சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜனவரி, 2014

சமையலில் மனைவிக்கு உதவும் ஆண்களுக்காக...3


 பயனுள்ள சமையலறைக் குறிப்புகள்
உடைத்த தேங்காய் பத்தை போட்டு வெயிலில் காயவைத்து எடுத்துக்கொண்டால் வேண்டிய பொழுது உபயோகிக்கலாம்.
அடை அரைக்கும் பொழுது காய்ந்த மிளகாயைப் போட்டு பின் பச்சை மிளகாயை நறுக்கிப்போட வேண்டும்.
கேரட் பச்சடி செய்யும் பொழுது அத்துடன் கொத்துமல்லி தழை, புதினா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவைகளை பொடியாக அரிந்து போட வேண்டும்.
புளியை ஊறவைக்கும் பொழுது அத்துடன் கொஞ்சம் உப்பும் சேர்த்துக் கரைத்தால் புளிப்புச்சுவை நன்றாக இருக்கும்.
சட்டினியை அரைக்கும் பொழுத் ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
இனிப்பு பட்ஞணங்களைச் செய்யும் பொழுது ஒரு சிட்டிகை உப்பு கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேங்காய், பெருங்காயம், தனியா, புளி, கறிவேப்பிலை, உப்பு, கடுகு எல்லாவற்றையும் நல்லெண்ணையில் வதக்கி செய்யும் பொடி ருசியாக இருக்கும்.
கத்தியில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவிக் கொண்டு, ஆப்பிள், வாழைக்காய் நறுக்கினால் கருக்காது.
வெந்த உருளைக் கிழங்கின் மேல் பயத்தம் மாவைப் பூசி செய்யும் பொறியல் பிரமாதமாக இருக்கும்.
கிழங்குகள் வெந்து எடுத்த பிறகே உப்பு சேர்க்க வேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் எடுத்த பிறகே வேக வைக்க வேண்டும்.
கிழங்குகளை அரிசி கழுவிய நீரில் வேகவைத்தால் சீக்கிரம் வேகும்.
பச்சை மிளகாய் பழுக்காமலிருக்க அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி போட்டு வைக்கலாம்.
ஊறுகாயில் ஒரு சிட்டிகை சோடியம் பென்ஸோயிட் போட்டுவைத்தால் எவ்வளவு நாளானாலும் கெடாது.
பாம்பே ரவையை வறுத்து பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்கீரை, உப்பு போட்டு அரைத்து தோசை வார்த்தால் நன்றாக இருக்கும்.
சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் பொழுது ஒரு பிடி பாசிப் பருப்பையும் வேகவிட்டால் ருசி தனியாக இருக்கும்.
பருப்பை வேக வைக்கும் பொழுது இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டால் பருப்பு சீக்கிரம் வேகும்.
நசத்துக்கு நெய்யில் கடுகு தாளித்தால் மணமாக இருக்கும்.
சப்பாத்தி மாவில் கொஞ்சம் மைதா மாவும் சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி உப்பும்.
சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால் வேக வைத்த இரண்டு மூன்று உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டுவிட்டால் போதும்.
கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு அரை கப், வறுத்த உளுத்தம்மாவு ஒரு ஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் வெடிக்காது. எண்ணெயும் குடிக்காது.
மில்க்மெய்ட் சேர்த்து செய்யும் சர்க்கரைப் பொங்கல் புதிய சுவையுடன் இருக்கும்.
பெரிய சப்பாத்தியாக இட்டு பாட்டில் மூடியினால் சின்னச்சின்ன சப்பாத்திகளாக வெட்டி பூரி செய்யலாம்.
தோசை மாவை கல்லில் விட்டு அதன்மீது துருவின தேங்காயை பரப்பினால் தோசை ருசியாக இருக்கும்.
நெய்யை பிரட் மீது தடவி அதன் மீது கொஞ்சம் தேனையும் தடவிவிட்டால் ஜாம் தேவையில்லை.
சேம்பு, பிடிகரணை ஆகியவைகளை இட்டிலி தட்டில் வேகவைத்தால் குழைந்து போகாது.
ஊறவைத்த உளுத்தம் பருப்பை அரைத்து கோதுமை மாவுடன் முதல் நாளே உப்பு போட்டு கரைத்து வைத்தால் தோசை நன்றாக இருக்கும்.
முதல் நாள் இரவே கோதுமை மாவை கரத்து வைத்து மறுநாள் காலையில் தோசை வார்த்தால் கல்லில் ஒட்டிக்கொள்ளாது.
குலோப்ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் கலந்துவிட்டால் உறையாமலும் கெட்டுப்போகாலும் இருக்கும்.
வேகைவைத்த உருளைக்கிழங்கை போட்டு அடைக்கு அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
அப்பளத்தை எண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையாக இருக்கும்.
துவரம் பருப்புக்கு பதிலாக கொள்ளை ஊறப்போட்டு அரைத்த அடை புது சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் சுடும் பொழுது கத்தி முனையில் எண்ணெய் தடவிக் கத்திரிக்கையை சொருகிக் கொண்டு சுடவேண்டும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தொர் மிளகாயை வறுத்தால் எண்ணை கொஞ்சமாக செலவழியும்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

சமையலில் மனைவிக்கு உதவும் ஆண்களுக்காக….


