செவ்வாய், 21 ஜனவரி, 2014

மறந்தால்தானே நினைப்பதற்கு...


 
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்றால் எல்லோருக்குமே தெரியும். அவர் இறந்து (21/01/13) ஓராண்டாகிறது. சென்னை திருவான்மியூரில் கடந்த வருடம் அவர் இறந்த போது அவருக்கு வயது 80.

"உன்னால் முடியும் தம்பி" என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர். செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில் தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர்.
இதன் மூலம் சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசைச எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர்; ரோட்டை சீரமைத்துக் கொண்டனர்.
கோவையில் வற்றிப்போய் பிளாஸ்டிக் எனும் விஷக்கிடங்காக மாறியிருந்த குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து தூர் வாரியதெல்லாம் இந்த மக்கள் சக்தி இயக்குனரின் கனவு மெய்ப்படலே. எண்ணங்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி, உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள், உன்னால் முடியும் தம்பி என்பது உள்ளிட்ட  எத்தனையோ நூல்கள் எழுதி இளைஞர்களை நல்வழிப்படுத்தியவர். 

25 ஆண்டு கால அமெரிக்க தொழில் அதிபர் வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு நாட்டு பற்று காரணமாக தாயகம் திரும்பியவர், நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்க செய்யலாம் என்று விரும்பியவர்.
பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு கெஜ்ரிவால் போலவும், அன்னா ஹசாரே போலவும் தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர் ஆனால் இங்கு உள்ள அரசியல் வியாதிகளின் நரி தந்திரத்தின் காரணமாகவும், மூளை மழுங்கடிக்கப்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டார். இன்று உள்ள இந்த விழிப்புணர்வு அன்று இருந்திருந்தால் இவருக்கு பின்னால் தமிழகம் அணிதிரண்டிருக்கும்.
நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று நம்பியவர். இளைஞர்களை தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த எழுத்து மூலமும் பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களுக்கு சந்தேகமே இல்லாமல் இவரே முன்னோடியாவார். "ஐயாவின் நூல்தான் என்னை வழிநடத்தியவை" என்று இன்றைக்கும் பலர் நெஞ்சார கூறுவதை கேட்கமுடியும்.
இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால் உன்னால் முடியும் தம்பி என்கிற படத்தை எடுத்ததுடன் படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றும் பெயரிட்டார். 

எம்ஜிஆரால் அழைத்து பாராட்டப்பெற்றவர், தமிழக அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். அன்பானவர், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர்.
மதுரை மத்திய தொகுதியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் வேட்பாளராக நின்றபோது இவரது தேர்தல் பிரச்சாரத்தை பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தேன், அப்போது அவரது ஜீப்பிலேயே என்னையும் ஏற்றிக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பயணித்தவர்.
"என்னிடம் நிறைய பணம் இருக்கிறது ஆகவே மக்கள் பணத்தை தொடமாட்டேன், என்னிடம் உள்ள ஆற்றலை, அறிவை உங்களுக்கு செலவிட சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் தேவை. என்னைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் ஒரு நேர்மையாளனை தேர்ந்து எடுக்கிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம் நதிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற குரலை வலுப்படுத்துகிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம் இந்த நாட்டிற்கு நல்ல பல இளைஞர்களை வருவதற்கான பாதையை அமைத்து தருகிறீர்கள்" என்று எதார்த்தமாக பேசினார்.
ஓரு நல்லவர், வல்லவர் அரசியலில் கலந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்று மக்கள் நினைத்ததாலோ என்னவோ அவரால் அந்த தேர்தலில் ஜெயிக்கமுடியவில்லை. ஆனாலும் தோற்றபின் முதல் ஆளாக தொகுதியில் வலம்வந்து நன்றி கூறினார்.
இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும் அவரது சிந்தனைகளும், எழுத்துகளும் நம்மோடுதான் இருக்கிறது, இயக்குகிறது. டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் இன்றைக்கும், என்றைக்கும்.

தினமலரில் - எல்.முருகராஜ்
தொடர்புடைய இடுகை; டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி!

8 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

தேவையான நினைவூட்ட வேண்டிய பதிவு.

உஷா அன்பரசு சொன்னது… [Reply]

சிறப்பான நினைவுகள்......... நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

எதார்த்தமாக பேசியதை, இன்றுள்ள பலரை நினைத்தேன்... சிரித்தேன்... ம்...

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் என்றும் நிலைக்கும்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் ஐயா:- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஜோதிஜி! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி உஷா அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே! மின்னூல் பற்றிய அறிவிப்பை ஜோதிஜியின் தளத்திலேயே கண்டேன். ''ஈழம் வந்தார்கள் வென்றார்கள்'' தரவிறக்கம் செய்து படித்துக்கொண்டிருக்கிறேன்.
கடந்த ஒரு சில நாட்களாக தமிழ்மணத்தின் ஓட்டுப்பட்டை தெரியவில்லை. ஏனென்று குழம்பிக்கொண்டிருந்தேன். தங்களின் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்கிறேன். உதவவும். தங்களின் அக்கறைக்கும் உதவிக்கும் மீண்டுமொருமுறை நன்றி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!