சினிமாவில்
எத்தனையோ பரிதாப கதையை பார்த்து இருப்பீர்கள் ஆனால் சமூக நல சிந்தனையோடு
வெங்கட்ரமணன் எடுத்த அப்பா வேணாம்பா என்ற படத்தின் பரிதாப கதையைபற்றி
கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்
கொஞ்சம்
கேளுங்களேன்...
சினிமா
என்பது மகத்தான மீடியம் இதன் மூலம் வலுவான கருத்து சொல்லமுடியும் என்ற அசையாத
நம்பிக்கையுடன் பார்த்த பாங்க் வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்கு சென்றவர்தான்
வெங்கடரமணன்.
பத்து பனிரெண்டு
ஆண்டு காலம் போராடிய போதும் ஜெயிக்க முடியவில்லை, ஜெயிக்க முடியவில்லை என்பதைவிட ஜெயிக்க
விடவில்லை என்பதே நிஜம்.
இவர்கள்
என்ன வாய்ப்பு கொடுப்பது நாமே சினிமா எடுப்போம் என்று களத்தில் இறங்கினார். கையில்
இருந்தது மூன்று லட்சமும் ஒரு செவன் டி கேமிராவும்தான். இந்த பணத்தில் நாடகம் கூட
போடமுடியாது என்றாலும் துணிந்து சினிமா எடுப்பது என்று முடிவு செய்து எடுத்த
படம்தான் அப்பா வேணாம்ப்பா...
தெருவுக்கு
ஒரு குடிகாரர்கள் இருந்தது போய் இப்போது வீட்டுக்கு ஒரு குடிகாரர் இருக்கும்
வேதனையான கால கட்டமிது. ஏழைத்தொழிலாளர் முதல் மாணவர் வரை டாஸ்மாக்கிற்கு சென்று
காசையும் உடலையும் கரைக்கும் மோசமான சூழல் இது.
குடியால்
பல குடும்பங்கள் கண் எதிரே மண்ணாகி கொண்டிருப்பதை பார்த்த வேதனையை, அவர்களுடன் பேசிப்பழகிய அனுபவத்தை
விளக்கும் வகையில் எடுத்த படம்தான் அப்பா வேணாம்ப்பா படம்.
தியேட்டர்
வாடகை தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு டான்ஸ் இல்லை கவர்ச்சி இல்லை மாசலா இல்லை
யாருய்யா பார்க்க வருவாங்க என்று சொல்லிவைத்தார் போல எல்லா தியேட்டரிலுமே இவரை
விரட்டிவிட்டனர்.
குடியின்
கொடுமையை விளக்கும் படம். நியாயமாக பார்த்தால் வரிவிலக்கு கிடைத்திருக்க வேண்டும்.
பாதிடிக்கெட் கட்டணத்தில் மக்கள் படம் பார்த்து திருந்தி விடப் போகிறார்களே என்று
நினைத்தார்களோ என்னவோ வரிவிலக்கு தரவில்லை.
சரி, தலைப்பு தமிழில் வைத்திருக்கிராரே அதற்கு ஒரு தொகை உண்டா
என்று கேட்டால் அதைப் பற்றியும் பேச்சு இல்லை.
எதுவும் வேண்டாம்
நான் எடுத்த படத்தை மக்கள் பார்த்து தீர்ப்பு சொல்லட்டும் என்று முடிவு செய்தால்
தியேட்டர் கிடைக்கவில்லை.
கடைசியாக ஊருக்கு
ஒதுக்குப்புறமான சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் தியேட்டரில்
பகல் 11 மணிக்காட்சியாக
கடந்த நான்கு நாட்களாக ஒடிக் கொண்டு இருக்கிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாட்கள்
ஒடலாம்.
படம்
பார்த்தவர்கள், படம்
முடிந்ததும் வாசலில் நின்று நன்றி சொல்லும் படத்தின் இயக்குனர் நடிகர் வெங்கடரமணனை
கண்ணில் நீர்தழும்ப கட்டிப்பிடித்து பாராட்டுகின்றனர். ஆனால் படத்தை பார்ப்பவர்கள்
எண்ணிக்கைதான் மிகவும் குறைவாக இருக்கிறது.
