செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நம்பிக்கை - படித்ததில் பிடித்தது

 

இதுதான் வாழ்வின் அடிப்படை. இது இருட்டை விரட்டுகிறது. வெளிச்சத்தை விதைக்கிறது. இதை விலை கொடுத்து வாங்க முடியாது. இது இல்லாமல் எந்த நாடும் எந்த நாகரிகமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

என்ன அது?

அதுதான் நம்பிக்கை. பிள்ளைகள் படிக்கிறார்கள். சில நேரங்களில் கணக்குப் பாடங்களில் முட்டைகளை வாங்குகிறார்கள். விலை கொடுக்காமலே முட்டைகளை வாங்கி வருகிறார்களே என்று வியப்போடு அவர்களை வழிக்கு கொண்டு வரவேண்டும்.

பிரம்பை எடுத்தால் பிரம்மா கூட படைப்பதை நிறுத்திவிடுவான். பிள்ளைகள் எங்கே படிக்கப் போகிறார்கள்?

உலகப்புகழ் பெற்ற இசை மேதையான பீத்தோவான் படித்ததே இல்லை. இசைப் பாடத்தில் அவருக்கு எதிர்காலமே இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார் ஆசிரியர். இப்போது பீத்தோவானை அறியாத இசை மேதைகளே இல்லை. அவனை அறியாதவர்கள் மேதைகளும் இல்லை.

மாபெரும் விஞ்ஞானி ஐசக் நியூட்டன், இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் மக்குப் பிள்ளைகள் என்றே பெயரெடுத்தவர்கள். இருந்தாலும் வரலாற்று ந்தி அவர்கள் பக்கமாகத்தான் வளைந்தோடிக் கொண்டிருக்கிறது. ஆங்கில இலக்கிய தேவாலயத்தில் ஆராதிக்கப்படுகிற பொற்சிலையான ஷேக்ஸ்பியர் பதின்மூன்று வயதில் பள்ளிக்கூடத்தை விட்டவர். அதற்குமேல் படித்திருந்தால் பள்ளிக்கூடம் அவரை விட்டிருக்கும்.

ஷேக்ஸ்பியர் மாடு மேய்த்தார். இப்போது இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் அவர் பிறந்த ஊருக்குப் போகாமல் வருவதில்லை. ஷேக்ஸ்பியரின் தாய், தந்தை, சகோதரி ஒருவருமே படித்ததில்லை. இப்போது ஷேக்ஸ்பியரை படிக்காதவர்களே இல்லை.

மாபெரும் தளகர்த்தரான வெலிங்டன் பிரபு இலக்கிய பாடத்தில் தோற்றதால் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. சாரணர் படைதனை நிறுவிய பேடன் பௌல் பிரபுவுக்கு ஆக்ஸ்போர்டு பள்ளிக்கூடத்தில் இடமே கிடைக்கவில்லை.
உங்கள் குழந்தைக்கு இன்னமும் பேசவரவில்லையா? இதுவரைக்கும் வாசிக்காமல் இருக்கிறதா? கவலையே படவேண்டாம். மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டினுக்கு நான்கு வயது வரைக்கும் பேசவரவில்லை; எட்டு வயதுவரைக்கும் எழுத வரவில்லை.

ஓவிய சிற்ப விற்பன்னரான பிக்காசோ பள்ளிக்கூட நாட்களில் அகரம், இகரத்தை நினைவில் வைத்துக்கொள்ளாமல் அவதிப்பட்டார்.

வயதுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை. வரலாற்றைப் பார்த்தால், இளம் வயதில் எதற்கும் பயன்ற்றவர்கள் வளர்ந்த பிறகு வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் தலைவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், போர்வீரர்கள், ஓவியர்கள் போன்ற பலர, ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இதில் 35 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேல்தான் பிரகாசித்திருக்கிறார்கள்.

23 சதவீதமானவர்கள் 80 வயதிரற்கு மேல்தான் பிரகாசித்திருக்கிறார்கள். 8 சதவீதமானவர்கள் வாழ்வு முடிகிற போது வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்கள். சுருங்கச் சொல்வதென்றால் 66 சதவீதமான உலகின் வரலாற்று மகுடங்கள் 60 வயதை கடந்தவர்களாலேயே உருவாக்கப் பட்டிருக்கின்றன.

உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். புகழ்ந்து தள்ளுங்கள். அவர்கள் எந்தத் துறையில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அந்தத் துறையிலேயே செலுத்துங்கள். சின்ன வயதில் சிறப்புகள் தெரியவில்லை என்பது குற்றமில்லை. அவர்கள் பின்னாளில் மேதைகளாகவும் ஆகலாம் யார் கண்டது?!

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

படிப்பிற்கும் வெற்றிக்குமே சம்பந்தமில்லை...

அன்புடன் DD

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் DD. தங்களின் வருகைக்கு நன்றி!

Unknown சொன்னது… [Reply]

நமது கல்வி முறையில் உள்ள கோளாறுகளை சரி செய்தால் வருங்காலம் வசந்தம் தான் !தொடர்கிறேன் ..தொடருங்கள் கவிப்ரியன் அவர்களே !

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பகவான்ஜி! பின்தொடர்தலுக்கும் நன்றி!

ஜோதிஜி சொன்னது… [Reply]

குழந்தைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன். நீங்க சொன்ன பல விசயங்களைப் பற்றி தெளிவாகவே எழுத முடியும். ஆனால் பாராட்டு மட்டுமே சாதித்து விடாது என்பது உண்மை. புள்ளைங்க ரொம்பத் தெளிவாகவே (நம்மைவிட) இருக்காங்க.

வீட்டில் ஒருவர் கணக்கில் நீங்க சொன்ன மாதிரி. ஏன்டா இப்படி என்றால்?

விடுங்கப்பா........... காமராஜரை பற்றிநீங்க தானே சொல்லியிருக்கீங்க. அவரு என்ன படிச்சா இருக்காரு? என்கிறார்.

என்ன செய்ய?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான்! இந்தக்காலத்து குழந்தைகள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பெரியவர்களைப் போல் பேசுவதும் ரொம்ப அலட்டிக்கொள்வதும் இருக்கிறது. கொஞ்சம் வழிகாட்டினால் பிடித்துக் கொள்வார்கள். இது பற்றி நிறைய எழுத எனக்கும் ஆர்வமிருக்கிறது ஜோதிஜி பார்ப்போம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Kasthuri Rengan சொன்னது… [Reply]

பில் கேட்ஸ் "நான் சில பாடங்களில் தோல்வியுற்றேன்.. எனது நண்பர்கள் அவற்றில் முதல்வகுப்பில் தேறினார்கள், இன்று அவர்கள் மைக்ரோ சாப்டில் வேலைபார்கிரார்கள் "

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

இதையும் பதிவுல ஏத்திடுறேன் நண்பரே! வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!