Phailin Cyclone 2013 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Phailin Cyclone 2013 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜனவரி, 2014

மின்சாரமில்லாத சம்சாரி வாழ்க்கை



ஒரு நூறு நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. மின்சாரம் வந்த பின்புகூட முக்கியமான நகரங்களில் அதுவும் ஆங்கிலேயர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அந்த மின்சாரமும் இருந்திருக்கும். ஆனால் நம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் செல்வந்தர்களைத் தவிர்த்து மின்சாரம் வந்திருக்க வாய்ப்பில்லை. மின்சாரமில்லாத வாழ்க்கையை அவர்கள் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் அந்தக் காலத்தில்?

இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. கணிணி வந்த புதிதில்…. இது கணக்கெல்லாம் போடுமாம். எல்லா வேலையும் வீட்டிலிருந்தே செய்யலாமாம். அது வந்தா மனிதர்களுக்கு வேலையே இருக்காதாம். அப்படி இப்படின்னு பேச்சு இருந்தது. ஏதாவது அலுவலகத்துக்கோ அல்லது வங்கிக்கோ சென்றால் அத்திப்பூத்தார் போல் இருக்கும் அந்தக் கணிணிகளைப் பார்த்தால் ஏக்கமும் மெத்தப் படித்தவர்களின் விஷயமாகவும்தான் படும். ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. காலம் மாறுகிறது. முன்னேறுகிறது. எல்லாம் மகிழ்ச்சியான விஷயம்தான். நானும்கூட கணிணியைக் கையாள்வேன் என்று அப்ப்போது நினைத்தே பாரக்கவில்லை.

சில்லுப்புரட்சி என்கிற தொழில்நுட்பம் வந்த பிறகு  எது எதுவெல்லாமோ சாத்தியமாகிவிட்டது. ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படையான இந்த மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் மட்டும் ஏன் தேக்கநிலையிலேயே இருக்கிறது என்றுதான் புரியவில்லை. நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம் என்றெல்லாம் தொடங்கி அணு மின்நிலையம் வரை வந்தாகி விட்டது. அணுமின் நிலையத்தின் ஆபத்தை உணர்ந்த அயல்நாடுகள் மாற்றுவழிகளை ஆராயத்தொடங்கியிருக்கிறது. அவர்கள் கழித்துக் கட்டிய அந்த அணுமின் நிலையத்தை கூடங்குளத்தில் நிறுவி தென் தமிழ்நாட்டு மக்களுக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது ‘’வெற்றி’’, ‘’வெற்றி’’ மார்தட்டிக்கொண்டிருக்கிறது நம் மத்திய அரசு. 

பாவம் ஒரே ஒரு கும்பல்தான் தொடர்ந்து மக்களுக்காக தொடர்ந்து  போராடிக் கொண்டிருக்கிறது. கதிரியக்க பயங்கரங்கள் குறித்த எந்த புரிதலுமில்லாத மற்ற பெரும்பாண்மையான மக்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஒரு போபால் விஷ வாயுப் பேரழிவைக்கூட தாங்க முடியாத நம் தேசம், ஒருவேளை கதிரியக்கக் கசிவுக்கு ஆளாக நேர்ந்தால் என்ன கதியாகும் என்ற அக்கறையோ அறிவோ எவருக்கும்  இல்லை.

காற்றாலைகளிலிருந்து மின் உற்பத்தி எல்லா பருவகாலங்களிலும் சாத்தியமில்லை என்பதும், சூரிய சக்தியிலிருந்து மின் உற்பத்தி என்பது இன்னமும் வெற்றிகரமான வழிமுறைகளைக் கொண்டு உருவாக்கப்படவில்லை என்பதும் கவனத்தில் கொண்டால் மின்சாரம் என்பது இன்னும் ‘’ஷாக்கான’’ சமாச்சாரமாகத்தின் இருக்கிறது.
 
எதற்கு இந்த பீடிகை எல்லாம் என்றால், கடந்த ஒரு மாதகாலமாக இந்த பாழாய்ப்போன மின்சாரம் இல்லாமல் இங்கே சாமானிய சம்சாரியின் வாழ்க்கை எப்படியெல்லாம் பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணரும் நிலை ஏற்பட்டது. அந்த அனுபவங்களைத் தான் ஏற்கனவே பதிவாக்கியாச்சே............

ஒடிஸாவில் பைலின் புயலின்போது எழுதிவைத்தது இப்போதுதான் கண்ணில் தட்டுப்பட்டது. அதான்...ஹி..ஹி...

வெள்ளி, 11 அக்டோபர், 2013

'ஒடிசாவை நோக்கி ஃபாய்லின் புயல்'

சமீப காலங்களில் புயலுக்குக் கூட பெயர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.  இது ஒருவகையில் வரலாற்றில் பதியக்கூடிய நிகழ்வாக இருப்பின் காலத்தையும் பெயரையும் நினைவுகூற வசதியாகத்தான் இருக்கும். தற்போது நான் பணி நிமித்தமாக ஒடிசா மாநிலத்தில் இருப்பதால் இங்கு இரண்டு நாட்களாக இந்த 'ஃபாய்லின்' புயல் பற்றிய பேச்சுதான்.

நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து அலறல் எச்சரிக்கை கொடுத்த வண்ணம் இருக்கின்றன. தசரா பண்டிகைக் கொண்டாட்டத்தில் மாநிலமே விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்த நேரத்தில் இடி போல இடியுடன் கூடிய மழையோடு அதிரடியாக வரப்போகிறது ஃபாய்லின் புயல்.

சென்னையில் இருந்த போதும்  புயலின் பாதிப்பை அதிகமாய் உணர்ந்ததில்லை.  தொடர்ந்து ஒருவாரம் விடாது மழை பெய்யும், அவ்வளவுதான். வேலைக்குப் போக முடியாது. இயல்பு வாழ்க்கை பாதிக்கும். வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயலின் பாதிப்புகளை இணையத்தின் வாயிலாக படிக்க முடிந்தது. ஜாக்கி சேகரின் தளத்திலும் படிக்க நேர்ந்தது. ஆனால் நேரடியான அனுபவம் ஏதுமில்லை.

இங்கு (ஒடிசாவில்) தற்போது (தசரா) விடுமுறையில் சென்று விட்ட அனைத்து அரசு ஊழியர்களையும் மீண்டும் வரச்சொல்லி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும், கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் பணியிலும், அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகள் செய்யும் பணியிலும் முடுக்கி விட்டிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் இந்த ஃபைலின் புயல் பற்றிய பேச்சுதான். ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசாவில் உள்ள  துறைமுக நகரமான பாரதீப்பிற்கும் இடையில் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கிறது. இந்த இரண்டு நகரங்களுக்கு மையத்தில் இருக்கும் கோபால்பூர் (ஒடிசா) என்ற ஊர் புயல் தாக்கக்கூடிய முக்கியமான இலக்கு. இந்த கோபால்பூருக்கு மிக அருகில்தான் (பிரஹம்மபூர்- BERHAMPUR) நான் வசித்து வருகிறேன்.

இங்கிருந்து கோபால்பூர் கடற்கரை 12 கி.மீ.தான். நாளை (12-10-2013) சனிக்கிழமை புயல் கரையைக் கடக்கும் என்கிறது செய்தி. அதுவும் மணிக்கு 250-260 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடுமாம். செய்திகளில் தெரிவிப்பதை விட பாதிப்பு மிகக் கடுமையாக இருக்குமாம். 

இதுவரை ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் இருந்து சுமார் மூன்று லட்சம் மக்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். இன்னும் 2 லட்சம் வரை நாளைக்குள் வெளியேற்றப்படுவார்கள். பத்தாயிரம் பள்ளிக்கட்டிடங்கள் தாற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது. 

இது தவிர அரசு கட்டிடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு உணவுப் பொருட்களும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் குவிக்கப் பட்டிருக்கின்றன. புயலினால் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவார்களாம்.

இரயில் போக்குவரத்திலும் பெரும் இடையூறு ஏற்படலாம். மக்கள் பீதியுடனே இருக்கிறார்கள். இது போல 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புயலின் போது மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுவர ஒன்றிரண்டு மாதங்கள் ஆகியதாம். மக்கள் அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை சேமித்து வைத்து விட்டார்கள். குடிதண்ணீர் அடுத்த பிரச்னை. அதற்கடுத்து மின்சாரம். மின்இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கப்புறம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்கிறார்கள். தொலைத்தொடர்பு மோசமாக துண்டிக்கப்படலாம்.

நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் இருக்கும் 'ஹைமாஸ்ட் விளக்குகளின்' உச்சியில் இருக்கும் விளக்குகளை இறக்கி விட்டிருக்கிறார்கள். அதுகூட உடைந்து போகலாம் என்ற கணிப்பு. ஒடிசாவின் மிகப் பிரபலமான துர்கா பூஜைக் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த வேளையில், இந்தப் புயல் அனைவரையும் அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் கடல் அலையோ கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்தியாவின் மொத்த பரப்பளவில் பாதியளவு இருக்குமாம் இந்த புயலின் பரப்பும். வங்கக் கடலின் இந்தியப் பகுதி முழுவதும் இன்னும் சில மணி நேரங்களில் இந்த ஃபாலின் புயல் ஆக்ரமிக்கப்போகிறது. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 1999-ல் ஏற்பட்ட புயலின் போது சுமார் 10,000-ம் பேர் மாண்டு போனார்கள். ஆனால் இப்போது எல்லா முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் கடுமையாக இருக்காது என்று நம்பலாம்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது புது தில்லிப் பயணத்தை ரத்து செய்துவிட்டு புயல் முன்னேற்பாடுகளில் மும்முரமாகி இருக்கிறார். எங்களது அலுவலகம் எங்களை இன்று காலையிலேயே விடுமுறை அறிவித்து வீட்டுக்கு அனுப்பி விட்டது. நாளைக்கு எப்படி இருக்கும் நிலைமை தெரியவில்லை. பதிவை எழுதுவதற்கு மின்சாரம் இருக்குமா தெரியவில்லை.  உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய  பேரிடர் மேலான்மைக் குழுவின் 42 குழுக்கள் ஏற்கனவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தயார் நிலையில் இருக்கின்றனர்.

மற்ற விபரங்களை அடுத்த பதிவில் எழுதுகின்றேன்....