தகவல் தொழில்நுட்பம் மின்னஞ்சல், கைத்தொலைபேசி என முன்னேறிவிட்டிருக்கும் இந்தக்கால கட்டத்தோடு அந்தக் கடித காலகட்டத்தை ஒப்பிடவே முடியாது. கடிதத்தை ஒட்டி அனுப்பிவிட்டு, ஐயோ அதை மறந்துவிட்டோமே... என்று நினைத்து உபரியாக அஞ்சலட்டையை அனுப்பிய காலமெங்கே?.... நிமிடத்தில் கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் இந்தக்காலமெங்கே? இது வரமா? சாபமா?
நண்பர்கள் நாள் முழுவதும் அலுக்காமல் இப்போது பேசுவதைப் போலத்தான், அப்போது பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவோம். ஏனோ அலுப்பதேயில்லை. கடிதம் எழுதிவிட்டு பதிலுக்காக காத்திருப்பதும் அலாதியான அனுபவம்!
ஆரம்பப்பள்ளியிலிருந்து பள்ளியிறுதிவரை என்னோடு படித்த நண்பர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் பெயர் வெங்கடேசன், இன்னொருவர் பெயர் இரமேஷ். ஏற்கனவே ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அது தாண்டவமூர்த்தி!
வெங்கடேசன் எனக்கெழுதிய இரண்டு சிறிய கடிதங்கள் இங்கே;-
ஓம் முருகன்
துனை
அன்புள்ள
நண்பன் கவிப்ரியனுக்கு, உன் அன்பை என்றும் மறவாத நண்பன் இர.வெங்கடேசன் எழுதும்
கடிதம், என்னவென்றால் நான் இங்கு நலம். அதுபோல் உன் நலனையும், உன் குடும்பத்தினர்
நலனையும் அறிய ஆவல்.
தவிர, நீ
14.12.89 அன்று எழுதிய கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். படித்து அனைத்து
செய்திகளையும் அறிந்தேன். முதலில் 'உனக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலையில்'
என்ற வரியை படித்தவுடன் உனக்கு திருமணம் ஆகிவிட்டதோ என்று எண்ணி வியந்தேன். பின்
தொடர்ந்த உன் வரிகளைக் கண்டவுடன்தான் தெரிந்தது 'சுயதொழில்' துவக்க நாள் என்பது!
ரமேஷ் வீவு
வந்துள்ளதாக எழுதியிருந்தாய். அவனை கேட்டதாக சொல்லவும். தவிர தற்போது தொழில் எந்த
நிலையில் செயல்படுகிறது (இயங்குகிறது) என்று தெரியப்படுத்தவும்.
நான்
பொங்கலுக்கு விடுமுறையில் வரலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன். எனினும் கண்டிப்பாக
சொல்ல முடியாது. என்னுடைய திருமணம் இப்போது கிடையாது. இன்னும் ஒரு சில முக்கிய
பணிகளை முடித்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ளலாம் என இருக்கிறேன்.
எப்போது
பார்த்தாலும் என் திருமணத்தைப் பற்றியே கேட்டு எழுதுகிறாய்? நீ எப்போது திருமணம்
செய்துகொள்ளப் போகிறாய்? இதுவரைதான் வேலை கிடைக்கவில்லை என்பது பிரச்னையாக
இருந்தது. இப்போது சுயதொழில் துவங்கிவிட்டாயே, இனிமேலும் அதை காரணமாக
தெரிவிக்கமாட்டாய் என நினைக்கிறேன்.
எனவே, உன்
திருமண தேதியை அடுத்த கடிதத்தில் மறக்காமல் எழுதி அனுப்பவும். ஊரில் ஏதாவது
முக்கிய விஷயம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
இதுதான்
சங்கதி, உடனே பதில் போடவும்!
இப்படிக்கு,
உன் அன்புள்ள,
இர.வெங்கடேசன்.
30.12.1989
FAIZABAD
அன்புள்ள நண்பன் கவிப்ரியனுக்கு, உன் அன்பை என்றும் மறவாத நண்பன் இரா.வெங்கடேசன் எழுதும் கடிதம், யாதெனில் நான் இங்கு நலம். அதுபோல் அங்கு உன் நலனையும் உன் மனைவி மற்றும் குழந்தையின் நலனையும் அறிய ஆவலாய் உள்ளேன்.
அன்புள்ள நண்பன் கவிப்ரியனுக்கு, உன் அன்பை என்றும் மறவாத நண்பன் இரா.வெங்கடேசன் எழுதும் கடிதம், யாதெனில் நான் இங்கு நலம். அதுபோல் அங்கு உன் நலனையும் உன் மனைவி மற்றும் குழந்தையின் நலனையும் அறிய ஆவலாய் உள்ளேன்.
உன் கடிதம் கிடைத்தது. படித்து அனைத்து செய்திகளையும் அறிந்தேன். நீ
இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்பதை தெரியப்படுத்தவும். உன் குழந்தைக்கு
என்ன பெயர் வைத்துள்ளாய்? இப்போது நான்கு காலில் நடக்கும் என நினைக்கிறேன்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் உன் மனைவியையும், குழந்தையையும் நல்லமுறையில்
பார்த்துக்கொள்ளவும். பொங்கல் நல்லமுறையில் கொண்டாடி இருப்பாய் என நினைக்கிறேன்.
பாபுவிடமிருந்து கடிதம் வருகிறதா? பொங்கலுக்கு லீவு வய்தானா?
அம்மா, தம்பிகள், தங்கை அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும். நிலத்தில்
என்ன பயிர் செய்துள்ளாய்? அடிக்கடி கடிதம் எழுதவும். மறக்கவேண்டாம். வருடத்திற்கு
ஒரு லட்டர் எழுதுகின்றாய், ஏனோ தெரியவில்லை!
இப்படிக்கு,
இரா.வெங்கடேசன்.
27.01.1995