கூடங்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடங்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 மே, 2014

கூடங்குளம் - ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’


கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் பணி செய்தபோது ‘தினமணி’ நாளிதழில் வாசகர் கருத்துக்கள் பகுதியில் நான் எழுதிய விமர்சனம்!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 13 ஆயிரத்து, 615 கோடி ரூபாய் செலவில், 2,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக இதன் பணிகள் நடந்து, இன்னும் ஒரு மாதத்தில் மின் உற்பத்தி துவங்கும் நிலைக்கு வந்துள்ளது.

கடந்த ஆட்சியின்போது யாருமே கவனிக்கப்படாமலிருந்த இப்பிரச்னை ஜப்பானில் ஏற்பட்ட ‘சுனாமி’யும் அதன் பாதிப்பால் அங்குள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துக்களும் யோசிக்க வைத்திருக்கின்றன என்பதே உண்மை. இது ஏதோ இந்த ஆட்சி வந்தபின்தான் எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்ற வதந்தியில் உண்மை இல்லை. வெகுநாளாக புகைந்து கொண்டிருந்த விவகாரம் இப்போது விசுவரூபம் எடுத்திருக்கிறது.

தவிர்க்க முடியாத மின் பற்றாக் குறையினால் மத்திய அரசின் முடிவை மாநில அரசு ஆதரித்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு இதைக் கொஞ்சம் அடக்கி வாசிக்க எண்ணிய மாநில அரசு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த எண்ணி ஒரு குழுவை அமைத்து புதுதில்லிக்கு அனுப்பி ஒரு சிறிய நாடகத்தை அரங்கேற்றியது. 

இந்தக்குழு தில்லியிருந்து திரும்பும் முன்பே கூடங்குளம் அணுமின்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டே தீரும் என்று பிரதமர் மன்மோகன்சிங் பேட்டியளித்தார். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றுதான் கூறுகிறார்களே தவிர, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யாருமே வாய் திறப்பதில்லை.


இந்தக் கூடங்குளம் அணுஉலைத்திட்டம் தொடங்கப்பட்டபோது ‘தினமணி’ நாளிதழில் 21.12.1988 அன்று ஒரு தலையங்கம் வெளியானது. இந்தத் தலையங்கத்தை ஒட்டி ‘வாசகர் கடிதங்கள்’ பகுதியில் பலரின் கருத்துக்களும் வெளிவந்தது. 05.01.1989 அன்று வெளியான வாசகர் கடிதம் பகுதியில் எனது கருத்தும் வெளிவந்தது. அப்போது நான் பெங்களூரில் பணி செய்து கொண்டிருந்தேன்.

உங்கள் பார்வைக்காகவும் எனது கடந்தகால நினைவுகளை மீட்டெடுக்கும் நிகழ்வாகவும் இதை இங்கே பதிவாக்கியிருக்கிறேன்.

'செவிடன் காதில் ஊதிய சங்கு'


தலையங்கத்தில் கண்டுள்ளபடி காந்தி காட்டிய வழியில் சாத்வீகப் போராட்டம் ஒன்றுதான் வழி. இக்கருத்தை சுற்றுச்சூழல் நிபுணர் சுந்தர்லால் பகுகுணா முன்பே கூறினார். இவரை இதுவரை சமுதாய நலனில் அக்கரை காட்டும் அமைப்புகள் சந்தித்தனவா என்பது கேள்விக்குறியே! மேலும் நெல்லை மற்றும் குமரி மாவட்ட மக்கள் இன்னும் இந்த அணுஉலையினால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை.


அதேபோல் கர்நாடகத்தில் அமையவிருக்கும் 'கைகா' அணுமின் நிலையத்திற்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்காதது அந்த மாநில மக்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. அணுத்துறைத் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் மைசூரில் பேசும்போது, நான் ‘பழைய மைசூர்க்காரன்’, உங்களுக்குத் துரோகம் செய்வேனா என்று அரசியல்வாதியைப் போல் பேசியிருக்கிறார். அவரே பெங்களூரில் நடந்த பயிலரங்கத்தில், அணுஉலை விபத்து உண்டானால் எத்தனை கிலோமீட்டருக்கு மக்கள் வெளியேற வேண்டும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்குத் தெளிவான பதில் தரவில்லை.