நல்ல
உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் குடிக்கு அடிமையானதன் காரணமாக குடும்பத்தை நட்பை
உறவை இழந்து ஈமொய்க்க தெருவிலும் சாக்கடையிலும் கிடக்கும் நிலைக்கு செல்கிறார்.
பின்னர் திருந்தி திரும்ப பழையநிலைக்கு எப்படி வருகிறார் என்பதுதான் கதை.
குடிசைத்தொழில் அடிப்படையில்
படம் எடுத்திருந்தாலும் படத்தின் தரத்தில் எந்த குறையும் இல்லை செலவை
குறைப்பதற்காக இவரே நடித்து பாடல் இயற்றி பாட்டுப்பாடி இருக்கிறார். ஆனால்
இவரைத்தவிர வேறுயாரும் இப்படி நடித்திருப்பார்களா என்று நினைக்குமளவிற்கு நடித்து
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
கிட்டதட்ட நான்கு
லட்ச ரூபாய்க்குள் படத்தை எடுத்து முடித்தாலும் அதன்பிறகு படமாக வெளியில்
கொண்டுவருவதற்குள் பத்து லட்சமாகிவிட்டது. கடன்பட்டும் கஷ்டப்பட்டும் படத்தை தயார்
செய்தாலும் எந்த தியேட்டரிலும் இந்த படத்தை ஓட்டுவதற்கு முன்வரவில்லை.
இந்த
படத்தை மது குடிப்பவர்கள் மற்றும் மது குடிக்காதவர்கள் என அனைவருமே பார்க்க
வேண்டும்.
எப்போதாவது
குடிக்கலாம் விழாக்களில் குடிக்கலாம் சந்தோஷத்திற்கு குடிக்கலாம் என்று குடிக்காதவர்களை
சுற்றிசுற்றி வந்து கும்மியடித்து குடிக்கவைக்க நடக்கும் முயற்சியில் இருந்து
தப்பிக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.
குடி
என்பது ஒரு நோயே அதில் இருந்து விடுபடுவது மிகவும் எளிது எப்படி என்பதை தெரிந்து
கொள்ள குடிப்பழக்கம் உள்ளவர்கள் நண்பர்களுடன் இந்த படத்தை பார்க்கலாம்.
பத்து
லட்ச ரூபாய் செலவில் ஒரு சினிமாவை சுவராசியம் குறையாமல் எடுக்கமுடியுமா என்ற
கேள்வியை மனதில் தேக்கி வைத்துக்கொண்டுள்ள கலைஞர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.
சம்பாதிக்க துவங்கிவிட்ட
மகனிடம் குடியின் பக்கம் போய்விடாதே என்று எப்படிச் சொல்வது என தயங்கும்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் இந்த படத்தை பார்க்கலாம்.
இந்தப்
படத்தை உங்கள் ஊர் தியேட்டரில் ஒட்டி உங்கள் ஊருக்கு மக்களுக்கு நல்லது செய்ய
நினைக்கிறீர்களா ஒரு ஃபோன் போடுங்கள் வெங்கடரமணன் படப்பெட்டியுடன் வந்துவிடுவார்.
சென்னையில்
இருப்பவர்கள் வாய்ப்பு கிடைத்தால் என்று கூட சொல்ல மாட்டேன் வாய்ப்பை
உருவாக்கிக்கொண்டு கூட இந்த படத்தை பாருங்கள்.பார்த்துவிட்டு நேரிலோ அல்லது போனிலோ
ஒரு வார்த்தை பாராட்டுங்கள் காரணம் வெங்கடரமணன் போன்ற போராளிக் கலைஞர்கள்
நாட்டுக்கும் நமக்கு தேவை.அவரது போன் எண்: 9444388107.
நன்றி;
தினமலர்