Friday, March 2, 2012

தவமாய் தவமிருந்து... - மறக்க முடியாத சினிமா

வாழ்க்கை ஒரு விசித்திரமான வாத்தியார்!
அது பாடம் நடத்திவிட்டு பரீட்சை வைப்பதில்லை. பரீட்சை முடிந்த பிறகே பாடம் கற்றுக்கொடுக்கிறது!’ – என்பார்கள். அப்படி இழந்த பிறகே உணர்கிற உறவுகளின் அருமையை, இருக்கிறபோதே மதிக்க, பாதுகாக்க, கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசுகிற திரைப்படம் இது!
மன்னர்களின் கதைகளையும் மாவீரர்களின் கதைகளையும் சொல்லி வந்த சினிமாவில், முதல் முறையாக ஒரு பலவீனமான ஏழைத் தகப்பனின் கதை. தாயின் பெருமையை மட்டுமே பெரிதாகப் பேசும் உலகத்தில், ஒரு தகப்பனின் பேரன்பினைப் பதிவு செய்யும் முயற்சி, ‘தவமாய் தவமிருந்து’!
ஒரு சாதாரண மனிதனின் முப்பந்தைந்து வருட வாழ்க்கை… அதுவும் மூன்றரை மணி நேர சினிமா. காமெடி டிராக், அதிரடி ஆக்ஷன், திடீர்த்திருப்பங்கள், குத்துப்பாட்டு, குழு நடனங்கள் ஏதும் இல்லாத படம்.

கிராமத்து நடுத்தர வர்க்கத் தகப்பனாக ராஜ்கிரண். ஏகப்பட்ட கஷ்டநஷ்டங்களுக்கு நடுவே நகர்கிற குடும்பம். வாழ்க்கை முழுக்க மகன்களின் நல்வாழ்வுக்காக வட்டிக்குக் கடன்வாங்கிச் செலவழித்து, கடனுக்கு வட்டி கட்டவே வாழ்க்கையோடு போராடும் தகப்பன். தீபாவளிச் செலவு, பாலிடெக்னிக் ஃபீஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாடுகிற, அவமானம் சுமக்கிற, கெஞ்சிக்கூத்தாடி கொண்டுவந்து கொட்டுகிற ஒரு மனிதன்.
மூத்த மகனுக்குத் திருமணமாகிறது. வருகிற மருமகளால் குடும்பத்தில் சிக்கல். மூத்த மகன் தனிக்குடித்தனம் போகிறார். இன்னொரு பக்கம் இன்ஜினியரிங் படிக்கும் சேரன், தன் சக மாணவி பத்மப்ரியாவுடன் காதலாகி, எசகுபிசகான ஒரு சந்தர்ப்பத்தால் கர்பமாகிற காதலியுடன் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்.
அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகே ராஜ்கிரணுக்குத் தெரியவர, அப்போதும் மகனை மன்னிக்கிறார். தங்களுக்காகவே வாழும் தாய்-தகப்பனுக்கு வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் தர ஆசைப்படுகிறார் சேரன் என வாழ்வின் ஒவ்வொரு ப்பரிமாணத்தையும் விலாவரியாய் விவரிக்கிற கதை, ஒரு சுடுசொல் தாளாமல் உயிரை விடுகிற தனிமனிதனின் வரலாறாக முடிகிறது.
‘ஒரே ஒரு ஊருக்குள்ள’ பாடலில் கிராமத்து அப்பாவும் அம்மாவும் தங்களின் இரண்டு மகன்களுடன் பாசமாக சைக்கிளில் பயணிக்கும்போதே, நாமும் அவர்களின் வாழ்க்கைச் சைக்கிளில் தொற்றிக்கொண்டுவிடுகிறோம். 

