Friday, August 2, 2013

வட ஆர்க்காடு (வேலூர்) மாவட்டம் - தொடர் பதிவுவேலூர் பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான் ஆகியோர் வேலூரை ஆண்டுள்ளனர். 1606-1672 விஜயநகர பேரரசின் காலத்தில் வேலூர் நகரம் அவர்களின் தலைமையிடமாக செயல்பட்டது. 17- ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின் போது வேலூர்க் கோட்டை சிறந்த, உறுதியான படை அரணாக விளங்கியது. 


தலைநகரை உருவாக்குவதிலும் அரசுகளை உருவாக்குவதிலும் இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாக தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தென் ஆற்காடு, வட ஆற்காடு பகுதிகள் 1810-ம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சி இறுதியில் வெளியிடப்பட்ட அரசியல் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. 


1908-ல் இந்த பகுதிகள் தென் ஆற்காடு, வட ஆற்காடு என இரண்டு மாவட்டங்களாக இருந்தது. தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் பகுதி முதலில் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது. இந்த பகுதி ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ மையமாக இருந்தது. 1911ம் ஆண்டில் வேலூர், வட ஆற்காட்டின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.


பிரிட்டன் ஆட்சிக் காலத்திலிருந்து வடார்க்காடு மாவட்டமாக இருந்த இந்த மாவட்டம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலகட்டத்தில் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் எம்.ஜி.ஆர் மறைந்துவிட 1989-ல் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வேலூரை மையமாக வைத்து ஒரு மாவட்டமாகவும், திருவண்ணாமலையை மையமாக வைத்து ஒரு மாவட்டமாகவும் பிரித்தார்.


வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டம் என்பதால் அவர்களின் தயவிற்ககாவோ என்னவோ ஏதோ ஒரு காலத்தில் இப் பகுதியை ஆண்ட சம்புவரையர் என்ற அரசனின் பெயரை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வைத்தார். வேலூரை மையமாக வைத்த பகுதிக்கு வடார்க்காடு அம்பேத்கர் மாவட்டம் எனவும் பெயர் வைத்தார்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு இந்தப் பெயர் பிடிக்கவேயில்லை. அம்பேத்கர் மாபெரும் சட்ட மேதைதான். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர்தான். ஒடுக்கப்பட்டவர்களின் ஒப்பற்ற தலைவர்தான். இருப்பினும் அவருக்கு சிறப்பு செய்ய எத்தனையோ வழிகள் இருக்கும் போது இப்படி மாவட்டங்களுக்கு பெயர் வைக்கிற இந்த முறை எனக்கு பிடிக்கவேயில்லை.


செங்கல்பட்டு (காஞ்சிபுரம்) மாவட்டம் கூட ‘செங்கை அண்ணா வாகவும், ‘செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டமாகவும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவாலும், கலைஞராலும் மாவட்டப் பெயர்கள் பந்தாட, ஆரம்பித்து வைத்த கருணாநிதியே அதற்கு 1996-ல் முற்றுப் புள்ளியும் வைத்தார். அதன் பின்னரே வேலூர் மாவட்டமாக நிலை பெற்றது. ஏனோ எனக்கும் வேலூர் மாவட்டம் எனபதே பிடித்திருந்தது. 


வெள்ளையனை எதிர்த்து முதன் முதலில் சிப்பாய்க் கலகம் வெடித்தது இந்த வேலூரில்தான். உலகிலேயே தரையில் அமையப் பெற்ற கோட்டைகளில் இன்னு(று)ம் சிதிலமடையாமல், அழகு குறையாமல் இருப்பது இந்த வேலூர்க் கோட்டைதான்.


தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரியதும், புகழ் பெற்றதும், ஐடா ஸ்கடர் அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்டதுமான கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியும் இங்குதான் இருக்கிறது. (எங்கள் உறவுகளில் யாருக்கு என்ன நேர்ந்தாலும் உடனடியாக இங்குதான் சிகிச்சைக்குச் செல்வது வழக்கம்). அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் அப்போதெல்லாம் சிறையில் அடைக்கப்படுவது இந்த வேலூர் சிறைச்சாலையில்தான்.


இன்னொரு சிறப்பும் இந்த வேலூருக்கு உண்டு. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமான  வெயில் கொளுத்தும் ஊரும் இதுதான். ஆனால் வாழ்வாதாரம் என்று பார்த்தால் விவசாயத்தைத் தவிர ஒன்றுமில்லை. தொழில்கள் என்று சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. இராணிப்பேட்டையில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா இருந்தும் பாரத் மிகு மின் நிறுவனத்தைத் தவிர (BHEL) வேறு பெரிய நிறுவனங்கள் இல்லை.

