சனி, 10 ஆகஸ்ட், 2013

இறந்தவர்கள் தெய்வத்துக்குச் சமமானவர்களா?



அன்புள்ள அண்ணனுக்கு, தம்பி கோபுவின் கடிதம். இங்கு நானும் குடும்பத்தினரும் நலமே! அதுபோல் உங்கள் நலனை அறிய மிக்க ஆவல். இங்கிருந்து வரும் கடிதங்களால் மட்டுமே உங்களுக்கு அறுதல் கிடைக்கும் என்பதை அறிவேன். இருப்பினும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் என் கடிதம் தாமதப்பட்டு விட்டது. தற்போது அங்குள்ள சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிவிட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

தமிழர்களைத் தவிர யாரும் உடன் பிறந்தவர்களுக்காகவோ, உறவினர்களுக்காகவோ உருகுபவர்கள் இருக்க மாட்டார்கள். என் பணிக்காலத்தில் மலையாளிகள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்த வருத்தத்தை வெளிப்படுத்தி நான் பார்த்த்தில்லை. அதற்கு அவர்கள் கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆறு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு சுமை கூடிப்போனதால் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள நம் தகப்பன் எடுத்த மிகச்சுலபமான வழி பைத்தியக்காரனாகி விட்டது. இறந்தவர்கள் தெய்வத்துக்குச் சமம் என்பார்கள். ஆனால் என்னால் சபிக்காமல் இருக்க முடியவில்லை. அவர் காலத்தில் அரசு வேலை கிடைப்பது கூட எளிதாக இருந்தது. கல்விச் செல்வத்தையாவது நமக்கு அளித்திருந்தால் நகரத்தில் நரகத்தை உணர்ந்திருக்க மாட்டோம்.

இந்த பழிச்சொல்லை நம் பிள்ளைகள் நம்மீது சுமத்தும் நாளும் வெகு தூரத்தில் இல்லை. இதை உணராமலும் இல்லை. தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு இவற்றை தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டாலும் தற்போது LPG எனப்படும் தாராளமயமாக்கல் (Liberalization), உலகமயமாக்கல் (Globalisation), தனியார் மயமாக்கல் (Privatism) போன்றவற்றின் முன் அவைகள் மங்கிப் போய்விட்டன.

அதன் பலனாகத்தான் அர்ப்பணிப்பு உணர்வு இருந்தும் தொழிற்சாலை மூடலால் உங்கள் எதிர்காலமும் கேள்விக்குரியதாகி நிற்கிறது. எல்லாம் நீங்கள் அறிந்தவைதான். 

என்னுடைய வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளது. அதன் பெயர்தான் வியாபாரம் என்றாலும் கடைக்கு அருகிலேயே வணிக வளாகம் தொடங்கப்பட்டுள்ளதால் நாளெல்லாம் வெறுமனே உட்கார்ந்திருக்கும் நிலை. பல்வேறு இடங்களுக்கு விளம்பரம் கண்டும் விண்ணப்பித்து வருகிறேன்.
 

தினேஷ் தீபாவளிக்கு இங்கு வந்து சென்றான். மூர்த்தி மீண்டும் ஒரு முயற்சியாக லக்னோ சென்று தோல்வியில் திரும்பினான். ரமேஷ் கடந்தவாரம் இங்கு வந்து நலம் விசாரித்துச் சென்றான். 
 
அண்ணியும் குழந்தைகளுடன் வந்து சென்றார்கள். குழந்தைகள் படிப்பு விளையாட்டு என கவனம் திரும்பியுள்ளதால் உங்கள் பிரிவின் தாக்கம் அவர்களை ஓரளவிற்கு தற்போது விடுவித்திருக்கிறது.


அண்ணிக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன். நீங்கள் அவர்களைப் பற்றிய கவலையை விலக்கி வைத்து சந்தோஷமாக இருங்கள்.

அங்கு வளைகுடா போருக்கு அமெரிக்கா முயற்சித்து வருவதுதான் கவலை அளிக்கிறது. அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளே சாட்சி. தற்போது குளிருக்கு ஏற்ற உடைகளை வாங்கிக் கொள்ளவும். வீட்டை விட்டுப் பிரிந்திருப்பதன் வேதனையை உணர்ந்தவன் என்பதால் என்னுள் அவ்வளவு பாதிப்பு இராது.

வட இந்தியாவில் நான் பணிபுரிந்த போதெல்லாம் பிரிவின் துயரத்தை விட அந்தக் கட்டுப்பாடுகள், விரும்பிய உணவு, உடை போன்றவற்றை உபயோகிக்கத் தடை, ஞாயிறு மட்டுமே 3 மணி நேரம் வெளியே செல்லக்கூடிய அனுமதி, உறக்கமின்மை, உடலை வருத்தும் பயிற்சிகள் போன்றவைகளால் எப்போது வீட்டிற்குச் செல்வோம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது.

இதில் உங்கள் பணி சற்றே மாறுபட்டிருக்கும். அங்கு பங்களாதேஷ் ஆட்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிய வருவதால் இந்தியர்களுக்கு பாதிப்பு என்று எழுதியிருந்தீர்கள். என்ன செய்வது? சென்னையை விட ஒரு படி மேல் என்ற நிலையில் தான் மனதை தேற்றிக் கொள்ளவேண்டும். கிடைக்கும் நேரத்தில் தினம் ஒரு மணி நேரமாவது பொழுது போக்கிற்கு செலவிடுங்கள். மொழி அறிதலுக்கு முக்கியத்துவம் அளித்தால் பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்டபடி எந்த எழுத்துத் திறனும் இல்லை. இந்த கணிணி யுகத்தில் gழுத்துப் பணியும் இலக்கியமும் வேலையற்றவர்களின் வீண் முயற்சிகள் என வேதமாகப் பேசப்படுகிறது. யதார்த்தமும் அதுதான். விரக்தியின் போதுதான் எவருக்குமே தத்துவார்த்தமான வார்த்தைகள் வெளிப்படும். ஒருவேளை என் கடிதத்தில் அதன் சாயல் இருந்திருக்கலாம்.

தவிர, இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான ரிலயன்ஸ் தற்போது தகவல் தொடர்புத் துறையில் 25 ஆயிரம் கோடி முதலீட்டில் கால் பதித்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் முன்னாள் இராணுவ வீரர்கள் தேவை என விளம்பரம் வந்துள்ளது. அதற்குதான் முயற்சித்து வருகிறேன்.

உங்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து கிடைக்கப் பெற்றேன். அக மகிழ்ந்தேன். தவிர அங்கு உங்களுக்கு தொலைக்காட்சி வசதி செய்து தரப்பட்டுள்ளதா? வீடியோ பிளேயரில் பார்க்க தமிழ்ப்படங்கள் கிடைக்கிறதா? இனி அடிக்கடி கடிதம் எழுதுகிறேன். தற்போது கனவில் இருக்கும் ஒரு வருடம் கரைந்து நனவில் வர நானும் நாளும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் உங்கள் தம்பி.
கோபு.

2 கருத்துகள்:

ezhil சொன்னது… [Reply]

தலைப்பும் ,பதிவும் முழுதாக ஒன்றா விட்டாலும் இன்றைய சாதாரண இளைஞனின் மனப்புழுக்கத்தை உணர்த்துவதாக அமைந்தது.....

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

எழில் அவர்களே! தலைப்பு பொருந்தவில்லை என்பதை நானும் உணர்கிறேன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!