(சென்ற பதிவின் தொடர்ச்சி...)
பெரும்பாலான
காதல், இருட்டைத் தேடுகிறது. தனிமையில், கடற்கரைத் தோணி மறைவில் வளர்கிறது. அல்லது
சினிமாக் கொட்டகை இருட்டில் கைகோர்க்கிறது. உடல் ஸ்பரிசம் சந்தோஷம்தான் என்றாலும்,
காதல் மேல் படரும் நூலாம்படையை அது சுத்தம் செய்துவிடுமா, என்ன?
காதலர்கள் தாங்கள்
ஏற்படுத்திக்கொண்ட தனிமையில் நிறைய பேச வேண்டும். இதயம் வெளியே வந்து விழும் வரைக்கும்
பேசவேண்டும். மேலை நாடுகளில் காதலர்கள் பேசவும் பழகவும் வாய்ப்பு அதிகம். அந்தத் தொடக்கத்தை
அந்தச் சமூகம் அங்கீகரிகிறது.
உண்மையில்
இந்தியாவில் காதலிக்க, காதலருக்கு இடமில்லை. இது ஒரு பிரச்னை. வீட்டுக்குள் அவர்கள்
சந்தித்து உறவாடக்கூடாது. வீடுகளில் பூகம்பம் உருவாக இது போதும். ஆகவே, கள்ளம் தோன்ற
காதலர்கள் மறைவிடம் நாடுகிறார்கள்.
காதலர்கள்
பாவனை செய்வார்கள்தான். தன் இனிய பகுதியை மட்டுமே அடுத்தவருக்குக் காட்டுவார்கள். அழகிய
வரவேற்பரை மட்டுமே வீடு ஆகாதே… குளியல் அறை, சமையல் அறை, பின்கட்டு… இந்த லட்சணங்களை
மற்றவர் பார்க்க நாம் அனுமதிப்போமா, சட்டென்று? இந்த ஜாக்கிரதை உணர்வு காதலர்க்கு ஜாஸ்தியாகவே
இருக்கும். தலை கலையாத முகம். இஸ்திரி கலையாத சட்டை. துடைத்துப் பவுடர் போட்டுப் பதப்படுத்திய
முகம். அவர்கள் சொந்த முகத்தை முதுகில் வைத்திருப்பார்கள்.
தொடர்ந்த
பேச்சு, தொடர்ந்த பழக்கம் அசல் முகத்தை வெளிக்கொண்டு வந்துவிடும். கல்யாணம் ஆகாத ஆணையும்
பெண்ணையும் பழகவிடுவதாவது? ஏதாவது தப்புத்தாண்டா நடந்துவிட்டால்? எங்களைப் போன்ற மூத்த
தலைமுறையின் தலையில் உள்ள கசடுகள் இவை. அழுக்கு மனம்தான், தன் பிள்ளைகளைப் பற்றி அழுக்காக
நினைக்கும்.
சரி.
. . எல்லாம் மீறி ஏதாவது நடந்துவிட்டால்?
நடந்துவிட்டால்
இமயமலை இடம் மாறிவிடாது. இந்து மகாசமுத்ரம் வற்றிப் போகாது. பெண்கள் சம்பாதிக்க வெளியே
போவதாவது என்று சொன்னவர்கள் போன இடம் எங்கே? பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். என்ன
கெட்டுப் போயிற்று?
காதலை
மனதளவில் வளர்க்க முடியாமைக்கு, முதல் குற்றவாளி சமூகம்தான். உலகமெங்கும் குழந்தைகள்
குழந்தைகளாத்தான் பிறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள்
என்று தனித்தனியாகப் பிறக்கிறார்கள். வகுப்புகளில், பேருந்தில், கோயில்களில். ஆண்கள்
இடம் வேறு. பெண்கள் இடம் வேறு. பத்து பன்னிரண்டு வயசுக்கு மேல் ஆண்-பெண் குழந்தைகள்
சேர்ந்து விளையாடக்கூடாது.
