Sunday, December 21, 2014

கல்விக்கூடத்தின் தரம் எதைப் பொறுத்தது?(சென்ற பதிவின் தொடர்ச்சி....)
வெளி மாநிலத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராகக் கூட வாழாத நகரத்தில் இருக்கும் பள்ளியில் தமிழையே இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்திருக்கலாமே என்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் முடியாது ஹிந்திதான் என்கின்றனர். இதை யாரிடம் போய் சொல்லி அழுவது! ஆசிரியர்கள் என்னும் போர்வையில் அரை வேக்காடுகளை வேலைக்கு அமர்த்தியிருக்கும் இந்தப் பள்ளியில் மகளை சேர்க்கக்கூடாது என்று முடிவெடுத்து வெளியேறினேன்.

அதற்கு மேல் உள்ள பள்ளி முதல்வரை சந்தித்திருக்கலாம்தான். ஆனால் மக்கள் முதல்வர்அளவுக்கு பந்தா காட்டுபவர்களிடம் எதற்கு கூழைக்கும்பிடு போட்டு தேவுடு காக்க வேண்டும் என்ற ஆத்திரம் வந்துவிட்டது. இந்தப் பள்ளியில் இடமே கிடைக்காது என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்ததினால் நானும் நல்ல பள்ளியாகத்தான் இருக்கும் என்று நம்பியிருந்தேன். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே சேர்த்து பள்ளியின் பெயரை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பிறகுதான் புரிந்தது.

அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு பள்ளியை அணுகிணேன். அதுவும் கிறித்துவ நிறுவனம் நடத்தும் பள்ளிதான். பள்ளியைப் பற்றி அத்தனை நல்ல பெயர் இல்லை. ஆசிரியர்களின் தரத்தை வைத்துத்தானே பள்ளியின் சிறப்பு இருக்கிறது. கட்டிடத்தை வைத்து அல்லவே. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பள்ளியின் முதல்வர் ஒரு கன்னியாஸ்திரி. புதிதாக சேர்ந்த பிள்ளைகளை வரிசையில் நிற்க வைத்து அணி பிரித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் பள்ளி முதல்வர்தான் வழிநடத்திக் கொண்டிருந்தார்.

இவ்வளவு நேரம் காக்க வைக்கிறார்களே என்கிற எரிச்சல் கூட வந்தது. ஆனால் அவர் வந்து இருக்கையில் அமர்ந்ததும் அழைத்தார் விபரம் சொன்னேன். மதிப்பெண் பட்டியலைக் காட்டியதும் உடனடியாக இடம் தர ஒப்புக்கொண்டார். மொழிப்பாடம் குறித்து கேட்ட போது ஹிந்தி படித்துவிட்டு தமிழ் எப்படி முடியும் என்றார். ஒன்பதாம் வகுப்புவரை தமிழ்நாட்டில் படித்ததைக் கூறினேன். தமிழில் ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதச் சொன்னார். எழுதிக்காட்டினாள். பள்ளியில் இடம் உறுதியாயிற்று.

வேறு பள்ளியே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. வீட்டிற்கு அருகிலேயே ஒரு அரசினர் மேனிலைப் பள்ளி. இது நான் படித்த பள்ளியும் கூட. ஆனால் இன்றைய அதன் நிலைமையைக் கேட்ட பிறகு அதில் மகளைச் சேர்க்க மனம் ஒப்பவில்லை. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போதே வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஒரு அரசினர் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு அதே வகுப்பில் பத்தாம் வகுப்பு மாணவனால் ஏற்பட்ட கொடூரத்தையும் படிக்க நேர்ந்தது. இதுதான் இப்போதைய அரசு பள்ளிகளின் நிலை. 
 
மற்றுமொரு பள்ளி 2 கி.மீ. தொலைவில்ஒரு காலத்தில் என் வகுப்புத் தோழிதான் அங்கு பள்ளி முதல்வர். அந்த பள்ளி மீதும் எனக்கு அத்தனை நல்ல அபிப்ராயம் இல்லை. புத்திசாலி பிள்ளைகள் எங்கு படித்தாலும் நன்றாகத்தானே படிப்பார்கள். ஆனாலும் பள்ளியின் ஒழுக்கம், கட்டுப்பாடு, மாணவ மாணவிகளின் பாதுகாப்பு என பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது இல்லயா?

கல்வி என்பது வியாபாரமாகி பல வருடங்களாகி விட்டது என்றாலும், சில கல்வி நிறுவனங்கள் தரத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தன. ஆனால் தற்பொதையை சூழலில் வருமானம் ஒன்றே அவர்களின் இலக்கு. ஆசிரியர்களின் தரமோ கேவலமாக இருக்கிறது. மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும், நன்னெறிகளையும் போதிக்கக் கூடியவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்

ஆனால் குறைந்த ஊதியத்தில் அரைகுறை படித்தவர்களை ஆசிரியர்களாக்கி பொது அறிவோ, வழிகாட்டும் திறனோ இல்லாதவர்களைத்தான் பள்ளி நிர்வாகங்கள் வேலைக்கமர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் ஏதோ ஒன்றில்தான் நம் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.

2 comments:

Mathu S said... [Reply]

திறனாய்வு...
சமூக அவலம் ஒன்றை காட்சிபடுத்தி இருக்கிறீர்கள்
Click here.. My Wishes!

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி மது.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!