Saturday, February 14, 2015

காதல் வயப்பட்ட ஜோடிகளுக்கு... 
உங்கள் இருவரின் கடிதம் கிடைத்தது. நீங்கள் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் எழுதி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ரொம்ப மகிழ்ச்சி. இல்லற வாழ்க்கைக்குள் பிரவேசிக்கப் போகிற ‘எங்களுக்கு ஏதேனும் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறீர்கள்.

உலகத்திலேயே ரொம்ப சுலபமானது, பிறருக்கு அறிவுரை சொல்வதுதான். மீறப்படுவதற்கென்றே போடப்படும் சட்டங்களைப் போல, புறக்கணிக்கப்படுவதற்கென்றே சொல்லப்படுகிற வார்த்தைகளே அறிவுரைகள் அல்லது போதனைகள்.

ஆகவே நான் உங்களுக்கு அறிவுரை சொல்லப்போவது இல்லை. வயதில் மூத்தவன் என்கிற தகுதியை (இது தகுதிதானா?) முன்வைத்தும், நிறைய காதல் வயப்பட்டவன் என்கிற அனுபவங்களை முன்வைத்தும், உங்களுக்கு உபயோகப் படலாம் என்று நான் நம்புகிற சிலதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் காதல் புனிதமானது என்கிறீர்கள். உலகத்தில் புனிதமானது என்று எதுவுமே இல்லை. அதே போல உலகத்தில் அசிங்கமானது என்றும் எதுவும் இல்லை. காதல் இயல்பானது என்பதே உண்மை. அது இரண்டு உயிர்கள் சங்கமம் ஆகிற, தவிர்க்க முடியாத நியதி. ஆரோக்கியமான உயிரும் உடம்பும் அவாவுகிற தீனி. உயிர் வாழ்க்கை பிராண வாயுவை உட்கொள்வதால் மட்டுமே சாத்தியம் என்பது போல, மானுட வாழ்க்கை காதலினாலேயே சாத்தியமாகிறது.

உங்கள் நேசம், அல்லது காதல் எப்படித் தோன்றி எப்படி வளர்ந்தது என்கிற தகவல் உங்கள் கடிதத்தில் இல்லை. என்றாலும் என்ன? பொது உலக அனுபவங்களை முன்வைத்தே காதலின் ஜனன விசித்திரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எத்தனையோ பேரை தெருவில், வேலை செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் பார்க்க நேரிடுகிறது. சில முகங்கள்தான் பச்சைக் கொடி காட்டும் ரயில் ஊழியர் போல நமக்கு அனுமதி கொடுக்கின்றன.

சில முகங்கள்தான் பேசத்தகுந்த முகங்கள், பழகத்தகுந்த முகங்கள் என்று நம் உள் மனம் நமக்கு உத்தரவிடுகிறது. நாம் அவரில் ஈர்க்கப்படுகிறோம். ஏதேனும் ‘சாக்கு’ வைத்துக்கொண்டு பேசவும் செய்கிறோம். பரிச்சயம் பழக்கம் ஆகிறது. பழக்கம் அந்நியோன்னியத்தில் கொண்டு சேர்க்கிறது. தினம் தினம், அடிக்கடி அவர் குரலைக் கேட்க வேணும், பார்க்க வேணும் என்கிற அவஸ்தை உருவாகிறது.

மதுரை மணியின் அருமையான ஒரு கல்பனையைக் கேட்கையில், மாலியின் ஒரு சுழற்றலில், ரகுமானின் ஒரு சுழிப்பில், பர்வீன் சுல்தானாவை, அல்லது உங்கள் ரசனைக்கேற்றபடி ஒருவரைக் கேட்கையில், ‘அடடா இப்போது அவன் / அவள் என் அருகில் இல்லையே’ என்று ஏங்க வைக்கிற மனசு உங்களுக்கு சிந்தித்துவிட்டதா? துணிக்கடை பொம்மைகள் போட்டிருக்கும் ஆடைகளை, உங்கள் துணைக்கு அணிவித்து அழகு பார்க்கிறதா, உங்கள் மனசு? நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இது தொடக்கம்தான். காதல் எழுதுவது வேறு… இசைவு படுவது வேறு. காதலின் ஜீவன், அவனும் அவளும் இசைவுபடுவதிலேயே இருக்கிறது. இசைவுபடுதல் என்பது என்ன? சுவையும் நோக்கமும் ஒன்றுபடுதல். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு, ஓவியம் உயிர் உன்னதம். ஒருவருக்கு ‘இது என்ன வர்ணமெழுகல்’ என்கிற புத்தி. ஒருவருக்கு சங்கீதம் உன்னதம். ஒருவருக்கு ‘இது என்ன விலை என்கிற வியப்பு. ஒருவருக்கு புத்தகம் உயிர். ஒருவருக்கு ‘இது என்ன காசைக் கரியாக்கிக்கொண்டு’ என்கிற பணப்பிரக்ஞை.

