க கூட முடியாமல் நான்கு குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகிறேன்.

கிட்னியையும் விற்று விட்டதால், என்னால் இப்போது வேலையும் செய்ய முடியவில்லை... அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய எனது மனைவி பூங்கொடியை கண்டுபிடித்து எனது பணத்தையும், ரேஷன் கார்டையும் மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்குக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

வலைச்சரத்தில் 'மறக்க முடியாத நினைவுகள்'

எனது 50 வது பதிவு
வலைச்சரம் நல்ல பதிவர்களையும், பதிவுகளையும் அறிமுகப்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே! அதே சமயம் சிறந்த வலைப்பதிவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வலைச்சரத்தின் ஆசரியர் பொறுப்பையும் அளித்து கௌரவித்து வருகிறது. இந்த வாரத்தின் (31.10.2011 - 06.11.2011) மகிழம்பூச்சரம் என்ற தளத்தின் பதிவர் திருமதி. சாகம்பரி அவர்கள் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 


வலைச்சரத்தின் அறிமுகம்;

இன்றைய குறிப்புகள்:
   செயல் திட்டங்கள்,   கல்லூரி வாழ்க்கை, அலுவலக நேரம், வேலை, குமார பருவம்., நண்பர்கள் , வேலைக்கு தேவையான திறமைகள்

1.  கவிப்பிரியனின் வலைப்பூ கடித இலக்கியத்தை போற்றுகிறது. கடிதம் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த கடிதத்தில் நம்பிக்கை பற்றி எழுதியிருக்கிறார்.  நம்பிக்கையோடு காத்திரு.. 

2.    சகோதரர் சிசு அவர்களின் கூட்டாஞ்சோறு வலைப்பூவில் இந்த கடிதத்தை படியுங்கள். கல்லூரி வாழ்க்கை ஒரு காட்சியாக இருக்கும்.    அன்புள்ள தோழனுக்கு.

 
3. 
சகோதரர்.சண்முகம் அவர்களின் வலைப்பூ எப்போதும் சமூகம் பற்றிய சிந்தனையை வெவ்வேறு பரிமாணங்களில் தூண்டிவிடும். தனி மனித முன்னேற்றத்தை அக்கரையாக எடுத்துரைக்கும்.   இந்த பதிவை படியுங்கள்.  பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிட்ட ஆங்கிலம் தேவை. ஆனால், ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?  .   


இன்றைய தேதியில் பல நேயர்கள் பதிவுலகின் பால் ஈர்க்கப்பட்டு தாமும் வலை பதியத் தொடங்கிவிடுகின்றனர். இது வரவேற்கத் தகுந்த செய்தி, என்றாலும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நானும் அப்படித்தான் வலைப்பதிவை ஆரம்பித்தேன்.

ஆனல் பணிச்சூழல், கற்பனை வறட்சி, எதைப்பற்றி எழுதுவது என்ற தெளிவின்மை ஆகியவற்றால் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி கொஞ்சநாளில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். நண்பர்கள் வட்டம்தான் வாசகர் வட்டமாகப் பெருகுகிறது என்பதை முதலில் அறிந்து கொண்டேன். பிரபலமான பதிவர்கள் புதியவர்களை ஊக்குவிப்பதில்லை என்பதையும் அறிந்தேன். 

பதிவுகள் எப்படி எழுதப்படுகின்றன என்பதையும், தலைப்புகள் வைப்பது, திரட்டிகளில் பகிர்வது என பலவற்றையும் உற்று நோக்கினேன்.
ஆபாசத்தலைப்புகள் வைத்தால் அங்கு மளமளவென்று கூட்டம் கூடுவதையும் உணர்ந்தேன். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கொடுத்து வாசகர்களைக் கவர்ந்தவர்களையும் கண்டேன். 

