புதன், 12 நவம்பர், 2014

அன்புள்ள சகோதரி… ஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

பெறுநர்;
செல்வி ஜெயலலிதா,
முன்னாள் எம்.எல்..,
சென்னை.

அன்புள்ள சகோதரி
வணக்கம். முன்னாள் எம்.எல்.., என்று உங்களைக் குறிப்பிட்டதைக் கண்டு ஒரு வேளை நீங்கள் முகம் சுளிக்கக்கூடும். ஆனால் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, உங்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற ஆசையினாலேயே அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன். அதுதானே உங்கள் பாணி?! கலைஞருக்கு அனுப்பிய உலகத்தமிழ் மாநாட்டு அழைப்பிதழில் அப்படித்தானே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்?! 
 

தேர்தல் முடிவுகளைக் கண்டு மிரண்டு போய் ஒட்டு மொத்தமாக அத்தனை தலைவர்களும் உங்கள் பாணியைக் கைவிட்டு ஓடுகிற நேரத்தில் உங்கள் பாணியைப் பின்பற்ற ஒருவன் இருக்கிறான் என்பது உங்களுக்கு ஆறுதலாகத்தானே இருக்கும்?

ஆனால் தேர்தல் தோல்விகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. அண்ணா, காமராஜர், இந்திரா போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோற்றுப் போயிருக்கிறார்கள். அப்படித் தோற்றுப் போனவர்கள் மீண்டும் வெற்றியின் பாதையில் வீறுநடை போட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் மக்கள் மனங்களை ஏற்கனவே வென்றிருந்தார்கள் என்பதுதான். ஆனால் நீங்கள்?

ராஜிவ் காந்தியின் மரணம் ஒரு மிகப் பெரிய வெற்றியை உங்களுக்குப் பரிசாகத் தந்தது. நீங்கள் அதற்கு நன்றி செலுத்துவதற்கு ஆயிரம் வாய்ப்புகள் வந்தன. ஒரு பல்கலைக் கழகத்துக்கு அல்லது ஒரு மாவட்டத்திற்கு அல்லது ஒரு அரசாங்க கட்டிடத்திற்கு அவ்வளவு ஏன், குறைந்த பட்சம் ஒரு தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டியிருக்கலாம். ஆனால் கனவுகளோடு மரித்துப் போன அந்த இளைஞனின் கல்லறைக்குப் பூ வைப்பதற்குக் கூட நீங்கள் போகவில்லை.

நீங்கள் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றெண்ணியே மக்கள் வாக்களித்தார்கள். நீங்கள் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல எம்.ஜி.ஆரையும் மறந்து போனீர்கள். சின்ன ரோஜாப்பூவிற்குக் கூட உங்கள் பெயரைச் சூடி மகிழ்ந்த நீங்கள் ஒரு திரைப்பட நகரம் உருவானபோது கூட அந்தப் பொன்மனச் செம்மலின் பெயரை ஒதுக்கித் தள்ளினீர்கள். நன்மை செய்யாதவர்களைக் கூட மன்னித்து விடுகிற நம் தமிழ் மக்கள் நன்றி மறந்தவர்களை தண்டித்து விடுகிறார்கள்.

அந்த அப்பாவித் தமிழ் மக்கள், அன்று நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் உங்கள் மீது மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் நீங்களோ மனங்களை விடப் பணத்தின் மீது நம்பிக்கை வைத்தீர்கள். அன்று பத்திரிகைகள் எல்லாம் உங்கள் மீது அன்பைப் பொழிந்தன. ஆனால் அவர்கள் மீது அலட்சியம் என்ற வெந்நீரை வீசித் துரத்தினீர்கள்.

அந்த ஆரம்ப நாட்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் உங்களைத் தங்கள் உடன் பிறவாச் சகோதரியாக வரித்திருந்தார்கள். ஆனால் நீங்களோ ஒரே ஒருவரை மட்டும் அங்கீகரித்து அழகு பார்த்தீர்கள்.

நீங்கள் காலில் விழுந்தவர்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்தீர்கள். மக்களோ நீங்கள் கை தூக்கி விடுவீர்கள் என்றெண்ணிக் காத்திருந்தார்கள். உங்களைத் தெய்வமாகச் சித்தரிக்கும் கட் அவுட்களைக் கண்டு பூரித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் விலைவாசி ஏற்றத்தால் கௌரவமான மக்களாக வாழவே தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் கல்யாணச் சாப்பாடு போடுவதாக எண்ணி வைத்த விருந்துகளைக் கூட அவர்கள் பிச்சைச் சோறு புசிப்பதாகவே எண்ணிப் புழுங்கினார்கள். ஏனெனில் அதில் அன்பு எனும் தேனை விட ஆடம்பரம் என்ற உப்பே தூக்கலாக இருந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போது கூட நீங்கள் மகாபாரதக் கதைதான் சொன்னீர்கள். அரசியல் பிழைத்தாருக்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தை மறந்து போனீர்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உட்காருவதற்கு உரிமையுள்ள சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் நாற்காலியில் அன்று ஒரு முறை உங்கள் தோழியை உட்கார்த்தி வைத்தீர்கள். இன்று மக்கள் உங்கள் நாற்காலியைப் பறித்து விட்டார்கள்.

தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தங்களை ஆள்வதை மக்கள் ஒரு போதும் சகித்துக் கொண்டதில்லை. இந்திரா காந்தியின் ஆட்சியில் சஞ்சய் காந்தி, உங்களது ஆட்சியில் இன்னொரு சக்தி. ராஜிவ் மரணத்தால் உங்களைப் பதவியில் அமர்த்தி வைத்த மக்கள் எமர்ஜென்ஸி காலத்திய இந்திரா காந்தியைப் போல் நீங்கள் நடந்து கொள்ளத் தலைப்பட்ட போது, அவருக்கு கொடுத்த பரிசையே உங்களுக்கும் தந்து விட்டார்கள்.

தவறுகள் குற்றங்கள் அல்ல. ஆணவம் அகன்ற மனம் இருந்தால், குப்பைகளே உரமாக மாறுவதைப் போல், தவறுகளைப் பாடமாக ஆக்கிக் கொள்ள முடியும். அது இருக்கிறதா உங்களிடம்?

உங்களுக்கு இருந்த நற்பெயர் நாசமாவதற்கு காரணமாக இருந்த சக்திகளை இனியேனும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அவற்றை அகற்றுவதன் மூலமே மீண்டும் நீங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். களை எடுத்தால்தான் பயிர் செழிக்கும். அப்புறம் உங்கள் இஷ்டம்.

1996 ம் ஆண்டு தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டிய சமயத்தில் ‘குமுதம்’ வார இதழில் தமிழன் என்ற பெயரில் (மாலன் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்) எழுதப்பட்ட தலையங்கம் இது. அது அப்படியே இன்றும் பொருந்துகிறது இல்லையா?

பதினெட்டு ஆண்டுகள் ஆன பின்பும் கொஞ்சமும் திருந்தாதவர்தான் இவர். முன்பு மக்கள் தண்டித்தார்கள். இப்போது சட்டம் தண்டித்திருக்கிறது. இவரைப் போன்ற தலைவரையும் இவர் வழிநடத்தும் கட்சியையும் நிரந்தரமாக மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஆனால் இந்த மக்களைத்தான் புரிந்து கொள்ளவே முடியாதே. சாதாரண நமச்சலுக்கெல்லாம் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்து கொள்பவர்கள் ஆயிற்றே!


எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் இவர் அரசியலில் நுழைந்த கால கட்டத்தில் 1989-ல் நான் தினமணியில் வாசகர் கருத்துக்கள் பகுதியில் எழுதிய கருத்து இதோ! 

‘’மற்ற அணித் தலைவர்களை விட (ஜானகியோ,மூப்பனரோ) ஜெயலலிதாதான் எதிர்கட்சித் தலைவாரகச் செயல்பட தகுதியானவர். சட்டப்பேரவையில் தனது எதிர்ப்பாற்றலைக் காண்பித்து மக்களைக் கவருவாரேயானால் அடுத்த பொதுத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவர் மமதையையும் அகம்பாவத்தையும் எந்த அளவில் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வார் என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.’’ 
 
எத்தனை தீர்க்க தரிசணம் பாருங்கள் எனக்கு.

16 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

மிகவும் சிறப்பான பதிவு

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்கள் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

Unknown சொன்னது… [Reply]

நான் அடுத்த ஜி .....நீங்கள் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை !
த ம 3

Amudhavan சொன்னது… [Reply]

சரியான கருத்துக்கள். இம்மாதிரி கருத்துக்கள் எல்லாம் ஜெயலலிதாவுக்குப் புரிந்து அவர் ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, முதலில் மக்கள் இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பகவான்ஜி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அமுதவன் ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. திருந்த வேண்டியது மக்கள்தான். ஜெயலலிதாவோ அல்லது அ.தி.மு.க.வோ அல்ல.

Jayadev Das சொன்னது… [Reply]

Good................

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஜெயதேவ் தாஸ் அவர்களே.

'பசி’பரமசிவம் சொன்னது… [Reply]

அவர்[நற்பெயர்] நாசமாகக் காரணமாக இருந்தது அவருடைய ஆணவம்தான்; வேறு சக்திகள் அல்ல.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் பசி பரமசிவம் அவர்களே. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தனிமரம் சொன்னது… [Reply]

அருமையான வரலாற்றுப்பகிர்வு!

Unknown சொன்னது… [Reply]

அருமையான பதிவு ஆனால் விழலுக்கு இறைத்த நீர், காரணம் அவரின் அகந்தை ஆணவம். இன்று ஏன் தான் தண்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கூட உணர விரும்பாத மனம். மீண்டும் எப்படி மக்களை ஏமாற்றி பதவி பெறலாம் என்ற எண்ணம். இது தான் அம்முகுட்டி என்ற ஜெயலலிதா அம்மையார்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனிமரம்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

சிலர் மரணம் வரை திருந்த மாட்டார்கள். ஜெயலலிதாவும் அந்த வகையைச் சேர்ந்தவர்தான். மக்களின் அறியாமையை அறிந்தவர்களின் எளிதான கணக்கு இது. பணம் பதவிக்கு முன் மானம் மரியாதை எல்லாம் இவரைப் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரிகாலன்.

chandrasekaran சொன்னது… [Reply]

உண்மையில் அவர் திருந்துவார் என்று எதிர்பார்ப்பது கல்லில் நார் உரிப்பது போன்றது. உங்களின் கணிப்பு அருமை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சந்திரசேகரன் கோபாலகிருஷ்ணன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!