சனி, 12 ஜூலை, 2014

கள்வன் ஏமாந்தான்?!


சென்னைக்கு சென்ற வாரம் விடுமுறையில் சென்றிருந்தேன். திங்கட் கிழமை பணிக்கு செல்வதற்கு ஏதுவாக ஞாயிற்றுக் கிழமையே நான் திரும்ப வேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட பிற்பகல் 3.30 மணியளவில் நான் இங்கு வந்து சேர்ந்தேன். இரயில் நிலையத்திலிருந்து எனது அறை மிக அருகிலேயே இருந்ததாலும், சுமைகள் அதிகம் இல்லாததாலும் நடந்தே நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். 

சுற்றுச்சுவரில் உள்ள கதவு, வீட்டு மரக்கதவுக்கு வெளியே இருக்கும் இரும்பினாலான கதவு ஆகிய இரண்டு கதவுகளையும் திறந்து மர வாசக்கதவைத் திறந்தேன். ஆனால் பூட்டைத் திறந்து தாழ்ப்பாளை அகற்றிய பின்பும் கதவைத் திறக்க முடியவில்லை.

மழைக்கு சில மரக்கதவுகள் திறக்காமல் முரண்டு பிடிப்பதுண்டுதான். ஆனால் இது கோடைக்காலம். பருவமழை கூட இன்னும் துவங்கவில்லை. பின் ஏன் திறக்க மறுக்கிறது. யோசனையுடனே மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். முடியவில்லை. அது இரட்டைக் கதவு. உட்புறம் இரண்டு கதவுக்கும் தாழ்ப்பாள் வசதி இருந்தாலும் ஒரு பக்கம் மட்டுமே போட்டு வெளிப்பக்கம் பூட்டு போடுவது வழக்கம். பின்புதான் உறைத்தது, உள்பக்கம் இரண்டு கதவுகளுமே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தால்...

பலம் கொண்ட மட்டும் கதவை இடித்துத் தள்ளினேன். கதவு திறந்து கொண்டது. கதவின் பின்பக்கம் அதாவது உட்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்து நான் நெட்டித் தள்ளியதில் பெயர்ந்து கீழே விழுந்து கிடந்தது. வெளியே பூட்டியிருக்கு. உள்ளே எப்படி யார் தாழ்ப்பாள் போட்டிருப்பார்கள் என்ற யோசனையோடு எல்லா அறைகளயும் நோட்டம் விட்டேன். நாங்கள் மூன்று அலுவலக நண்பர்கள் ஒவ்வொரு அறையிலும் தங்கியிருந்தோம். மற்ற இருவர் ஒரியக்காரர்கள் என்பதால் நடு இரவில்தான் வந்து சேர்வார்கள்.

ஒரு நண்பரின் கதவு மட்டும் திறந்து கிடந்தது. வழக்கமாக அவரவர் அறையையும் பூட்டிக்கொண்டு போவது வழக்கம். ஏன் இவரது அறை திறந்து கிடக்கிறது என்று அருகில் சென்று பார்த்தேன். பூட்டு திறக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் தாழ்ப்பாள் பொருத்தப்பட்டிருக்கும் போல்ட், நட் (BOLT and NUT) கழற்றப்பட்டிருந்தது. அறைக்குள்ளே எட்டிப்பார்த்த போதுதான் விபரீதம் புரிந்தது.

ஜன்னலின் வழியே திருடன் நுழைந்திருக்கிறான். இரும்பினால் ஆன ஜன்னலை ஏதோ ஒரு ஆயுதத்தினால் நெம்பி, வளைத்து தனியே கழற்றி எடுத்து வைத்துவிட்டு சாவகாசமாக உள்ளே நுழைந்திருக்கிறான். (ஜன்னல் சிறிய துளைகள் போடப்பட்டு, சின்ன ஸ்குரு ஆணியால் மரச்சன்னலில் பொருத்தப்பட்டிருந்தது).

