திங்கள், 11 நவம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது… புலவர் முத்து பாரதி

அப்போது நான் பகல் பொழுதில் கந்தசாமி நாயுடு கல்லூரியின் இளங்கலை மாணவன். இரவில் பேராசியர் ஏ.எஸ். பிரகாசம் அவர்களின் உதவியாளர். திரு சேதுராமன் அவர்கள் தயாரித்த ‘சபலம்’ என்ற படத்திற்காக ஹோட்டல் ரஞ்சித்தில் தங்கியிருந்தோம்.

இரவில்- சில ஓய்வு நேரங்களில் ஹோட்டல் ரூம் பாய்ஸ் அனைவரும் ஒன்று கூடுவார்கள். ராமு என்ற பையன் மூலம் எனக்கு தகவல் அனுப்புவார்கள். நான் போவேன். எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாட்டு பாடுங்கள் என்பரார்கள். (‘சமுதாயத்தின் அடித்தள மக்களின் நெஞ்சை அஸ்திவாரமாகக் கொண்டுள்ள ஒரு தலைவரின் சமுதாய வாழ்வும், அரசியல் வாழ்வும் எந்த நேரத்திலும் ஆட்டம் கண்டிட சாத்தியக் கூறுகள் இல்லவே இல்லை’ என்று இந்த நேரத்தில் நான் வியந்திருக்கிறேன்.) அவர்கள் விருப்பப்படி எழுதுவேன். அவர்களிடம் பாடிக் காட்டுவேன்.

1976-ஆகஸ்ட் 25 ஹோட்டல் தொழிலாள நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் புரட்சித்தலைவருக்கு ஒரு சீட்டுக்கவி எழுதினேன்.

காலையில் அஞ்சல் செய்துவிட்டு கல்லூரிக்குப் போய்விட்டேன். மாலையில் திரும்பி வந்த போது, ஹோட்டலில் ஏகபோக வரவேற்பு.

புரியாமல் தவித்து முடிவில் தெரிந்து கொண்டேன். புரட்சித்தலைவரின் அலுவலகத்திலிருந்து எனக்கு ஃபோன் வந்ததாகக் கூறி தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள். தொடர்பு கொண்டேன். திரு முத்து அவர்கள் மாலை 6 மணிக்கு ஆற்காடு முதலி தெரு அலுவலகத்தில் தலைவரை சந்திக்கும்படிக் கூறினார்.

முகவரியை விசாரித்து புரட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்த அலுவலகத்தின் கீழ் ஹாலில் வால் பேப்பர்களாக சுவரோடு ஒட்டியபடி பலர் நிற்க- நான் நடுவில் கிடந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்.

முத்து வந்து ‘யார்?’’ என்றார். ‘’புலவர் முத்து பாரதி’’ என்றேன். நீங்க வந்தாச்சான்னு தலைவர் கேட்டார். மாடிக்குப் போங்க என்றார். மாடி அறைக்கு வெளியே இருந்த ஹாலில் தென்னாற்காடு மாவட்ட கழக அமைப்பாளரும் மற்றும் நான்கைந்து பேரும் இருக்க-நானும் இணைந்தேன். தலைவரின் அழைப்பில் எல்லோரும் உள்ளே சென்றோம்.

உடன் வந்தவர்கள் சுவர் ஓதர் ஒதுங்க, நான் தலைவரின் எதிரில் அப்படியே நின்று விட்டேன். ‘’இதில் புலவர் முத்து பாரதி யாரு?’’ தலைவர் கேட்டார். வியப்பாலும் மகிழ்ச்சியாலும் என் நா மேலண்ணத்தோடு ஒட்டிக் கொள்ள நான்தான் என்ற பாவனையில் செஞ்சில் கை வைத்தேன். வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்தேன்.

தலைவரின் மேசைக்கு எதிரில் இரண்டு நாற்காலி. ஓன்றில் ஒரு அம்மையார். மற்ற நாற்காலி காலி. உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். தலைவர், அம்மையாரிடம் சொன்னார். ‘தம்பி நல்லா கவிதை எழுதறார். எனக்கு கடிதம் எழுதியிருக்கார், கவிதையிலே. எப்படி தெரியுமா?’

