Friday, January 11, 2013

முத்து முத்தான வரிகள்!அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கடிதம் கிடைத்தது. வாழ்த்து அட்டை மற்றும் உங்கள் குடும்ப புகைப்படம் இரண்டும் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். உங்களின் இதயங்கனிந்த வாழ்த்துக்கு என் நன்றியை முதலில் அர்பணித்துக்கொள்கிறேன். காரணம் எனக்கு யாருமே வாழ்த்து அனுப்பவில்லை. உங்களுடைய வாழ்த்தும், கவிதாவுடைய வாழ்த்தும் மட்டும்தான் எனக்கு வந்தது.

உங்களின் நட்பு கிடைத்ததற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களோ, ஏன் என் கணவர் கூட எனக்கு ஒரு கடிதம் போடுவதில்லை. ஒரு அனாதை போலத்தான் நான் இங்கு ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டு வந்தேன். உங்களின் கடிதம் வரத்தொடங்கியதிலிருந்துதான் நான் சற்று ஆறுதலாக உள்ளேன். உங்களின் கடிதம் உண்மையிலேயே ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது. காரணம் எனக்கு மூன்று அண்ணன்கள். இரண்டு அக்காமார்கள். இருந்தும் யாருடைய கடிதமும் இந்த இரண்டு வருடத்தில் வந்ததில்லை! என் குடும்பத்திலிருந்து இப்படி யாரும் எனக்கு கடிதம் எழுதுவதில்லை. ஆனால் உங்களை நான் பார்த்ததே இல்லை. கடிதம் மூலம்தான் அறிமுகம். அப்படி இருந்தும் என் கடிதத்திற்கு பதிலும் எழுதி எனக்கு நல்ல அறிவுறையும் ஆலோசனையும் சொல்லி எழுதியிருப்பது உண்மையிலேயே எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

கடிதத்தை ஒருமுறைக்கு பலமுறை படித்தேன். அவ்வளவு முத்து முத்தான வரிகள். எனக்கு கடிதம் எழுதுவதற்கு உங்களுக்கு பலகோடி நன்றிகள்! நான் தற்சமயம் சில மனவேதனைகளோடுதான் உள்ளேன். எல்லாவற்றிற்கும் காரணம் என் கணவர். இதுவரைக்கும் அவருக்கு பொறுப்பு என்பதே கிடையாது. என்னால் முடிந்த அளவு சம்பாதித்தேன். ஆனால் எல்லாமே நஷ்டமாயிற்று. நான் சம்பாதித்து ஒன்றரை லட்சம் பணம் கட்டி வேலை வாங்கிக்கொடுத்தேன். அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் இந்தியா வந்துவிட்டார். தற்சமயம் ஆட்டோ வாங்குவதற்கும் பணம் அனுப்பிக்கொடுத்து வண்டியும் வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இப்போது அங்கு வந்துவிடு என்று அழைக்கிறார். அவரைப்பற்றி நன்கு புரிந்து கொண்டவள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டேன். மறுபடியும் இரண்டு வருடம் வேலை செய்யலாம் என்று தீர்மாணித்திருக்கிறேன். இந்தக் காலத்தில் பணம் இருந்தால்தான் மதிப்பு என்பது உங்களுக்கே தெரியும்.


என் குடும்பத்திற்கு முன்னால் நான் நல்லபடியாக வாழ்ந்து காட்டவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் என் கணவர் அதற்கு ஆதரவாக இல்லை. தற்சமயம் அவர் ஆட்டோ ஓட்டுவதால் எனக்கு ஒரு கடிதம் போடவோ அல்லது என்னைப்பற்றி நினைப்பதற்கோ நேரம் இல்லை. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பணம் வேண்டும் என்றால் மட்டும்தான் எனக்கு ஃபோன் செய்வார் அல்லது கடிதம் போடுவார். என்ன செய்வது எல்லாம் என் தலைவிதி. இவை எல்லாவற்றையும் நான் சகித்துத்தானே ஆகவேண்டும். காரணம் நானே தேர்வு செய்த மாப்பிள்ளை! அப்போதுதான் அதன் பலனை அனுபவிக்கிறேன்.

