புதன், 12 பிப்ரவரி, 2014

வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா?


நான் ஒடிஸா கிளைக்கு வந்தபோது இங்கே ஏற்கனவே ஒரு தமிழர் இருந்தார். கணிணி பிரவைச் சேர்ந்தவர். ஆனாலும் பிளாகர் பற்றியோ வலைத்தளங்கள் பற்றியோ எதுவும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி பிளாகரில் வலைப்பதிவை ஆரம்பிப்பது, தமிழில் தட்டச்சு செய்வது, திரட்டிகள் என்று பலவும் சொல்லிக் கொடுத்தேன். கணிணி தொழில்நுட்பம் பற்றி ஏற்னவே அறிந்திருந்ததனால் எளிதாக கற்றுக்கொண்டு வலைப்பதியவும் ஆரம்பித்து விட்டார்.




ஆனால் ஒன்று மட்டும் அவரால் முடியவில்லை. அது தமிழில் தட்டச்சு செய்வது! பழகிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்கூட இல்லை. பின்னே எப்படி வலைப்பக்கத்தில் எழுகிறார் என்கிறீர்களா? சொந்த சரக்கு எதுவும் இல்லை. மற்றவர்களின் பதிவுகளிலிருந்து திருடி அதைத் தன்னுடையது போல பதிவிடுவதுதான் அவர் வழக்கம். பெயருக்குக்கூட இது இன்னாருடையது, இந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற நாகரிகமெல்லாம் கிடையாது.


அவருக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தமறக்க முடியாத நினைவுகள்தளம். சற்றேறக்குறைய ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதைப்பற்றி நான் ஒன்றும் கவலைப்படவில்லை. நாமெல்லாம் மாங்கு மாங்கென்று தமிழில் தட்டச்சு செய்து வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பதிவுகளைப் போடும்போது இவர் மட்டும் ஓரே நாளில் மூன்று, நான்கு பதிவுகள் போடுவார். இதைப்பற்ற்றி ‘’ஓரே நாளில் மூன்று, நான்கு பதிவுகளைப் போடுவது எப்படி?’’ என்றுகூட ஒரு பதிவைப் போட்டிருந்தேன். வருடத்திற்கு நூறு பதிவுகள் என்று மூன்று பதிவுகளைக்கூட தொடமுடியாத நிலையில் அவருடைய பதிவுகளோ ஆயிரத்திற்கும் மேலே போய்விட்டது.


வாசகர்களின் வருகைக்கும் குறைவில்லை. சும்மா உப்பு சப்பில்லாத பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் வருவதில்லையே தவிர, காரசாரமான அரசியல், பாலியல் சார்ந்த பதிவுகளுக்கும், கவர்ச்சியான தலைப்புகளுக்கும் வாசகர் வரத்து எப்போதும் குறைவதே இல்லை. ஆனால் எல்லாமே ‘’காப்பி, பேஸ்ட்’’ வகைகள்தான். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பொங்கி எழுந்தார்கள், சிலர் எச்சரிக்கை செய்தார்கள். அசரவில்லை இவர். அப்புறம்தான் ஒரு பதிவர் இவருக்கு ‘’காப்பி பேஸ்ட் மன்னன்’’ (இந்தப் பெயரை இப்போது கூகிலில் தேடினால்கூட முதலில் வருவது இவரது சங்கதிதான்) என்று பட்டப்பெயர் கொடுத்து இவருடைய எல்லா விபரத்தையும் தன்னுடைய வலைப்பதில் ஏற்றி நாறடித்தார்.


அப்போதும் நான் எச்சரிக்கை செய்தேன். கேட்கவில்லை. அவருடைய பணி தொடர்ந்துகொண்டிருந்தது. பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை அவருடையது அறுபதாயிரம் என்றால் என்னுடையது முப்பதாயிரமாக இருக்கும். இது தேவையில்லாத ஒப்பீடுதான் என்றாலும் ஒரு குறுகுறுப்பிற்காக பார்த்துக் கொள்வதுண்டு. நான் எங்கே அவரை எட்டிப்பிடித்து விடுவேனோ என்று மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டிருந்தார். நான் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் நேரத்தில்தான் வலைப்பதியத் தொடங்குவேன்.


ஆனால் அவர் கணிணி அறையில் இணைய இணைப்பில் எப்போதும் இருப்பதால் பணிசெய்வது குறைவாகவும், பதிவிடுவது அதிகமாகவும் இருக்கும். நான் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. பணிச்சூழலில் நான் வேறு இடத்திற்கு வந்துவிட்டேன். அவர் இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றலாகிப் போனார். இடைப்பட்ட காலத்தில் ஆமை முயலை வென்ற கதையாக எனது பதிவின் பக்கப்பார்வைகள் சறசறவென்று மேலேறி அவர் என்னை எட்டமுடியாத அளவிற்கு மேலே போய்விட்டது. என்ன நினைத்தாரோ அலுவலகத்தில் அதே வேலையாக இருந்திருப்பார் போலிருக்கிறது.


இதுதான் கெட்ட நேரம் என்பதோ என்னவோ? ஒருநாள் மேலதிகாரியோ அல்லது உடன் பணிபுரிபவர்களாலோ அவரைப் பற்றிய புகார் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது! விசாரனையின் போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். அவருடைய பதிவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போயிருக்கிறார்கள். பாலியல் சமாச்சாரங்களும் அதில் இருக்கவே உடனே ராஜினாமா செய்யச்சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். இது அந்தக் கிளையிலிருந்த நண்பர் ஒருவரால் எனக்குக் கிடைத்த செய்தி.


இது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் இப்போது வேலையில் இல்லை. எனக்கொரு சந்தேகம்? வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா என்ன? அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் அதைச் செய்தார் என்பதைத் தவிர மற்றபடி அது அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் நிர்வாகம் தலையிடலாமா? அதற்காக அவரை வேலையை விட்டு அனுப்பியது சரியா? நண்பர்களே கருத்து கூறுங்கள்.

8 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

அலுவகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலைகளை கவனிக்காமல் வலைதள வேலைகளைப் பார்த்தால் திருப்பூரில் கட்டி வைத்து உரித்து எடுத்து விடுவார்கள். எப்பேற்பட்ட பதவியில் இருந்தாலும் கூட.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நிஜமாகவா? அப்பா பயங்கரமாக இருக்கிறதே! வேலையைவிட்டு அனுப்பலாம். கட்டி வைத்து உதைப்பதா? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறதே?!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

வலைத்தளம் உட்பட தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வீட்டில் / வெளியில் வைத்துக் கொள்ளலாம்... அலுவலகத்தில் - சரியல்ல... அதற்காக உடனே அவரை வேலையை விட்டு அனுப்பியது சரியில்லை தான்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பணிநேரத்தில் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக வேலையை விட்டு அனுப்பியது அதிகம்தான். எச்சரிக்கை செய்திருக்கலாம். காலை வணக்கம் தனபாலன் அவர்களே!

Unknown சொன்னது… [Reply]

பாவம் அவர்! சொந்த புத்தி யில்லை என்றால் சொல்புத்தியாவது கேட்டிருக்க வேண்டும்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் புலவர் அவர்களே! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

ப்ரியா சொன்னது… [Reply]

Idhuellam unmaiya! brunda dhan romba pavam...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆமாம் ப்ரியா, அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்களாம். பாவம்தான் என்னசெய்வது? வந்து கருத்திட்டமைக்கு நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!