சனி, 11 ஆகஸ்ட், 2012

பரிதாபத்துக்குரிய ஏழை யார்?





உறவை விட நட்பு உயர்ந்தது. ஏனெனில் உறவு நம்மீது திணிக்கப்படுவது. நட்போ நாமே விரும்பி தேர்ந்தெடுப்பது. மேலும் ரத்தம் உத்தரவாதமான பசை அல்ல. அது ஒட்டினாலும் ஒட்டும். ஒட்டாமலும் போகும்.

நட்பு நல்ல சிமென்ட்டைப் போன்றது. அது நாளுக்கு நாள் இறுகுகிறது.

காதலைவிட நட்பு உயர்ந்தது. ஏனெனில் காதலில் பாலுணர்வு தேவை என்ற சுயநலமும் கலந்திருக்கிறது. காதல் மனிதக் கையைப் போன்றது. அது கொடுக்கவும் செய்யும், வாங்கவும் செய்யும். நட்பு மரத்தின் கையைப் போன்றது. அதற்குக் கொடுக்கத்தான் தெரியும்.

காதல் எதிர்த் துருவங்களின் ஈர்ப்பு. நட்போ ஒத்த ஸ்வரங்களின் கூட்டிசை. நல்லவர்களின் நட்பு நல்ல நூலைப் போன்றது என்கிறார் வள்ளுவர். நல்ல நூல் படிக்கப் படிக்க இன்பம் தருகிறது. நல்லவர்கள் நட்பும் பழகப் பழக இன்பம் தருகிறது.

நல்ல நூல் அறிவூட்டுகிறது; வழிகாட்டுகிறது. நல்லவர்கள் நட்பும் அப்படித்தான். நல்ல நூல் எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை. நல்லவர்கள் நட்பும் எத்தனை நாள் பழகினாலும் சலிப்பதில்லை.

சிரித்து மகிழ்வதற்கல்ல நட்பு. தவறு செய்யும்போது தயங்காமல் கண்டிப்பதுதான் உண்மையான நட்பு என்கிறார் வள்ளுவர்.

நல்ல நண்பன் கண்ணாடியைப் போன்றவன். கண்ணாடி முகஸ்துதி செய்வதில்லை. நம் முகத்தை அப்படியே காட்டுகிறது. அதில் அழுக்கிருந்தால் அதையும் மறைக்காமல் காட்டுகிறது. கண்ணாடி நம்மை நாமே திருத்திக்கொள்ள உதவுகிறது.
நல்ல நண்பன் கையைப் போன்றவன் என்கிறார் வள்ளுவர். நான்கு பேர் நடுவே நம் ஆடை நழுவும்போது கை விரைந்து சென்று ஆடையைத் தாங்கி மானத்தைக் காக்கிறது. அல்லது ஆடை நழுவி விழுந்துவிட்டால் கையே ஆடையாகி மானம் காக்கிறது.

‘மானம் காக்க வா என்ற அழைப்பைக் கேட்டுக் கை செல்லுவதில்லை. அழைப்பில்லாமலேயே தானே சென்று உதவுகிறது. அழைக்காமலேயே தக்க சமயத்தில் விரைந்து வந்து உதவுபவன்தான் உண்மையான நண்பன்.

துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கிறது என்கிறார் வள்ளுவர். உண்மையான நண்பர்கள் யார் என்பதை அளந்து பார்க்க அதுதான் உதவுகிறது. போலி நண்பர்கள் நம் நிழல் போன்றவர்கள். நம் நிழல் வெளிச்சத்தில் நம்மை விட்டு நீங்காது பின்தொடர்ந்து வருகிறது. இருள் வரும்போது மறைந்து போகிறது. மேலும் நம் நிழலில் நாம் இளைப்பாற முடியாது.

உயிர் நண்பன் என்கிறோமே, அது சரியான உவமை அல்ல. உடல் நன்றாக இருக்கும்போது கூடவே இருந்து அனுபவித்துவிட்டு, உடல் பாதிக்கபடும்போது சொல்லாமல் கொள்ளாமல் நழுவி ஓடுவதுதான் உயிரின் இயல்பு. எனவே போலி நண்பனைத்தான் உயிர் போன்றவன் என்று சொல்ல வேண்டும்.

நல்ல நண்பன் சுமைதாங்கியாக இருக்கிறான். நம் கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக இருக்கிறான். அவன் வெயில் நேரத்தில் விசிறியாகவும், குளிர்காலத்தில் கணப்பானாகவும் இருக்கிறான்.

அரைத்த கைக்கு மணம் தரும் சந்தனம் போல, உதைத்த காலுக்கு செறுப்பாகிறவன்தான் நண்பன். பணங்களைச் சம்பாதிக்காதவன் ஏழை அல்ல. நட்பு மனங்களைச் சம்பாதிக்காதவன்தான் இந்த உலகத்தில் பரிதாபத்திற்குரிய ஏழை!

மனங்களை சம்பாதியுங்களில்................ அப்துல் ரகுமான்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!