ஒழுக்க மீறல் பற்றிய குற்ற உணர்வுகள் அர்த்தமற்றதாக மாறி வருவது
பற்றி…. – எம்.
ஞானசேகரன், சென்னை-43.
இப்படித்தான் ஆகும்.
ஒழுக்கம் காலத்திற்கு காலம் மாறுபாடு அடையும். ஜாக்கட் அல்லது கச்சை அணிவது ஒழுக்கக்கேடாக இருந்தது. இப்போது உத்தமமான விஷயமாகி விட்டது. அணியாது போனால் அசிங்கம்
என்றாகிவிட்டது. ஒழுக்க விதிகள் சிக்கலான விஷயம். எப்போது விதிகள் ஏற்படுகின்றனவோ, அப்போது அவை மீறப்படும்.
பல பேர் மீற, மீறியதே விதியாக்கப்படும்.
விதவா விவாகம் விதியாக்கப்பட வில்லையா?
விதவை என்கிற விஷயம் ஆணுக்கு எப்படிப் பொருந்தாதோ, அதே போல பெண்ணுக்கும் மாற்றப்படும்.
ஒழுக்க விதிகளைப் பற்றி அதிகம் புலம்புவதில் லாபமில்லை என்பது என் எண்ணம்.
வாழ்க்கையில் நம்பிக்கை என்பது முன்னேற மாபெரும் சக்தியாக உள்ளது. ஆனால் எதிலும் பற்றற்று
இருப்பது வாழ்க்கை அர்த்தமற்றுப் போகும் இல்லையா? நம்பிக்கை,
பற்றற்று இருத்தல் விளக்கவும். – எம். ஞானசேகரன், சென்னை – 43
கேள்வியில் தவறு இருக்கிறது. ஆசை வாய்ப்பட்டு அலைதல், பற்றற்று இருத்தல் இவை இரண்டும்தான் எதிரெதிராக இருக்கின்றன. நம்பிக்கையை எப்படி எதிர்பதமாகக் கொண்டீர்கள் என்று புரியவில்லை. இறை நம்பிக்கைதான் பற்றற்று இருத்தலின் ஆதாரம். பற்றற்று
இருத்தல் பழகப் பழக இறை நம்பிக்கையும் அப்பால் போகும்.
இதை இன்னமும் சுலபமாக சொல்லித்தருகிறேன். அதீதமாக ஆசைப்பட்டால்,
எந்த உழைப்புமின்றி இது வேண்டும், அது வேண்டும்,
இவரைப்போல ஆகவேண்டும், அவரைப்போல ஆகவேண்டும்
என்று போங்குபட்டால் தோல்விகளை அடுக்கடுக்காக சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்த ஆசைப்பட்ட மனம் தோல்விகளைச் சந்திக்க முடியாமல் புலம்பத்
துவங்கும். ஜெயிப்பது
தோற்பது பற்றி கவலையே படாது பற்றற்ற நிலையில் உழைத்தோமானால் தோல்வி தோல்வியாகத் தெரியாது.
இரண்டாவது முயற்சி என்றே தோன்றாது. தொடர் முயற்சி
என்றுதான் படும்.
ஜெயித்தபோது
‘அம்மா நான் ஜெயிச்சுட்டேன், என்று கூச்சல் போடாது
அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிடும். கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே என்பது அலட்டிக்காம இரு என்கிற தத்துவத்தின் வார்த்தை வடிவம்தான்.
எதை செய்யவே கூடாது என்று நினைக்கிறீர்கள்? – இரா.நெடுஞ்செழியன், வளவனூர்.
தவறே செய்யாத வாழ்க்கை எவருக்கும் இருக்க முடியாது. பொய்யும், திருட்டும், ஒழுக்கக் கேடும் ஆசையின் வேகத்தில்,
சூழ்நிலையின் அழுத்தத்தில் நாம் செய்ய நேரிடலாம். இவைகள் மன்னிக்கவும் படலாம். ஆனால் மறந்து போயும் நம்பிக்கைத்
துரோகம் செய்யவே கூடாது. உற்ற நண்பனை அழித்து உயர்ந்துவிட வேண்டும்
என்று துடிக்கிறபோதே உங்களுக்கு அழிவு காத்திருக்கிறது என்று நம்புங்கள். நட்புக்கு துரோகம் செய்த பல பேர்கள் தனிமைப் பட்டுப்போனதை நான் கவனித்திருக்கிறேன்.
மறந்தும் நம்பிக்கத் துரோகம் செய்யாதீர்கள்.
(இதில் மேலே உள்ள இரண்டு கேள்விகள் பல்சுவை நாவலில் பதிலளித்த பாலகுமாரனிடம் நான் கேட்ட கேள்விகள்தான்).
6 கருத்துகள்:
வணக்கம் கவி,
இந்த மாதிரியான தத்துவ விசாரங்கள், சந்தேகங்கள் எனக்கும் அவ்வப்போது தீவிரமாக எழும். மிக இயல்பாக சந்தோஷமாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சுலபமாக வாழ்வை எதிர்கொள்பவர்களைப் பார்த்து எளிமையாக இருத்தலின் சுகம் எவ்வளவு பெரிய வரம் என்று அவ்வப்போது தோன்றுவதும் உண்டு.
மத்திய வயதை அண்மிக்கும் இந்தப் பருவத்தில் நான் நினைப்பது என்னவெனறால், நம்மிடம் இருந்து எல்லா அனைத்து மத சார்பான கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் துண்டற அகற்றி விட்டு மனிதப் பண்புகளை மற்றும் மனிதனாக இருத்தல் என்பதன் முழுமையான அர்த்தத்தை நம் வாழ்வில் அமுல் படுத்தினால் பலவற்றுக்கு விடை காண முடியும் என்று தோன்றுகிறது.