இப்படிப்பட்ட படிப்பினைகள் இருந்தாலும் பள்ளிப்படிப்பைத் தாண்டாத என்னால் வெற்றிகரமாக ஒரு வலைப்பக்கத்தை தொடர்ந்து நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. என் வலைப்பக்கம் இரண்டு ஆண்டுகளில் பக்கப் பார்வை எண்ணிக்கை ஆயிரத்தைக் கூட நெருங்கவில்லை என்பதுதான் என் இந்த சந்தேகத்திற்கான காரணம். பின் தொடர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? வெறும் 4 பேர்!

ஏதோ புத்துணர்வு வந்தது போல் மீண்டும் ஒரு உத்வேகம் எழுந்து புதிய பெயரில் வலைபதிவைத் தொடங்கிவிட்டேன். என்ன எழுதுவது என்ற யோசனை செய்தபோது, எனது பழைய நினைவுகள், பழைய நண்பர்கள், என்னைக் கவர்ந்த பழைய திரைப்படங்கள், கடந்தகால, சமகால அரசியல் நிகழ்வுகள், எனக்கு வந்த மறக்க முடியாத கடிதங்கள் பொன்றவற்றைப் பற்றிய பதிவுகளை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.



பழைய கடிதங்களை வெளியிடும்போது அதில் ஒரு சங்கடம் இருந்தது. என்னை நம்பி எனக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதங்களை அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் அல்லது என் நிஜப்பெயரில் வெளியிடுவது சில சங்கடங்களைத் தரும் என்பதால் பெயர்களை மாற்றி அந்தக்கால கடிதப் போக்குவரத்தை அப்படியே பதிவாக்க முடிவு செய்தேன்.

வலைப்பதிவு பற்றி இப்போது எல்லாம் அத்துபடி ஆகிவிட்டதால் இதுவரை வெற்றிகரமாக எழுதிவருவதாகவே நம்புகிறேன். நிறைய பதிவுகளை படித்து கருத்துக்களையும் பதிவு செய்கிறேன். இப்படி ஒருமுறை திருமதி. சாகம்பரி அவர்களின் மகிழம்பூச்சரத்தில் ஒரு பதிவைப் படித்து கருத்தைப் பதிவு செய்தபோது அவரும் என் வலைப்பதிவுக்கு வந்து படித்துப் பாராட்டியிருந்தார். அவர் இப்போது வலைச்சரத்தின் ஆசிரியரான 3-வது நாளில் எனது வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


அப்புறம் நாற்று வலைப்பக்கத்தின் நிரூபன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில் என் வலைப்பதிவை அவரது தளத்தில் அறிமுகம் செய்தார். வாசகர்கள் எண்ணிக்கையும் கூடத்தொடங்கியது. மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் 50 பதிவுகள், 33 பின் தொடர்பவர்கள். 6858  பக்கப் பார்வைகள் என பீடு நடைபோடுகிறது. 

இந்த ஐம்பதாவது பதிவில் என்னை ஆதரித்த அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும், தமிழ்மணம், இண்டிலி, தமிழ்10, திரட்டி, உலவு போன்ற திரட்டிகளுக்கும், பின் தொடர்ந்த எல்லா நண்பர்களுக்கும், பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நண்பர்கள் வட்டமே இல்லை. எனது பால்யகால நண்பர்கள் யாரும் தொடர்பில் இல்லை. தற்போது உடன் பணியாற்றுபவர்களில் யாருக்கும் கணிணி அறிவு இல்லை. எனவே பதிவுலக நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு எப்போதும் ஒத்துழைக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,

கவிப்ரியன்.   


புதன், 2 நவம்பர், 2011

உங்களை மறக்கவே முடியாது!

God is love             
    
என் அன்பின் இனிய நண்பருக்கு உங்கள் பிரியமுள்ள க்ளாரா அன்புடன் எழுதுவது. இங்கு நான் நலம். உங்கள் நலன் உங்கள் மனைவி குழந்தைகள் நலன் உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன்.

முதலில் என் கடித காலதாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இரண்டு மாதமாக கடிதம் எழுதாமல் இருந்ததற்கு உங்களை மறந்துவிட்டேன் என்பது காரணமல்ல. என் மரணத்தில் மட்டும்தான் உங்களை மறக்க முடியும். உங்கள் அன்பு எப்படி எனக்குப் புளித்துப் போகும்? நீங்கள் எனக்குக் கிடைத்தது நான் செய்த பெரும் பாக்கியம்.