உலகில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் தங்கள் நாட்டில் அணு உலைகளினால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து 1980 முதல் அணுஉலைக் கொள்கையை மாற்றிக் கொண்டு வருகின்றன என்ற செய்தி இந்திய விஞ்ஞானிகளை எட்டாமல் இருக்கின்றதா? இல்லை காதில் போட்டுக்கொள்ளவில்லையா?

சுற்றுப்புறச் சூழலுக்குக் காடுகள் மிகப்பெரிய அளவில் நமக்கு உதவுகின்றன. இக்காடுகளை அழிப்பதே சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. அதை அழித்து (சுமார் 1,500 ஹெக்டேர்) கைகா அணுமின் நிலையம் அமைத்தால்... நினைக்கவே பயமாய் இருக்கிறது.

முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் பெங்களூர் பயிலரங்கத்தில் பேசும்போது, அணு மின்நிலையங்கள் மீது ‘பர்தா’ போட்டது போல அணுசக்திச் சட்டம், தகவல்கள் வெளியாவதைத் தடுக்கிறது. தேவையான விவரங்களை வெளிவிடாத போது விவாதங்களால் என்ன பயன் என்று கேட்டார். எனவே விவாதத்தை விடுத்து மக்கள் சாத்வீகப் போராட்டதில் இறங்குவது வேறு வழியில்லாமையால் அல்ல; இதுதான் சிறந்த வழி என்பதால்தான்.
-         
           எம். ஞானசேகரன்,
பெங்களூர் – 57. 
21.12.1988

வியாழன், 14 பிப்ரவரி, 2013

அபாயத்தின் ஓசைகள்



கூடங்குளம் ஒரு முடிவுறாத போராட்டமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு எதையுமே கண்டுகொள்ளவில்லை. மாநில அரசோ மௌனம் காக்கிறது. இதில் பொய்யான தகவல்கள்வேறு பரப்பப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கிவிட்டால் மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகம் மாறிவிடுமாம்?! இந்த படித்த முட்டாள்களை என்னவென்று சொல்வது? 

அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயத்திற்காக நாட்டையே அடகு வைக்கிறார்கள். ஆனால் இந்த படித்த மேதாவிகள் எதற்காக இப்படி இதற்கெல்லாம் ஆதரவளிக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. மேலோட்டமாக அல்லது அரசுக்கு ஜால்ரா போடும் பத்திரிகைகளின் செய்திகளைப் படித்துவிட்டுத்தான் இந்த அரைவேக்காடுகள் அவசரகதியில் உளறுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
ஆனால் அணு உலைகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமலேயே பேசுகிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம். கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் கூட கருத்தில் கொள்ளாமல், பாதுகாப்பு பற்றிய எந்தக்கேள்வியையுமே எழுப்பாமல் பல தலைமுறைகளை காவு வாங்க இவர்கள் ஆயத்தமாவது எதனால்?.... வெறும் கட்சி விசுவாசம்! தாம் சார்ந்த அரசியல்கட்சிகளின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கு இங்கு மட்டுமே சாத்தியம்!

கல்பாக்கத்திற்கும், தாராப்பூருக்கும் என்ன கேடு வந்துவிட்டது என்பது இவர்களின் கேள்வியாக இருக்கக்கூடும். கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985 ல் இரு 220MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சிலகாலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW  ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது.

அணு உலை தொடங்கியது முதல் கடலில் கொட்டப்படும் அதன் கழிவுகளால் அந்தப்பகுதிகளில் தொடர் பிரச்னை ஆரம்பமானது. இரண்டு உலைகளின் கழிவுகள் அந்தப்பகுதியின் கடல் வெப்பத்தை 8 டிகிரி அதிகரித்தது. இதனால் மீன்வளம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நாம் உண்ணக்கூடிய மீன் வகைகளான ராட்டு, சிங்கராட்டு, நண்டு வகைகள் அழிந்து, நட்சத்திர மீன்களைப் போன்ற வகைகள் பெருகின. மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்போது அவர்கள் மீது தெரிக்கும் கடல் நீரால் உடல் முழுவதும் அரிப்புகளும் வெடிப்புகளும் மிகக் கொடிய அளவில் உண்டாகிறது. இவை அணு உலைக்கழிவுகளின் விளைவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
 அங்கு வசிக்கும் மருத்துவர் புகழேந்தி சுகாதாரம், உடல்நலம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு கதிரியக்கத்தின் பாதிப்புகளுக்கு எப்படி உலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை, அடிப்படைத் தரவுகள் ஆய்வுகளுடன் நிறுவுகிறது. ஆனால் அவரது வாதங்களை, ஆய்வுகளை கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் எப்பொழுதும் அலட்சியப்பட்டுத்தியே வந்துள்ளது. கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

