பங்குச்சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்குச்சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு?


இந்த மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு? கிட்டத்தட்ட 2007-லிருந்து மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்களை தேடித்தேடி படித்து வருகிறேன். கொஞ்சமாய் அதைப் பற்றிய முழு விவரம் தெரியாமலேயே முதலீடும் செய்ய ஆரம்பித்து விட்டேன். அதனுடைய முழு பலா பலன்களை அறிந்த பிறகு எனது நண்பர்களுக்கும் மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டைப்பற்றிக் கூறி சேமிப்பை இப்படி முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறேன்.

இப்படி அனைவரும் தங்களது பணத்தை சேமிப்பதினால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகமாவதோடு மியூட்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும் பங்குச் சந்தைக்கும் அதிக முதலீடு வரும். இந்தியாவில் வெறும் 2% பேரிடம்தான் டீமேட் கணக்கு இருக்கிறது. சந்தையின் ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்களுக்கு மியூட்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்த வழி. அதுவும் எஸ்.ஐ.பி. என்கிற சிஸ்டமேடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது ரிஸ்க்கை இன்னும் குறைக்கும்.

ஆனால் நிறைய பேர் பயந்து ஒதுங்குவதற்கு காரணம் இந்தப் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ஒருவேளை நஷ்டமடைந்தால் சிறுகச்சிறுக சேமித்த பணம் முழுவதும் போய்விடுமே என்கிற பயம்தான். ஆனால் இதைப் பற்றி புரிந்துகொண்டால் அனைவரும் பயனடைவார்கள் என்ற நோக்கத்தோடுதான் இங்கே என் அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த விவரங்களையும் பதிவிடுகிறேன்.

வாழ்க்கையில் சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புள்ளவர்களாக இருந்தால் சேமிப்பைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்கள். வரவுக்கும் செலவுக்குமே சரியாகப்போகுது என்று சொல்பவர்கள் கூட நெருக்கடியான நேரத்தில் யாரிடமும் கையேந்தாமல் இருக்க ஏதாவது சேமிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி சேமிப்பது, எங்கே சேமிப்பது என்ற சரியான வழிகாட்டல் இன்றி, திட்டமிடல் இன்றி அவதிப்படுகிறார்கள். இன்றும் கூட பரவலாக இருக்கும் சேமிப்பு முறை ’சீட்டு கட்டுவது’. இதில் பணத்தைக் கட்டி பலனடைந்தவர்களை விட ஏமாந்தவர்கள் அதிகம். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நம்பி பணத்தைக் கட்டியவர்கள் கம்பி நீட்டிய பிறகுதான் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

இன்று வரை சீட்டுக் கம்பனி, தீபாவளி ஃபண்டு, அதிக வட்டி என்ற ஆசை காட்டும் நிதி நிறுவனங்கள் என்று அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களும் திருந்தியபாடில்லை. எங்கே தவறு? வங்கியில் வட்டி குறைவு. அஞ்சலகத்திலும் அதே கதைதான். பாமரர்கள், அதிகம் படிக்காதவர்கள் எங்கே போய் அதிக வருவாய் உள்ள பாதுகாப்பான சேமிப்பைத் தொடங்குவது? கிராம வங்கிகளில் பெரும்பாலும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே கணக்கு தொடங்குபவர்கள். படித்தவர்கள் என்ன அத்தனையும் தெரிந்தவர்களா என்ன?

எங்கள் அலுவலகத்திலேயே பலர் அறியாமையில்தான் இருக்கிறார்கள். அல்லது எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்ற ரீதியில் உதவாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தைப் போட்டுவிட்டு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணம் கொட்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் பரஸ்பர நிதித்திட்டங்கள் (மியூட்சுவல் ஃபண்ட்) பற்றியோ, நல்ல காப்பீடு திட்டங்கள் (இன்ஷூரன்ஸ் பாலிஸிகள்) பற்றியோ சரியான புரிதல் இல்லை. முகவர்கள் எதையோ சொல்லி ஏமாற்றியிருப்பதேயே வேதவாக்காக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூடிய மட்டும் என் நண்பர்களிடத்தில் சரியான முதலீட்டு திட்டங்களையும், உயிர் காப்பீடு திட்டங்கள் பற்றியும் விளக்குவதோடு எந்த பிரதிபலனும் பாராமல் உதவி புரிந்தும் வருகிறேன். இந்த அனுபவங்களைத்தான் இனி பதிவாக்கலாம் என்ற திட்டம். 

