இப்பொழுது முழுக்க முழுக்க சமையல் செய்வதில் பெண்கள் மட்டுமே
ஈடுபடுகிறார்கள் என்ற காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணுமாய் வேலைக்குச் சென்றால் வீடு
திரும்பியதும் ஒருவருக்கொருவர் சமையலில் உதவி செய்தாலும் விரைவாகவும் எந்தவித மனத்தாங்கலும்
சோர்வும் இல்லாமல் சமையலை முடித்து உறங்கச் செல்லலாம். நிறைய பேர் உதவியும் வருகிறார்கள்.
இது உதவி மட்டுமில்லை. பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளலே. என்னப்போல சிலருக்கு தனியாக சமையல்
செய்து சாப்பிடும் ஆண்களுக்கும் இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் அல்லவா?
சாதம் வடித்த அரிசி கலந்த நீரில் கொஞ்சம் மோர் கலந்து அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய்,
உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை கையால் கசக்கிவிட்டால் வாசனையான தீடீர் மோர் தயார்.
இரண்டு டம்ளர் பயத்தம் பருப்புக்கு ஒரு
டம்ளர் பச்சரிசி என்ற விகிதத்தில் கலந்து உப்பு, பச்சை மிளகாய் பெருங்காயம் கலந்து அரைத்து தோசை வார்க்கலாம்.
வெண்டைக்காய் பொரியலை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வேர்க்கடலையை சிறிது வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டு வதக்கினால் சுவையாக இருக்கும்.
அல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்துக் கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.
வடாம் போடும் பிளாஸ்டிக் ஷீட் பறக்காதிருக்க வைக்கிற கற்களை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்தால் கல், மண் வடாமில் விழாது.
ஃபில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையைபோட்டால் துளை அடைத்துக்கொள்ளாது டிகாஷன் ஒரே
சீராக இருக்கும்.
மைசூர்பாகு செய்து இறக்கும் பொழுது ஒரு
சிட்டிகை சோடா உப்பைப் போட்டால் கலவை பொங்கி ‘’மொறுமொறு’’வென்றிருக்கும்.
வெண்டைக்காய், கத்திரிக்காய் பொரியல் மிச்சமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்துவிடலாம்.
வேக வைத்த காரட் அல்லது பரங்கிக்காயையும் பாதி வறுத்த துவரம் பருப்பையும், நான்கு பச்சை மிளகாய் நறுக்கி வைத்த வெங்காயம் உப்பு ஆகியவற்றையும் சேர்த்தால் அரைக்கிற சட்டினி படு சூப்பராக இருக்கும்.
முட்டைகோஸ் பொரியல் மீதியாகிவிட்டால் வடை மாவு, அடை
மாவுடன் கலந்துவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
சமைத்த பொரியல் மீதமாகிவிட்டால் அவற்றுடன் காரம் சேர்த்து வதக்கி, மைதா மாவைப் பிசைந்து, வட்டமாக இட்டு நடுவே பொரியல் கலவையை வைத்து பொரித்து சாப்பிடலாம்.
மீதமான தேங்காய் சட்டினியை கெட்டியான புளிப்பு மோரில் கலந்து கொதிக்க வைத்தால் மோர்க்குழம்பு தயார்.
சப்ஜி, கூட்டு போன்றவைகளை சப்பாத்தி இல்லாத பட்சத்தில் ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்து சாண்ட்விச் போல
சாப்பிடலாம்.
வாழைக்காய் கத்திரிக்காயை அரிந்ததும் உடனே தண்ணீரில் போட்டுவிட்டால் கருத்துப் போகாது.
வாழைக்காய் வாங்கியவுடன் பச்சைத் தண்ணீரில் போட்டுவைத்தால் பழுக்காது.
நறுக்கிய ஆப்பிள்,
பேரிக்காய் ஆகியவற்றை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது.
வெங்காயத்தை பாதியாக வெட்டி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து பின் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.
முட்டைக்கோஸை காரட் சீவும் கட்டரில் சீவி வதக்கினால் சீக்கிரம் வதங்கிவிடும்.
கத்தியால் தக்காளியின் மேல்புறத்தில் ஒரு பிளஸ் குறி போடவும். சிறிது நேரம் பச்சைத் தண்ணீரில் ஊறவைத்து பிளஸ் குறியிலிருந்து தோலை சுலபமாக
உரிக்கலாம்.
அதே போல தக்காளிப் பழத்தை கொதிக்கும் நீரில் போட்டு
ஒரு கொதி வந்தவுடன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தாலும் தோலை சுலபமாக
உரிக்கலாம்.
கையில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு சேனைக்கிழங்கை
நறுக்கினால் கையில் அரிப்பு உண்டாகாது.
நறுக்கிய பாகற்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைத்தால்
அதன் கசப்பு போய்விடும்.
நிறம் மாறாத காய்கறிகளை முதல் நாளே மறுநாள் சமையலுக்கு
அரிந்து வைத்துக்கொள்ளலாம்.
கீரை வகைகளை அரிவதற்கு முன்பே கழுவி விடவேண்டும். நறுக்கிய பிறகு கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் போய்விடும்.
பாலிதீன் கவரில் பச்சைத் தக்காளியுடன் ஒரு பழுத்த
தக்காளியையும் போட்டு வைத்தால் எல்லாம் பழுத்து விடும்.