பெண்ணையும்
ஆணையும் பிரித்தே வளர்க்கிறோம். பெண் வயதுக்கு வந்ததுமே, நம் தாய்மார்கள், வயிற்றில்
நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள். அவள் மேல் அந்நிய ஆடவரின் மூச்சுக்காற்றும் பட்டுவிடாமல்
பாதுக்காக்கிறார்கள்.
பையன்களுக்கு
பெண்கள் கனவுகள். பெண்களுக்கு பையன்கள் விபரீதங்கள். இயன்றவரை பையன்களும் பெண்களும்
பிரிக்கப்பட்டே வளர்க்கப்படுவதால், ஒரு தீராத கவர்ச்சி இருபாலாருக்கும் கெட்டி தட்டிப்
போகிறது.
ஆணுக்குப்
பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் இங்கு அரிதாக சுலபத்தில் விழாத ‘லாட்டரி டிக்கெட்டு’காளாக
இருக்கிறார்கள். அதனாலேயே பரஸ்பரம் அவர்கள் ஆச்சர்யங்களின் பொட்டலமாக இருக்கிறார்கள்.
பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? இந்தப் பிரித்துப்
பார்த்தலே, இங்கு பெரும்பாலும் காதலாகிறது. திருமணத்துக்கு முன்பாகவே, இந்த நிகழ்ச்சி
நடக்கும் சூழ்நிலை இங்கு நிலவுமாகில், பெரும்பாலான காதலர்கள் கல்யாணம் செய்துகொள்வதைத்
தவிர்த்துவிடுவார்கள் என்பது கசப்பான உண்மை.
எனக்குத்
தரிந்த ஒரு பையன், பெண் கதையை நான் உங்களுக்குண் சொல்லியாக வேண்டும். சிறுவன் பாலு.
பெண் காயத்ரி. ஒன்பது பத்து வகுப்பிலேயே அவர்கள் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ப்ளஸ் ஒன் வகுப்புக்கு வருகிற போது காதல் உச்சம். எப்படி இவர்கள் காதல் ஜனித்தது? அவள்
இவனைப் பார்த்து, ‘கெமிஸ்ட்ரி நோட்ஸ் இருக்கா’ என்றாளாம். இவன் கிளுகிளுத்துப் போனான்.
அவன் அவளைப் பார்த்து ‘டைம் என்ன’ என்றானாம். அவள் ஆடிப்போனாள். கெமிஸ்ட்ரி நோட்ஸையும்,
டைமையும் காதல் தூது என்று புரிந்து கொண்டார்கள் இருவரும்.
எதிர்பாலோடு
பேசமாட்டோமா என்று அடக்கிவைக்கப்பட்ட ஆசை… அணையைப் பெயர்த்துக் கொண்டது. தெரு முனையில்,
கடைகளின் வாசல் நிழல்களில் வகுப்பறையின் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.
காதல் கண்ணாலா கெட்டிப்படும்? இவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். இதயம் வரைந்து,
அதன் குறுக்காக அம்பு பாய்ச்சி, காதல் கடிதம் எழுதிக்கொண்டார்கள். ஒரு நாள் இந்த வீட்டுச்
சிறையில் இருந்து தப்பிக்க எண்ணி ஒரு மூன்றாந்தர லாட்ஜில் அடைக்கலம் தேடினார்கள். போலிஸ்,
ரெய்டில் அவர்களை வளைத்தது.
அதிகம்
சொல்வானேன்… அந்தப் பெண்குழந்தை கடித்துக் குதறப்பட்டது பலரால். கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப்
பிறகு, மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து அந்தப் பெண் மீட்டெடுக்கப்பட்டாள்.
அந்தப்
பெண்ணின் பையனின் தவறு என்ன? இது சமூகம் செய்த தவறு. நம் மகனையோ மகளையோ தேடி வரும்
நண்பர்களை வரவேற்பு அறையில் அமர்த்தி பேசச்சொல்வோம். அவர்களுக்கு டீ தந்து உபசரிப்போம்.
பெரும்பாலோன தப்புகள் தவிர்க்கப்டும்தானே?
