புதன், 9 நவம்பர், 2011

‘மாயைகள்’ எனக்குப் பிடிப்பதில்லை - மறக்கமுடியாத கடிதங்கள்

அன்புடையீர்,

வணக்கம். நான் புவனா. எப்படி இருக்கிறீர்கள்? நலமா? தங்கள் மனைவி, குழந்தைகள் இருவரும் நல்லா இருக்காங்களா? குழந்தைகள் எப்படி, குண்டா, கொழுகொழுன்னு இருப்பாங்களா? இல்லை நோஞ்சான்காளா? எனக்கு கண்டு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்.
என்னோட அதிர்ஷடமா என்னான்னு தெரியலை. என்னைச்சுற்றியுள்ளவர்கள், நான் சந்திப்பவர்கள் இப்படி எல்லாருமே எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய் என்மேல் அக்கறை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இப்போது புதிதாய் ஒருவர் (அது நீங்கள்தான்).

எதார்த்தவாதியாக மட்டுமே உலகை, மனிதர்களைப் பார்க்க விரும்புகிறேன். ‘மாயைகள் எனக்கு பிடிப்பதில்லை. அதனாலதான் மனசுல பட்டதை (அது நல்லதோ கெட்டதோ) அப்படியே சொல்லிடுவேன். நான் என் குடும்பத்தினர் அனைவரையும் அறிமுகப்படுத்தியதற்கும் அதுவே காரணம்.

ஒரு அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. இப்போ நடக்கப்போற கல்யாணம் என்னோட நாலாவது அக்காவுக்கு (10வது முடித்தவர்). கண்டிப்பா பத்திரிகை அனுப்புவேன்.


எனக்கு மேற்கொண்டு படிக்க ஆசையில்லையா? யார் சொன்னது? படிக்க வசதியில்லை. அதான் காரணம். எனது பி.ஈ. ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது AMIE  படிக்க அப்ளிகேஷன் அனுப்பியுள்ளேன். 

நான் +2 வுமில்லை, டிகிரியுமில்லை. வெறும் 10  வது. பத்தாவதில் 500 க்கு 399 மதிப்பெண்கள் எடுத்தேன். மெரிட்டில் பாலிடெக்னிக் சேர்ந்து DCT முடித்தேன்.

பிரச்சாரம் பண்ற மட்டமானவேலையெல்லாம் எனக்குப் பிடிக்காதுங்க. இப்போ நடக்கிறதெல்லாம் ஒரு அரசியலா என்ன? ஏதோ நம்ம தலைவிதி, அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கிட்டு விழிக்கிறோம்.

என்னைப் பொருத்தவரை, மனிதனை நல்வழிப்படுத்தவே மதம் என்பது. ஆனா அதை வெச்சுகிட்டு சண்டை போடறது, கோஷ்டி பிரியறது என்பதெல்லாம் முட்டாள்களின் செயல். முருகன், ஏசு, அல்லா எல்லாருமே கடவுகள்தான். நமக்கு பிடிச்சவங்களை வழிபடறோம் அவ்வளவுதான். இந்த எண்ணம் எனக்குள் தோன்றியதிலிருந்து எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான். நான் சண்டை போடுவேன். இல்லைன்னு சொல்லலை. ஆனா சண்டைக்கான காரணம் சரியானதா இருக்கும்.

எங்க வீட்ல இப்போதான் டி.வி. வாங்கினோம். நான் டி.வி. பார்க்கிறதில்லை. தினமும் 7.30 அல்லது 8 மணிக்குதான் வீட்டுக்கு வருவேன். பி.வி. ஓடினாலும் நான் பாட்டுக்கு ‘புக்படிச்சிகிட்டிருப்பேன். சரித்திரத்தொடர்களை மட்டும் (ஓம் நமச்சிவாய, ஜெய் ஹனுமான்,ஸ்ரீகிருஷ்ணா) தான் பார்ப்பேன். ஸ்ரீகிருஷ்ணாவுல வர்ற பலராம் கேரக்டரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் வெள்ளையாய் சிரிக்கிற மாதிரி எனக்குத் தோணும்.

இஷ்டத்துக்கு எழுதி அறுத்துக்கிட்டிருக்கேனா?

பெண்ணியம் பற்றி நீங்க எழுதறீங்க, சரி. என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்? நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் அறிவாளி இல்லீங்க. இருந்தாலும் இதுல வேறென்ன எழுதுவீங்க? எதைப்பத்தி நான் சொல்லணும்னு நினைக்கறீங்க? கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்க. என்னால முடிஞ்சா ட்ரை பண்றேன்.


ஆண்-பெண் நட்பு பத்தி கேட்டீங்க? உங்க அளவுக்கெல்லாம் நான் சிந்திச்சது கிடையாது. ஆனா ‘நட்புங்கிறது ஒரு உன்னதமான விஷயம்னு மட்டும் புரியுது. ஆண்-பெண் தடைக்கல்லாய் இருப்பது எது என்று கேட்டால், அவர்களின் தெளிவற்ற நிலையாய் இருக்கலாம். 

(ஆண்களைப்பற்றி குறை சொல்றேன்னு சொல்ல மாட்டீங்கதானே?)
பாதிக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களை வல்கராத்தான் பார்க்கிறாங்களே ஒழிய ப்ரண்ட்லியா பார்க்கிறதேயில்லை. அதுக்கு காரணம் நிறைய இருக்கு. முக்கியமா இப்போ வர்ற திரைப்படங்கள். சினிமா ஒரு ‘மாய உலகம்னு புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. சினிமா ஹீரோ மாதிரியே தன்னையும் நினைசிகிட்டு திரியறது... இப்படி பல. So,அங்க நிஜம் அடிவாங்கிடுது. இதனாலேயே  நட்புக்கரம் நீட்ட பெண்கள் தயங்கலாம்.
அதோடு மட்டுமில்லாம, இந்த சமூகம் வேறு. ஒரு பொண்ணு சாதாரணமா ஒரு பையன்கூட பேசிட்டுப் போனாலே தப்பா பார்க்கிற உலகம் இது. அதனாலதான் ‘நமக்கெதுக்கு வம்புன்னு பெண்களும் ஒதுங்கிடறாங்க.

அமெரிக்கா போவதற்கு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணீங்களே ஏதாவது ரிஸல்ட் வந்ததா? எனக்கொரு சந்தேகம், ‘பணவீக்க விகிதம்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னங்க? நான் என்னதான் அதைப்பத்தி படிச்சாலும் குழப்புதேயொழிய புரியமாட்டேங்குது. கொஞ்சம் தெளிவா எனக்கு விளக்குங்களேன்.

அப்புறம் என்னவாயிருந்தாலும் மனசுக்கு தோணினதை எழுதிடுவேன். அதனால நான் எ.உதற விஷயங்கள்ல ஏதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்கறேன். தூக்கம் வர்ற நேரத்துல எழுதினேன். எழுத்து அஷ்டகோணலா இருந்திருக்கும். எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி படிச்சி வையுங்க.

அறுக்க வேறேதுவும் விஷயம் இல்லை. நீங்க 4 பக்கம் எழுதுவதால் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை. அதனால உங்க இஷ்டம் போலவே எழுதுங்க.

மற்றவை தங்கள் மடல் கண்டு.

என்றும் நட்புடன்,
மாலா.
மயிலாடுதுறை/ 29.04.1998

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!