வியாழன், 20 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது….ஏ.வி.எம். சரவணன்

(எம்.ஜி.ஆர். பற்றிய தொடர்)


திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு நாள் அடையாறிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூஷன் மாஸ்டராக இருந்த திரு.ஜே. சந்தானகிருஷ்ணன் அவர்களோடு போயிருந்தேன். எம்ஜி.சக்ரபாணி அவர்களின் குமாரர் எம்.சி.ராமமூர்த்திக்கும் இவர் தான் ஆசிரியர்.

இங்கேதான் எம்.சி.ராமமூர்த்தியின் வீடு இருக்கிறது. அவனையும் பார்த்துவிட்டுப் போகலாம் வாஎன்று என்னை எம்.ஜி.சக்ரபாணியின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

திரு. எம்.ஜி.ஆர். அப்போது தனது சகோதரருடன் அடையாறு காந்தி நகரில் வசித்து வந்தார். நாங்கள் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த அறைக்குள் திடீரென எம்.ஜி.ஆர். வந்தார். அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

பொன்னிற மேனி, திறந்த மார்பு, இடுப்பில் வேஷ்டி. கருகருவென அடர்ந்து வளர்ந்திருந்த முடியை ஒரு துவாலையால் துவட்டியபடி வந்தார் அவர். பையன் யார்?’ என்று என் ஆசிரியரிடம் கேட்டார். அவர் விபரம் சொன்னார். சொன்னதும் நன்றாகப் படிக்கிறாயா? என்று கேட்டார்.

என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.

சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.

எனவே முதன் முதலாக அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.

அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணேஎன்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.

தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.

அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். அன்பே வா இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.

‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.

இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம்  நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்  என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.

இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார். 


முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.                                                                                                                    
 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

மக்கள் மனதில் என்றும் முதலாளி தான்...

ஜோதிஜி சொன்னது… [Reply]

செட்டியார்களின் வளர்ச்சிக்கு வீழாத தன்மைக்கும் முக்கிய காரணம் அடக்கம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் ஜோதிஜி அவர்களே! அந்த பணிவும் அடக்கமும் இருந்ததனால்தான் அவர்களால் கடைசிவரை கோலோச்ச முடிந்தது.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!