இளைஞர்களும் யுவதிகளும் சந்தித்துப் பேசப்பேசத்தான்
அவர்கள் மனிதர்கள் ஆகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சரிதானே? பேசப் பேச மனசுக்குள்
நட்பு வளரும், கவர்ச்சி போகும், மரியாதை கூடும். அப்புறம் இவர்கள் ஓடுவார்களா என்ன?
அப்புறமும்
ஓடுபவர்களை எவர்தான் தடுத்து நிறுத்த முடியும்? சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?
அன்புக்
கண்மணிகளே!
மனம்
நிறைய மண்டிய அழுக்கு கொண்ட ஒரு சமுதாயம், அழுக்கற்ற சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய
முடியும்? வளர்ந்தவர்கள் அழுக்காக இருக்கிற சமுதாயத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்க
முடியும்? விடலைத்தனத்தை, பால் கவர்ச்சியைக் காதல் என்று நம்புகிற அசட்டுத்தனம், தனியாக
நேர்ந்துள்ள துரதிஷ்டம் அல்ல! ஒட்டு மொத்த சமுதாயக் குறைகளில் ஒன்றாகத்தான் இதையும்
நாம் காண வேண்டும்.
நமது
தநிழ் சினிமாவில் பத்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைகள் காதலிப்பதாகக் காட்டுவது எதை
உணர்த்துகிறது? விபச்சாரம் செய்ய நேர்ந்து பிடிப்பட்ட பெண்களை நம் பத்திரிகைகள் ‘அழகி’
என்று சொல்வதன் தத்துவார்த்தம் என்ன? கழிப்பறையில் கரிக்கட்டி கொண்டு எழுதப்படும் ‘வக்கிர’
வடிவங்களைத் தூண்டும் அரக்கன் யார்?
கல்லூரி
அல்லது அலுவலகப் பெண்களை கேலி செய்கிற அசிங்கம் எங்கே பிறந்தது? இப்படி எத்தனையோ கேடுகளில்
ஒன்றாகத்தான் அ-காதலைக் காதல் என்று புரிந்துகொள்ளும் போக்கும். பெண்-ஆண் உறவை ஆரோக்கியமாகப்
பார்க்காத சமுகத்தில் காதல் மட்டும் கறை படியாது எங்ஙனம் இருக்கும்?
ஆகவே
கணவன் மனைவியாக ஆன பிறகும் கூட நீங்கள் காதலர்களாகவே இருக்க வேண்டும் என்பதே என் அவா.
ஏனெனில் இங்கே தாலியோடு காதல் வைதவ்யம் பெற்று விடுகிறது என்பது சோகம். சிறையப் பேசிப்
பேசி, அப்புறம் மோனமாகவும் நீங்கள் உரையாடிக்கொள்ள வேண்டும். பெண்ணை மரியாதை செய்க.
வாழ்ந்து காதலை வாழவையுங்கள். காதல் வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.
வாழ்த்துக்கள்.
– பிரபஞ்சன். 01.08.1999 - ஆனந்த விகடனில்
7 கருத்துகள்:
பிரபஞ்சனின் அலசல் அருமை. காதல் பற்றிய புரிதல் இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தேவை பகிர்வுக்க நன்று
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன் அவர்களே.
வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் காதலிப்பது தவறு.
யதார்த்தமோ பதார்த்தமோ யாருங்க அதெல்லாம் பார்க்கிறாங்க. அந்த நேரத்து பொழுது போக்கு காதல், அவ்வளவுதான். வருகைக்கு மிக்க நன்றி ஐயா.
அருமை அருமை! அதுவும் அந்த இறுதி பத்தி அதுதான் வேண்டும். பலர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின் காதலைக் கைவிட்டு விடுகின்றனர். அதுதான் 45, 50 வயதில் திருமண வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யத்தை இழக்க வைக்கின்றது.....காதலையும் பொறுப்புக்களையும் பிரித்து அறியத் தொடங்கிவிட்டால் வாழ்க்கை இனிக்கும்.
மிக்க நன்றி துளசிதரன் அவர்களே.
அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!