22.02.1990 பெங்களூர்-58
அன்பிற்குரிய
இனிய நண்பர் திரு.கவிப்ரியனுக்கு, உனது அன்பை என்றும் மறவாத நண்பன் பாலசண்முகம்
எழுதும் மடல்.
உங்களின்
11.01.1990 தேதியிட்ட மடல் கண்டு
மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக மடல்
போட இயலவில்லை. மன்னிக்கவும், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் சில
பிரச்னைகள், சிக்கல்கள் காரணமாக மன
வேதனையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். எனவே
மனல் போட தாமதம் நேரிட்டுவிட்டது. பெற்றோர், உடன்பிறந்தோரின் பாசத்தில் சிறு விரிசல்கள்!
மற்றபடி
நீங்கள் சுயதொழில் மேற்கொண்டதில் மகிழ்ச்சி.( உங்கள் போனஸ் பணம் கம்பனியிலிருந்து பெற்றுவிட்டீர்கள்தானே?!) முன்னேற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நண்பன் சுப்பிரமணியின் மனைவிக்கு கடந்த 14.02 1990 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். மற்றபடி நண்பர்களும் நலம்தான். நீங்கள் பெங்களூர் வரும்போது அவசியம் என்னை சந்திப்பீர்கள் என்று
நம்புகின்றேன்.
உங்கள்
ஐ.டி.ஐ ஆசிரியர் (சுப்பிரமணி
திருமணத்திற்கு வந்திருந்தவர்) இறந்துவிட்ட
விபரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
திருமணத்திற்குப்
பிறகு நான் தினமணியில் வாசகர் கருத்துக்கள் சரிவர எழுதுவதில்லை. எழுதும் மனநிலையும் இல்லை. என் மனைவி பெயரில் இரண்டு கடிதங்கள்
பிரசுரமாகியிருந்தது. 11.02.1990 'கல்கி' இதழிலும் மனைவி பெயரில் கருத்து
பிரசுரமாகியிருந்தது. மனைவி ஊரில்
தான் இருக்கிறாள். இன்னும் ஓரிரு
வாரத்தில் குடும்பத்தை பெங்களூருக்கு மாற்றிவிடுவேன்.
என்
மனைவியும் ஒரு சராசரி பெண்தான். என்
மனநிலைக்கு ஏற்றவாறு இவளை மாற்றுவதில்தான் என் எதிர்காலமே அடங்கி உள்ளது. அது வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையும்
உள்ளது.
வி.பி.சிங் ஆட்சி பற்றி கருத்து கேட்டு எழுதியிருந்தீர்கள். ராஜீவை விட பரவாயில்லை.
வி.பி.சிங் ஒருவர் மட்டுமே சரியானவராக இருப்பதில் பயன்
ஏதுமில்லை. பதவி வெறி பிடித்த
தேவிலால் போன்றோரும், சந்திரசேகர்
போன்றோரும் இருக்கும்வரை தேசிய முன்னனி அரசு சோதனையை சந்திக்கப்போவது நிச்சயம். வர்க்க ரீதியான புரட்சி மட்டுமே எதிர்கால
இந்தியாவை வளப்படுத்த முடியும்.
ஜனதாதள
வேட்பாளர்கள் தேர்வு குறித்து இரு தினங்களுக்கு முன்பு தினமணியில் தலையங்கம்
எழுதப்பட்டிருந்தது. கேடிகளும், ரௌடிகளும் எல்லாக் கட்சிகளிலும் தங்கள்
செல்வாக்கினைப் பெற்றிருக்கும் கேவலநிலை என்றுமே மாறாது. இந்திய அரசியல் அமைப்பில் இது மாறாத சாபக்கேடாகும்.
ஏழ்மையும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சரியான தொலை நோக்கு திட்டங்கள் இல்லாத இந்தியா
அதிகமான வெளிநாட்டுக் கடனில் சிக்கி மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது.
நாட்டின்
மறுமலர்ச்சிக்கு இளைய தலைமுறைகள் வித்திடவேண்டும். நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளும் இளைய தலைமுறையினர்கள் எண்ணிக்கை
மிகக்குறைவாக உள்ளது. அவர்களும்
தெரிந்து கொண்டதை புரிந்துகொண்டு உணர்ந்து செயல்பட முன்வருவதில்லை. காலத்தின் மாற்றம் நிச்சயமாக ஒரு புரட்சியை
இந்தியாவில் தோற்றுவிக்கும். பதுக்கலும், சுரண்டலும், அடக்குமுறைகளும் இந்த நாட்டை சீரழிவுப்பாதையில் அழைத்துச்சென்று
கொண்டிருக்கிறது.
ஆட்சிகள்
மாறினாலும் நாட்டில் அவலக்காட்சிகள் மாறப்போவதில்லை. இப்போதைக்கு வி.பி.சிங்கின் ஆட்சி ராஜீவ் ஆட்சிக்கு சரியான மாற்று
என்றாலும்கூட இந்த அரசும் மனிதகுல வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இயலாது. வி.பி.சிங்கின் ஆரம்பகால நல்ல
நடவடிக்கைகள், முடிவுகள் கூட
போகப்போக சரியான பாதையைக் காட்டப்போவதில்லை.
மற்றபடி
உங்கள் கருத்தை எழுதவேண்டுகிறேன். உங்களின்
திருமண ஏற்பாடுகள் பற்றி செய்தி இருப்பின் தெரிவிக்கவும்.
இதுதான் விபரம்.
இப்படிக்கு,
என்றும்
மாறாத அன்புடன்,
பால.சண்முகம்.
2 கருத்துகள்:
மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ
வருகைக்கு நன்றி மோகன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!