காதலின் பிள்ளையார் சுழியே இதுதான். ஒருத்தரின் சுவை, அந்த இன்னொருத்தரின் சுவையும், குறைந்த பட்சம் முரணாகக்கூடாது. அவனும் அவளும் ஒரே துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவன் ஒரு அறையில் கதை எழுதினால் இவள் இன்னொரு இறையில் கட்டுரை எழுதவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இதெல்லாம் சாத்தியமும் இல்லை.

‘என்ன பெரிய கதையும் கிதையும்? அந்த நேரத்தில், இந்த முருங்கைக் கீரையை ஆஞ்சி கொடுத்தாலாவது பிரயோஜனமாக இருக்கும்’ என்று அவளோ, ‘ஆமா, நீ பெரிய இவள்… கட்டுரை எழுதுகிறாயாக்கும்… இந்தச் சட்டயைத் துவைச்சுப் போட்டால் என்ன?’ என்று இவனோ கேட்பதுதான் அசுவை அல்லது அவமரியாதை.

என் அன்புக்குரிய கண்மணிகளே!

ஒரு காதல் கதை சொல்லட்டுமா? தஞ்சாவூரில் எனக்கு ஒரு சிநேகிதி இருந்தாள். பனிரண்டு வயசில் இவள் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. தஞ்சாவூர் தாண்டி, சென்னை மியூசிக் அகாடமி வாசல்வரை இவள் புகழ் நீண்டு பரவியது. அந்தச் சமயத்தில்தான், அந்தச் சிநேகிதி – ராதா – ஒரு வலையில் விழுந்தாள். வேறு என்ன… அதுதான் அவஸ்தை!

யாரோ ஒரு மிராசுதார் பையன். அவனம் ஒரு குட்டி மிராசுதான். காதலித்துக் கொண்டார்கள். அல்லது அப்படி நம்பினார்கள். மூன்று நாள் கல்யாணம். ஊரடைத்துப் பந்தல். ஆயிரக்கணக்கில் இலை விழுந்தது. எல்லாம் எப்போதும் இன்பமயமாக ஆவதில்லையே… ‘வீட்டு மருமகள் ஆடுவதாவது’ என்றார்கள் மிராசு வீட்டில். பையனின் அதுவரையிலும் ஒளித்து வைக்கப்பட்ட நிஜமுகம் தெரியத் தொடங்கியது. 

ராதா இந்த நூற்றாண்டு ‘பத்தினி’ அல்லவா? புராண காலத்து பதிவிரதைகள் பட்டியலில் சேரவேண்டும் அல்லவா? இவள் ‘பெய்’ என்றால் மழை பெய்து காவிரி ரொம்ப வேண்டும் இல்லையா? ஆகவே கணவனைக் கைவிடாத அவள், கலையைக் கைவிட்டாள். கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், ‘ஏண்டா நாயே… என்னைக் கல்யாணம் பண்ணும் முன்பும் நான் ஆடிக்கொண்டுதானே இருந்தேன்… அப்போ இதைப் பற்றிப் பேசவில்லையே…?

எனக்கு, என் கலையையும் விரும்புகிற புருஷன் கிடைப்பான். கிடைக்காமல் போனாலும் அக்கறை இல்லை. என் கலை எனக்கு உசத்தி… என்று சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை… நான் அவளிடம் கேட்டேன். தரையைப் பார்த்தாள். கொஞ்சம் கண்ணீர் சிந்தினாள். அப்புறம் ‘என்ன இருந்தாலும் புருஷன் அல்லவா?’ என்றாள்.

இந்த தேசத்தில்தான் தாலி கட்டிவிட்ட ஒரே தகுதியில், கழுதை, குதிரை, மாடு, வௌவ்வால், சிலந்தி, எலி எல்லாம் புருஷர்களாகி விடுகின்றன. கழுத்தை நீட்டிவிட்ட பாவத்துக்காகப் பெண்கள், ‘பதுமை’களாகவே இருக்கிறார்கள்.

