Tuesday, February 10, 2015

ஒரு நாயகன் உதயமாகிறான்...


டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது. இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர். இன்றைய வெற்றி மூலம் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் இன்னும் அபரிதமாக இருக்குமோ என்றே எண்ண தோன்றுகிறது. இந்த கட்சி வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இன்றைய தேர்தல் வெற்றி மூலம் நாடு முழுவதும் அந்த அதிர்வு பரவி , இது போல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அலை தற்போது எழுந்திருக்கிறது. மாநில வாரியாக ஊழல் செய்தவர்களே, ஆட்சி கட்டிலை பரபரம்பரை, பரம்பரையாக சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு ஆம் ஆத்மி ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றே கூறலாம். 


கெஜ்ரிவால் தலைநகரில் ஆட்சியை பிடித்து இருப்பதால், பிற மாநில அரசியல் கட்சிகளும் இவரது ஆதரவு, தயவை நாடி நிற்கும். இதன் மூலம் அரசியல் உறவுகளை புதுப்பித்து கொள்ளும். இதனால் உதிரி கட்சிகள் பல ஆம் ஆத்மியில் கூட்டு சேர தனது ஆதரவு கரத்தை நீட்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற சூழலை ஆம் ஆத்மி உருவாக்கியுள்ளது.

தமிழகத்திலும் கடந்த 40 ஆண்டு காலமாக ஊழலில் ஊறிப்போனவர்களே ஆட்சி கட்டிலில் இருந்து வந்துள்ளனர். சோடா விற்றவன் முதல் தெருவோரம் வேலை இல்லாமல் திரிந்தவர்கள் எல்லாம் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு சுமோ கார்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. பலரும் கோடிகளில் புரள்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது படித்த இளைஞர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்ற கேள்வி கெஜ்ரிவால் வெற்றி மூலம் எழுகிறது. 

இந்த விழிப்புணர்வு அதிகரிக்கும் போது அரசியல் இன்னும் தூய்மை அடைய வாய்ப்பு இருக்கிறது. சரியான தலைமை, நேர்மையான பார்வைகள் என்பது புதிய இளைஞர்கள் அரசியலுக்கு உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என்பதே அவா. 

டில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றிக்குப் பிறகு உதயக்குமார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்து: "துப்புக்கெட்ட தமிழர்களே, டெல்லியிடம் படியுங்கள் கடுகளவும் அன்போ, நேர்மையோ, பொதுநலமோ இல்லாத அய்யாக்களின், அம்மாக்களின், அலப்பரைகளின் பின்னால் போய், அவர்கள் தரும் இலவசங்களுக்காகக் கையேந்தி, 200 ரூபாய்க்கு ஓட்டை விற்று, உங்களையும் கொச்சைப்படுத்தி, உங்கள் குழந்தைகளையும் காட்டிக்கொடுக்கும் கேவலமானவர்களே...டில்லி மக்களைப் பாருங்கள். 

இனியாவது மூளையும், முதுகெலும்பும் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் நலனுக்கான அரசியலைத் தேடுங்கள்! மக்கள் சொல்வது கேட்கிறதா, பிரதமர் அவர்களே? காங்கிரசுக்காரன் போல மக்கள் விரோதக் கொள்கைகளையும், செயல்பாடுகளையும், திட்டங்களையும் மேற்கொண்டால், அவர்களைப் போலவே வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்! 

உங்களின் அமித் சாவோ, அமெரிக்க பாரக்கோ உங்களைக் காப்பாற்ற முடியாது. எனவே அடிக்கடி உடைமாற்றி, ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கும் அமெரிக்காக்காரனுக்கு சலாம்போட்டு, உலகம் சுற்றுவதை விட்டுவிட்டு, இந்தியர்களுக்காக உருப்படியாக எதையாவது செய்யுங்கள்''. 


சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. தில்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த தில்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை தில்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன

ஒரு நாயகன் உதயமாகியிருக்கிறான். பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

10 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் பயமுறுத்துவதாக உள்ளதே

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

·
-2,00,000 பொது கழிப்பறைகள்.
-20,000 லிட்டர் தண்ணீர் ஒரு மாதத்திற்கு.
-5,000 அரசாங்க பள்ளிகள்.
-5,000 புதிய பேருந்துகள்.
-20 கல்லூரிகள்.
-900 ஆரம்ப சுகாதார மையங்கள்.
-30,000 படுகைகள் டெல்லி மருத்துவமனைகளில்(1000 பேருக்கு 5 படுகை என்ற சர்வதேச கோட்பாடு)
-15,00,000 CCTV காமெராக்கள்.
-47 விரைவு நீதிமன்றங்கள்.
-5000 பேருந்து காவலர்கள்.
-WiFi டெல்லி முழுக்க.
-8 லட்சம் வேலை வாய்ப்புகள்.
-55,000 பணியிடங்களை நிரப்புதல் - 4,000 மருத்துவர்கள் மற்றும் 15,000 செவிலியர்களை நிரந்தரமாக்குதல்.
-அரசாங்க பிணையத்தில் மேற்படிப்பிற்கான கல்விகடன்(குறிப்பு: நிராகரிப்பு இல்லாமல்)
-50% மின்சார கட்டண குறைப்பு.
இதே போல இன்னும் 55 கேஜிரிவாலின் அறிவிப்புகள் உள்ளது, அப்படி இப்படி கூட்டி கழித்தால், ஆம் ஆத்மி தேர்தல் அறிவிப்புகளின் மதிப்பு 12 லட்சம் கோடிகள், டெல்லியின் ஒரு வருடத்திற்கான பட்ஜெட் 36,700 கோடிகள் *5 வருடங்கள் = 1,83,500 கோடிகள் மட்டுமே.
பெய்ஜிங் நகரில் உள்ள CCTV காமெராக்கள் : 4,70,000
லண்டன் நகரில் உள்ள CCTC காமெராக்கள் : 4,20,000
டெல்லியில் மட்டும் 15,00,000 CCTC காமெராக்கள்?
.....பொருங்கையா அரவிந்த் கேஜிரிவாலை "வச்சி செய்யலாம்"....எப்பபாரு அவசரம், என்ன ஒரு குறை தட்டி கேட்க எதிர்கட்சி இல்லை....

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

உண்மைதான் ஜோதிஜி. பாதி பேருக்கு கிடைத்து மீதி பேர் அதிருப்தி அடைந்தால் பிரச்னைதான். மோடி அரசு ஒத்துழைக்குமா என்றும் தெரியவில்லை. எப்படியும் செய்யவேண்டும் என்கிற மனமும் உறுதியும் இருந்தால் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. சாத்தியமாகக் கூடியவற்றைச் சொல்வதும் செய்வதும்தான் புத்திசாலித்தனமானது. ஐந்தாண்டுகளில் செய்ய முடியவில்லை எனில் இன்னொரு ஐந்தாண்டு கேட்பாரோ என்னவோ?!

Bagawanjee KA said... [Reply]

இன்றைய தேவை காங்கிரஸ்,பிஜேபி இல்லாமல் ஒரு மாற்றம் ,மக்கள் அதை செய்து காட்டி விட்டார்கள் !
த ம 4

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

மிகச்சரியாகச் சொன்னீர்கள் பகவான்ஜி. வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

Amudhavan said... [Reply]

ஜோதிஜி சொல்லியிருப்பதுபோல் அபரிமிதமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனாலும், நீங்கள் பதிவின் இறுதியில் சொல்லியுள்ள 'நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை தில்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கின்றன' என்பதைத்தான் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நாயகன் உதயமாகியிருக்கிறான். அவனைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்வதும் மக்களின் கையில்தான் இருக்கிறது என்பதும் முக்காலும் உண்மை.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதவன் ஐயா. இந்த மாதிரி சுனாமி அலை தமிழ்நாட்டில் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? சினிமா மாயையிலிருந்து நம்மவர்கள் மீண்டெழுவது எப்போது?

KILLERGEE Devakottai said... [Reply]

இந்த மாற்றம் இப்பொழுது தேவையே..... பார்ப்போம்.

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தேவகோட்டை கில்லர்ஜி.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!