நான் ஏன் கடிதம் போடவில்லை தெரியுமா? என் மனநிலை சரியில்லை. இங்கு நாங்கள் 30 கிராமங்களுக்குப் போக வேண்டும். ஆனால் தனியாக எங்கும் போகமுடியாது. இடம் அப்படி. நாங்கள் மூன்று பேர் இருக்கின்றோம். சைக்கிளில் போகலாம். ஆனால் என்னோடு இருக்கிறவர்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. பஸ் வசதி கிடையாது. எனவே நடந்துதான் போக வேண்டும்.

எல்லா கிராமமும் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம்தான். தினமும் போய் திரும்பி வருவதற்கு இரவு 12 மணி ஆகிவிடும். திரும்பி வரும்போது 2 பேராகத்தான் வருகிறோம். இருந்தாலும் பயமாக இருக்கிறது. என்னோடு இருப்பவர்கள் என்னைவிடப் பெரியவர்கள். அவர்களே பயப்படுகிறார்கள். எனவே அதிகமாக வரமாட்டார்கள். எனக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை. இன்னும் பல்வேறு பிரச்னைகள். வெறுப்பாக இருக்கிறது.

மக்கள் மிகவும் எளியவர்கள். அதனால்தான் இன்னும் இங்கு இருக்கின்றேன். தீபாவளி அன்று நான் ஒரு கிராமத்திற்குப் போனேன். யாரும் என்னோடு வராததால் தனியாகவே போனேன். காலையில் நடக்க ஆரம்பித்து மாலை 5.30 மணிக்குத்தான் அந்த கிராமத்திற்குப் போக முடிந்ததது. வெயில், பசி, தாகம் இவற்றால் நான் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா? பசியின் காரணத்தால் வழியில் உள்ள ஒரு புளிய மரத்தின் காய்களைப் பறித்து சாப்பிட்டேன்.

வழியில் கடைகளும் கிடையாது. பாலைவனம் போன்று இருக்கும். ஆனால் அவ்வளவு கஷ்டப்பட்டும் நான் இருக்கும் இடத்தில் எந்த ஆதரவும் எனக்குக் கிடையாது. எல்லாரையும் விட்டுவிட்டு இங்கு வந்துவிட்டேன். அதனால் கடைசி வரையிலும் இப்படியே இருக்க வேண்டும் என்றுதான் இதுவரை கஷ்டப் படுகிறேன். இப்படி ப்ரீ சர்வீஸ் செய்து கடைசியில் எந்த பலனும் இல்லை என்றுதான் கஷ்டமாக உள்ளது.

அதனால்தான் உங்களுக்கும் கடிதம் எழுதவில்லை. ஆனால் உங்களை நினைக்காத நேரம் இல்லை. இன்னும் ஒரு காரணம். நான் அடிக்கடி கிராமங்களுக்குப் போவதால் நிறைய பேருக்கு என்னைத் தெரியும். ஆனால் நான் யாரோடும் அவ்வளவாக வைத்துக்கொள்வதில்லை. இடம் அப்படி.

அதனால் என் வேலை முடிந்ததும் யாரையும் எதிர்பார்ப்பது இல்லை, வந்துவிடுவேன். அப்படி வரும்போது ஒரு ஆள் என்னிடம் வந்து எனக்கு மனைவி இறந்துவிட்டாள். ஒரு குழந்தை இருக்கிறது. அதைப்பற்றி உங்களிடம் பேசவேண்டும் என்றான். இன்று நேரம் இல்லை, நாளை பேசலாம் என்று வந்துவிட்டேன்.

நான் நினைத்தது அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆஸ்டல் வசதி கேட்பான் என்று நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவனிடம் போய்க் கேட்டால் என்ன சொன்னான் தெரியுமா? உனக்கு எப்போது நேரம் கிடைக்கும்? நான் உன்னோடு ஒரு நாள் தங்க வேண்டும் என்று சொன்னான்.

