(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)
எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த ஒற்றுமையின்மையும் இருக்கும்போல! தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்பது எனது இந்த பன்னிரெண்டு ஆண்டு கால வெளிநாடு, வெளி மாநில வாழ்க்கையின் போது அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
எங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே என்னுடைய இடத்தில் இருந்தவர் ஒரு தமிழர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? முதன்முறையாக வடநாட்டில் வேலை செய்யப் போகிறோம், தமிழர்கள் யாராவது உடனிருந்தால் நன்றாக இருக்குமே என்று
யோசித்துக் கொண்டிருந்தேன்.
உடன் பணிபுரிபவர்களிடம்
விசாரித்தேன். அப்போதுதான் கலிங்கநகரில் சென்னையைச் சேர்ந்த ஒருவர்தான் மாணவர்களுக்கு
பயிற்சியளிப்பதாக அறிந்தேன். அங்கு போகத்தானே போகிறோம், பார்த்துக்கொள்ளலாம் என்று
அமைதியாகி விட்டேன். அதே நேரத்தில் ஒரு ஐந்து மாதம் சில பணிகளுக்காக நான் கோபால்பூரிலேயே
தங்க வேண்டியதாகி விட்டது.
இடைப்பட்ட காலத்தில்
மாணவர்கள் விடுதியல் அவர்கள் இரவில் உறங்குவதற்காக கட்டில் ஒன்றை (இரண்டு பேர் தூங்கும்
வசதி கொண்டது) வடிவமைத்து, அதை நானே மாணவர்களுக்காக செய்முறைப் பயிற்சியாக மாற்றி மிகக்
குறிகிய காலத்தில் பெரிய எண்ணிக்கையில் கட்டில்களை உருவாக்கி எங்கள் தொழில்நுட்பக்
கல்லூரியின் முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கினேன்.
கலிங்கநகரில் அப்போது
பயிற்சிக்காக வந்த மாணவர்கள் விடுதியில் தரையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடனடியாக
என்னை கலிங்கநகருக்கு அனுப்பி அங்கும் இதே போல் கட்டில்களை மாணவர்களை வைத்தே உருவாக்குவது முடிவு செய்தார் முதல்வர்.
எனவே நான் கலிங்கநகர் இருக்கும் ஜாஜ்பூர் மாவட்டத்திற்குப் பயணமானேன். இது கிட்டத்தட்ட
கோபால்பூரிலிருந்து கிட்டத்தட்ட 250கி.மீ.தூரமுள்ளது.
தலைநகர் புவனேஷ்வர், கட்டக்
ஆகிய நகரங்களைத் தாண்டி ‘ஜாஜ்பூர் ரோடு’ என்கிற இரயில் நிலையம்தான் நான் இறங்க வேண்டிய
இடம். முதல் முறையாக அந்தப் பகுதிகளுக்குப் பயணம் செய்கிறேன். நான் வருவது பற்றி ஏற்கனவே
தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அதற்கான ஏற்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையினால்
நான் அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லை. இரவு 11 மணி வாக்கில் அங்கு இறங்கி
எங்கள் அலுவலக நண்பருக்கு கைப்பேசியிலிருந்து தகவல் சொன்னேன்.
இரயில் நிலையத்தை விட்டு
வெளியே வரச்சொன்னார். காரின் எண்ணைக் கொடுத்து வெளியே காத்திருப்பதாகச் சொன்னார். வெளியே
வந்த போது அந்தக் குறிப்பிட்ட காரின் அருகே ‘பியர்’ (Beer) பாட்டிலை கையில் வைத்துக்
கொண்டு ஒரு நபர் குடித்துக் கொண்டிருந்தார்.
அருகே சென்று விசாரிக்க
எத்தணிக்கையில், ‘நீங்கதான் கவிப்ரியனா’ என்று கேட்டார் அந்த குடித்துக்கொண்டிருந்த
நபர். ஆமாம், நீங்கள்தான் ‘சாமுவேல் ராஜ்’ தானே என்று கேட்டேன். ம்… என்று அதிகாரத்
தோரணையோடு தலையாட்டிவிட்டு, இந்த வண்டில நீங்க போங்க, நான் நாளைக்கு காலைல புவனேஷ்வர்ல
நடக்க இருக்கும் ‘மீட்டிங்குக்கு’ போறேன். ஒண்ணு ஞாபகம் வச்சுக்கங்க நான் மீட்டிங்
போறதுனாலதான் இந்த கார் உங்களுக்கு இப்போ கிடைச்சது. இல்லன்னா இன்னைக்கு இரவு முழுவதும்
இந்த இரயில்வே நிலையத்துல தூங்கிட்டு பொழுது விடிஞ்சு பேருந்துலதான் போக வேண்டியிருந்திருக்கும்
என்று மிரட்டல் பாணியில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
புதிய இடத்தில் நமக்கு
உதவ, தோள் கொடுக்க ஒரு தமிழர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வந்த எனக்கு முதல் சந்திப்பிலேயே
அந்த நபர் எப்படிப் பட்டவர் என்பது புரிந்து போயிற்று. இவனோடு (இதற்க்கபுறம் அவனுக்கென்ன
மரியாதை வேண்டிக் கிடக்கிறது) எப்படி வேலை செய்வது என்று போகும் வழியெல்லாம் யோசித்துக்
கொண்டே போனேன்.
ஆரம்பமே இப்படி என்றால்,
இங்கே வேலை செய்வது மிகக் கடினம் என்பது தெரிந்து போயிற்று. ஆனாலும் அவசரப்படக் கூடாது.
பார்ப்போம் சமாளிக்க முடியவில்லை எனில் வேலையை உதறிவிட்டுப் போக வேண்டியதுதான் என்று
மனதில் நினைத்துக் கொண்டேன். ஆக இங்கே எனக்கான எதிரி ஒரு தமிழன்தான் என்பது மட்டும்
தெளிவாகி விட்டது.
ஆனால் இப்போது நினைத்தால்
அவன் என்னை எதிரியாக நினைத்தோ அல்லது தனக்கு போட்டியாக வந்துவிட்டானே என்று நினைத்துதான்
அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் நான் அங்கு போய்ச்
சேர்ந்த சில மாதங்களில் அவனை வேலையிலிருந்தே தூக்கியடிக்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியது.
3 கருத்துகள்:
அன்பின் கவிப்ப்ரியன்
கலிங்க நகரில் முதல் சந்திப்பே இப்படி ஆகி விட்டதா
கவலைப் படாமல் தொடர்க முயற்சிகளை
எல்லாம் நல்ல படியாக முடியும்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் சீனா ஐயா தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த ஒற்றுமையின்மையும் இருக்கும்போல! தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்பது எனது இந்த பன்னிரெண்டு ஆண்டு கால வெளிநாடு, வெளி மாநில வாழ்க்கையின் போது அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!