இதனை உலகம் சார்ந்து யோசித்துப் பார்த்தால்... உலகின் உள்ள சகல மதங்களையும் அகற்றி விட்டு பாடசாலையில் இருந்து ‘மனிதனாக இருத்தல்’ என்பதன் பால பாடத்தை சொல்லிக் கொடுக்கத் தொடங்கினால் இந்த உலகில் போர் இருக்காது, குழப்பங்கள் நேராது, சாதி, நிற, இன, மத பேதங்கள் இருக்காது....
எத்தனை அழகாக இருக்கும் இந்தப் பூமி!
@மணிமேகலா வருகைக்கு நன்றி மணிமேகலா அவர்களே. இந்தக்கேள்வி எனக்கு 90 களிலேயே ஏற்பட்டது. அதன் விளைவுதான் பாலகுமாரனிடம் இந்தக் கேள்வியை எழுப்பினேன். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு அலட்டலே இல்லாமல் வாழ்பவர்களைப் பார்த்து பொறாமைதான் ஏற்படுகிறது. நம்மைப்போன்ற சிலர்தான் ஏதோ கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பவர்கள் போல பரிதவிக்கிறோம். இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக நமக்கு கற்பிக்கப்பட்டுவந்ததின் விளைவு என்பதை படித்தவர்களாகிய நாம் மறந்துவிடுகிறோம். காலம்தோறும் எல்லா நெறிமுறைகளும் மாறித்தான் வந்திருக்கிறது. ஒரு சிறிய தவறைக்கூட மன்னிக்க மனமில்லாமலும், அதே தவறை நாம் செய்ய சேரும்போது மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இன்று வரை எந்த விஷயத்தையும் எளிதாகவே எடுத்துக்கொள்ள முடியவில்லை. இனி வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டியது இது மட்டும்தான். வாழ்க்கையை அதன்போக்கிலேயே விட்டுவிட வேண்டும், எதற்கும் அலட்டிக் கொள்ளக்கூடாது என்பதை மட்டும்தான். இதைப்பற்றிய பதிவு ஒன்றை எழுதவும் எண்ணமிருக்கிறது.
உங்களின் கருத்துப்படி அனைத்து மத சார்பான கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் அகற்றிவிட்டு மனிதனாக வாழ்தலின் அவசியம் இனி வருங்காலத்தின் அத்தியாவசியமாக மாறவேண்டும். ஆனால் மத சடங்குகள் மற்றும் கடவுள் நம்பிக்கைகளிலிருந்து மக்கள் வெளிவந்தாக வேண்டுமே. இது நடக்கிற காரியமாகத் தெரியிவில்லை. பாடசாலைகளிலிருந்து தொடங்கினாலும் இன்னுமொரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டும்.
தங்களின் அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி.
எங்களோடு நாங்கள் இரக்கமாய் இருக்க வேண்டும் கவி.நாமே நம்மோடு இரக்கமாய் இல்லாவிட்டால் வேறு யார் எம்மோடு இரக்கமாய் இருக்கக் கூடும்?
சமயம் மாத்திரமல்ல. உலகத்துப் பண்பாடுகளையும் விழுமியம் என்று நாம் கொண்டாடுகிற அத்தனைகளையும் கூட மக்களின் வாழ்வில் இருந்து முற்றிலுமாக அகற்றி விட்டு அந்த இடத்தில் மனிதனாய் வாழ்தல் என்பதன் தார்ப்பரியத்தை விதைக்க வேண்டும்.( சாத்தியமில்லைத் தான். இருந்த போதும்..)
தவறுகள் விடுவது மனித இயல்பு. அதனை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நாம் உணர்ந்த கணம் மனிதனாகி விடுவோம். மீண்டும் அந்த தவறை செய்ய மனம் இடம் கொடாது. அது போதாதா?
ஒரு அனுபவத்தில் இருந்து பாடத்தைப் படிப்பதும்; நம்மை மன்னிப்பதும்; அடுத்த கட்டத்துக்கு நம்மை நகர்த்துவதும் தான் நாம் செய்ய வேண்டியது.
இந்த அனுபவம் நாம் படிக்க வேண்டி இருந்த ஒரு பாடம். அவ்வளவுதான். அதற்கு மேலே அதைப்பற்றி நினைக்கவும் வருந்தவும் பச்சாதாபம் கொள்ளவும் வேண்டியதில்லை. இறைக்கிற கிணறு தானே ஊறும்.
மனிதனுக்கு மறக்கத் தக்க வல்லமை கிடைத்திருப்பது பெரிய வரம் நண்பா.
just let it go buddy
Kamalhassan's movie Virumaandi and not Mahanathi
@கவிப்ரியன் வேலூர்உண்மைதான் மணி! தப்பு செய்யறவன்தான் மனுஷன். அதை மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்னு ஒரு வசனம் கமலஹாசனின் 'விருமாண்டி' படத்துல ஒரு வசனம் வரும். அதைத்தான் ஞாபகப்படுத்தியது உங்கள் கருத்து. ஒவ்வொரு வயதிலும் புதுப்புது அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுதான் வருகிறோம். மனிதனுக்கு மறக்கத்தக்க வல்லமை கிடைத்திருப்பது உங்கள் கூற்றுப்படி வரம்தான். ஆனால் எல்லாவற்றையும் மறக்க முடிவதில்லையே அதுதானே பலவீனம்!
@Anonymous தவறு நேர்ந்து விட்டது நண்பரே. விருமாண்டி தான் சரி. இப்போது திருத்திவிட்டேன்.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!