வெள்ளி, 31 ஜனவரி, 2014

எனது சிங்கப்பூர் வாழ்க்கை – ஜெஸிந்தாவின் கடிதம்



அன்புள்ள நண்பருக்கு,
உங்களுடைய கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. உங்கள் கடிதம் மூலம் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொண்டதில் சந்தோஷமே. கடவுளைடைய அருளால் நான் நல்ல படியாக உள்ளேன். தற்போது MAID AGENCY-ல் பணிபுரிகிறேன்

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பணிப்பெண்கள் வேலை செய்கிறார்கள். நம் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலிருந்து பணிப்பெண் வேலைக்காக இங்கு வருகிறார்கள். வேலை இந்தியாவிலிருந்து இப்படி வரும் பணிப்பெண்களை விமானநிலையம் சென்று அழைத்து வருவதும், அழைத்து வந்த பின் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்வதும் என்னுடைய வேலை. மற்ற நேரங்களில் அலுவலகத்தில் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன்.

தங்கியிருப்பது ஏஜன்ஸியின் உரிமையாளரான ஒரு அம்மையார் வீட்டில். எனக்கென்று தனியான அறையும் எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறார்கள். திங்கள் முதல் சனி வரை அலுவலக வேலை. ஞாயிறு விடுமுறை. அன்றுதான் எங்காவது வெளியில் நண்பர்களுடன் செல்லமுடியும். இன்னும் நான்கு மாதங்களில் என்னுடைய வேலை உரிமம் முடிந்து விடுகிறது. மீண்டும் வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

நானும் கூட .டி.. இன்ஸ்ட்ருமென்டல் மெக்கானிக் டிரேடு முடித்திருக்கிறேன். சென்னை கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது நிறுவனத்தின் தொழிளாலர்களின் வேலை நிறுத்தத்தால் பயிற்சியை முழுவதுமாக முடிக்க முடியாமல் போயிற்று. அதனால் வேலை கிடைப்பதும் அரிதாகிவிட்டது. எனவே நான் வெளிநாட்டு வேலைக்கு ஒரு ஏஜன்ஸி மூலமாக முயற்சி செய்து 1992-ல் சிங்கப்பூருக்கு வந்தேன்.

விற்பனை பணிப்பெண் (Sales Girl) வேலை என்று சொல்லித்தான் என்னை சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். ஆனால் சிங்கப்பூர் வந்ததும் என்னை வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாக (House Maid) வேலை செய்யச் சொன்னார்கள். நானும் உங்களைப்போல கலப்புத்திருமணம் செய்து கொண்டவள்தான். என் வீட்டில் உள்ளவர்களுக்கு என் திருமணத்தில் விருப்பம் இல்லை. எப்படியோ பணம் செலவு செய்து வந்துவிட்டோமே என்று கருதி, வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆசையில், வெறியில் இரண்டு வருட வாழ்க்கையை முடித்தேன்.

அப்புறம் நான் எனது திறமையினால் ஒரு அழகு நிலையத்தில் (Lady Fair Beauty) உதவியாளராக (Personal Assistant) வேலக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு எனது கணவருக்கும் சிங்கப்பூரில் வேலைக்கு ஏற்பாடு செய்தேன். மொத்தம் ஒன்றரை லட்சம் செலவு செய்து வரவழைத்தேன். எனது மகளை கவனிக்க ஆள் இல்லாத காரணத்தால் 1996-ல் நான் சென்னை வந்துவிட்டேன். அப்புறம் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குதான் உங்களுக்கு அறிமுகமான எனதருமை கவிதாவைச் சந்தித்தேன்

இதற்கிடையில் எனது கணவரோ அங்கு இரண்டு வருடங்களை முடிக்காமலேயே எல்லாவற்றையும் நஷ்டப்படுத்திவிட்டு சென்னை வந்துவிட்டார். அன்று மட்டும் என் கணவர் வேலையை விட்டு வராமலிருந்திருந்தால் நான் இன்று ஓரளவிற்கு நல்ல நிலைமைக்கு வந்திருப்பேன். விதி யாரை விட்டது. நான் மீண்டும் சென்னை வேலையை விட்டுவிட்டு 1998-ல் சிங்கப்பூர் வந்தேன். என் மகளை கவனிக்கவும் ஆள் இல்லாத சூழ்நிலையில் எனது பக்கத்து வீட்டு அம்மாவிடம்தான் அவளை ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறேன்.