‘உங்க பையன் நேத்து விபச்சாரக் கேஸ்ல மாட்டிக்கிட்டான்’ என்பதைக் கேட்கும்போது கனவுகள் நொறுங்கிக் கண்ணீர் விடும்போதும், அர்த்த ராத்திரியில் காதலியுடன் ஓடிப்போகக் கிளம்புகிறான் இளைய மகன் என்பது புரியாமல், ‘கோயம்புத்தூர்ல ஒரு இன்டர்வியூப்பா’ என அவன் சொல்லும் பொய்யை நம்பி, திருநீறு பூசி ஆசிர்வதித்து அனுப்பும் போதும், பிள்ளைகளுக்காகவே வாழும் அப்பாவிப் பெற்றோரின் உலகம் நம் நெஞ்சில் அறைகிறது!
வட்டிக்கடைக்காரரிடம் கூனிக் குறுகி நின்றுவிட்டு, பணத்துக்கு ரெடி பண்ணியதும் கண்ணீர் பொங்கக் கண்கள் சிரிக்க நடந்து வரும்போது, ஆயிரமாயிரம் ஏழைத்தகப்பன்களைக் கண்முன் கொண்டுவருகிற ராஜ்கிரணின் ‘வாழ்நாள் சாதனை’ இப்படம்! ஓடிப்போன மகனுக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிந்து தேடி வந்து அந்த வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பாரே… அந்த ஒரு காட்சி போதும். பரிதவிக்கும் பார்வையுடன் ஒரு சித்தரைப் போல நிமிர்ந்து, ‘ஏம்ப்பா இப்படிப் பண்ணினே? எனக் கேட்கிற காட்சி, க்ளாஸ்!
‘எம் புள்ளைகளுக்கு நா ஏதோ குறை வெச்சுட்டேன் போலிருக்கு, அதான் ரெண்டுபிள்ளைகளுமே என்கிட்ட தங்கலை. நீயாவது உம் பிள்ளைக்கு அந்தக்குறை வராம பாத்துக்கோப்பா’ என்பது போன்ற இயல்பான வசனங்களைத்தான் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன தூணாக!
அப்பாவைப்பற்றின படம்தான் என்றாலும், அவரின் முதுகெலும்பாக வரும் அப்பாவி மனைவியாக அசத்தி இருக்கிறார் சரண்யா. ‘ஏம், உம் பொண்டாட்டி மட்டுந்தேன் அல்வா திம்பாளாக்கும்’ என மருமகளை எரிச்சலாகப் பார்ப்பது போலிருந்தாலும், வகுத்துப் பிள்ளைக்காரிக்குக் கடைப் பலகாரம் குடுத்தா ஒத்துக்காதுப்பா’ என முடிக்கும்போது, தாய்மையின் கரிசணமே மேலெழுகிறது.

சென்னை வாழ்க்கையில் சிரமமான பொருளாதாரத்தில் கர்பம் சுமந்து கஷ்டப்படும் பெண்ணாக வரும்போது, கலங்கடிக்கிறார் பத்மப்ரியா. படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது மூத்த மருமகளாக வரும் புதுமுகம் மீனா. முகச்சுழிப்பும், எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியாக மல்லுக்கு நிற்கும் வேகமும், முணுக்கென்றால் ஹஸகி வாய்சில் முனங்குகிற குரலும்… செம முறுக்கு! ராஜ்கிரணின் அச்சகத் தொழிலாளி அப்பாவி அழகராக பாசமும் விசுவாசமுமாக வளையவரும் இளவரசுவின் காரெக்டர், சமூக அமைப்பில் பாடப்படாத நாயகர்களின் அடையாளம்!
படம் முழுக்க உணர்வுகளின் புயல் மழையாகக் காட்சிக்குக் காட்சி நம்மை நனைத்தெடுக்கிற விதத்தில் கம்பீரமாக ஜெயித்திருக்கிறார் இயக்குனர் சேரன். ஆனால் நடிகர் சேரன், முதல் வகுப்பில் பாஸாக போராடவேண்டும். அழுகிற போதெல்லாம் முகத்தை மூடிக்கொள்வது, எம்.ஜி.ஆர். காலத்து ஃபார்முலாங்கோவ்! இன்ஜினியரிங் படித்த மாணவர் சென்னையில் பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. முக்கால் காலுக்கு மடித்து விடப்பட்ட பேன்ட்டும், கரச்சீஃப் கட்டிய தலையுமாகக் கைவண்டி இழுப்பதும்கூட அதே எம்.ஜி.ஆர். காலத்து சினாமா!