சோம்பல் அதிகமாகி விட்டது. படிப்பது குறைந்து விட்டது. ஒருவித சலிப்புத்தன்மையும் உருவாகி விட்டது. இதிலிருந்து மீள ஒரே வழி பதிவுலகில் மீண்டும் பவணி வருவதே. இடையிடையே புத்தகங்களில் இது சம்பந்தமாக நான் படித்த விவரங்களையும் சேர்த்தே பதிவுகள் வரும்.

நாட்டு நடப்பு பற்றியும், அரசியல் சூன்யத்தைப் பற்றியும் எழுத ஆசைதான். கடந்த பாசிஸ ஜெயலலிதா ஆட்சியின் அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் கடைசியாக நான் எழுதிய பதிவு ’தேவை ஆட்சி மாற்றம்’. ஆனால் பணத்துக்கு விலை போன மக்களால் அந்த அவதி ஜெயலலிதா மறைந்தும் தொடர்கிறது இதன் முடிவு எப்போது என்று தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் என்னுடைய எண்ணங்களையும் பதிவு செய்ய விருப்பம் இருக்கிறது.

தொடர்ந்து இனி சந்திப்போம். வழக்கம்போல் ஆதரவு கொடுக்க நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

நானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…

சேமிப்பு, முதலீடு, காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான். விகடன் குழுமத்தின் ‘நாணயம் விகடனை ஆரம்பத்தில் இதற்காகவே வாங்கியதுண்டு. அப்புறம் சோம வள்ளியப்பனின் முதலீடு, பங்குசந்தை சம்மந்தமான அள்ள அள்ளப் பணம் போன்ற புத்தகங்களைப் படித்தபின் அவைகளில் முதலீடு செய்யும் ஆர்வமும் ஏற்பட்டது.

2007-ம் ஆண்டு என நினைக்கிறேன். நிறைய யோசித்து இரண்டு மூன்று பரஸ்பர நிதித் திட்டங்களின் NFO (New Fund Offer) க்களில் முதலீடு செய்தேன். அப்போதைய என் சிற்றறிவுக்கு எட்டியது என்னவோ 10 ரூபாய்க்கு (மிக குறைந்த விலைக்கு) வாங்கும் ஒரு யூனிட் இரண்டு மூன்று வருடங்களில் வளர்ந்து பெரிய தொகையாகும் என்பது என் கணக்கு.

ஆனால் நடந்தது என்னவோ தலைகீழாய்! பத்து ரூபாய்க்கு வாங்கியது 8, 7, 6 ரூபாய்க்குப் போய் இன்றுவரை கூட 11 ரூபாய்க்கு மேல் போகவில்லை. இதுதான் முதல் அடி! அதற்குப் பிறகு கொஞ்சம் அலசி ஆராய்ந்து கடந்த காலத்தில் அந்த திட்டம் கொடுத்த வருமானத் எல்லாம் பார்த்து முதலீடு செய்ய அதுவும் SIP (Systematic Investment Plan) செய்ய அந்த திட்டங்கள் எனக்கு 60, 70 சதவீத லாபம் கொடுத்தன.
                                              


நான் பங்குச்சந்தையில் முதலீட்டைத் தொடங்கிய நேரம் இத்தனை மோசமானதாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நானாவது பரவாயில்லை, பலர் இடி விழுந்தது போல் பதறித்தான் போனார்கள். அன்றைய செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் என எல்லாமே அன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியை விலாவரியாய் சொன்னது. 

முதல் முறை என்றாலும் சுமார் முப்பதாயிரம் ரூபாயை நான் 2008 ஜனவரி மாதம் 16-ம் தேதியோ அல்லது 17-ம் தேதியன்றோதான் முதலீடு செய்திருந்தேன். (என்னோடு பணிபுரிந்து கொண்டிருந்த நண்பரொருவர் சுமார் இரண்டரை லட்சம் வரை முதலீடு செய்திருந்தார்). அடுத்த நான்கே நாட்களில் இப்படி பங்குச்சந்தை வீழ்ச்சி காணும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள். 