எனக்கு அந்த இடத்தில் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை. மௌனமாக வந்துவிட்டேன். ஆனால் இப்படி கேட்டுவிட்டானே என்று என்று இன்னமும் என்னால் அதை தாங்க முடியவில்லை. அப்படியாக எந்த விதத்திலும் நிம்மதி இல்லாமல் இருந்ததால்தான் உங்களுக்கு உடனடியாக கடிதம் எழுதவில்லை.

ஆனால் இந்த சமயங்களில் நீங்கள் என் அருகில் இருக்கக் கூடாதா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம். நிறைய நாட்கள் அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் உங்கள் இந்த கண்ணம்மா என் தோழி என்ற கவிதையைத்தான் படித்து என் மனதை கொஞ்சம் சரி செய்து கொள்வேன். எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற அந்த ஒரு நினைவுதான் நான் இதற்கும் அப்பால் தைரியமாக இருப்பதற்குக் காரணம்.

ஆனால் இங்கு எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எனவே என்னால் தொடர்ந்து இங்கு வேலை செய்ய முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏதாவது குழந்தைகள் காப்பகம் அல்லது முதியோர் பராமரிப்பு இல்லம் இவற்றில் வேலை கிடைத்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஆனல் எங்கு போவது என்றுதான் தெரியவில்லை.

காதல் கோட்டை, காதல் தேசம் படங்களைப் பார்க்கச் சொன்னீர்கள். இங்கு டி.வி. எதுவும் கிடையாது. ஆனால் புத்தகங்கள் படிக்கிறேன். போட்டோ கேட்டிருந்தீர்கள். அது ஊரில் இருக்கிறது. இனி போகும்போது அதை வாங்கி அனுப்புகிறேன். மற்றபடி இப்போது நான் ஆர்க்காடு அல்லது சென்னை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருந்தால் கண்டிப்பாகத் தெரியப்படுத்துகிறேன்.

SORRY!  நான் உங்கள் பிறந்த நாள், தீபாவளி போன்றவற்றுக்கு வாழ்த்து அனுப்ப முடியவில்லை. ஆனால் திடீரென்று யாரைப் பார்த்தாலும் அது உங்களைப் போலவே தெரிகின்றது. எனக்கென்று நீங்கள் மட்டும் போதும். இனி வேறு வாழ்க்கையும் தேவையில்லை. நீங்கள் எந்த நேரத்திலும் இங்கு வரலாம்.

I AM NOT FORGETTING YOU!  தந்தி அடிப்பதற்கு முடியவில்லை. ஆனால் என்றுமே உங்களை நான் மறக்கவே முடியாது. எனக்குக் கூட உங்களை நேரில் பார்த்து எவ்வளவோ பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது. அப்படி தோன்றும் போதெல்லாம் நீங்கள் என் அருகில் இருப்பதாய் கற்பனை செய்துகொள்வேன். படுத்து கண்ணை மூடினாலே நீங்கள்தான் தெரிகிறீர்கள்.

எப்போதும் எங்கு சென்றாலும் உங்கள் கவிதையும் நானும்தான். நீங்களே என்னோடு துணைக்கு வந்தது போல் இருக்கும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். அடிக்கடி உங்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? தீவாவளி எப்படி இருந்தது? ஊருக்குப் போனீர்களா? உங்கள் மனைவி, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?

ஒரு விதத்தில் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்கள்! உங்களோடு வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதற்கும் அதிர்ஷடம் வேண்டும். நான் காலதாமதமாக கடிதம் எழுதினேன் என்பதற்காக நீங்கள் உடன் கடிதம் எழுதாமல் இருந்துவிடாதீர்கள். என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. எனவே என்னை மன்னித்து உடன் கடிதம் எழுதுங்கள்.

