புதன், 24 டிசம்பர், 2014

ஈ.வெ.ரா.பெரியார் - எம்.ஜி.ஆர். - கே.பாலச்சந்தர்

தந்தை பெரியார்

இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலே ஒரு மிகப் பெரிய புரட்சியை, விழிப்புணர்வை ஏற்படுத்திய உன்னத மனிதர். இவரின் கடவுள் மறுப்பையும், பிராமண எதிர்ப்பையும் மட்டுமே விமர்சிப்பவர்கள் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும், ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தன் வாழ்நாளின் கடைசி வரை போராடியதை மறுக்க மாட்டார்கள். ஒரு தலைமுறையே தலை நிமிர்ந்து நிற்க வழி வகுத்தவர். இவர் போட்ட பாதையில் பயணித்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. பகுத்தறிவு என்ற வார்த்தையை புழக்கத்தில் கொண்டு வந்தவர். 

காலங்காலமாக ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் பின்பற்றி வந்த சடங்கு சம்பிரதாய பழக்க வழக்கங்களை கேள்வி கேட்டு திணறடித்தவர். பழம் பெரும் இதிகாசங்களில் உள்ள ஆபாசங்களை போட்டுடைத்தவர்.  அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பெருமை என நினைக்க வைத்த பெருந்தகையின் நினைவு நாள் இன்று. அவருக்கு எனது வணக்கத்துக்குரிய நினைவஞ்சலி!

எம்.ஜி.ஆர்.

நடிகனும் நாடாளலாம் என்பதை நாட்டிற்கு உணர்த்தியவர். ஏழைப்பங்காளர். மக்களின் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்தவர். தன்னுடைய திரைப்படங்களில் நடிப்பிற்காகக் கூட தவறான செய்திகளைச் சொல்லாதவர். அவர் மறைந்து ஒரு புதிய தலைமுறை தோன்றிய பின்பும் தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருப்பவர். அரசியலில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகினாலும் கடைசிவரை தன்னுடைய பிம்பத்தை இழக்காதவர். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தும் தன் உற்றார் உறவினர்களை ஒரு எல்லைக்குள் வைத்திருந்தவர். மரணத்தின் போது அவருக்கிருந்தது ராமாவரம் தோட்ட வீடும், சத்யா படப்படிப்பு நிலையமும், அ.தி.மு.க. என்ற கட்சியும் மட்டும்தான்.

அதன் பிறகு கட்சியை தன் வசப்படுத்தியவர்கள் இன்று அதை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஊழலுக்கு எதிராக தனிகட்சி தொடங்கினாரோ அதே ஊழலில் தமிழகமே வெட்கித் தலைகுனியும் நிலையில் கட்சியின் தலைவரே தமிழக முதல்வரே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று 'கைதி'யனதும் அந்த மக்கள் தலைவரின் பெயருக்கு ஏற்பட்ட மாபெரும் களங்கமாகும். பெரியாரின் நினைவு நாளிலே உயிர் துறந்து அவரோடு சேர்த்து என்றென்றும் நம் நினைவில் நிழலாடும் மக்கள் திலகத்திற்கு மனமார்ந்த நினைவஞ்சலி.

கே. பாலச்சந்தர்

நேற்று மறைந்த திரையுலப் பிதாமகன் பாலச்சந்தர் அவர்களைப் பற்றி தனிப்பதிவுதான் போடவேண்டும். வெறும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை மட்டுமே பார்த்துப் பழகிய காலகட்டங்களில் மாற்று சினிமா என்ற புதுமையை புதியவர்களை வைத்து எடுத்து சாதித்துக் காட்டியவர். இவர் இயக்கிய படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 'நிழல் நிஜமாகிறது'. திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டிய படங்கள், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அவர்கள், பட்டிணப் பிரவேசம், அழகன், சிந்து பைரவி, வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி போன்றவை. 

இவரின் தொலைக்காட்சித் தொடரான இரயில் ஸ்நேகம் இன்றுவரை மறக்க முடியாதது. முடிந்த வரைக்கும் சமூகக் கருத்துக்களையும், சக மனிதர்களின் பிரச்னை மிகுந்த வாழ்க்கையையும், பெண்ணின் மன உணர்வுகளையும் காட்சிப்படுத்திய வகையில் இவரும் ஒரு புரட்சியாளரே! தென்னிந்திய திரையுலக ஜாம்பவான்களில் முக்கியமானவராகத் திகழ்ந்த அன்னாருக்கு அஞ்சலியையும், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

எம்ஜிஆர் இன்று வரையிலும் எனக்கும் ஆச்சரியமானவரே

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி!

Kasthuri Rengan சொன்னது… [Reply]

அருமையான பதிவு
த ம நான்கு
Click here.. My Wishes!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி மது அவர்களே.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது… [Reply]

இரங்கல் உரை என்பதாலோ என்னவோ பின்னவர் இருவர் மீதும் உள்ள விமர்சனங்களைத் தவிர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். சரியான பார்வையை -அது நமக்கே சரியென்று தோன்றும் பட்சத்தில்- வெளியிடுவதில் தவறில்லை என்பதே என் கருத்து. இனி வரும் காலங்களில் அதைச் செய்ய வேண்டுகிறேன். உண்மை, வெறும்புகழ்ச்சி வேண்டாமே? நன்றி

Jayadev Das சொன்னது… [Reply]

MGR ஊழல் செய்யாதவரா? ஐயாம் சாரி..............

தமிழகத்திற்கு பெரியாரின் பங்கு என்ன? எவ்விதத்தில் அது பிற மாநிலங்களை விடச் சிறந்தது? இதற்குப் பதில் தெரியாவிட்டால் பெரியார் பிடுங்கியது அத்தனையுமே தேவையில்லாத ஆணிகள் தான் என்பதை உணர்க.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

முத்து நிலவன் ஐயா, வெறும் நினைவுநாள் அஞ்சலி என்பதாலேயே சுருக்கமாக பதிவிட்டேன். உண்மையைச் சொல்ல நான் எப்போதும் தயக்கம் காட்டியதை இல்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்... ஆனாலும் மனிதர்கள் எல்லாருமே பலம் பலவீனம் ஆகிய குணங்களைக் கொண்டவர்கள்தான். இவற்றில் எது அதிகமாக வெளிப்படுகிறதோ அதைத்தான் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த உலகில் அப்பழுக்கில்லாத மனிதர் யார்?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஜெயதேவ்தாஸ், எம்.ஜி.ஆரை ஊழல் செய்யாத மனிதர் என்று சொல்லவே இல்லை. ஆனால் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அளவுக்கு ஊரையெல்லாம் வளைத்துப் போடவில்லை. 'அரசியலில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகினாலும்....' என்ற எனது வரிகளை கவனிக்கவில்லையா? ஜெயலலிதாவை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி அ.தி.மு.க.வை இத்தனை அசிங்கப்படுத்தியதற்கு முழு முதற்காரணம் எம்.ஜி.ஆர்.தான் என்பதை மறுப்பற்கில்லை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது… [Reply]

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!