கால மாற்றங்களைப் பதிவி செய்ய இயக்குனருடன், மேக்கப் மேன், காமிரா மேன், ஆர்ட் டைரக்டர் என ஒரு கும்பலே கூடி மிகக் கடுமையாக உழைத்திருக்கிறது. நகரத்தில் சேரன்-பத்மப்ரியாவின் வாழ்க்கையைக் காட்டும்போது அரை இருளிலேயே பயணிக்கிற எம்.எஸ்.பிரபுவின் கேமராவே பாதி கதையைச் சொல்கிறது. ஒரு அச்சகம் ஒவ்வொரு காலத்திலும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைக் காட்டுவதில் சபாஷ் பெறுவது ஆர்ட் டைரக்டர் ஜே.கே!
‘ஒரை ஒரு ஊருக்குள்ளே’ பாடலில் ஸ்கோர் பண்ணுகிற சபேஷ்-முரளி, இடைவேளைக்குப் பிறகு வருகிற எட்டு நிமிட ‘திரன திரன தீம்திரன’ எபிசோடின் பின்னனி இசையும், அந்தக் குதூகலக் காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் சுக ராகம்.
வழக்கமான தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி இதில் இல்லை. துள்ளவைக்கிற முடிச்சுகளோ, தூக்கிவாரிப்போடும் திருப்பங்களோ கொண்ட காட்சி அமைப்புகள் எதுவும் இல்லவே இல்லை. ஒரு மென்மையான நீரோடை மாதிரி அதன் போக்கில் மிக மெள்ளப் பயணிக்கிறது படம். அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அத்தனையும் யதார்த்த வகை. கூடவே படம் நீளமோ என்கிற அலுப்பும் அவ்வப்போது ஏற்படுகிறது.


இருந்தாலும்… சிதையும் கூடாக, சிதறடிக்கப்படும் கனவாக, நிறைவேறாத பிரார்த்தனையாக… இப்படித்தானே இருக்கிறது இங்கே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எனத் திரையரங்கில் இருந்து வெளியேறுகிற கசிந்த விழிகள் சொல்கின்றன, இந்தப் படைப்பின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும்.
இதுதான் சேரனின் தவத்திற்குக் கிடைத்திருக்கும் நல்வரம்!
நன்றி; ஆனந்தவிகடன் 18.05.2005       


2 comments:

மாலதி said... [Reply]

நாம் பெரும்பாலும் திரைப்படம் பார்ப்பதில்லை பத்தாண்டுகளுக்கும் மேலாக இன்று நமது இனத்தின் கதையாக இருக்கிற உச்சிதனை முகர்ந்தால் வரை பார்க்கும் நேரமும் வாய்பதில்லை அதே நேரம் அதற்காக நேரத்தைசெலவழிக்கவும் முடிவதில்லை . உங்களின் மிக சிறந்த விமசனம் உண்மையில் திரைப்படத்தை பார்க்க தூண்டுவதாக இருக்கிறது இப்படிப்பட்ட சிறந்த படங்களை பார்க்கலாம் இதுதான் கலை கலைக்காகவே என்பது இல்லாமல் கலைகள் வாழும் மக்களுக்க என்பது எத்தனை உண்மை பாருங்கள் பாராட்டுகள் .

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மாலதி! உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். அபூர்வமாக சில படங்கள் இப்படி வந்துவிடுவது உண்டு.வாழ்க்கை நிதர்சணங்களை உணர்வதைவிட கனவுலகில் மிதப்பவர்கள்தான் நம்மில் அதிகம்!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!