துன்பம் வரும்போதெல்லாம் சிரிக்க முடிந்தால் அது வளர்ச்சியின் முதிர்ச்சி. நம் இரண்டு பேருக்குமே ஒரு வகையில் துன்பம்தான். பிரிவு என்பதே ஒரு பெரும் துன்பம். சிரிப்போம்! இரண்டு பேருமே சிரிப்போம்! எழுதவேண்டும், எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. மற்றவை அடுத்த கடிதத்தில்.
என்றும் உங்கள்,
க்ளாரா.
23.11.1996

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதங்கள் எழுதுவதில் பாமரனை விஞ்ச ஆள் கிடையாது... அவரின் வலைத்தளத்துக்குப் போக சுட்டி.

 

செவ்வாய், 1 நவம்பர், 2011

ஏழாம் அறிவு பற்றி இயக்குநர் தங்கர்பச்சான்


மிக சுருக்கமாக ஏழாம் அறிவு எனும் வணிக சினிமா பற்றி ;
 
நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை. இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும்,பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே! இன அறிவோ, மொழி அறிவோ, அரசியல் அறிவோ, நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். 

இனி இவைகளை சொல்லித்தர நமது கல்வித்திட்டமோ, பெற்றோர்களோ, ஆசிரியர்களோ உருவாகப் போவதில்லை. பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு விட்டது. இந்த சிந்தனை இல்லாமல் செய்ய நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே தயார்  படுத்திவிட்டார்கள்.

கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும், அரசியலையும், மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும். இதைப்பற்றி எதையும் பேசாத, வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே  கையாளப்படுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். 

மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன. அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்குப் பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன. அடிமைகளாய் இருப்பவனைவிட, தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். 

அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய் இருப்பவர்கள் பல பேர் தங்களின் மொழிஇனஅரசியல் விடுதலை பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி, தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல், பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்குத்  தமிழ் பற்றி, தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். தமிழை தங்களின் சொந்த நலனுக்காக, அதிகாரத்துக்காக பயன்படுத்தியவர்களைப் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
 
இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ, இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும். ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம். தமிழனுக்கு இன்றிருக்கிற அடிமை சிந்தனையையும், ஏளனத்தையும்கூச்சத்தையும்,  தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம்  தேவைப்படுகிறது. அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.




நம் வரலாற்றை, அறிவியலை, மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக் கல்வியைக் கற்றவர்களுக்கும், இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுபோக்கு சினிமாதான் ஒரே வழி. தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க, அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது. அதற்கான பலனை எனது மகன்களிடமே  நான் கண்டிருக்கிறேன்.

எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக் காட்டிலும், ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்கச் செய்திருக்கிறது.
 
இன்றைய தமிழக அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன. Seventh sense ,  Nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்படத்  திறனாய்வைப் பறை சாற்றி மகிழ்கிறார்களாம் .இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது.

நான் உங்களிடம் இப்படத்தைப் பற்றிய திறனாய்வை  விளக்க வரவில்லை. திறனாய்வு செய்தால் என் அழகியும், பள்ளிக்கூடமும் கூட  நிற்காது. மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற  படைப்புகள் எவ்வாறு குறைகள் இல்லாமல் இருக்க முடியும்? எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன். நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன. எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை கொண்டாட வேண்டும்.

நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டுக் கூறுகளையும், நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும், தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ், சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே. நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன். அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.
 
தாய் மண், தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என் போன்ற பல படைப்பாளிகளின் நிலை தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது. தமிழை நம்பியோ, தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும்ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
 
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான். ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன. ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான். உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம். தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை  விட்டுவிட்டு, இந்த படம் எத்தனை வாரம் ஓடும், எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்.

இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும், படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும், கவலையும். ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும? எவ்வளவு பணம் கிடைக்கும்? வெற்றியா? தோல்வியா? என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன், ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.

அன்போடு

தங்கர்பச்சான்

ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பற்றிய ஒருவித்தியாசமான மாற்றுக்கருத்தை முன்வைக்கும், கூடவே நகைச்சுவையோடு விமர்சிக்கும் விசா பக்கங்கள் என்ற வலைப்பதிவில் 'ஏழாம் அரிப்பு' என்ற இந்த இடுகையையும் காணத் தவறாதீர்கள்.