Wednesday, October 29, 2014

அரசியல் அகராதி


ஈடு செய்ய முடியாத இழப்பு; யார் மரணமடைந்தாலும் கூறப்படுகிற மரபு அஞ்சலி.
ஈழப் போராளிகள்; கலைஞரின் பாச உணர்வைச் சோதிப்பவர்கள்.
உச்சகட்டம்; தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் தாறுமாறாகப் பேசுகிற நேரம்.
உடந்தை; அமைச்சர்களோடு அதிகாரிகள் இணைந்து செயல்படுகிற முறை.
உடன்பாடு; ஒரு கட்சியின் ஊழல்களை இன்னொரு கட்சி கண்டு கொள்ளாமல் இருக்க செய்யப்படுகிற ஏற்பாடு.
உடன்பிறப்பு; எதைச்சொன்னாலும் நம்பும் கட்சித் தொண்டர்.
உடன் பிறவா சகோதரி; கட்சிக்கு சமாதி கட்ட உதவி செய்பவர்.
உட்கட்சி விவகாரம்; விரைவில் பொது விவகாரமாவது.
உட்கட்சி ஜனநாயகம்; உட்கட்சித் தகராறுக்கு கட்சித் தலைவர் வைக்கும் பெயர்.
உணர்வு பூர்வமாக; அறிவுக்கு இடம் கொடுக்காமல்…
உண்ணாவிரதம்; இரண்டு வேளை சாப்பாட்டுக்கு இடைப்பட்ட காலம் அல்லது இரண்டு வேளை சாப்பாட்டை தியாகம் செய்து கிடைக்கும் பிரியாணிக்காக காத்திருப்பது.
உதவியாளர்; அமைச்சருக்கு தவறானவற்றைச் சொல்லிக் கொடுத்து, பின் அவரோடு சேர்ந்து கைதாகிறவர்.
உதறிவிட்டுச் செல்லத் தயார்; பதவியைத் துண்டு போலக் கருதுவதாகக் கூறி விட்டு துண்டை மட்டும் உதறி தோளில் போட்டுக் கொள்ளும் போது தலைவர் கோபத்துடன் கூறுவது.
உயரிய நெறி; அந்தக்கால அரசியல்வாதிகள் கடை பிடித்ததாகக் கூறப்படுவது.
உயர் அதிரகாரிகள்; நிகழ்காலத்தில் அமைச்சருக்குக் கட்டுப்படுவதா, எதிர்காலத்தில் சம்மனுக்குக் கட்டுப்படுவதா என்ற ஊசலாட்டத்தில் இருப்பவர்கள்.
உயர் நீதிமன்றம்; ஆளும் அரசுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் அமைப்பு, வழக்குகள் தேங்கியிருக்கும் இடம்.
உயர்ந்த நோக்கம்; அரசியலுக்கு தொடர்பில்லாதது.
உரிமைக்கு குரல் கொடுத்தல்; எதிர்க்கட்சியாக இருக்கும் போது தீவிரமாக கடை பிடிக்கப்படும் கொள்கை.
உரிமை மீறல்; சட்டசபையில் ஆளும் கட்சியினர் நடந்து கொள்ளும் முறையை விமர்சனம் செய்தல்.
உரிய மரியாதை; தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கொடுக்கப்படுவது.
உருப்படியான திட்டங்கள்; உடனடியாக ஓட்டுக்களைப் பெற்றுத் தர முடியாத திட்டங்கள்.
உருவ பொம்மை; எதற்காவது தீ வைத்து கொளுத்தினால்தான் வெறி அடங்கும் என்கிற நிலையில் அரசியல்வாதிகள் கொளுத்துவது.
உரை நிகழ்த்துதல்; வாய்க்கு வந்தபடி பேசுதல் அல்லது யாராவது எழுதிக்கொடுத்ததைப் படிப்பது.
உலகத்தமிழ் மாநடு; முதல்வரின் புகழைப் பரப்புவதற்காக நடத்தப்படுவது.
உலக வங்கி; 90 சதவிகித ஊழலுக்கும் 10 சதவிகித திட்டத்திற்கும் கடன் கொடுக்கும் நிறுவனம்.
உளவுத் துறை; முதல்வர் மனதுக்குப் பிடித்த தகவல்களைக் கண்டுபிடித்து அவற்றை அவரிடம் தெரிவிக்கும் துறை.
உளறுதல்; ஊழல் விவகாரம் வெளியே வரும் போது அரசியல் தலைவர்கள் பேட்டியளிக்கும் முறை.
உள்நோக்கம்; கெட்ட நோக்கம்.
உள்ளாட்சித்தேர்தல்; மக்களுக்குக் கிடைக்கும் இடைக்கால மரியாதை.
உறவு; லாப நோக்கில் உருவாக்கப்படுவது.
உறவுக்குக் கை கொடுத்தல்; ஆட்சிக்கு ஆபத்து வராமல் இருக்க கடைபிடிக்கப்படும் ராஜ தந்திரம்.
உறுதி மொழி; சொல்லி முடிக்கப்படும் வரை மீறப் படாதது.
உற்பத்திப் பெருக்கம்; மக்கள் தொகை விஷயத்தில் மட்டும் வெற்றியடையும் திட்டம்.
உற்றார் உறவினர்; பெயரைக் கெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.
ஒரு பழைய துக்ளக்கில் சத்யா.

2 comments:

cheena (சீனா) said... [Reply]

அன்பின் கவிப்ரியன்

உறுதி மொழி மற்றும் உற்றார் உறவினர்கள் - இரண்டுமே அருமை - மிக மிக இரசித்தேன். மற்றவையும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. அனைத்துமே பொறுமையாகப் படித்து இரசித்து உள்வாங்கி மகிழ வேண்டிய விளக்கங்கள். பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்
நட்புட்ன் சீனா

கவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]

அன்பின் சீனா ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!