ராதா அறிவற்றவள் இல்லை… ஒரு அர்த்தத்தில் அவள் மூடம்தான். காதலின் முடிச்சு, மனசுக்குள் விழும்போதே, பரஸ்பரம் புரிதலில் அவள் ஆர்வம் காட்டி இருக்கவேண்டும். ராதா என்கிற ஸ்த்ரீ, காரசாரமாக வற்றல் குழம்பு வைக்கிறவள் மட்டுமல்ல… குழந்தைத் தொழிற்சாலை மட்டுமல்ல… எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர், சிருஷ்டிகரம் கொண்டவள்.

புரிதல்… பரஸ்பரம் புரிதலும் புரிந்து கொள்ளுதலுமே காதல். மிராசு தண்ணீரிலும் தரையிலும் தாவுகிற தவளை. ராதா, மேலே பறக்க இறக்கைகள் கொண்ட வானம்பாடி. தவளையும் வானம்பாடியும், ஒரு மஞ்சள் கயிற்றாலா இணைய முடியும்?


- பிரபஞ்சன்

16 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

சரியான நாளில் பொருத்தமான பதிவு

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

உடனடி வருகைக்கும் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே.

மணிமேகலா said... [Reply]

காதல் வசப்படும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணர்வுகள் அறிவை மிஞ்சி விடுகின்றன.

திருமணமாகி வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது தான் உண்மை மெல்ல மெல்ல தன்னை உணர்த்த ஆரம்பிக்கும். அதை உணரும் தருணத்தை ‘விதி சிரித்தது’ எனக் கவித்துவப்படுத்தலாம்.

என்ன செய்வது? தாண்டி வர முடியாத ‘இலட்சுமணக் கோடுகள்’.சமூகம், பண்பாடு, பாதுகாப்பு, பொருளாதாரம், குடும்பம் என அதற்குப் பல முகங்கள்.

ஆண்களுக்கு அதனை மொழிபெயர்ப்பது கடினமாக இருக்கலாம்.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

மிக அருமையான கருத்துகள் மணிமேகலா அவர்களே. முதன்மறையாக என் வலைத்தளத்திற்கு வந்திருக்கிறீர்கள். அனுபவங்கள் அறிவை வளர்த்தாலும் அசட்டுத்தனங்களைக் குறைப்பதில்லையாம். அது போல நம்மவர்கள் பட்டுத்திருந்துகிற ஜாதி. கேட்டுத்திருந்துகிற ஜாதி இல்லை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... [Reply]

காதல் உயர்வானது என்பதை விட இயல்பானது என்று சொல்வதுதான் பொருத்தமானது .பிரபஞ்சனின் கூற்று 100/100 உண்மை

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டி.என்.முரளிதரன் அவர்களே.

பழனி. கந்தசாமி said... [Reply]

கல்யாணம் என்பதே பெண்களுக்கு அடிமை விலங்கு என்று ஆகிப்போனது நம் நாட்டில்.

அறிவுறை , அறிவுரை எது சரியென்று தெரியாமல் குழம்புகிறேன்.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி பழனி.கந்தசாமி ஐயா அவர்களே. அறிவுரை என்பதே சரி. தவறுக்கு வருந்துகிறேன். திருத்தி விடுகிறேன். தட்டச்சு செய்யும்போது இதை கவனிக்க முடிவதில்லை. அதன்பிறகு கவனித்திருக்க வேண்டும்.

Bagawanjee KA said... [Reply]

முன்பு இதை நக்கீரனில் படித்ததாய் நினைவு ,காதலர்களுக்கு எப்போதும் பொருந்தும் அறிவுரைகள் !
த ம 1

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருக பகவான்ஜி! இது ஆனந்தவிகடனில் 1999-ல் வெளிவந்தது. இன்றைக்கு இது பொருத்தமாக இருக்குமே என்றுதான் பதிவிட்டேன். வருகைக்கு மிக்க நன்றி.

