Thursday, January 24, 2013

டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி!நெஞ்சமே அஞ்சாதே நீ…
என் வாழ்க்கையில் பிடிப்புள்ள மனிதனாகவும், நேர்மையாளனாக வாழவும் எனக்கு எனது பெற்றோர்களைவிடவும், எனது ஆசிரியர்களைவிடவும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்தது டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள்தான். இத்தனைக்கும் அவரை அவரது ‘மக்கள் சக்தி இயக்கம்’ தொடர்பாக ஒரே ஒருமுறைதான் சந்தித்து இருக்கிறேன்.

90 களில் அவரது முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் ‘கல்கி’க்கு எழுதி முகவரியைப் பெற்றேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே அவரின் நூல்களை வாசிக்கத்தொடங்கியிருந்தேன் என்பதை நினைக்கும்போதே மறக்க முடியாத அந்த நினைவுகள் அசைபோடத் துவங்கிவிடுகிறது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது கல்யாணமாகிப்போன எனது பள்ளித்தோழிக்கு ‘எண்ணங்கள்’ என்ற புத்தகத்தை பரிசளித்து, அவளது புதிய கணவனின் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கிறேன்.

பின்னாளில் தொழிற்கல்வி படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத்தேர்வில் (இணையம் பரிச்சயமில்லாத காலம்) உன்னுடைய பொழுதுபோக்கு என்ன என்ற கேள்விக்கு புத்தகம் படிப்பது என்ற பதிலை அடுத்து யாருடைய புத்தகம் என்ற கேள்வி வந்தபோது தயக்கமில்லாமல் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்று சொன்னது இப்போதும் மறக்கவில்லை.

வெளிமாநிலத்திலே வாழ்ந்து வந்தாலும், கடந்த டிசம்பர் இறுதியில் தமிழ்நாடு வந்தபோது ஏனொ இருக்கட்டும் என் பழைய புத்தகங்களைத்தேடி இவரின் ‘நெஞ்சமே அஞ்சாதே நீ’ என்ற புத்தகத்தை கையோடு எடுத்து வந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு பலமுறை படித்த அந்த புத்தகத்தை மீண்டும் படிக்க ஆவலாய் கொண்டுவந்தேன். ஆனால் நேரமின்மையால் புத்தகத்தை பிரிக்ககூடவில்லை. அதை பிரித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவரது மரணச்செய்தி.

ஓய்வில்லாத உழைப்புக்கிடையே இணையத்தில் கூட உலா வரமுடியவில்லை. நாளிதழ்களையும் படிக்க இயலவில்லை. தற்செயலாய் ஜோதிஜியின் ‘தேவியர் இல்லம் திருப்பூர்’ வலைப்பக்கத்தைப் பார்த்தவுடன்தான் அவரது மரணச்செய்தியை அறிய முடிந்தது.

அந்தக்காலத்தில் என்னைப்போல லட்சிய வேகம் கொண்ட இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்சநாயகன் இவர். அப்போது நானும் கூட மக்கள் சக்தி இயக்கதை எங்கள் பகுதியில் ஆரம்பிக்க மிகுந்த உத்வேகமாயிருந்தேன். பணி நிமித்தமாய் வயிற்றுப் பிழைப்புக்காக பெங்களூரு சென்றுவிட்ட காரணத்தினால் அப்போது என்னால் அதில் பங்கெடுக்க முடியாமல் போனது.

என் வீட்டு நூலகத்தில் நான் முதன்முதலாக வாங்கிய புத்தகங்கள் இவரின் ‘எண்ணங்களும்’ ‘நெஞ்சமே அஞ்சாதே நீ’யும்தான். வாழ்க்கையில் தோல்வியும், விரக்தியும் ஏற்படும்போதெல்லாம் இவரது புத்தகங்கள் தான் எனக்கு அருமருந்து.

நதி நீர் இணைப்பிற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள் அசாதாரணமானது. மகாநதி கோதாவரி கிருஷ்ணாவை காவிரியுடன் இணைக்கும் திட்ட அறிக்கையை 1991 ல் அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் வரை சென்று தனது திட்டத்தைப்பற்றி எடுத்துக்கூறியும் எந்தப்பலனும் இல்லாமல் போனது நமது துரதிஷ்டமே. தமிழகத்தில் வந்த்த அடுத்தடுத்த திராவிடக் கட்சிகளும் அவரை கண்டுகொள்ளாமலிருந்ததும் வெட்கக்கேடான விஷயமே!

தென்னக இரயில்வேயின் ஓய்வு பெற்ற திட்டப்பொறியாளர் வேலூர் திரு. நீ.நடராஜன் அவர்கள் எழுதிய ‘கோதாவரியை வரச்செய்வோம் காவிரியுடன் இணைத்திடுவோம்’ என்ற நூலுக்கு இவர் எழுதிய ‘அணிந்துரை’ காரணமாகவே அந்த புத்தகத்தை வாங்கி நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வையை அப்போதே பெற்றேன் என்பதை பொருமையுடன் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த இளைஞருக்கு 80 வயது என்பதை நம்பவே முடியவில்லை. நிறைய எழுதவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. ஆனால் நேரம் பதினொன்றைக் காட்டுகிறது. எனவே அந்த பெருமகனாருக்கு, அந்த லட்சியத்தலைவருக்கு எனது உளமார்ந்த அஞ்சலியை இந்த பதிவின் வழியே சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,

0 comments:

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!