என்னுடைய முதலீடு மிகவும் குறைவு என்றாலும், சந்தை வீழ்ந்தால் மீண்டும் எழத்தானே போகிறது. ஏன் கவலைப் படவேண்டும்? நாம்தான் நீண்டகால முதலீட்டை விரும்புபவராயிற்றே… என்று சமாதானம் செய்து கொண்டேன். அதனால் வீழ்ந்திருந்த அந்த நேரத்தில் இன்னம் கொஞ்சம் முலீடு செய்தேன். மீண்டும் அடி! கிட்டத்தட்ட மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் 21,000-த்திலுருந்து 9,000 புள்ளிகள் வரை சரிந்தது. 

நான் வாங்கிய பங்குகள் எதுவுமே எனக்கு இன்றுவரை கைகொடுக்கவே இல்லை. பங்கச்சந்தை புள்ளிகள் மீண்டும் 20,000-த்தை தொட்ட பின்பும் இன்னமும் அந்த பங்குகள் அதள பாதாளத்திலேயே இருக்கின்றது. ஆர்வமும் போய்விட்டது. புள்ளிகள் உயரும்போது ஆசை ஏற்படுவதும், வீழும்போது நல்லவேளை நாம தப்பிச்சோம் என்ற ஆறுதலுமாகத்தான் எனது நிலை போய்க்கொண்டிருக்கிறது.

ஆனாலும் முழுவதுமாக விட்டுவிடவோ, தலைமுழுக்கு போடவோ மனமில்லை. ஏன் சராசரி செய்து வரலாமே என்று சிலர் கேட்கக்கூடும். அந்த பக்குவப்பட்ட மனநிலை இன்னும் எனக்கு வரவில்லை. அதற்கு காரணங்களும் இருக்கின்றன.

வேலை நேரத்தில் செய்ய முடியவில்லை. அது சரியும் இல்லை. பங்குச்சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க முடியாத சூழ்நிலை. இணைய இணைப்பின் வேகம் போதுமானதாக இல்லை. நான் முதலீடு செய்து வரும் ‘ஆன்லைன்’ தரகு நிறுவனமான SBICAPSEC நிறுவனத்தின் டிரேடிங் விண்டோ திறப்பதே இல்லை.

எவ்வளவு முயற்சி செய்தும் ஜாவா செட்டிங்ஸ், பாப்அப் பிளாக்கர், ஃபயர்வால் செட்டிங்ஸ் என எல்லாம் செய்தும் முயற்சி பலனளிக்கவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உதவிமையத்தின் ஆலோசனைகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் புதிய முதலீட் எதையும் செய்ய முடியவில்லை. வாங்கி வைத்திருக்கும் பங்குகள் எதையும் விற்கவும் முடியவில்லை!

இதற்கும் வழி தெரியவில்லை. தொழில்நுட்ப பதிவர்களோ அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களோ எனக்கு உதவுவீர்களா? 

நான் பயன்படுத்திவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான SBICAPSEC நிறுவனத்தில் தொடரலாமா, டிரேடிங் விண்டோ திறப்பதற்கான குறையை நிவர்த்தி செய்வது எப்படி? அல்லது வேறு ஆன்லைன் தரகு திறுவனத்தை அணுகலாமா? அணுகலாம் எனில் எது சிறந்தது? ICICIDIRECT சிறந்த தெரிவாக இருக்குமா? போன்றவற்றை அனுபவமுள்ள பதிவர்கள் தெரியப்படுத்தினால் எனக்கும் என்னைப்போல உள்ள பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமல்லவா?


இன்றைய தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 700 புள்ளிகள் சரிவைச் சந்தித்திருக்கிறது. சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கலாம் என்ற செய்திதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு (ரூ.68.00) குறைந்தது. இது குறித்த ஒரு அருமையான ஒரு பகிர்வு இந்த இணைப்பில்...

வவ்வால் அவர்களுக்காக.... ஆன்லைனில் வாங்க முடியும், விற்கமுடியும் என்பதற்கான விண்டோ...
  இதல் உள்ள புராடக்ட்ஸ் என்பதை கிளிக் செய்தால் மியீட்சுவல் ஃபண்ட் என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்தால் கீழ்க்கண்ட விண்டோ திறக்கும். 


அதில் எந்த வகையான மியூட்சுவல் ஃபண்டையும் வாங்கவோ விற்கவோ மாற்றவோ முடியும். இதன் சேவை திருப்திகரமாக இல்லை என்பதால்தான் வேறு நிறுவனத்துக்கு மாற யோசித்து இந்த இடுகையை எழுதியது.