2004 சுனாமியின் பொழுதும் கல்பாக்கத்தில் பல ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன. அணு உலையின் சுற்றுச்சுவர் அடித்துச்செல்லப்பட்டது. சுனாமி தாக்கியதில் அங்கு இருக்கும் தொலைபேசி மையம் வெள்ளத்தில் மூழ்கி மொத்த தொலைத்தொடர்பும் ஸ்தம்பித்தது. அன்று தண்ணீர் இன்றி, மின்சாரம் இன்றி, தொலைத்தொடர்புகள் இன்றி ஒரு துண்டிக்கப்பட்ட நிலமாக அது காட்சியளித்தது. அப்போது 65 முதல் 80 பேர் வரை அடித்துச்செல்லப்படதாகத் தகவல்கள் வெளியாயின. 

கல்பாக்கம் அணு உலை கட்டும்போது சுனாமி அலைகளின் அபாயங்கள் கணக்கில் எடுக்கப்படதா என்ற கேள்விக்கு, இந்திரா காந்தி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். L.V. கிருஷ்ணன் அவர்களிடம் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் தந்த பதில்…. இல்லை. சுனாமி அலைகள் சாரந்து எந்த தற்காப்பும் அங்கு இல்லை. இந்தியாவில் எவரும் சுனாமி அலைகள் வந்து நம் கரைகளைத் தாக்கும் என்று கற்பனை செய்துகூட பார்த்திருக்கவில்லை. புயல் மட்டுமே கணக்கில் எடுக்கப்படது. அதுவம் 6 மீட்டர் அலைகள்தான் அதன் கணக்கு, என்றார்.

ஆனால் நடந்தது என்ன? நாடே அறியும்! இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அரசின் உதவிகளைப் பெறும் எல்லா விஞ்சானிகளும் ஒன்றுபோல அணுஉலையை ஆதரிக்கிறார்கள். மக்கள் சார்ந்த விஞ்சானிகள் அனைவரும் அணு உலையை தொடர்ந்து எதிர்க்கிறார்கள்.  
இன்று நாட்டின் மின்சரத்தேவைகளில் சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% பெறுகிறோம். அதே வேளையில் அணு உலைகளில் இருந்து 2.36% மட்டுமே பெறுகிறோம். அப்படி இருக்க, எப்படி இங்குள்ள நடுத்தர வர்க்கத்திற்க்கு அணுவின் மேல் அத்தனை பாசமும், சூரிய ஒளி, காற்றாலை மதிப்பற்ற ஒருவித நையாண்டியும் உருவானது. உலக அளவில் இந்த அணுத்துறைதான் சூரிய ஒளி மற்றம் காற்றாலை சார்ந்த ஆய்வுகளை முடக்கிவைத்துள்ளது.

எப்படி பெட்ரோலிய நிறுவனங்கள் மாற்று எரிபொருள் அல்லது ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் சார்ந்த அனைத்து ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் முடக்கிவைத்துள்ளதோ அதே பாணிதான் இங்கும் செயல்படுகிறது. இதுவரை எல்லா சூரிய ஒளி நிறுவனங்களுக்கும் வங்கிகள் தொழில் முறையாகத்தான் கடன்கள் வழங்குகின்றன. ஆனால் இந்த வெள்ளை யானை கடந்த 65 ஆண்டுகளாக நம் வரிப்பணத்தை எத்தனை லட்சம் கோடிகள் தின்று செரித்துள்ளது என்கிற கணக்குகளை அரசு முன்வைக்குமா?