கொஞ்சம் பக்கத்தில் என்று பார்த்தால் குடியேற்றம் நகரம் ‘தீப்பெட்டி’ தொழிற்சாலைகள் மிகுந்த நகரம். அப்புறம் வாணியம்பாடி, ஆம்பூர் நகரங்கள் தோல் தொழிற்சாலைகள் மிகுந்தவை. மாநிலத் தலைநகர் சென்னை மிக அருகில் (சுமார் 120 கி.மீ.) இருப்பதாலும், மற்றொரு மாநகரமான ‘பெங்களூர்’ வேலூரிலிருந்து சுமார் 210 கி.மீ. தொலைவில் இருப்பதாலும் பிழைப்பிற்காக இந்நகரங்களுக்குச் சென்று பணிபுரிவோர் ஏராளம்.


நான் இருப்பது வேலூரிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் ஒரு சின்ன கிராமத்தில். ஆனாலும் நகரத்துக்கும் எனக்குமான தொடர்பு அதிகம். எந்த தேவைக்கென்றாலும் இங்குதான் வந்தாக வேண்டும். மற்றொருமொரு சிறிய நகரம் ஆர்க்காடு. (ஆற்காடு – ஆர்க்காடு இதில் எது சரி என்று தமிழறிஞர்கள் சொன்னால் உதவியாய் இருக்கும்) தினமணி நாளிதழ் ஆர்க்காடு என்றே குறிப்பிடுகிறது. இந்த ஆர்க்காட்டிற்கும் வேலூருக்கும் மையத்தில் அமைந்திருக்கிறது எனது ஊர். பேருந்து பிடித்தால் அடுத்த அரை மணி நேரத்தில் இந்த இரண்டு நகரங்களில் ஏதாவது ஒன்றில் இறங்கலாம்.


சின்ன வயசில் வேலூருக்குப் போகும் வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவு. ஆனால் குடியாத்தம் (குடியேற்றம்) என்ற மற்றொரு நகரத்தில் எனது பாட்டி வீடு இருந்ததால் பள்ளிக்கூட விடுமுறையான ‘ஏப்ரல், ‘மே மாதங்களில் முழுவதும் அங்குதான் வாசம். அப்படி குடியாத்ததிற்கு போகும் போது வேலூருக்குப் போய் அங்கிருந்துதான் பேருந்து பிடிக்க வேண்டும். அதுதான் எனக்கும் வேலூருக்குமான முதல் அறிமுகம்.

வேலூரைப்பற்றிய சிறப்புகள் பல இருந்தாலும் கடந்த பதிவில் (வேலூர் மாவட்டம்) ஒரு நண்பர் பின்னூட்டமிட்டதைப் போல இந்த நகரைப் பற்றிய விமர்சனம் என்ன தெரியுமா?...

அரசன் இல்லாத கோட்டை, கடவுள் இல்லாத கோயில், அதிகாரம் இல்லாத காவலர்கள் (காவலர் பயிற்சிப்பள்ளி), தண்ணீர் இல்லாத பாலாறு....

6 comments:

MANO நாஞ்சில் மனோ said... [Reply]

வேலூரைப் பற்றி அறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி...!

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி மனோ!

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

கோரிக்கையை செயலாக்கத்திற்கு கொண்டு வந்தமைக்கு என் நன்றி. நிறைய தகவல்களை
எதிர்பார்க்கின்றேன். விக்கிபீடியா தகவலாக இல்லாமல் அனுபவ ரீதியாக தகவல்களோடு கொண்டு வாருங்கள்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி! உங்கள் கோரிக்கையை எப்போதோ செயலாக்கிவிட்டேன். இது வேலூரைப் பற்றிய இரண்டாவது பதிவு. அனுபவரீதியான தகவல்களையே கொடுக்க முயற்சிக்கிறேன். தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி!

ஊரான் said... [Reply]

"அனுபவ ரீதியாக தகவல்களோடு கொண்டு வாருங்கள்!"

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தக் காடுகளில் சிறந்ததைத் தேர்வு செய்ய நடுவர்களையும் தாண்டி சிறப்பு வல்லுனர்களை நாடினாலும் போட்டி மிகக் கடுமையானது என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்வதே சாலச் சிறந்தது. இன்றைய நிலவரப்படி எட்டுத் திக்கும் நாற்றமடித்து பயணிகளை திக்கு முக்காடச் செய்யும் வேலூர் பேருந்து நிலையக் காடுதான் தமிழகத்தின் முன்னணி மூத்திரக் காடாகத் திகழ்வதாக பயணிகள் கருதுகிறார்கள். சுவாசச் காற்றை நுரையீரலுக்குள் அடைத்து வைக்கும் மூச்சுப் பயிற்சி கலையை கற்க வேண்டுமா? ஒரு முறை வேலூர் மூத்திரக்காட்டிற்கு விஜயம் செய்யுங்கள். ஈஷா யோகிகளைத் தேடி நீங்கள் வெள்ளியங்கிரி போக வேண்டிய அவசியமிருக்காது.
மூத்திரக்காடு!
http://www.hooraan.blogspot.com/2013/08/blog-post.html

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

ஊரான் அவர்களே வருக. ரொம்ப மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மற்ற பேருந்து நிலையங்களை ஒப்பிட்டுத்தான் சொல்கிறீர்களா? இருந்தாலும் இது பெரிய விருதுதான். அதுவும் தகுதிக்கு மீறிய விருது!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!