புதுவருடம் (டிசம்பர்31 இரவு) 12 மணிக்கு என் கணவரிடம் பேசலாம் என்று ஃபோன் செய்தேன். ஆனால் அவர் வீட்டில் இல்லை. என் மகளிடம் மட்டுமே பேசினேன். மகளோ 'மம்மி' உடனே ஊருக்கு வாருங்கள் என்கிறாள். எப்படியும் கூடிய சீக்கிரம் நான் சென்னை வருவேன். ஆனால் மீண்டும் இங்கு வருவதாகத்தான் முடிவு.

என் கதையைப் பற்றியே நிறைய எழுதிவிட்டேன். உங்களுடைய குடும்ப புகைப்படம் மிக அழகாக உள்ளது. பிள்ளைகளும் அழகு. இரண்டு கண்மணிகள் என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள். புது வருடத்தில் கடவுள் நல்ல அனுக்கிரஹம் தரட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். மற்றபடி கவிதா பெயரில் நீங்கள் அனுப்பிய வாழ்த்தும் கிடைத்தது. கவிதா வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டாளா? நான் கேட்டதாகச் சொல்லவும். மறுபடி அந்த ஜகந்நாதனைப் போய் பார்த்தீர்களா? ஏதாவது விபரம் தெரிந்ததா?


மற்றபடி நீங்கள் எழுதினது போலவே சிங்கப்பூரில் மிகப் பிரமாண்டமாக புத்தாண்டு விழா கொண்டாடப்ப்பட்டது. 5 லட்சம் பேர் கலந்துகொண்ட விழா அது. நான் போகவில்லை. தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்பியதால் நான் வீட்டிலிருந்தபடியே விடிய விடிய கண்டுகளித்தேன். விடியற்காலை நான்கு மணிக்குத்தான் தூங்க்கப்போனேன்.

கிறிஸ்துமஸ் வாழ்த்தில் மிக அருமையாக ஓவியம் வரைந்த உங்கள் குடும்ப நண்பர் ஜெயந்திக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மனைவியையும் நான் ரொம்பவே விசாரித்ததாகச் சொல்லவும். கூடிய சீக்கிரம் சென்னை வருவேன். உங்களைக் காண ஆவலோடு வருவாள் இந்த ஜென்ஸி. இன்னும் எனக்கு தொடர்ந்து மடல் அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த மடலை முடிக்கிறேன்.

WISH YOU A HAPPY NEW YEAR 2000

MAY GOD BLESS YOUR FAMILY, PLEASE PRAY FOR ME.

இப்படிக்கு,

என்றும் நட்புடன்,

ஜென்ஸி, சிங்கப்பூர்.


6 comments:

ezhil said... [Reply]

வலைச்சரத்தின் மூலமாக உங்கள் தளம் வந்தேன். சுவாரசியமாக இருந்தாலும் அடுத்தவரின் கடிதத்தை படிக்கலாமா கவிப்பிரியன்

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி எழில். இது என் கடிதம். அதாவது எனக்கு என் நண்பர்களால் எழுதப்பட்ட கடிதம். எனக்காக எழுதிய கடிதங்களை இப்படி பொதுவில் வைப்பது தவறுதான் என்றாலும் மனித வாழ்வில் உள்ள சிக்கல்களை, மனங்களின் விசித்திரங்களை வெளிப்படுத்துவதுதான் என் நோக்கம். அவர்களின் அந்தரங்கங்கங்களை வெளிப்படுத்துவதல்ல. இருந்தாலும் எனக்குள்ளும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. அதனால் பெயர்களை மாற்றியிருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said... [Reply]

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

கவிப்ரியன் said... [Reply]

பொங்கல் வாழ்த்திற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி. தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

ezhil said... [Reply]

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

கவிப்ரியன் said... [Reply]

பொங்கல் வாழ்த்திற்கு மிக்க நன்றி எழில்! தங்களுக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!