‘’ஊருக்கெல்லாம் நிழல் கொடுக்கும்

ஆலமரம் – என்று

உலகம் உன்னை உணர்ந்து கொள்ளும்

காலம் வரும்!

நல்ல உள்ளம் தன்னைத் தேடி

செல்வம் வரும். என்

நாயகனே உன்னைத் தேடி

தெய்வம் வரும்…’’

(என்று தொடங்கி நான் எழுதியனுப்பியிருந்த 24 வரி சீட்டுக்கவியையும் கவிதா நயத்தோடும் சரளமாகவும் பாடினார்). தலைவர் அம்மையாரை எனக்கு அறிமுகப் படுத்தினார். அம்மையார் பி.டி. சரஸ்வதி ஆவார்.

‘என்ன செய்யறீங்க?’ தலைவர் கேட்டார். ‘சினிமாவுக்கு பாட்டு எழுதறேன். (இப்போது ஒரு படத்திற்கு பாட்டு எழுதியிருந்தேன்) தொடர்ந்து எழுத ஆசை. தற்சமயம் இயக்குனர் பேராசி.இயர் பிரகாசம் அவர்களிடம் உதவியாளனாக இருக்கிறேன்’ என்றேன். ‘தொடர்ந்து எழுதுங்க’ என்றார். தலையாட்டினேன். பேசிக்கொண்டிருந்த தலைவர் (என் சீட்டுக் கவியின் விளக்கமாக) தெய்வம் மனிதர்களைத் தேடி வராது, பேசாது தெரியுமா? என்று கேட்டார்.

புரட்சித்தலைவரை பாட்டுடைத் தலைவனாக தெய்வமாக சீட்டுக்கவி எழுதியிருந்த நான் உணர்ச்சி உந்துதலில் மேசையைத் தட்டி ‘என் தெய்வம் வரும். பேசும்.’ என்றேன். (எல்லோர் முகத்திலும் வியப்பு) தலைவர் புன்னகை மாறாமல் இருந்தார்.

‘’எப்படி சொல்றீங்க?’’ என்றார். தெய்வம் தேடி வர்றது அதனுடைய மனசைப் பொறுத்தது அல்ல. பக்தனுடைய தவத்தைப் பொறுத்தது. தவம் பலமா இருந்தா தெய்வம் தானா வரும்’ என்றேன். தலைவர் வாய் விட்டுச் சிரித்தார். மேசை மீதிருந்த என் கையை தன் கையால் பொத்தித் தட்டினார்.

‘தம்பி என் கிட்ட ஏதாவது…’ என்றார். ‘நிச்சயமா இல்லை. உங்களைப் பார்க்கணும்னு சின்ன வயசிலேயே ஆசைப்பட்டேன். இனிமேலும் பொறுக்க முடியாதுன்னு சீட்டுக்கவி எழுதினேன். பார்த்திட்டேன். அவ்வளவுதான். வர்றேன்.’ ‘அடிக்கடி வாங்க’ என்றார். வெளியே வந்தேன்.

இளங்கவிஞனான என் மீதும் சிரத்தை எடுத்துக் கூப்பிட்டு ‘காட்சிக்கெளியனாய்’ என்ற வள்ளுவர் வாக்கின்படி அன்பு காட்டி பாராட்டியதிலிருந்து தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் புரட்சித்தலைவர் கொண்டிருக்கும் ஆசை-ஆர்வம்-பற்று-என்னை இன்னமும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

புலவர் முத்து பாரதி.

4 கருத்துகள்:

ராஜி சொன்னது… [Reply]

அந்த எளிமை இப்போ யாரிடமும் இல்லை.

ஜோதிஜி சொன்னது… [Reply]

நம்பியவர்களுக்கு (மட்டும்) கடவுள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ராஜி அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஜோதிஜி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!