ஞாயிறு, 20 ஜனவரி, 2013

எம்.ஜி.ஆர். 1948 ல் தன் ரசிகனுக்கு எழுதிய கடிதம்!

எம்.ஜி.ஆரின் மருமகன் மயிலை விஜயகுமார் (விஜயன்), எம்.ஜி.ஆர். பவளவிழா நினைவுமலர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பொது மக்களிடமிருந்து அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், அவரைப் பற்றிய துணுக்குகளையும் பெறுவதற்காக ஒரு விளம்பரம் செய்தார். அப்போது அப்படி வந்த பல நினைவுப் பொருட்களில் 1948 ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் தன் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் ஒன்று.
பி.ஜி.எம். செல்வராஜ் என்கிற நண்பருக்கு எம்.ஜி.ஆர். எழுதிய பதில் கடிதம் இது. அப்போது அவர் எழுதிய அந்தக் கடிதம், இப்போதும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவர்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ளதுதான் ஆச்சர்யம்!

அந்தக் கடிதம் கீழே!
எம்.ஜி.ராம்சந்தர்.                                                   கேம்ப்; கோவை.                           நாள்; 19.02.1948


அன்புள்ள சகோதரர் பி.ஜி.எம்.எஸ். அவர்கட்கு, நலம். நலங்காண ஆவல். கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி.


தங்களை இதற்குமுன் சந்தித்ததுண்டா என்று நன்கு நினைவில்லை. ஆனால் கடிதத்தில் உள்ள தங்கள் முகம் மட்டும் அறிமுகமானதாகத்தான் தெரிகிறது. அது எப்படியோ இருக்கட்டும். என் மனதிலுள்ள சில விஷயங்களை உங்களுக்கு கட்டாயம் எழுத வேண்டியிருப்பதற்காக உண்மையில் வருத்தமேயாயினும் தங்கள் கடிதத்திலிருந்து எனக்குண்டான கடமை என்னை எழுதும்படி தைர்யப் படுத்துகிறது.


சோதரா! தங்களுடைய கடிதத்திலிருந்து தங்களுடைய வாழ்க்கை கௌரவத்துடன் மனிதனாக வாழத்தகுதியுள்ள சௌகர்யங்களுடன் கூடிய ஒன்றாக இருக்குமென்று தெரிகிறது.


முதலாவதாக, சினிமாவிலிருக்கும் எல்லா நடிக நடிகையர்களும் உயர்வானவர்கள், நிறைய பண வசதியுள்ளவர்கள், கருணையுள்ளவர்கள், சுயநலமற்றவர்கள் என்று எந்த நிமிடத்திலும் தவறிக்கூட நினைத்துவிட, நம்பிவிடக் கூடாதென்பது என் எச்சரிக்கை!


அன்பரே! தாங்கள் சினிமாவில் நடிக்கவேண்டுமென்று விரும்புவதற்கு அடிப்படையான காரணங்கள் என்னென்ன? பணத்திற்கா? புகழிற்கா?? கலைக்கா???


பணத்தை உத்தேசித்தாயின் தற்கால (தமிழ்) சினிமா உலகத்தில் மிகச்சிலரைத் தவிர மற்ற எல்லோரும் பரிதாபப்படத்தக்க நிலையில்தான் பணத்தைப் பெறுகிறார்கள் என்பதை என் அனுபவத்திலிருந்து நன்கு அறிந்திருப்பதால் அதை உத்தேசித்து சினிமாவில் சேர விரும்புவது சரியல்ல.


புகழை உத்தேசித்தாயின் எந்தப் புதிய நடிகனும் சீக்கரத்தில் (அதாவது சில விசித்திரமான காரணங்களால் அல்லாமல்) புகழடைந்ததில்லை. என் சரித்திர அனுபவம் (நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து குறைந்தது 12 வருடங்களாகின்றன) உங்களுக்கு பாடத் தெரிந்திருப்பின் ஒருவேளை சீக்கிரத்தில் புகழடையலாம். (ஆனால் அதுவும் இரண்டாம் பட்சம்தான்).


கலையை உத்தேசித்தாயின் எப்படிப்பட்டது கலையென்று இதுவரை தீர்மாணிக்கப்படவே இல்லை. ஏனெனில் சில படங்கள் பாட்டிற்காகவும், சில சண்டைக்காகவும், சில தந்திரக்காட்சிகள் நிறைந்ததற்காகவும் இன்னும் இப்படிப்பட வெவ்வேறு காரணங்களைக் கொண்டும் நன்கு ஓடுகிறது. ஆனால் யாரும் இம்மாதிரி காரணங்களைக்கொண்டு வெற்றியடையும் படங்களை கலை நுணுக்கம் வாய்ந்த படங்கள் என்று ஒத்துக்கொள்வதே இல்லை.


சினிமாவில் சொல்லுவது போல் டெக்னிக் நன்றாக இருக்கிறது என்று சொல்லப்பட்ட, நினைக்கப்பட்ட படங்கள் பெட்டியில் தூங்குகிறது. இதற்குக் காரணம் மக்களின் ருசி கோளாரா? அல்லது எடுக்கப்படும் (கலையென்று சொல்லும்) முறையின் கோளாரா? இவ்விரண்டில் எந்த முடிவுக்கு வந்தாலும் தற்சமயம் நம்மால் கலையைக் காணமுடிவதில்லை.