 
இப்பொழுது முழுக்க முழுக்க சமையல் செய்வதில் பெண்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்ற காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணுமாய் வேலைக்குச் சென்றால் வீடு திரும்பியதும் ஒருவருக்கொருவர் சமையலில் உதவி செய்தாலும் விரைவாகவும் எந்தவித மனத்தாங்கலும் சோர்வும் இல்லாமல் சமையலை முடித்து உறங்கச் செல்லலாம். நிறைய பேர் உதவியும் வருகிறார்கள். இது உதவி மட்டுமில்லை. பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளலே. என்னப்போல சிலருக்கு தனியாக சமையல் செய்து சாப்பிடும் ஆண்களுக்கும் இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் அல்லவா? 

சாதம் வடித்த அரிசி கலந்த நீரில் கொஞ்சம் மோர் கலந்து அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை கையால் கசக்கிவிட்டால் வாசனையான தீடீர் மோர் தயார்.

இரண்டு டம்ளர் பயத்தம் பருப்புக்கு ஒரு டம்ளர் பச்சரிசி என்ற விகிதத்தில் கலந்து உப்பு, பச்சை மிளகாய் பெருங்காயம் கலந்து அரைத்து தோசை வார்க்கலாம்.

வெண்டைக்காய் பொரியலை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வேர்க்கடலையை சிறிது வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டு வதக்கினால் சுவையாக இருக்கும்.

அல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்துக் கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.
வடாம் போடும் பிளாஸ்டிக் ஷீட் பறக்காதிருக்க வைக்கிற கற்களை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்தால் கல், மண் வடாமில் விழாது.

ஃபில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையைபோட்டால் துளை அடைத்துக்கொள்ளாது டிகாஷன் ஒரே சீராக இருக்கும்.

மைசூர்பாகு செய்து இறக்கும் பொழுது ஒரு சிட்டிகை சோடா உப்பைப் போட்டால் கலவை பொங்கி ‘’மொறுமொறு’’வென்றிருக்கும்.
வெண்டைக்காய், கத்திரிக்காய் பொரியல் மிச்சமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்துவிடலாம்.

வேக வைத்த காரட் அல்லது பரங்கிக்காயையும் பாதி வறுத்த துவரம் பருப்பையும், நான்கு பச்சை மிளகாய் நறுக்கி வைத்த வெங்காயம் உப்பு ஆகியவற்றையும் சேர்த்தால் அரைக்கிற சட்டினி படு சூப்பராக இருக்கும்.

முட்டைகோஸ் பொரியல் மீதியாகிவிட்டால் வடை மாவு, அடை மாவுடன் கலந்துவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

சமைத்த பொரியல் மீதமாகிவிட்டால் அவற்றுடன் காரம் சேர்த்து வதக்கி, மைதா மாவைப் பிசைந்து, வட்டமாக இட்டு நடுவே பொரியல் கலவையை வைத்து பொரித்து சாப்பிடலாம்.

மீதமான தேங்காய் சட்டினியை கெட்டியான புளிப்பு மோரில் கலந்து கொதிக்க வைத்தால் மோர்க்குழம்பு தயார்.

சப்ஜி, கூட்டு போன்றவைகளை சப்பாத்தி இல்லாத பட்சத்தில் ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்து சாண்ட்விச் போல சாப்பிடலாம்.

வாழைக்காய் கத்திரிக்காயை அரிந்ததும் உடனே தண்ணீரில் போட்டுவிட்டால் கருத்துப் போகாது.

வாழைக்காய் வாங்கியவுடன் பச்சைத் தண்ணீரில் போட்டுவைத்தால் பழுக்காது.

நறுக்கிய ஆப்பிள், பேரிக்காய் ஆகியவற்றை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது.

வெங்காயத்தை பாதியாக வெட்டி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து பின் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.

முட்டைக்கோஸை காரட் சீவும் கட்டரில் சீவி வதக்கினால் சீக்கிரம் வதங்கிவிடும்.

கத்தியால் தக்காளியின் மேல்புறத்தில் ஒரு பிளஸ் குறி போடவும். சிறிது நேரம் பச்சைத் தண்ணீரில் ஊறவைத்து பிளஸ் குறியிலிருந்து தோலை சுலபமாக உரிக்கலாம்.

அதே போல தக்காளிப் பழத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தாலும் தோலை சுலபமாக உரிக்கலாம்.

கையில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு சேனைக்கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு உண்டாகாது.

நறுக்கிய பாகற்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைத்தால் அதன் கசப்பு போய்விடும்.

நிறம் மாறாத காய்கறிகளை முதல் நாளே மறுநாள் சமையலுக்கு அரிந்து வைத்துக்கொள்ளலாம்.

கீரை வகைகளை அரிவதற்கு முன்பே கழுவி விடவேண்டும். நறுக்கிய பிறகு கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் போய்விடும்.

பாலிதீன் கவரில் பச்சைத் தக்காளியுடன் ஒரு பழுத்த தக்காளியையும் போட்டு வைத்தால் எல்லாம் பழுத்து விடும்.