Sunday, October 1, 2017

மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு?


இந்த மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு? கிட்டத்தட்ட 2007-லிருந்து மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்களை தேடித்தேடி படித்து வருகிறேன். கொஞ்சமாய் அதைப் பற்றிய முழு விவரம் தெரியாமலேயே முதலீடும் செய்ய ஆரம்பித்து விட்டேன். அதனுடைய முழு பலா பலன்களை அறிந்த பிறகு எனது நண்பர்களுக்கும் மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டைப்பற்றிக் கூறி சேமிப்பை இப்படி முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறேன்.

இப்படி அனைவரும் தங்களது பணத்தை சேமிப்பதினால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகமாவதோடு மியூட்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும் பங்குச் சந்தைக்கும் அதிக முதலீடு வரும். இந்தியாவில் வெறும் 2% பேரிடம்தான் டீமேட் கணக்கு இருக்கிறது. சந்தையின் ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்களுக்கு மியூட்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்த வழி. அதுவும் எஸ்.ஐ.பி. என்கிற சிஸ்டமேடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது ரிஸ்க்கை இன்னும் குறைக்கும்.

ஆனால் நிறைய பேர் பயந்து ஒதுங்குவதற்கு காரணம் இந்தப் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ஒருவேளை நஷ்டமடைந்தால் சிறுகச்சிறுக சேமித்த பணம் முழுவதும் போய்விடுமே என்கிற பயம்தான். ஆனால் இதைப் பற்றி புரிந்துகொண்டால் அனைவரும் பயனடைவார்கள் என்ற நோக்கத்தோடுதான் இங்கே என் அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த விவரங்களையும் பதிவிடுகிறேன்.

வாழ்க்கையில் சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புள்ளவர்களாக இருந்தால் சேமிப்பைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்கள். வரவுக்கும் செலவுக்குமே சரியாகப்போகுது என்று சொல்பவர்கள் கூட நெருக்கடியான நேரத்தில் யாரிடமும் கையேந்தாமல் இருக்க ஏதாவது சேமிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி சேமிப்பது, எங்கே சேமிப்பது என்ற சரியான வழிகாட்டல் இன்றி, திட்டமிடல் இன்றி அவதிப்படுகிறார்கள். இன்றும் கூட பரவலாக இருக்கும் சேமிப்பு முறை ’சீட்டு கட்டுவது’. இதில் பணத்தைக் கட்டி பலனடைந்தவர்களை விட ஏமாந்தவர்கள் அதிகம். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நம்பி பணத்தைக் கட்டியவர்கள் கம்பி நீட்டிய பிறகுதான் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

இன்று வரை சீட்டுக் கம்பனி, தீபாவளி ஃபண்டு, அதிக வட்டி என்ற ஆசை காட்டும் நிதி நிறுவனங்கள் என்று அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களும் திருந்தியபாடில்லை. எங்கே தவறு? வங்கியில் வட்டி குறைவு. அஞ்சலகத்திலும் அதே கதைதான். பாமரர்கள், அதிகம் படிக்காதவர்கள் எங்கே போய் அதிக வருவாய் உள்ள பாதுகாப்பான சேமிப்பைத் தொடங்குவது? கிராம வங்கிகளில் பெரும்பாலும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே கணக்கு தொடங்குபவர்கள். படித்தவர்கள் என்ன அத்தனையும் தெரிந்தவர்களா என்ன?

எங்கள் அலுவலகத்திலேயே பலர் அறியாமையில்தான் இருக்கிறார்கள். அல்லது எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்ற ரீதியில் உதவாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தைப் போட்டுவிட்டு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணம் கொட்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் பரஸ்பர நிதித்திட்டங்கள் (மியூட்சுவல் ஃபண்ட்) பற்றியோ, நல்ல காப்பீடு திட்டங்கள் (இன்ஷூரன்ஸ் பாலிஸிகள்) பற்றியோ சரியான புரிதல் இல்லை. முகவர்கள் எதையோ சொல்லி ஏமாற்றியிருப்பதேயே வேதவாக்காக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூடிய மட்டும் என் நண்பர்களிடத்தில் சரியான முதலீட்டு திட்டங்களையும், உயிர் காப்பீடு திட்டங்கள் பற்றியும் விளக்குவதோடு எந்த பிரதிபலனும் பாராமல் உதவி புரிந்தும் வருகிறேன். இந்த அனுபவங்களைத்தான் இனி பதிவாக்கலாம் என்ற திட்டம். 

சோம்பல் அதிகமாகி விட்டது. படிப்பது குறைந்து விட்டது. ஒருவித சலிப்புத்தன்மையும் உருவாகி விட்டது. இதிலிருந்து மீள ஒரே வழி பதிவுலகில் மீண்டும் பவணி வருவதே. இடையிடையே புத்தகங்களில் இது சம்பந்தமாக நான் படித்த விவரங்களையும் சேர்த்தே பதிவுகள் வரும்.

நாட்டு நடப்பு பற்றியும், அரசியல் சூன்யத்தைப் பற்றியும் எழுத ஆசைதான். கடந்த பாசிஸ ஜெயலலிதா ஆட்சியின் அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் கடைசியாக நான் எழுதிய பதிவு தேவை ஆட்சி மாற்றம்’. ஆனால் பணத்துக்கு விலை போன மக்களால் அந்த அவதி ஜெயலலிதா மறைந்தும் தொடர்கிறது இதன் முடிவு எப்போது என்று தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் என்னுடைய எண்ணங்களையும் பதிவு செய்ய விருப்பம் இருக்கிறது.

தொடர்ந்து இனி சந்திப்போம். வழக்கம்போல் ஆதரவு கொடுக்க நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

5 comments:

Bagawanjee KA said... [Reply]

ஒருமுறை இன்வெஸ்ட் செய்துவிட்டு ,பல வருடம் கழித்து முதலுக்கே மோசமான, கசப்பான அனுபவம் பெற்றவன் என்ற முறையில் தங்களின் வழிக்காட்டுதலை வரவேற்கிறேன் கவி ஜி :)

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி பகவான்ஜி. இதே அனுபவம் எனக்கும் உண்டு. பட்ட பின்புதானே தெரிகிறது. வழிகாட்டுதல் இல்லாததால் அல்லது தவறான வழிகாட்டுதலால் வந்த வினை அது. இதைப் பறறியும் அலசுவோம்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said... [Reply]

தற்போதுதான் தங்களின் தளம் வரும் வாய்ப்பு கிடைத்தது. மியூட்சுவல் பண்ட் பற்றிய அருமையான அலசல். தெளிவான புரிதல் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து சந்திப்போம், பதிவுகளின் வழியாக.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

வலிப்போக்கன் said... [Reply]

எனக்கு இதில் ஏமாந்த பட்ட அனுபவம் எல்லாம் கிடையாது நண்பரே...

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!