ஆக, நான் நினைத்த காரணங்கள் எதுவும் எந்த விதத்திலும் தங்கள் சினிமா பிரவேசத்துக்குப் பொருத்தமே இல்லை. ஆனால் நான் எந்த விதத்தில் தங்களுக்கு உதவமுடியுமென்றால் தங்களுக்கு தெரிந்த பணவசதியுள்ளவர்கள் படமெடுக்க முயன்றால் தங்களை நடிக்க வைக்க, தாங்கள் வெற்றியடைய நான் உதவியாயிருக்க முடியும்.


ஆனால் தாங்கள் கதையைத் தேர்ந்தெடுக்குமுன் தங்களுக்கு பொருத்தமான வேடமுள்ள கதைதானா என்பதை நன்கு ஆலோசித்து தீர்மாணித்த பிறகே கதையை முடிவு செய்ய வேண்டும். நடிப்பென்பது ஓரளவு ஒருவர் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான் என்றாலும் அது இயற்கையாகவே ஒவ்வொருவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை எத்தனை விதமான உணர்ச்சிகளுடன் கூடிய மனிதர்களையும், நம் மன உணர்ச்சிகளை நிமிடத்துக்கு நிமிடம் மாற்றக்கூடிய நிகழ்ச்சிகளையும் காண்கிறீர்கள்.


ஓர் உதாரணம்; ஒரு குழந்தை விளையாட்டின் மேல் உள்ள ஆர்வமிகுதியால் தெருவின் குறுக்கே ஓடுகிறது. அதே சமயம் தெருவில் வேகமாக லாரி வந்துவிடுகிறது. உடனே நீங்கள் உங்களையும் மறந்து கூச்சலிடுகிறீர்கள். அல்லது பயத்தினால் தூண்டப்பட்டு குழந்தையைக் காப்பாற்ற ஓடுகிறீர்கள். இதைப்போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடிப்பின் (நடிப்புக் கலையின் ) ஒவ்வொரு பகுதியேதான்.


ஆகையால் அன்பரே! (நடிப்பின் ஓரளவு கூட தெரிந்துகொண்டிராத) என் போன்றோரிடம் கற்றுக்கொள்ள முயலுவதைவிட, தாங்கள் காணும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மனதில் பதிய வைத்து, அந்தந்த நிகழ்ச்சிகளில் ஈடுபட்டவர்களின் உணர்ச்சிகளைப் பார்த்து குறித்துக்கொண்டு தனியாக கண்ணாடி முன் நின்று பழகி (அதாவது தாங்கள் கற்பனை செய்யும் சம்பவத்திற்கும் தாங்கள் நடிப்பதற்கும் பொருத்தமுண்டா? தாங்கள் நேரில் கண்ட முக பாவத்திற்கும் தற்சமயம் தாங்கள் செய்து பார்க்கும் பாவத்திற்கும் பொருத்தமுண்டா என்பதை) பார்த்துக்கொண்டால் நாளடைவில் நடிப்பில் வெற்றியடையலாம். இத்துடன் முக்கியமானது ஒழுக்கம்.


இந்த ஒழுக்கத்தை தற்கால சினிமா உலகில் எல்லோரிடமும் காணமுடிவதில்லை. அதுமட்டுமில்லஒழுக்கம் என்பது வெறும் கேலிக்கூத்து என்று கூட நினைக்கும், பேசும், நடக்கும் நடிக நடிகையர்களும் இருக்கிறார்கள் என்பதை நடிகர் என்ற முறையில் தலைகுனிவுடன், வெட்கத்துடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆர்வமுள்ள நேர்மையுள்ள தங்களைப் போன்ற வாலிபர்கள் நடக்கத் தீர்மானித்தால் தற்காலம் உள்ள இந்த இழிவான  நிலையை மாற்றி நிச்சயம் வெற்றி காண முடியும். ஆகவே தாங்கள் சினிவில் நுழைவதன் முன் ஒழுக்கத்தைப் பற்றி நன்கு உணர்ந்து தாங்கள் எங்கிருந்தாலும் அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளச் சிறிதும் தவறக்கூடாது.


ஆகையால் தாங்கள் தயவு செய்து நன்கு யோசித்து சினிமா நுழைவைத் தீர்மானிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சிலர் பணத்தை வாங்கிக்கொண்டு சினிமாவில் சேர்த்துவிடுவதாகச் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட அன்பர்களிடம் தாங்களோ தங்களைப் போன்ற நண்பர்களோ சிக்காமல் பார்த்துக்கொள்ளத் தவற வேண்டாம்.


இப்படிக்கு,


தங்கள். எம்.ஜி.ராம்சந்தர்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

எனக்கு தேவையான நேரத்தில், இக் கடிதத்தை படிக்க வசதி ஏற்படுத்திக்கொடுத்த தங்களுக்கு நன்றி. - மரு, லெ. பூபதி. பரங்கிப்பேட்டை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பூபதி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!