Kalayarassy G said... [Reply]

“இந்த தேசத்தில்தான் தாலி கட்டிவிட்ட ஒரே தகுதியில், கழுதை, குதிரை, மாடு, வௌவ்வால், சிலந்தி, எலி எல்லாம் புருஷர்களாகி விடுகின்றன. கழுத்தை நீட்டிவிட்ட பாவத்துக்காகப் பெண்கள், ‘பதுமை’களாகவே இருக்கிறார்கள்.” என்று பிரபஞ்சன் கூறுவது முழுக்க முழுக்க உண்மை.
காதலிக்கும் போது உண்மையான முகம் தெரிவதில்லை; பரஸ்பரம் புரிதல் இல்லாமல் வெறும் புற அழகைப் பார்த்துப் பெரும்பாலான காதல் உருவாவதால் தான், திருமணமான ஒரு சில ஆண்டுகளில் மணமுறிவு கேட்டு இவர்கள் தீர்ப்பாயத்தை நாடுகிறார்கள். கிணற்றுத் தவளைக்கும் வானம்பாடிக்கும் திருமணம் நடந்தால் அது எப்படி ஒத்து வரும்?
விகடனில் 1999 ஆம் ஆண்டு வந்தது இன்றைக்கும் மிகவும் பொருத்தமாயிருக்கிறது.
காதலர்தினத்தில் பொருத்தமான கட்டுரையை எடுத்துப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள் கவிப்பிரியன்!

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கலையரசி அவர்களே.

Thulasidharan V Thillaiakathu said... [Reply]

நண்பரே! அருமையான பதிவு! தாமதமாகிவிட்டது இணையப் பிரச்சினையால்...

காதலிக்கும் போது முகத் திரை கிழிவதில்லையே அது மணம் ஆன பிறகு தானே கிழிகின்றது. ஆனால் நம் பெண்கள் இன்னும் முன்னேற வேண்டும். ஏனென்றால் பிடிக்காத மண வாழ்க்கை...பல முரண்கள். அதையெல்லாம், யௌவனப் பருவத்தில் குழந்தை பொறுப்புகள், குடும்பப் பொறுப்புகள் என்பவை புறம் தள்ளி, மனதை ஆக்ரமித்து ஓட வைத்துவிடுகின்றது. குழந்தைகள் வளர்ந்து அவர்கள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டதும், இல்லை குழந்தைகள் இல்லை என்றால், இந்த 45 வயது ஆகும் போதுதான் பல பெண்களுக்குத் தன்னைப் பற்றி நினைக்கத் தோன்றுகின்றது. தனது சுயமரியாதை வெளி வருகின்றது. அதுவரை இழந்தவை மேலிடுகின்றது. மனம் பலவற்றை ஏற்க மறுக்கின்றது. தனது அடையாளம் மறைந்துவிட்டதே என்று தோன்றத் தொடங்குகின்றது....அங்குதான் மன அழற்சி தொடங்குகின்றது.....எத்த்னை அளவுக்கு மீறிய விட்டுக் கொடுத்தல்கள்/காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டாலும் அவை ஒரு நாள் மனதை பிறழ்த்துகின்றது. அன்பினால் செய்யப்படும் விட்டுக் கொடுத்தல்களுக்கும், கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் விட்டுக் கொடுத்தல்களுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாவதுதான் 45 வயதில் பாடாய் படுத்துகின்றது.

எனவே மனம் ஒத்துப் போகாத திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையே மீறி நடந்துவிட்டால், அதை அறியும் போது விலகல் நல்லது....என்பது எங்கள் தாழ்மையான அபிப்ராயம்....

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

காலதாமதமாக வந்தாலும் மிக அருமையாக கருத்திட்டுள்ளீர்கள். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவம் உண்டு. இள வயதில் இருக்கும் கோபதாபங்கள் வயதாக வயதாக நம்மை இனி கவனிக்கப்போவது மனைவியைத் தவிர யாருமில்லை என்கிற பயம் வரும்போதுதான் பணிந்து போக ஆரம்பிக்கிறான். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசிரதன் அவர்களே.

Thulasidharan V Thillaiakathu said... [Reply]

ஆம் ! நண்பரே! ஆண்களுக்கும் உண்டு.....ஆண் மிகவுமே விட்டுக் கொடுக்கின்றான் என்றுதான் சொல்ல வேண்டும். தனக்குப் பிடித்ததைக் கூடச் செய்ய முடியாமல், வெளியில் சொல்ல முடியாமல், குடும்பத்திற்காக பல விட்டுக் கொடுத்தல்கள் என்று ஆணும் தியாகம் செய்யத்தான் செய்கின்றான். அதுவும் பல குடும்பங்களில் மனைவிக்குப் ப்யந்து....உண்மையே நண்பரே!

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

மீண்டும் வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி துளசிதரன் அவர்களே.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!