முதலில் வீட்டு உரிமையாளருக்கு கைப்பேசியின் மூலம் தகவல் தெரிவித்தேன். இரண்டாவதாக எனது நண்பருக்கும் தகவல் தெரிவித்தேன். அவருடைய முக்கியமான பொருட்களைப் பற்றிய தகவலைக் கேட்டேன். அவருடைய சான்றிதழ்கள்தான் முக்கியமானவை. அவைகள் இருக்கிறதா என்று பாருங்கள், மற்றவை பற்றி கவலை இல்லை என்றார். சான்றிதழும், மற்ற பொருட்களும், துணிகளும் அப்படியேதான் இருந்தன. பக்கத்தில் உள்ள மற்றொரு அறையிலும் முக்கியமான பொருட்கள் ஏதுமில்லாததால் அதை அந்த நண்பர் பூட்டவே இல்லை. அங்கும் ஏதும் களவு போன மாதிரி தெரியவில்லை.


அப்புறம்தான் எனது அறையைப் பார்த்தேன். வழக்கமாக எப்போது வெளியூர் சென்றாலும் எனது மடிக்கணிணியை கூடவே எடுத்துச் செல்வது வழக்கம். இந்த முறை எதற்குச்சுமை என்று இங்கேயே விட்டுவிட்டுத்தான் போயிருந்தேன். அவசரத்தேவை என்றால் வீட்டிலுள்ள மேசைக் கணிணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதியே விட்டுச் சென்றிருந்தேன். அது தவிர்த்து எனது அறையிலும் விலை உயர்ந்த பொருட்கள் ஏதுமில்லை.

எனது அறைக்கு நான் போட்டிருந்த பூட்டோ பிரயாணத்தின் போது எடுத்துச் செல்லும் சிறிய ரக பெட்டிகளுக்குப் போடப்படும் சிறிய பூட்டு. பெரிய பூட்டொன்றை சாவியைத் தொலைத்த அவசரத்தில் சமீபத்தில்தான் உடைத்திருந்தேன். இந்தச் சிறிய பூட்டை உடைப்பது மிக எளிது. ஆனாலும் எனது நல்லவேளை போடப்பட்டிருந்த பூட்டு அப்படியே இருந்தது.

கதவைத் திறந்து பார்த்த போது எனது மடிக்கணிணியும் அப்படியே இருந்தது. மனது கொஞ்சம் நிம்மதி ஆயிற்று. ஆயினும் இன்றைய இரவைக் கழிப்பது எப்படி என்ற பயம் வந்துவிட்டது. மறுபடியும் திருடன் வந்துவிட்டால்... 

வர மாட்டான் என்று உள்மனம் சொல்லியது. மற்ற இரண்டு அறைகளிலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தால்தானே எனது அறையை அவன் திறக்காமலேயே போயிருக்கிறான். அதனால் வரமாட்டான் என்ற நம்பிக்கையால் அன்றிரவு நிம்மதியாய் உறங்கிப்போனேன். 

இத்தனை கஷ்டப்பட்டு ஏன் அவன் ஒரு பொருளையும் எடுக்காமல் போனான் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஏதாவது சத்தம் கேட்டு பாதியிலேயே ஓடியிருப்பானோ?!

6 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது… [Reply]

வணக்கம்
கஷ்டப்பட்டு பொருட்கள் வேண்டியதால் ஒன்றும் திருடு போகவில்லை மற்றவர் பணத்தில் வேண்டியிருந்தால் நிச்சயம் திருடு போயிருக்கும் இறைவன் எப்போதும் துணையிருப்பான் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜோதிஜி சொன்னது… [Reply]

அவன் தேடி வந்தது கிடைக்காமல் இருக்கலாம். உயிர் பிழைத்த மடிக்கணிக்கு வாழ்த்துகள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆம் ரூபன், தம்முடைய உண்மையான உழைப்பு என்றுமே வீண் போவதில்லை. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

திருடன் முக்கியமாக பணத்திற்காகத்தான் வந்திருக்க வேண்டும். பொருட்களை எடுத்துச் சென்றால் அதை விற்பது அத்தனை எளிதான காரியம் இல்லை அல்லவா? எப்படியோ என் மடிக்கணிணி தப்பித்தது அதிசயம்தான் ஜோதிஜி!

Unknown சொன்னது… [Reply]

அந்த திருடன் சரியான அப்ரியண்டிஸ் போலிருக்கே ,எதுக்கும் ஜாக்கிரதை !
த ம +1

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி பகவான்ஜி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!