அம்மா, அண்ணன், அண்ணி எல்லோருமே பக்கத்தில்தான் இருக்கிறார்கள். இருந்தும் சொந்தமில்லாத பக்கத்து வீட்டினர்தான் எனது மகளை பார்த்துக்கொள்கிறார்கள். எல்லாமே எனது கணவரின் பொறுப்பற்ற செயல்களினால். சென்னை வந்து சென்றால் நிறைய செலவு ஆகுமென்பதால் வருவதைத் தவிர்த்து ஒரு லட்சம் அனுப்பிவைத்தேன். அந்தப் பணத்தில் இப்போது அவர் ஆட்டோ வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

என் சோகக்கதையைப் பற்றி எழுதிவிட்டேன். இனி சிங்ப்பூரைப் பற்றி எழுதுகிறேன். சிங்கப்பூர் ஒரு செல்வச்செழிப்பு மிக்க நாடு. எல்லா துறையிலும் பெரிய முன்னேற்றம் கண்ட நாடு. உலகத்திலேயே சிறந்த விமான நிலையம் என்ற பெயரை பல வருடங்களாக தக்கவைத்துக் கொண்டிருக்கும் நாடு. அதே மாதிரி சிறந்த அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் கொண்டிருக்கிறது. முப்பது வருடங்களாக திரு லீ குவான்யூ பிரதமராக இருந்தார். தற்போது ஒன்பது வருடங்களாக திரு.கோ அவர்கள் பிரதமராக உள்ளார். 4 மொழிகள் ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. அவை ஆங்கிலம். சீனா, மலாய் மற்றும் தமிழ்.

எங்கு பார்த்தாலும் இந்த நான்கு மொழிகள் காணப்படும். இரயில், பேருந்து எல்லாவற்றிலும் நான்கு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும். வானொலி, தொலைக்காட்சி என்று எடுத்துக்கொண்டால் கூட நான்கு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் இருக்கும். தமிழ் நிகழ்ச்சிகள் பிரைம் 12 என்ற சேனல் வழியாக ஒளிபரப்பாகிறது. நமது இந்திய வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைவிட மிக அருமையான நிகழ்ச்சிகள். பல்வேறு இன மக்கள் வாழும் மிகச்சிறந்த நாடு சிங்கப்பூர். தற்சமயம் திரு.எஸ்.ஆர். நாதன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு அதிலும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

எல்லா வசதியும் கொண்ட வீடுகள், பல மாடிக்கட்டிடங்கள், சாலைகள், கடைத்தொகுதிகள் எல்லாமே மிகவும் சுத்தமாகக் கஆணப்படும். சிறு சிறு குற்றங்களுக்குக்கூட கடுமையான தண்டனை கிடைக்கும். மக்களும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறார்கள். பல்லாயிரகணக்கான வெளிநாட்டவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். இந்தியர்கள் அனைவரும் குட்டி இந்தியா என்றழைக்கப்படும் ‘’லிட்டில் இந்தியா’’ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூடிவிடுவார்கள்

இங்கு வேலைக்கு வரும் இந்தியர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் செலவு செய்துதான் வருகிறார்கள். சிலர் ஏமாற்றப்படுவதும் உண்டு. இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது ஒவ்வொன்றாக அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுகிறேன். இனி உங்களுடைய வேலை விஷயத்திற்கு வருகிறேன். பண விஷயத்தைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். நீங்கள் அத்தனை பணம் செலவு செய்யத் தயாராக இருந்தால் ஒரே மாதத்தில் சிங்கப்பூர் வந்துவிடலாம்.  

நேரிடையாக சில கம்பனிகள் ஆளெடுப்பதும் உண்டு. அப்படி ஏதாவது வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன். மற்றபடி உங்களுடைய தொழில் திறமைக்கு இங்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு

அங்கு உங்கள் மனைவி குழந்தைகளை மிகவும் கேட்டதாகச் சொல்லவும். கடவுளிடம் எல்லா பாரத்தையும் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் கடவுள் அருள்புரிவார் என்ற நம்பிக்கையோடு முயற்சிப்போம்.

மற்றபடி உங்கள் கையெழுத்து அருமையிலும் அருமை. எல்லாவற்றிற்கும் கடவுள் அருள் புரியட்டும் என்ற எண்ணத்தோடு இக் கடிதத்தை முடிக்கிறேன். மீண்டும் உங்கள் பதில் கண்டு.

இப்படிக்கு,
ஜென்ஸி, சிங்கப்பூர்.
நாள்; 11.10.1999