Sunday, November 8, 2015

முத்தான முத்திரைக் கவிதைகள்


        
   அன்பு

அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்…
அம்மா
என்றேன் உடனே!
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ… என்று!
-    தாஜ்
2.       
   ஏ… கோழையே…
கோழையே…
விண்ணை முட்டும்
கட்டடங்களை
கண் இமைக்கும்
பொழுதுக்குள்
தரைமட்டம்
செய்கிறாயே…
சரிந்து விழுந்த மாடிகளை
ஒரே நொடிக்குள்
கட்டிட முடியுமா
உன்னால்?
எண்ணில் அடங்கா
உயிர்களை
விரல் சொடுக்கும்
வேளைக்குள்
சிதறடிக்கிறாயே…
ஓய்ந்து நின்ற இதயத்தை
ஒரே ஒரு முறை
இயக்கிட முடியுமா
உன்னால்?
கண்ணாய் இமையாய்…
விரலாய் நகமாய்…
கலந்திட்ட மக்களை
மதவெறியால்
பிரிக்கிறாயே…
விரிசல் விழுந்த நேசத்தை
ஒரே கண்ணாடியாய்
சேர்த்திட முடியுமா
உன்னால்?
செய்…
இத்தனையும் செய்…
சரிந்த மாடியிடம்…
ஓய்ந்த இதயத்திடம்…
ஒஇரிசல் விழுந்த
நேசத்திடம்…
உன் வீரத்தைக் காட்டு
தீவிரவாதி என்று
ஒப்புக்கொள்கிறேன்..!
-    தாஜ்
3.       
   எங்கும் எதிலும்…
கள்ளச்சாராயம்
காய்ச்சிய பணத்திலும்
உடலை விலை பேசி
விற்று வந்த பணத்திலும்
ஏழைத் தாலியின்
அடகுப் பணத்திலும்
ஈட்டிக்காரனின்
வட்டிப் பணத்திலும்
அதே புன்னகையுடன்
காந்தி படம்!
-    டெல்லி எஸ் ராமஸ்வாமி

4.       திணை மயக்கம்
அந்தப் புறாக்கள்
அஃறிணை
குருத்வா ஓரமும்
கூட்டமாய் இரை
தேடலாம்
சிலுவைகள் மீதமர்ந்தும்
சிறகுகள் கோதலாம்
தாகமா…
தர்கா வாசலில்
தண்ணீர் பருகலாம்
ஊர்வலமாய்
தெரு எது வழியும்
திரும்பலாம்
எல்லாம் முடிந்து
கோபுர உச்சியில்
கூட்டில் அடையலாம்
தெரிந்தால் சொல்
திணை மாறும் வழி.
-    நெல்லை ஜெயந்தா
5.    
   நானும் நீயும்
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பsன்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின்
பட்டியல் தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை!
-    ஜெயபாஸ்கரன் 

(ஆனந்த விகடனில் 2003 ஆம் ஆண்டு ஒரு கவிதைப்போட்டியில் முதல் ஐந்து பரிசுகள் பெற்ற கவிதைகள் இவை.)

8 comments:

Marketing Allinoneindia said... [Reply]
This comment has been removed by the author.
கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Marketing Allinoneindia தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே.

Joshva P.P said... [Reply]
This comment has been removed by the author.
கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Joshva P.P வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

எண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதி said... [Reply]

நல்ல கவுதைகளை பகிரந்திருக்கிறீர்கள் நன்றி

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@எண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதி வருகைக்கு மிக்க நன்றி நிலாபாரதி அவர்களே.

Joshva P.P said... [Reply]

சிறந்த பதிவு.... தொடரட்டும் ...பகிர்வுக்கு நன்றி
Joshva

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Joshva P.P வருகைக்கு மிக்க நன்றி நன்பரே.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!